இரத்தக்கறை படிந்த சரித்திரம்
இரத்தக்கறை படிந்த சரித்திரம்
ஒருசில வருடங்களுக்கு முன்புவரை, தீவிரவாத தாக்குதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்ததைப் போல் தோன்றியது; உதாரணமாக, வட அயர்லாந்திலும் ஸ்பெயினிலுள்ள பாஸ்க் கண்ட்ரியிலும் மத்திய கிழக்கிலுள்ள சில பகுதிகளிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தன. இப்போதோ, குறிப்பாக செப்டம்பர் 11, 2001-ல் நியு யார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமானதிலிருந்து இது உலகெங்கும் புற்றீசல் போல் பரவி வருகிறது. சுற்றுலா பயணிகளின் சிங்கார பூமியான பாலி தீவிலும் ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டிலும் இங்கிலாந்திலுள்ள லண்டனிலும் இலங்கையிலும் தாய்லாந்திலும் நேபாளத்திலும்கூட தீவிரவாதம் அதன் கோர முகத்தைக் காட்டியுள்ளது. என்றாலும், தீவிரவாதம் என்பது புதிதாக முளைத்த ஒன்றல்ல. சரி, தீவிரவாதம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு ஓர் அகராதி இவ்வாறு விளக்கம் அளிக்கிறது: “மக்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு எதிராக தனி நபரோ, கும்பலோ வன்முறையைச் சட்டவிரோதமாகக் கையாளுவது; சமுதாயத்தையோ, அரசாங்கத்தையோ பயமுறுத்துவது அல்லது பலவந்தப்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். கொள்கையோ, அரசியல் ஆதாயமோதான் பெரும்பாலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.” (தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷ்னரி ஆஃப் தி இங்லிஷ் லாங்வேஜ்) என்றாலும், ஜெஸிக்கா ஸ்டர்ன் என்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தீவிரவாதத்தைப் பாடமாக படிக்கிற ஒரு மாணவன் இதுபோல நூற்றுக்கணக்கான விளக்கங்களைப் படிக்கலாம். . . . ஆனால், இரண்டு முக்கிய அம்சங்களே இதனை பிற வன்முறைகளிலிருந்து தனிப்படுத்திக் காட்டுகின்றன.” அவை யாவை? “ஒன்று, தீவிரவாதம் அப்பாவி மக்களையே குறிவைக்கிறது. . . . இரண்டு, அவர்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தீவிரவாதிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள்: தாங்கள் குறிவைத்துள்ள ஆட்களைத் தாக்குவதைக் காட்டிலும் அவர்களுடைய மனதில் பீதியை ஏற்படுத்துவதே தீவிரவாதிகளின் மிக முக்கிய இலக்கு. இப்படித் திட்டமிட்டு திகிலை ஏற்படுத்துவதுதான் சாதாரண கொலையிலிருந்தும் அடிதடியிலிருந்தும் தீவிரவாதத்தைத் தனிப்படுத்திக் காட்டுகிறது.”
வன்முறையின் வேர்கள்
முதல் நூற்றாண்டின்போது, யூதேயா மாகாணத்தில் ஸெலட்டுகள் என அழைக்கப்பட்ட ஒரு வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள், யூதேயாவை ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க விரும்பினார்கள். அந்தக் கும்பலைத் தீவிரமாக ஆதரித்த சிலர் ஸிக்காரிகள், அதாவது குத்துவாள் வீரர்கள் என அறியப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய உடைகளுக்குள் சிறிய குத்துவாள்களை மறைத்து வைத்திருந்ததால் இப்பெயர் பெற்றார்கள். எருசலேமில் பண்டிகைக்கு வந்திருந்த ஜனங்கள் மத்தியில் இவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து தங்களுடைய a
விரோதிகளின் கழுத்தை வெட்டினார்கள் அல்லது அவர்களுடைய முதுகில் குத்தினார்கள்.பொ.ச. 66-ல் ஸெலட்டுகளின் ஒரு தொகுதியினர், சவக் கடலுக்கு அருகேயிருந்த மசாடா மலைக்கோட்டையைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ரோம காவற்படையினரை வெட்டி வீழ்த்தி, அக்கோட்டையைத் தங்களுடைய நடவடிக்கைகளுக்கு மையமாக்கினார்கள். பல வருடங்களாக அங்கே இருந்துகொண்டு திடீர்த்தாக்குதல்களை
நடத்தினார்கள், ரோம அரசியல் அதிகாரிகளுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தார்கள். பொ.ச. 73-ல் ஃப்ளேவியஸ் சில்வா என்ற ஆளுநர் தலைமையில் ரோமர்களின் பத்தாம் படைப்பிரிவினர் மசாடாவை மீட்டார்கள்; ஆனால் ஸெலட்டுகளை அவர்களால் பிடிக்க முடியவில்லை. காரணம், இந்த ஸெலட்டுகளில் இரண்டு பெண்களையும் ஐந்து குழந்தைகளையும் தவிர மற்ற 960 பேரும் ரோமர்களிடம் சரணடைய விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டதாக அக்கால சரித்திராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.ஸெலட்டுகளின் அன்றைய கலகம்தான் இன்றைய தீவிரவாதத்தின் தொடக்கம் என சிலர் கருதுகிறார்கள். அது உண்மையோ இல்லையோ, அப்போது முதற்கொண்டு சரித்திரத்தின் பாதையில் தீவிரவாதம் அழியா தடங்களைப் பதித்துள்ளது.
