Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எய்ட்ஸ் நிவாரணி—ஓர் அவசர தேவை!

எய்ட்ஸ் நிவாரணி—ஓர் அவசர தேவை!

எய்ட்ஸ் நிவாரணி​​—⁠ஓர் அவசர தேவை!

மலாவியில் லிலாங்வே என்ற நகரத்திலுள்ள சென்ட்ரல் மார்கெட்டில் விலை உயர்ந்த ஷூக்கள் விற்கிறாள் கிரேஸ் என்ற பெண்மணி. பார்ப்பதற்கு ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறாள். ஆனால் அவளுடைய சந்தோஷ புன்னகைக்குப் பின்னால் ஒரு சோக கதை மறைந்திருக்கிறது.

1993-⁠ல், மகள் டியான்ஜானே பிறந்தபோது கிரேஸும் அவளுடைய கணவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தனர். ஆரம்பத்தில் டியான்ஜானே ஆரோக்கியமாகத்தான் தோன்றினாள். ஆனால் சீக்கிரத்தில் அவளுடைய உடல் எடை ஏறாமல் நின்றுவிட்டது, ஒன்றுவிட்டு ஒன்றாக தொற்றுநோய் வந்தது. மூன்று வயதில், டியான்ஜானே எய்ட்ஸுக்கு (நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபடுதல்) பலியானாள்.

சில வருடங்களுக்குப்பின், கிரேஸின் கணவருக்கும் நோய்வர ஆரம்பித்தது. ஒருநாள் அவர் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டார், உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. கலியாணமாகி எட்டே வருஷத்தில், கிரேஸின் கணவர் எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட நோய்க்குப் பலியாகிவிட்டார்.

இப்போது கிரேஸ் தனிமரமாகிவிட்டாள், லிலாங்வே புறநகர்ப் பகுதியிலுள்ள ஓர் அறையில் அவள் வசிக்கிறாள். 30 வயதில் அவள் ஒரு புது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ஒருவர் நினைக்கலாம். ஆனால் கிரேஸ் சொல்கிறாள்: “எனக்கு ஹெச்ஐவி தொற்றிவிட்டது, அதனால் நான் கலியாணம் பண்ணிக்கொள்ளவோ பிள்ளை பெத்துக்கவோ முடியாது.” a

இப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் மலாவியில் ஆபூர்வமான ஒன்றல்ல. அங்கு 15 சதவீத மக்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிராமப்புற மருத்துவமனை ஒன்று, “படுக்கைகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 50 சதவீத நோயாளிகளைச் சேர்த்துள்ளது, 50 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்டாஃப்களுக்கு [எய்ட்ஸ்] தொற்றிவிட்டது” என குளோப் அண்டு மெயில் செய்தித்தாள் கூறுகிறது. சஹாரா பாலைவனத்திற்குத் தென்பகுதியிலுள்ள நாடுகளில் பார்த்தால், ஹெச்ஐவி தொற்றப்பட்டவர்களுடைய எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. 2002-⁠ல் ஹெச்ஐவி/எய்ட்ஸ் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் கூட்டுத் திட்டம் (UNAIDS) இவ்வாறு அறிக்கை செய்தது: “இப்போது ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்திற்குத் தென்பகுதியில் ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் 47 ஆண்டுகள். எய்ட்ஸ் இல்லையென்றால், அது 62 ஆண்டுகளாக இருந்திருக்கும்.”

