‘வெள்ளைப் பூண்டுகளை எவ்வளவாய் நினைத்துப் பார்க்கிறோம்!’
‘வெள்ளைப் பூண்டுகளை எவ்வளவாய் நினைத்துப் பார்க்கிறோம்!’
டொமினிகன் குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
உங்கள் வீட்டைவிட்டு தொலைதூரத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அப்போது என்ன சாப்பிட ஆசைப்படுவீர்கள்? ஒருவேளை உங்கள் சொந்த ஊரில் விளையும் ‘ஃப்ரெஷ்’ஷான பழ வகைகளும் காய்கறிகளும் உங்கள் நினைவுக்கு வரலாம், அல்லது உங்கள் அம்மா சமைத்துத்தரும் ருசியான மட்டன் குழம்பு அல்லது மீன் குழம்பு ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், அந்தச் சமயத்தில் வெள்ளைப் பூண்டை நினைத்துப் பார்ப்பீர்களா? அதை நினைத்து உங்கள் வாயில் எச்சில் ஊறுமா?
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும் வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம் [“எவ்வளவாய் நினைத்துப் பார்க்கிறோம்,” NW]” என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 11:4, 5) ஆம், அவர்கள் பூண்டுகளை நினைத்து நினைத்து ஏங்கினார்கள். அவர்களுக்குப் பூண்டுகளைக் கண்டால் கொள்ளை ஆசை, அதனால்தான் அவர்கள் தங்களைப் பூண்டுப் பிரியர்கள் என அழைத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இஸ்ரவேலருக்குப் பூண்டுமீது இப்படியொரு ஆசை வந்தது எப்படி? எகிப்தில் அவர்கள் 215 ஆண்டுகள் தங்கியிருந்த நீண்ட காலப்பகுதியின்போது, இந்த மூலிகை அவர்களுடைய உணவின் ஒரு பாகமாக ஆகியிருந்தது. யாக்கோபும் அவருடைய குடும்பமும் எகிப்துக்கு வந்துசேருவதற்குப் பல காலத்திற்கு முன்னரே, எகிப்தியர்கள் பூண்டை பயிர்செய்துகொண்டிருந்தார்கள், புதைபொருள் அத்தாட்சிகள் இதை நிரூபிக்கின்றன. கிரேக்க சரித்திராசிரியரான ஹெரோடோடஸ் அறிக்கை செய்கிறபடி, பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த அடிமைகளுக்குச் சாப்பிட கொடுப்பதற்காக எகிப்திய அதிகாரிகள் கணக்குவழக்கில்லாத அளவுக்கு வெங்காயத்தையும், முள்ளங்கியையும், பூண்டையும் வாங்கினார்கள். பூண்டு மிகுதியாகச் சேர்க்கப்பட்டிருந்த அந்த உணவு, வேலையாட்களுக்கு அதிக பலத்தையும் தெம்பையும் கொடுத்ததாகத் தெரிகிறது. டூடன்காமன் என்ற பார்வோனின் உடலை எகிப்தியர்கள் அடக்கம் செய்தபோது, அவருடைய கல்லறைக்கிடங்கில் விலையுயர்ந்த ஏராளமான பொருள்களோடு பூண்டுகளையும் வைத்தார்கள். செத்தவர்களுக்குப் பூண்டு எவ்விதத்திலும் உபயோகமில்லைதான், ஆனால் உயிரோடிருப்பவர்களுக்கு அது ரொம்பவே பிரயோஜனம்.
