‘வடிவமைக்கப்பட்டது போல் தோன்றுகிறதா’?
‘வடிவமைக்கப்பட்டது போல் தோன்றுகிறதா’?
இரவு நேரத்தில் வானத்தை நீங்கள் எப்போதாவது டெலஸ்கோப்பில் பார்த்திருக்கிறீர்களா? அவ்வாறு பார்த்திருக்கும் பலர், முதன்முதலாக சனி கிரகத்தைக் கண்ட காட்சி இன்னமும் தங்களுடைய மனதைவிட்டு நீங்காதிருப்பதை உங்களுக்குச் சொல்வார்கள். அது உண்மையிலேயே ஓர் அற்புதக் காட்சி: இருண்டு கிடக்கும் எல்லையற்ற விண்வெளி, அதில் அள்ளித் தெளித்தது போல் எங்கும் கண்சிமிட்டும் எண்ணற்ற நட்சத்திரங்கள், அதன் மத்தியில் கண்ணைப் பறிக்கும் ஒரு வான் கோளம், அக்கோளத்தைச் சுற்றி தட்டையான, நளினமான வளையங்கள்!
இந்த வளையங்கள் எவற்றால் ஆனவை? 1610-ல், கலிலியோ தான் வடிவமைத்த டெலஸ்கோப்பில் முதன்முதலாக சனி கிரகத்தைப் பார்த்தார்; அது ரொம்பவே மங்கலாகத் தெரிந்ததால், அதற்கு இரண்டு காதுகள் இருப்பது போல் தோன்றியது; அதாவது, மையத்தில் ஒரு கோளமும் அதன் இரு புறங்களில் இரண்டு சிறிய கோளங்களும் இருப்பது போல் தோன்றியது. வருடங்கள் ஆக ஆக நவீன டெலஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால், வானியல் நிபுணர்களால் அந்த வளையங்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது; ஆனாலும் அவை எவற்றால் ஆனது என்பதைக் குறித்து அவர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் இருந்து வந்தது. அவை உறுதியான, கெட்டியான வட்டத்தகடுகள் என அநேகர் நம்பினார்கள். ஆனால் உண்மையில் அவை எண்ணற்ற பாறைத் துகள்களாலும் பனித் துகள்களாலும் ஆனவை என்பதற்கு நம்பகமான அத்தாட்சி 1895-ல்தான் வானியல் நிபுணர்களுக்குக் கிடைத்தது.
தொலைதூரக் கோளங்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சனி கிரகத்தின் வளையங்கள், அதாவது எண்ணற்ற பனி துகள்களால் ஆன அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகள், சூரிய குடும்பத்தில் காணப்படும் படைப்பின் விநோதங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. பளபளக்கும் இந்த ஒளிவட்டங்கள் பிரமாண்டமானவை. அக்கிரகத்தின் வளிமண்டலத்திற்குச் சற்று மேலே உள்ள உட்புற முனையிலிருந்து, வித்தியாசம் காண முடியாதளவு மங்கலாகத் தெரிகிற அதன் வெளிப்புற விளிம்புவரை அந்த வளையங்கள் 4,00,000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரந்திருக்கின்றன. அதே சமயத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் மெல்லியதாகவும் இருக்கின்றன, அதாவது, அவற்றின் தடிமம் சராசரியாக 30 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது.” ஜூன் 2004-ல் காசினி-ஹைகென்ஸ் என்ற விண்கலம் சனி கிரகத்தைச் சென்றடைந்து, செய்திக் குறிப்புகளையும் படங்களையும் அனுப்பியபோது, விஞ்ஞானிகள் சிக்கல் வாய்ந்த இந்த நூற்றுக்கணக்கான வளையங்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
சமீபத்தில், ஸ்மித்சோனியன் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “சனி கிரகம் பார்ப்பதற்கு யாரோ வடிவமைத்திருப்பது போல் தோன்றுகிறது; கணிதத்தைப் போல் இது படுதுல்லியமாக இருக்கிறது.” அந்தக் கட்டுரையின் எழுத்தாளருடைய கருத்தை நாம் ஆமோதித்தாலும், “போல் தோன்றுகிறது” என அவர் சொன்னதுதான் நம்மை யோசிக்க வைக்கிறது. உண்மையில், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்ற விவரிப்பு, எண்ணற்ற வான் கோளங்களுக்குப் பொருந்துவது போலவே இந்த அழகிய வான் கோளத்திற்கும் பொருந்துகிறது; ஆம், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட இந்த விவரிப்பு சனி கிரகத்துக்கும் பொருந்துகிறது.— சங்கீதம் 19:1. (g05 6/22)
[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]
பின்னணி: NASA, ESA and E. Karkoschka (University of Arizona); உட்படங்கள்: NASA and The Hubble Heritage Team (STScl/AURA)