நைரோபி—“குளிர்ந்த நீருள்ள இடம்”
நைரோபி—“குளிர்ந்த நீருள்ள இடம்”
கென்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“சகதி நிறைந்த ஈரமான தரிசு நிலம், பேய்க் காற்று வீசுமிடம், மனித சஞ்சாரமற்ற இடம், விதவிதமான வனவிலங்குகள் ஆயிரக்கணக்கில் வாசம் செய்த இடம். அந்தச் சதுப்பு நில சமவெளியின் ஓரத்தில் சென்ற வணிகர் கூட்டத்தின் தடமே அங்கு எப்போதாவது மனித இனம் நடமாடியதற்கு அத்தாட்சி.”—“த ஜெனிஸிஸ் ஆஃப் கென்யா காலனி.”
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் நைரோபி நகரம் எப்படி காட்சியளித்தது என்பதையே இந்த வரிகள் நமக்கு வர்ணித்துக் காட்டுகின்றன. சிங்கங்கள், சிறுத்தைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள், விஷப் பாம்புகள் என வகைதொகையற்ற வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கியது. நெஞ்சுரமிக்க மசாய் இன மக்கள் தங்களது பிரியமான கால்நடைகளை அங்குள்ள நதிக்கு ஓட்டிச்செல்வர். அது நாடோடி சமுதாயத்தவருக்கு மிகவும் பிடித்தமான இடம். சொல்லப்போனால், மசாய் இனத்தவர் அந்த நதியை ஊவாசா நைரோபி என்று அழைத்தனர். அதற்கு “குளிர்ந்த நீர்” என அர்த்தம். அந்தப் பகுதிக்கு என்காரி நைரோபி என்றும் பெயரிட்டனர். அதன் பொருள் “குளிர்ந்த நீருள்ள இடம்.” அவர்கள் பெயர் சூட்டிய அந்தப் பகுதி, கென்யாவின் சரித்திரத்தையே தலைகீழாக மாற்றவிருந்தது.
a 1899-ன் மத்திபத்திற்குள் கடலோர நகரமான மொம்பாஸாவிலிருந்து நைரோபி வரை 530 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளம் போடப்பட்டது. இதற்குள், “ட்சாவோ என்ற இடத்தில் மனிதனை வேட்டையாடும்” இரண்டு சிங்கங்கள் அநேக பணியாளர்களைக் கொன்று தின்றதால் பணியாளர்கள் பீதியடைந்தனர். அதுமட்டுமல்ல, கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு வழியாக பாதையை அமைக்க வேண்டிய மிக கடினமான வேலையையும் எதிர்ப்பட்டனர். இந்த ரயில் பாதையை இன்னும் தொலைதூரத்திற்குப் போட வேண்டியிருந்ததால், கட்டுமானப் பொருட்களைச் சேமித்து வைக்கும் முக்கிய கிடங்கு மொம்பாஸாவிலேயே இருப்பது நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. அதற்குப் பதிலாக, அசெளகரியமாக தோன்றியபோதிலும், பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கும், உள்நாட்டில் கிடங்கை நிறுவுவதற்கும் நைரோபியே சிறந்த இடமாக கருதப்பட்டது. அது பிற்பாடு கென்யாவின் தலைநகரமாக ஆனதற்கு இந்தச் சூழலே பெரிதும் காரணமானது.
கென்யன் ரயில்வேயின் கட்டுமானப் பணி நைரோபியின் வளர்ச்சிக்கு மைல் கல்லாக அமைந்தது. ஒரு காலத்தில் அது ‘லூனடிக் எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்பட்டது.கிழக்கு ஆப்பிரிக்க காப்பாட்சி என்பதே கென்யாவின் அக்காலத்துப் பெயர். 20-ம் நூற்றாண்டின் உதயத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கு காப்பாட்சியின் நிர்வாக மையமாக நைரோபி தெரிவு செய்யப்பட்டது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் வளரும் இந்த நகரத்திற்கு அது உதவியாக இருந்திருக்கும். அப்படித் திட்டமிடப்படாததால் ரயில் நிலையத்தைச் சுற்றி கட்டடங்கள் தாறுமாறாக கட்டப்பட்டன. மரம், நெளிவுகளுள்ள இரும்புத்தகடு மற்றும் உள்ளூரில் கிடைத்த இதரப் பொருட்களால் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால், எதிர்காலத்தில் சர்வதேச மையமாக நைரோபி மாறும் என்பது போல் அப்போது காட்சி அளிக்கவில்லை. மாறாக, ஓர் ஏழ்மையான நகரம் போல் காட்சியளித்தது. அது சர்வதேச மையமாக மாறும் என்று துளிகூட எதிர்பார்க்காமல்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கு கட்டடங்கள் சில எழும்பின. அதோடு அதன் எல்லைக்குள் சுற்றித்திரிந்த வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
விரைவிலேயே அந்தப் புதிய குடியிருப்புக்குள் நோய்கள் படையெடுத்தன. கொள்ளைநோய் பரவியதே புதிய நிர்வாகிகள் எதிர்ப்பட்ட முதல் பயங்கர சோதனை. உடனடி நிவாரணத்திற்கு என்ன செய்வது? நோய் பரவுவதைத் தடுக்க நகரின் பாதிக்கப்பட்ட இடங்கள் எரிக்கப்பட்டன! அடுத்த அரை நூற்றாண்டிற்குள் நைரோபி தன் கடந்த கால காயங்களிலிருந்து குணமடைந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் வணிக மற்றும் சமூக மையமாக செழித்தோங்கவிருந்தது.