சக்திவாய்ந்த மருந்து
காலங்காலமாகவே, மருத்துவர்கள் தங்களுடைய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் பூண்டை உபயோகித்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அஜீரணக் கோளாறு, குஷ்டரோகம், புற்றுநோய், புண், தொற்றுவியாதி, இருதயக் கோளாறு ஆகியவற்றிற்கு ஹிப்பாக்ரட்டிஸ், டையஸ்கோரடிஸ் போன்ற கிரேக்க மருத்துவர்கள் பூண்டை பரிந்துரை செய்தார்கள். 19-ம் நூற்றாண்டில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த வேதியியல் வல்லுநரான லூவீ பாஸ்சர் பூண்டைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி, அதன் ஆன்ட்டி-செப்டிக் குணங்களை விளக்கினார். 20-ம் நூற்றாண்டின்போது, ஆப்பிரிக்காவில் மிஷனரியாகவும் மருத்துவராகவும் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் ஷிவிட்ஸர் என்பவர் அமீபாவால் வரும் சீதபேதியையும் (amoebic dysentery) வேறு நோய்களையும் குணப்படுத்துவதற்குப் பூண்டைப் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், காயமடைந்த படைவீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதுமானளவு நவீன மருந்துகள் இல்லாதபோது, இராணுவத்தில் பணிபுரிந்த ரஷ்ய டாக்டர்கள் பூண்டை உபயோகித்தார்கள். இதன் காரணமாக பூண்டு, ரஷ்யர்களின் பென்சிலின் என்று அழைக்கப்பட்டது. சமீபத்தில் விஞ்ஞானிகள், இரத்த ஓட்ட மண்டலத்திற்குப் பூண்டு எப்படி நன்மை அளிக்கிறது என்பதன் பேரிலும் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.
எனவே, ஊட்டச்சத்துகளை அளிப்பதிலும் சரி நோய்க்கு நிவாரணம் அளிப்பதிலும் சரி, பூண்டின் மகத்துவமே அபாரம்தான்; அதன் மணமும் ருசியும் உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தவை. பூண்டு முதன்முதலில் எங்கு பயிரிடப்பட்டது? அது மத்திய ஆசியாவில் தொடங்கி, பிறகு பூமியெங்கும் பரவியதாக தாவரவியல் வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள். பூண்டுக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றைப் பற்றி இப்போது நாம் சிந்திக்கலாம்.
கோன்ஸ்டான்ஸாவில் பூண்டு வேளாண்மை
டொமினிகன் குடியரசிலுள்ள கோன்ஸ்டான்ஸா பள்ளத்தாக்கில் மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. சுற்றிலும் மலைகள் இருப்பதால், அந்தப் பள்ளத்தாக்கில் நல்ல வளமான மண் உள்ளது, மழையும் பலமாகப் பெய்கிறது. எனவே, பூண்டு வேளாண்மைக்கு கோன்ஸ்டான்ஸா மிகமிக ஏற்ற ஓர் இடமாகும்.
கோன்ஸ்டான்ஸாவில் உள்ள விவசாயிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தங்கள் வயல்களிலிருந்து செடிசெத்தைகளை நீக்கிய பின்னர் உழத்தொடங்குவார்கள்; அப்போது ஆழமான சால்களை உண்டாக்குவார்கள்; அவற்றின் இடையிடையே சுமார் ஒரு மீட்டர் அகலமுள்ள மண்திட்டுக்களை உண்டாக்குவார்கள். பூண்டை நடுவதற்காக, ஒவ்வொரு திட்டின் மீதும் ஆழமில்லாத மூன்று அல்லது நான்கு சால்களை உண்டாக்குவார்கள். அந்த வேலை நடந்துகொண்டிருக்கும் அதேசமயத்தில், வேலையாட்கள் முழு பூண்டுகளை
உரித்து, அவற்றைப் பல்பல்லாக பிரித்தெடுப்பார்கள். பிறகு, 30 நிமிடங்களுக்கு அவற்றைத் தண்ணீரில் ஊற வைத்து, ஆழமில்லாத அந்தச் சால்களில் நடுவார்கள். டொமினிகனின் மிதமான குளிர்காலத்தில், அந்தப் பூண்டுகள் வளர ஆரம்பிக்கும்.மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்கும். முதிர்ந்த பூண்டுச் செடிகளை வேலையாட்கள் பிடுங்கியெடுத்து, அவற்றை ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு வயல்களிலேயே விட்டுவிடுவார்கள். அதன்பின், பூண்டுகளைச் சேகரித்து, அவற்றின் வேர் பகுதியையும் மேல் பகுதியையும் வெட்டியெடுப்பார்கள்; பிறகு சுத்தமான முழு பூண்டுகளை க்ரிபாஸ் எனப்படும் திறந்த கலன்களில் வைப்பார்கள். அந்தப் பூண்டுகளைக் காய வைப்பதற்காக க்ரிபாஸ்களை ஒரு நாள் முழுக்க வெயிலில் வைப்பார்கள். இப்போது, பூண்டு விற்பனைக்குத் தயார்.
