இன்றைய இளைஞர்கள் எதிர்ப்படும் மன அழுத்தங்கள்
இன்றைய இளைஞர்கள் எதிர்ப்படும் மன அழுத்தங்கள்
பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளிலும் கொந்தளிப்புமிக்கதாய் இருக்கலாம். இளசுகள் பருவமெய்தும்போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் மற்ற இளைஞர்களாலும்கூட தினமும் அவர்கள் தொல்லைகளை எதிர்ப்படுகிறார்கள். டிவி, சினிமா, இசை, இன்டர்நெட் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு எந்நேரமும் ஆளாகிறார்கள். பருவ வயது “புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும் கவலையும் நிறைந்த காலம்” என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது.
இளைஞர்களால் பெரும்பாலும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை; அதற்குத் தேவையான அனுபவம் அவர்களிடம் கொஞ்சம்கூட இல்லை. (நீதிமொழிகள் 1:4) சரியான வழிநடத்துதல் இல்லாவிட்டால், அவர்கள் சுலபமாக தீங்கான பாதையில் சென்றுவிடுவார்கள். உதாரணத்திற்கு, ஐ.நா. அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “பெரும்பாலும் பருவ வயதில் அல்லது அக்காலத்தை தாண்டும் வயதில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆரம்பமாவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.” வன்முறை, தறிகெட்ட பாலுறவு போன்ற மற்ற கெட்ட நடத்தைகளும் அந்த வயதில்தான் ஆரம்பமாகின்றன.
இதெல்லாம் “ஏழைகள்” மத்தியில் அல்லது சில இனத்தவர் மத்தியில்தான் நடப்பதாக சொல்லி பெற்றோர் அலட்சியப்படுத்தினால், அது பெரும்பாலும் மிகப் பெரிய தப்பாகிவிடுகிறது. இன்றைய பிரச்சினைகள் பொருளாதார அந்தஸ்து, சமுதாயம், இனம் போன்ற எவ்வித வித்தியாசமும் பார்க்காமல் அனைத்து இளைஞர்களையும் தாக்குகின்றன. “பொதுநல திட்டங்களின் அல்லது நிறுவனங்களின் உதவியால் காலத்தை ஓட்டும் தாய்மாரின் வயிற்றில் பிறந்த, அடிமட்டத்தைச் சேர்ந்த, சிறுபான்மைத் தொகுதியினரான 17 வயதினர் மத்தியில்தான் ‘இளம் குற்றவாளிகள்’ முளைக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால், இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல முடியும். இன்றைய இளம் குற்றவாளிகள் வெள்ளை நிறத்தவர்களாகவும் இருக்கலாம், நடுத்தர வர்க்கத்தை அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், 16 வயதுக்கு குறைந்தவர்களாகவும் (அதைவிட மிகச் சிறியவர்களாகவும்) இருக்கலாம், சொல்லப்போனால் பெண்களாகவும் இருக்கலாம்” என ஸ்காட் வால்டர் என்ற எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.
ஆனால் ஏன் இத்தனை இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்? கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்கள்கூட சவால்களையும் சபலங்களையும் சந்தித்தார்கள் அல்லவா? ஆம், சந்தித்தார்கள்தான். ஆனால் இன்றைய காலம் “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலம்” என பைபிள் விவரிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, NW) இந்தக் காலத்திற்கே உரிய சூழ்நிலைகளும் பிரச்சினைகளும் இளைஞர்களைத் தாக்குகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் கவனிக்கலாம்.
குடும்பத்தில் மாற்றங்கள்
உதாரணத்திற்கு, குடும்ப வாழ்க்கை மாறிவருவதைக் கவனியுங்கள். “அமெரிக்க பிள்ளைகளில் மூன்று பங்குக்கும் அதிகமானோர் 18 வயதை எட்டுவதற்கு முன்பே
பெற்றோரின் விவாகரத்தால் பாதிக்கப்படுகின்றனர்” என ஜர்னல் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷனல் சைக்காலஜி என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. மற்ற மேற்கத்திய நாடுகளும் இதேபோன்ற புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. பெற்றோரின் திருமண பந்தம் முறிகையில், பிள்ளைகள் பெரும்பாலும் மன வேதனையையும் வலியையும் அனுபவிக்கின்றனர். “பொதுவாக, சமீபத்தில் பெற்றோருடைய பிரிவினால் வேதனைப்படும் பிள்ளைகள், படிப்பதிலும் பழகுவதிலும் மற்ற பிள்ளைகளைவிட அதிகம் கஷ்டப்படுகின்றனர். ஆம், பிளவுபடாத குடும்பங்களில், நாள்பட்ட ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில், அல்லது மாற்றாந்தந்தையோ தாயோ உள்ள குடும்பங்களில் வளரும் பிள்ளைகளைவிட அதிகக் கஷ்டப்படுகின்றனர். . . . அதுமட்டுமல்ல, பெற்றோரின் விவாகரத்து பிள்ளைகளின் உணர்ச்சி ரீதியிலான உறுதியையும் சுயமதிப்பையும் பெரும்பாலும் குலைக்கிறது” என்று அந்த ஜர்னல் குறிப்பிடுகிறது.பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்து வருவதும் குடும்பச் சூழலை மாற்றியிருக்கிறது. பெற்றோரில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் குடும்பச் சூழலைவிட அவர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் குடும்பச் சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது மிகக் கடினம் என ஜப்பானில் இளம் குற்றவாளிகள் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது.