கிறிஸ்தவமண்டலம் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கிறது
1095-ம் வருடம் முதற்கொண்டு 200 வருடங்களுக்கு சிலுவைப் போராளிகள் ஐரோப்பாவுக்கும் மத்திய கிழக்குக்கும் இடையே அடிக்கடி அணிவகுத்து சென்றார்கள். ஆசியாவையும் வட ஆப்பிரிக்காவையும் சேர்ந்த முஸ்லிம் படை வீரர்கள் இவர்களை எதிர்த்தார்கள். இதற்குக் காரணம், எருசலேமைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்; அதற்காக இரு தரப்பினரும் போராடினார்கள். இப்படிப் பல முறை போராடியபோது அந்தப் “புனித போராளிகள்” ஒருவரையொருவர் கண்டந்துண்டமாக வெட்டிக்கொண்டு செத்தார்கள். அப்பாவி ஜனங்களைக்கூட தங்களுடைய வாள்களாலும் கோடாலிகளாலும் கொன்று குவித்தார்கள். 1099-ல் சிலுவைப் போராளிகள் எருசலேமுக்குள் நுழைந்ததைப் பற்றி டையர் நகரைச் சேர்ந்த 12-ம் நூற்றாண்டு பாதிரியார் இவ்வாறு விவரித்தார்:
“அவர்கள் வாள்களையும் ஈட்டிகளையும் ஏந்தி தெருக்களில் கும்பலாகச் சென்றார்கள். கண்ணில் பட்ட அனைவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்தார்கள்; ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என அவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. . . . கணக்கு வழக்கில்லாமல் அவர்கள் கொன்றுபோட்டதால், தெருக்களில் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன, பிணத்தை மிதிக்காமல் யாராலும் தெருவில் நடக்க முடியாது. . . . எக்கச்சக்கமானோர் கொல்லப்பட்டதால் கால்வாய்களில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது, தெருக்களெல்லாம் பிணக்கிடங்காகக் காட்சி அளித்தது.” b
அதற்குப் பின்வந்த நூற்றாண்டுகளில், கொடூரமாகக் கொல்வதற்காக தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
கோடிக்கணக்கானோர் மடிந்தார்கள்
ஜூன் 28, 1914—இதை ஐரோப்பிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என சரித்திராசிரியர்கள் கருதுகிறார்கள். சிலரால் மாவீரனாக கருதப்பட்ட ஓர் இளைஞன், ஆஸ்திரிய இளவரசரான ஃபிரான்சிஸ் ஃபெர்டினான்டை சுட்டுக் கொன்றான். இந்தச் சம்பவம் முதல் உலகப் போருக்கு வித்திட்டது. அந்த மகா யுத்தம் முடிவடைவதற்குள் இரண்டு கோடி மக்கள் மாண்டார்கள்.
முதல் உலகப் போரைவிட இரண்டாம் உலகப் போர் படுபயங்கரமாக இருந்தது; இப்போரில் அப்பாவி மக்கள் சித்திரவதை முகாம்களில் தள்ளப்பட்டார்கள், விமானத் தாக்குதல்களில் மாண்டார்கள், பழிவாங்கும் படலத்திற்கு பலியானார்கள். போருக்குப் பின்னும் தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கியபாடில்லை. 1970-களில் கம்போடியாவில் நடந்த படுகொலைகளில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்த்துறந்தார்கள். ருவாண்டாவில் 1990-களில் நடந்த படுகொலைகளின்போது 8,00,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள்; இந்த அதிர்ச்சியிலிருந்து அந்நாட்டு மக்கள் இன்னும் மீளாதிருக்கிறார்கள்.
1914-லிருந்து இன்றுவரை அநேக நாடுகளில் தீவிரவாதிகளின் அட்டகாசத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சிலர் சரித்திரத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவதும், ஆயிரக்கணக்கானோர் உருசிதைக்கப்படுவதும் லட்சக்கணக்கானோர் நிம்மதியையும் பாதுகாப்பையும் இழப்பதும் ஒரு தொடர்கதையாக இருந்துவருகிறது. கடைவீதிகள் குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன, கிராமங்கள் தீக்கொளுத்தப்படுகின்றன, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், பிள்ளைகள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்படுகின்றனர், ஆட்கள் கொல்லப்படுகின்றனர். சட்டத்தையும் உலக மக்களின் எதிர்ப்புக் குரலையும் மீறி இந்தக் கொடூர போக்கு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்க, தீவிரவாதத்திற்கு என்றாவது முடிவு வருமா?
[அடிக்குறிப்புகள்]
a அப்போஸ்தலன் பவுலை 4,000 ‘குத்துவாள் வீரர்களுக்கு’ தலைவன் என ரோம தளபதி அநியாயமாகக் குற்றம் சாட்டியதைப் பற்றி அப்போஸ்தலர் 21:38 (NW) குறிப்பிடுகிறது.
b ‘சத்துருக்களைச் சிநேகிக்கும்படி’ தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார், அவர்களை வெறுக்கும்படியோ கொலை செய்யும்படியோ கற்பிக்கவில்லை.—மத்தேயு 5:43-45.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
ஜூன் 28, 1914-ல் உலகம் போர்களத்தில் இறங்கியது
[பக்கம் 5-ன் படம்]
இஸ்தான்புல்—நவம்பர் 15, 2003
[பக்கம் 5-ன் படம்]
மாட்ரிட்—மார்ச் 11, 2004
[பக்கம் 5-ன் படம்]
லண்டன்—ஜூலை 7, 2005
[பக்கம் 5-ன் படம்]
நியு யார்க்—செப்டம்பர் 11, 2001
[பக்கம் 5-ன் படங்களுக்கான நன்றி]
இடமிருந்து வலம்: AP Photo/Murad Sezer; AP Photo/ Paul White; Photo by Peter Macdiarmid/Getty Images
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
Culver Pictures