கொஞ்சம் பூண்டு, அதிக வாசனை
சுவையான ஒரு கறியையோ சாலட்டையோ சாப்பிட உட்காரும்போதே, அதில் பூண்டு சேர்க்கப்பட்டிருப்பதை உங்கள் மூக்கு ‘டக்கென’ கண்டுபிடித்துவிடும். ஆனால், உரிக்கப்படாத பூண்டுக்கு மட்டும் ஏன் எந்த வாசனையும் இருப்பதில்லை? பூண்டின் ஒரு பல் இடிக்கப்படும் வரை, வெட்டப்படும் வரை, அல்லது நசுக்கப்படும் வரை, பூண்டில் உள்ள சக்திவாய்ந்த வேதிப்பொருள்கள் ஒன்றுக்கொன்று சேராமல் தனித்தே இருக்கின்றன. அதன் ஒரு பல்லை நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கும்போது, அல்லினேஸ் என்ற ஒருவித செரிமானப்பொருள் அல்லின் என்ற வேதிப்பொருளோடு இணைகிறது. அதன் காரணமாக, மறுநொடியே அல்லிஸின் என்ற ஒரு வேதிப்பொருள் உண்டாகிறது; பூண்டின் வாசனைக்கும் சுவைக்கும் இந்த அல்லிஸினே மூல காரணம்.
‘ஃப்ரெஷ்’ஷான ஒரு பல் பூண்டை கடிக்கும்போது, அல்லிஸின் உங்கள் வாயில் குபுகுபுவென அதிகரிக்கும். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, அந்தப் பூண்டு வாசனை உங்களைச் சுற்றிச்சுற்றியே வீசும். வாயிலிருந்து வரும் அந்த வாசனையைக் குறைக்க நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? ஒருவேளை பார்ஸ்லீ காம்புகளையோ ஒரு துண்டு கிராம்பையோ நீங்கள் மென்று பார்க்கலாம்.
ஆனால் உங்கள் வாயிலிருந்து வரும் பூண்டு வாசனை, முக்கியமாய் உங்கள் நுரையீரல்களிலிருந்தே வருகிறது என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் பூண்டைச் சாப்பிடும்போது, உங்கள் செரிமான மண்டலம் அதை உங்கள் இரத்த ஓட்டத்திற்குக் கடத்திவிடுகிறது, அங்கிருந்து அது உங்கள் நுரையீரல்களை அடைகிறது. நீங்கள் மூச்சுவிடும்போது, மூக்கைத் துளைக்கும் அந்த வாசனை உங்கள் நாசியிலிருந்து வெளிவருகிறது. எனவே மௌத்வாஷ், பார்ஸ்லீ போன்ற எந்த பாச்சாவும் பூண்டிடம் பலிக்காது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவு ஏதாவது இருக்கிறதா? இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உங்களைச் சுற்றியுள்ள எல்லாரையும் நீங்கள் பூண்டு சாப்பிட வைத்தால், ஒருவேளை அந்த வாடையை அவர்கள் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்!
அநேக நாடுகளில், பூண்டு இல்லாத உணவைச் சாப்பிடுவது என்பது கற்பனைகூட செய்ய முடியாத ஒன்றாய் இருக்கிறது. பூண்டை அளவாகப் பயன்படுத்தும் நாடுகளில்கூட, ஏராளமான பூண்டுப் பிரியர்கள் அதன் குறைகளைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிற அளவுக்கு அதில் நன்மைகள் இருப்பதாக நம்புகிறார்கள். (g05 9/22)
[பக்கம் 23-ன் படம்]
அறுவடை செய்யப்பட்ட பூண்டு காய வைக்கப்படுகிறது
[பக்கம் 23-ன் படம்]
கோன்ஸ்டான்ஸா பள்ளத்தாக்கு
[பக்கம் 23-ன் படம்]
நசுக்கப்பட்ட பூண்டிலிருந்து மட்டுமே வாடை வருவது ஏன்?