அநேக குடும்பங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் மட்டுமே வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பது உண்மைதான். அப்போது பிள்ளைகள் அதிக சௌகரியமாக வாழ முடியும் என்பதுகூட உண்மைதான். ஆனால் அதன் மறுபக்கத்தையும் கவனியுங்கள்: கோடிக்கணக்கான பிள்ளைகள் ஸ்கூலிலிருந்து திரும்பும்போது வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அப்படியே பெற்றோர் வந்தாலும், அவர்கள் பெரும்பாலும் களைப்படைந்திருக்கிறார்கள், அதோடு வேலையில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிய சிந்தையில் மூழ்கியிருக்கிறார்கள். இதன் விளைவு? அநேக டீனேஜர்களுக்குப் பெற்றோரின் கவனிப்பு கிடைப்பதில்லை. “நாங்கள் குடும்பமாக நேரம் செலவிடுவதே இல்லை” என புலம்பினான் ஓர் இளைஞன்.
இந்த நிலைமை நீடிப்பது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என அநேகர் நினைக்கிறார்கள். “கடந்த 30 ஆண்டுகளாக படிப்படியாக தோன்றியிருக்கும் பிள்ளை வளர்ப்புப் பாணிகள், ஒட்டுதலில்லாத, மௌனமான, படிப்புக் கோளாறுள்ள, கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே உருவாக்கி வருகின்றன” என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார். “பொருள் வளங்களுக்கும் சாதனைகளுக்குமே
முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் சிக்கிக்கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் நேரத்தையெல்லாம் வேலைக்காகவே அர்ப்பணிக்கவும் பணத்தை தண்ணீராய் செலவழிக்கவும் வேண்டியிருக்கிறது; ஆகவே பிள்ளைகளோடு பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.டீனேஜர்களின் நலனை அச்சுறுத்தும் மற்றொரு விஷயம் உண்டு; வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், பெரியவர்களின் கவனிப்பில்லாமல்தான் எக்கச்சக்கமான நேரத்தை செலவழிக்கிறார்கள். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் பிள்ளைகள் நேரத்தை செலவிடும்போது அவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கண்டிப்பு பற்றிய மாறிவரும் கருத்துகள்
பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்பது சம்பந்தமான புதிய புதிய கருத்துகள்கூட இன்றைய இளைஞர்களைப் பாதித்திருக்கின்றன. டாக்டர் ரான் டாஃபல் நேரடியாக குறிப்பிட்டபடி, அநேக பெற்றோர் “தங்கள் பொறுப்பை உதறிவிடுகிறார்கள்.” இவ்வாறு செய்கையில், நல்வழிப்படுத்துகிற நியமங்களும் வழிகாட்டுதலும் அவ்வளவாக இல்லாமல், அல்லது கொஞ்சமும் இல்லாமல் பிள்ளைகள் இஷ்டம்போல் வளர்ந்து ஆளாகிறார்கள்.
சிலசமயங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைப் பருவத்தின் கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து பிள்ளைகளை வளர்க்கிறார்கள். கண்டிப்பான பெற்றோராக இருப்பதற்குப் பதிலாக நண்பர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஒரு தாய் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நான் என் பிள்ளைகளை கொஞ்சம்கூட கண்டித்து வளர்க்கவில்லை. என் அப்பா அம்மா நேர் எதிராக இருந்தார்கள். அதனால்தான் நான் வித்தியாசமாக இருக்க நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறாகிவிட்டது.”