நவநாகரீக நகரமாக பரிணமித்தது எப்படி?
சுமார் 1,680 மீட்டர் உயரத்தில் நைரோபி அமைந்திருப்பதால், அதைச் சுற்றிலுமுள்ள இடங்களின் கண்கவர் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். வானம் நிர்மலமாகக் காட்சி அளிக்கையில் ஆப்பிரிக்காவின் இரண்டு கெம்பீர அடையாளங்களை அழகாக பார்க்கலாம். ஒன்று, வடக்கே 5,199 மீட்டர் உயரமுள்ள கென்யா மலை. அது கென்யாவின் மிக உயர்ந்த மலையும், ஆப்பிரிக்காவின் இரண்டாவது உயரமான மலையுமாகும். மற்றொன்று தெற்கே தொலைதூரத்தில் காணப்படும் ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையாகிய கிளிமஞ்சாரோ மலை. இது 5,895 மீட்டர் உயரமுடையது. கென்யா மற்றும் டான்ஜானியா எல்லையில் பூமத்திய ரேகைக்கு அருகில் நிற்கிறது. பனி போர்த்தி எப்போதும் சிங்காரமாய் காட்சி தரும் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பிய புவியியல் நிபுணர்களையும் ஆய்வாளர்களையும் 150 வருடங்களுக்கு முன்னரே தன்னிடம் சுண்டி இழுத்தது.
50 வருடத்திற்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ள நைரோபி, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. விண்ணை முட்டும் உயரமான புதுப்புது கட்டடங்கள் எழும்பி இருப்பதிலிருந்தே அதன் வளர்ச்சி தென்படுகிறது. அஸ்தமிக்கும் வெப்பமண்டல சூரிய ஒளியில் கண்ணாடி மற்றும் ஸ்டீல் பொருத்தப்பட்ட ஓங்கிய பிரமாண்டமான கட்டடங்கள் ஜொலிப்பதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. நைரோபியின் முக்கிய வர்த்தக மாவட்டத்திற்குச் சுற்றுலாப் பயணி ஒருவர் சென்றால், ஆச்சரியப்பட்டுப் போய்விடலாம். வெறும் ஒரு நூற்றாண்டிற்கு
முன்னர், அவர் நின்றுகொண்டிருக்கும் அந்த இடம் மனித குடியிருப்பே இல்லாத மிருகங்கள் நடமாடிய ஆபத்தான இடம் என்பதை அறியும்போது அவரால் நம்பவே முடியாது.கால ஓட்டத்தில், அது மாறிவிட்டிருந்தது. வேற்று நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செடிகளாகிய அழகிய போகன்வில்லா, பூத்துக்குலுங்கும் ஜக்கரான்டா, மடமடவென்று வளரும் யூக்கலிப்டஸ் மற்றும் வாட்டல் என்ற மரங்கள் அங்கு நடப்பட்டன. இவ்வாறு, முன்பு புழுதி படிந்திருந்த பாதைகள், கொஞ்ச கொஞ்சமாக இருபுறமும் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளாக மாறின. வெயில் காலங்களில் சாலையில் நடந்து செல்பவருக்கு அவை இன்றும் பெரிய குடைகள் போல் நிழல் தருகின்றன. நகரின் மையப் பகுதியின் அருகிலிருக்கும் தாவர தோட்டத்தில் (arboretum) குறைந்தபட்சம் 270 மர வகைகள் உள்ளன. எனவே நைரோபி “இயற்கை வனத்தின் மத்தியில் கட்டப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது” என ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நைரோபியின் இதமான தட்பவெப்பத்திற்கு இந்தச் செழிப்பான தாவரங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. அங்கு பகற்பொழுதில் வெதுவெதுப்பாகவும் இரவுப்பொழுதில் குளிராகவும் இருக்கும்.
கலாச்சாரக் கலவை
நைரோபி ஒரு பெரிய காந்தத்தைப் போன்று பல தேசத்து ஆட்களை தன்னிடம் கவர்ந்திழுத்திருக்கிறது. அந்நகரின் ஜனத்தொகை தற்போது 20 லட்சத்திற்கும் அதிகமாகும். அங்கு ரயில் பாதை போடப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் ஜனங்கள் வசிப்பதற்கு நல்ல வசதியாகிவிட்டது. ரயில் பாதை அமைப்பதற்கு உதவிய இந்தியர்கள் அங்கேயே தங்கி தொழில் மையங்களை நிறுவினர்; இவை நாடெங்கிலும் பரவி வளர்ச்சியடைந்தன. இவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த வியாபாரப் புள்ளிகள் அங்கு தொழில் தொடங்கினர்.