ஆனால் ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்று இன்று ஒரு கொள்ளைநோயாக உருவெடுத்திருக்கிறது, இது ஆப்பிரிக்க கண்டத்திற்கு அப்பாலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி தொற்றியுள்ளதாக UNAIDS கணக்கிடுகிறது. அது மேலும் இவ்வாறு கூறுகிறது: “இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், வயதுவந்தவர்கள் மத்தியில் ஏற்படும் மரணத்திற்கு இந்தப் பத்தாண்டில் ஹெச்ஐவி நோய் மிகப் பெரிய காரணியாக இருக்கும்.” சுயாட்சி பெற்ற காமன்வெல்த் நாடுகளில், அதாவது முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த பெரும்பாலான குடியரசுகள் அடங்கிய கூட்டரசுகளில், இந்தக் கொள்ளைநோய் மிக வேகமாக பரவி வருகிறது. உஸ்பெகிஸ்தானில், “முந்தைய பத்தாண்டோடு ஒப்பிடுகையில், 2002-⁠ம் ஆண்டில் மாத்திரமே அநேக ஹெச்ஐவி நோயாளிகள் இருப்பதாக” ஓர் அறிக்கை கூறுகிறது. அமெரிக்கர்களில் 25-⁠க்கும் 44-⁠க்கும் இடைப்பட்ட வயதுகளிலுள்ள ஆட்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக தொடர்ந்து முன்னணி வகிப்பது ஹெச்ஐவி தொற்றே ஆகும்.

முதலாவதாக, 1986-⁠ல் எய்ட்ஸ் பற்றிய தொடர் கட்டுரைகளை விழித்தெழு! பிரசுரித்தது. சுமார் ஒரு கோடி மக்களுக்கு ஏற்கெனவே ஹெச்ஐவி தொற்றியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரான டாக்டர் ஹெச். மாஹ்லர் அந்த ஆண்டில் எச்சரித்தார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப்பின், உலகெங்கிலும் ஹெச்ஐவி தொற்றியவர்களுடைய எண்ணிக்கை 4.2 கோடிக்கு உயர்ந்திருப்பதாக கணக்கிடப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தைவிட பத்து மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இது அதிகரித்து வருகிறது! இது போலவே எதிர்காலமும் அச்சுறுத்துவதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “அதிகமாக பாதிக்கப்பட்ட 45 நாடுகளில், 2000-⁠க்கும் 2020-⁠க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், எய்ட்ஸ் நோய் கண்டு 6.8 கோடி மக்கள் அகால மரணமடைவார்கள் என கணக்கிடப்படுகிறது.”

இந்தளவு அச்சுறுத்தும் வேகத்தில் தொற்று அதிகரித்து வருவதால், எய்ட்ஸ் நிவாரணி ஓர் அவசர தேவையாக இருக்கிறது. ஆகவே, ஹெச்ஐவி-யை முறியடிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அயராமல் உழைத்து வந்திருக்கிறார்கள். மரண பீதியை உண்டாக்கும் இந்தக் கொள்ளைநோயை எதிர்த்துப் போராடுவதில் என்ன முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது? எய்ட்ஸ் ஒழியும் என நம்புவது நியாயமாக இருக்கிறதா? (g04 11/22)

[அடிக்குறிப்பு]

a ஹெச்ஐவி (Human Immunodeficiency Virus) என்பது எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

உலகெங்கிலும் 4.2 கோடி மக்களுக்கு ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்றியிருப்பதாக கணக்கிடப்படுகிறது; அதில் 25 லட்சம் பேர் பிள்ளைகள்

[பக்கம் 4-ன் படம்]

இந்தியாவில் சுகாதார தொண்டர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய கல்வி புகட்டப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

© Peter Barker/Panos Pictures

[பக்கம் 4-ன் படம்]

பிரேஸிலில் எய்ட்ஸ் நோயாளிக்கு ஒரு சமுக சேவகி ஆறுதல் அளிக்கிறார்

[படத்திற்கான நன்றி]

© Sean Sprague/Panos Pictures

[பக்கம் 4-ன் படம்]

தாய்லாந்தில் ஹெச்ஐவி-யுடன் பிறந்த குழந்தையைத் தொண்டர் ஒருவர் கவனித்துக்கொள்கிறார்

[படத்திற்கான நன்றி]

© Ian Teh/Panos Pictures