எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
வேலை தேடுவதும் தக்கவைத்துக்கொள்வதும் (ஜூலை 8, 2005 [ஆங்கிலம்]) புதிதாக ஒரு வேலை கிடைத்தால், அதுவும் சாதாரண வேலை கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் எதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டுமென விளக்கியதற்கு ரொம்ப நன்றி. கிறிஸ்தவ ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்காக, முழுநேர வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலை பார்ப்பது குறித்து சமீபத்தில் யோசித்தேன். ஆனால் எனக்குப் பிடித்த வேலை கிடைத்தால் மட்டுமே போக வேண்டுமென பிடிவாதமாக இருந்தேன். என்றாலும் ஒரு சாதாரண வேலைதான் கிடைத்தது, பரவாயில்லையென ஏற்றுக்கொண்டேன். இப்போது அதிலுள்ள நன்மையைப் பார்க்க முயற்சி செய்கிறேன். புதிய வேலை என் மூளையைக் கசக்கிப் பிழிவதில்லை, அதனால் வீட்டுக்கு வந்த பிறகு முழு கவனம் செலுத்தி பைபிளைப் படிக்க முடிகிறது.
எம். ஐ., ஜப்பான்
மே தினம்—உங்களுக்கு முக்கியமானதா? (ஏப்ரல் 22, 2005 [ஆங்கிலம்]) நான் உயர்நிலைப் பள்ளி மாணவன், என் பள்ளியில் வருடா வருடம் மே தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கான கடைசி ஒத்திகையை உயர்நிலை மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவ மாணவியர் போய் பார்க்க வேண்டும். இதற்கு முன்பு நான் அதைப் போய் பார்த்திருக்கிறேன், என் அக்காவுக்கோ மனசாட்சி உறுத்தியது. ஏன் உறுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது! சரியான நேரத்தில் அதை வெளியிட்டதற்காக ரொம்ப ரொம்ப நன்றி!
சி. சி., ஐக்கிய மாகாணங்கள்
நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல் (மே 8, 2005) கடந்த ஆறு வருடங்களாக கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறேன், பல தடவை எனக்கு ஆபரேஷனும் நடந்திருக்கிறது, கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டிருக்கிறது. சகோதரி கோன்ச்சியைப் போலவே நானும் முடிந்தவரை சபைக்கு ஒத்தாசையாக இருக்கிறேன்; கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போய் வருகிறேன். புற்றுநோயோடு போராடுவது பெரும் பாடு. புற்றுநோயால் அவதிப்படும் எங்களைப் போன்றவர்கள் டாக்டர்களிடம் எப்போது போனாலும் உடல்நலம் மோசமாகிவிட்டதாகத்தான் சொல்கிறார்கள்; இதை ஜீரணிக்க கோன்ச்சி சொன்ன குறிப்பு உதவியாக இருக்கிறது, நன்றி. அவருடைய அனுபவம் உண்மையிலேயே எனக்குத் தெம்பளிக்கிறது!
பி. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு லூபஸ் என்ற ஒருவகை தோல் நோய் வந்திருக்கிறது, ஒருசமயம் ஞாபக மறதி நோயாலும் கஷ்டப்பட்டேன். அப்போதெல்லாம் நகைச்சுவை உணர்வை காண்பிக்க முயற்சி செய்தேன். சமீபத்தில் கேஸ்ட்ரைட்டீஸ் என்ற இரைப்பை அழற்சி நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் நகைச்சுவை உணர்வோடிருக்க முயற்சி செய்தேன். “நோய்வாய்ப்படுவது நகைப்புக்குரிய விஷயமல்ல, ஆனால் நகைச்சுவை உணர்வை காண்பிக்க நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்” என கோன்ச்சி சொன்னதை முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன்.
எம். ஏ., வெனிசுவேலா
உலகை கவனித்தல் (ஜூலை 8, 2005) “வைட்டமின் மருந்துகளும் புற்றுநோயும்” என்ற பகுதியைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அதில் கொடுக்கப்பட்டிருந்த டாக்டர் சலவனின் கருத்துகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் ஏற்றுக்கொள்வது இல்லை. நீங்கள் வீணென குறிப்பிட்டிருந்த மருந்துகள், உண்மையில் பயனுள்ளவை என்றே நிரூபிக்கப்பட்டுள்ளன; சில வகை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவை உதவுகின்றன; எண்ணற்ற விஞ்ஞானப் பத்திரிகைகளில் வந்த அறிக்கைகளும் அநேக ஆராய்ச்சிகளும் அதைக் காட்டுகின்றன. இத்தகைய ஒருதலைபட்ச தகவலை வெளியிடுவது, நடுநிலை காக்கும் விழித்தெழு! பத்திரிகையின் பெயரைக் கெடுத்துவிடலாம் என நினைக்கிறேன்.
ஏ. பி., நெதர்லாந்து
“விழித்தெழு!” பதில்: இந்த வாசகர் சொல்கிறபடி, இப்பகுதியில் குறிப்பிடப்பட்ட மருந்துகள் புற்றுநோயாளிகள் சிலருக்குப் பயனுள்ளதாய் இருந்திருப்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்தப் பகுதி ஏதேனும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறோம். மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக “விழித்தெழு!” பத்திரிகை நடுநிலை வகிக்கிறது. உடல்நலம் சம்பந்தப்பட்ட தகவல்களை, வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காக வெளியிடுகிறோம்; அதற்காக, அவற்றை நாங்கள் சிபாரிசு செய்வதாக ஆகிவிடாது. ஒரு புத்தகமோ ஒரு நிபுணரோ சொல்லும் ஏதேனும் கருத்தை நாங்கள் மேற்கோள் காட்டுகையில், பொதுவாக அதற்கு எதிரான கருத்துகளும் இருக்குமென ஒப்புக்கொள்கிறோம். மருத்துவ சிகிச்சைமுறைகளை நன்கு அலசிப்பார்த்து தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு வாசகர்களுடையதே.