கண்டிக்கக் கூடாது என்பதற்காக சில பெற்றோர் எந்தளவுக்குப் போகிறார்கள் தெரியுமா? இன்றைய அஐமா இவ்வாறு அறிக்கை செய்கிறது: “நியு யார்க், டெக்ஸஸ், ஃப்ளோரிடா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் போதைப்பொருள் அடிமைத்தனத்திற்காக சிகிச்சை பெறும் கிட்டத்தட்ட 600 டீனேஜர்களை வைத்து ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. அதன்படி, அவர்களில் 20 சதவீதத்தினர், மதுபானம் தவிர மற்ற போதைப்பொருட்களை தங்கள் பெற்றோருடன் சேர்ந்து உட்கொண்டிருந்தனர்; சுமார் 5 சதவீதத்தினருக்கு, முதன்முதலாக போதைப்பொருட்களை, பொதுவாக மரஹுவானாவை ருசிக்கக் கொடுத்ததே அவர்களுடைய தாய்மார்தான் அல்லது தந்தைமார்தான்.” இப்படி பொறுப்பே இல்லாமல் நடந்துகொள்ள பெற்றோரைத் தூண்டுவது எது? ஒரு தாய் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “‘நீ வீட்டில் என் கண் முன்னாலேயே போதைப்பொருள் எடுப்பதுதான் மேல்’ என என் மகளிடம் சொன்னேன்.” பிள்ளைகளோடு சேர்ந்து போதைப்பொருள் உட்கொள்வது அவர்களுடன் “பிணைப்பை” ஏற்படுத்துவதற்கான ஒரு வழி என மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
மீடியாவின் தாக்குதல்
மீடியாவின் பலமான செல்வாக்கு மற்றொரு பிரச்சினை. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் தினமும் சராசரியாக 4 மணிநேரம், 48 நிமிடங்களை டிவிக்கு அல்லது கம்ப்யூட்டருக்கு முன்னால் செலவிடுவதாய் ஓர் ஆய்வு காட்டியதாக ஆராய்ச்சியாளர் மரிடா மால் கூறுகிறார்.
அது உண்மையிலேயே தீங்கானதா? சைன்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை இவ்வாறு அறிக்கை செய்தது: மீடியாவில் காட்டப்படும் வன்முறையே “சில பிள்ளைகளின் மூர்க்கத்தனத்துக்குக்” காரணம் என “அமெரிக்காவிலுள்ள [அமெரிக்க மருத்துவ கழகம் உட்பட்ட] ஆறு பெரிய நிறுவனங்கள்” ஒருமித்த கருத்துத் தெரிவித்திருக்கின்றன. “சமுதாயத்தில் வன்முறை தாண்டவமாடுவதற்கு மீடியாவின் வன்முறை ஒரு காரணம் என்பதை நிபுணர்கள் ஏகமாய் ஒத்துக்கொண்டாலும், செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் டிவியிலும் வரும் தகவலை வைத்து பாமர மக்கள் அதைப் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை” என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது.
உதாரணத்திற்கு மியூசிக் வீடியோக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் சில மிக மிக அப்பட்டமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைகின்றனர். இப்படிப்பட்ட வீடியோக்கள் டீனேஜர்களின் நடத்தையை உண்மையில் பாதிக்க முடியுமா? 500 கல்லூரி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட ஓர்
ஆராய்ச்சியின்படி, “வன்முறையான பாடல் வரிகள் மூர்க்கத்தனமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டுவதாக” தெரிய வந்தது. சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆராய்ச்சியின்படி, “‘காங்ஸ்டா’ ராப் மியூசிக் வீடியோக்களில் வரும் ஆபாசத்தையும் வன்முறையையும் நிறையவே பார்க்கும் இளைஞர்கள் நிஜ வாழ்க்கையில் அதேபோல் நடந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்.” 500 இளம் பெண்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின்படி, காங்ஸ்டா வீடியோக்களை எக்கச்சக்கமாக பார்க்கும் இளைஞர்கள் டீச்சரை அடிப்பதற்கும், கைது செய்யப்படுவதற்கும், அநேகரோடு உடலுறவு கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.டீனேஜர்களும் கம்ப்யூட்டர்களும்
சமீப ஆண்டுகளில், இளைஞர்களின் மனதை வடிவமைப்பதில் கம்ப்யூட்டரும் முக்கிய பங்காற்றி வருகிறது. “சமீப ஆண்டுகளில் எண்ணற்ற வீடுகளில் கம்ப்யூட்டர் நுழைந்துவிட்டது” என பீடியாட்ரிக்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. “[அமெரிக்காவில்] பள்ளி மாணவர்களுடைய (6-17 வயதினருடைய) வீடுகளில், அதுவும் மூன்றில் இரண்டு வீடுகளில் கம்ப்யூட்டர் இருந்தது. . . . அவ்வாறு வீட்டில் கம்ப்யூட்டரை வைத்திருந்த 3-17 வயதுக்குட்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரித்தது; 1998-ல் 55% சதவீதமாக இருந்த அது, 2000-ல் 65% ஆக உயர்ந்தது.” வேறு பல நாடுகளிலும்கூட கம்ப்யூட்டரின் உபயோகம் அதிகரித்துள்ளது.
இருந்தாலும், சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை வைத்திருந்தால்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இளைஞர்கள் இல்லை. “5-17 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 90 சதவீதத்தினர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள், 59 சதவீதத்தினர் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்” என ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டார். ஆகவே முன்னொரு போதும் இல்லாதளவுக்கு இளைஞர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள்; அவர்கள் பெரியவர்களின் போதிய கண்காணிப்பின்கீழ் பொறுப்போடு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், அது பயனுள்ளதுதான். ஆனால் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அதைப் பயன்படுத்த அநேக பெற்றோர் அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது.
இன்டர்நெட் உபயோகம் பற்றிய 2001-ஆம் ஆண்டு சுற்றாய்வு இதை உறுதிப்படுத்துவதாக ஃபை டெல்டா கப்பான் என்ற பத்திரிகையில் ஆராய்ச்சியாளர் மால் எழுதுகிறார். அதன்படி, “தங்கள் பிள்ளைகள் எந்தளவு இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி ‘நிறையவே அல்லது போதுமானளவு’ தெரிந்து வைத்திருப்பதாக 71 சதவீத பெற்றோர்கள் நினைத்தார்கள்.
ஆனால் அதே கேள்வியை பிள்ளைகளிடம் கேட்டபோது, பெற்றோருக்குத் தங்கள் இன்டர்நெட் நடவடிக்கைகளைப் பற்றி ‘அவ்வளவாக தெரியாது அல்லது தெரியவே தெரியாது’ என 70% கூறினார்கள்.” அந்தச் சுற்றாய்வின்படி, “9-10 வயது பிள்ளைகளில் 30%, வயதுவந்தோருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சாட் ரூம்களைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், 11-12 வயதினரில் 58 சதவீதத்தினரும், 13-14 வயதினரில் 70 சதவீதத்தினரும், 15-17 வயதினரில் 72 சதவீதத்தினரும் அப்படிப்பட்ட சாட் ரூம்களைப் பயன்படுத்தியதாக சொன்னார்கள். . . . வீடுகளில் இன்டர்நெட்டை உபயோகிப்பது சம்பந்தமாக பிரிட்டனில் நடத்தப்பட்ட சுற்றாய்வின்படி, ஏழு பெற்றோர்களில் ஒருவர், தங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் எதைப் பார்க்கிறார்கள் என்று தங்களுக்கு சுத்தமாகவே தெரியாதென ஒப்புக்கொண்டார்கள்.”பிள்ளைகள் இன்டர்நெட்டை உபயோகிப்பது கண்காணிக்கப்படாவிட்டால் அவர்கள் ஆபாசத்தைப் பார்க்கும் ஆபத்து உண்டு. இது மட்டுமல்லாமல், மற்ற ஆபத்துகளும் உண்டு. முன்பு குறிப்பிடப்பட்ட டாக்டர் டாஃபல் இவ்வாறு புலம்புகிறார்: “நம் பிள்ளைகள் ஸ்கூலிலும் கம்ப்யூட்டரிலும் நண்பர்களைத் தேடிக்கொள்கிறார்கள். ஆகவே, நம்மால் பெரும்பாலும் சந்திக்க முடியாத பிள்ளைகளோடு அவர்கள் நேரம் செலவிடுகிறார்கள்.”
நிச்சயமாகவே, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்படும் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் வேறெந்த தலைமுறையினரும் எதிர்ப்பட்டதில்லை. அநேக இளைஞர்கள் கவலைதரும் விதமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமேது! இன்றைய இளைஞர்களுக்கு எவ்விதத்திலாவது உதவ முடியுமா? (g05 4/8)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“கடந்த 30 ஆண்டுகளாக படிப்படியாக தோன்றியிருக்கும் பிள்ளை வளர்ப்புப் பாணிகள், ஒட்டுதலில்லாத, மௌனமான, படிப்புக் கோளாறுள்ள, கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே உருவாக்கி வருகின்றன.”—டாக்டர் ராபர்ட் ஷா
[பக்கம் 6, 7-ன் படம்]
பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்து வருவதும் குடும்பச் சூழலை மாற்றியிருக்கிறது
[பக்கம் 7-ன் படம்]
கண்காணிக்கப்படாத இளைஞர்கள் சுலபமாக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்
[பக்கம் 8-ன் படம்]
வன்முறையான மியூசிக் வீடியோக்களுக்கும் வன்முறையான நடத்தைக்கும் சம்பந்தமிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
[பக்கம் 9-ன் படம்]
உங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் எதைப் பார்க்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?