நைரோபி கலாச்சாரக் கலவைமிக்க ஓர் இடம். ஒருவர் அதன் வீதிகளில் நடந்து செல்கையில் பன்னாட்டு மக்களைப் பார்க்கலாம். தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு ஷாப்பிங் சென்டருக்குள் செல்லும் இந்தியப் பெண்மணி, கட்டடம் கட்டும் இடத்திற்கு விரைந்தோடும் பாகிஸ்தானியப் பொறியியலாளர், டிப் டாப் உடை அணிந்து ஹோட்டலில் ரூம் புக் செய்யும் நெதர்லாந்து விமானப் பணியாளர், நைரோபியின் வளமான பங்குச் சந்தையில் நடக்கும் வியாபாரக் கூட்டத்திற்கு வேக வேகமாய் செல்லும் ஜப்பானிய தொழிலதிபர் என விதவிதமான ஆட்களை அங்கு பார்க்கலாம். இதோடு, நைரோபியின் உள்ளூர் வாசிகள் பஸ் ஸ்டாப்புகளில் நின்று கொண்டிருப்பதையும், சாவடிகளில், திறந்த வெளிச் சந்தைகளில், கடைகளில் வியாபாரம் செய்வதையும், அலுவலகங்களிலோ தொழிற்சாலைகளிலோ வேலை செய்வதையும் பார்க்கலாம்.
நகரில் வாழும் கென்யர்களில் சிலரே சுத்த “நைரோபியர்கள்” என்பது விநோதமான விஷயம். இங்குள்ள அநேகர் “இக்கரைக்கு அக்கரை பச்சை” என எண்ணி நாட்டின் மற்ற பாகங்களிலிருந்து வந்தவர்கள். மொத்தத்தில், நைரோபியர்கள் சிநேகப்பான்மையும் உபசரிக்கும் தன்மையும் உடைய ஜனங்கள். இத்தகைய உபசரிக்கும் தன்மையே அந்நகரில் சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளை நிறுவுவதற்கு பெரிதும்
அடிகோலியிருக்கிறது என்று சொல்லலாம். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தலைமை அலுவலகம் நைரோபியில்தான் உள்ளது.சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பது எது?
பல்வகை ஜீவராசிகளை எண்ணற்ற அளவில் கொண்ட நாடுதான் கென்யா. அங்குள்ள பல தேசிய பூங்காக்களும், விலங்குகளின் சரணாலயங்களும் ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு வருடமும் கவர்ந்திழுக்கின்றன. நைரோபியிலிருந்துதான் அநேக சுற்றுலாப் பயணங்கள் ஆரம்பிக்கின்றன. இருப்பினும், நைரோபியே ஒரு சுற்றுலா மையமாக விளங்குகிறது. உலகிலேயே சில நகரங்களில்தான் விலங்குகள் மிக அருகில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடியும். நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ‘நைரோபி தேசியப் பூங்கா’வை சுற்றுலாப் பயணிகளின் புகலிடம் என்றே சொல்லலாம். b இங்கு நைரோபியின் “பூர்வீக வாசிகளை” நேருக்கு நேர் சந்திக்கலாம். ஆம், விலங்குகள் வாழும் இடத்திற்கும் மனிதர்கள் வாழும் இடத்திற்கும் தடுப்பாக வெறுமனே கம்பி வேலிகளே இருக்கின்றன. அருகிலிருக்கும் காட்டிலிருந்து வழி தவறிய விலங்குகள், சில சமயம் மனிதர்கள் வாழும் இடத்திற்குள்ளேயே வந்துவிடுகின்றன. சமீபத்தில், அதாவது செப்டம்பர் 2002-ல், ஒரு நைரோபியருடைய வீட்டு ஹாலில் ஒரு பெரிய ஆண் சிறுத்தையைப் பிடித்தனர்!
நகரின் மையத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால், நைரோபி அருங்காட்சியகத்தைச் சென்றடையலாம். கென்யாவின் சுவாரஸ்யமான சரித்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ள தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். அருங்காட்சியகத்திற்குள் இருக்கும் பாம்புப் பண்ணையில் ஊரும் பிராணிகள் அநேகம் உள்ளன. அங்கிருக்கும் முதலை பார்வையாளருடைய முறைப்புக்கு மசிவதாக தெரிவதில்லை. பக்கத்திலேயே இருக்கும் ஆமை தன்னைச் சூழ்ந்துள்ள உலகம் பம்பரமாய்ச் சுழன்றாலும் அது அசைவதாக தெரியவதில்லை. உண்மையில், அங்கிருக்கும் முக்கிய “வாசிகள்” நல்ல பாம்புகள், மலைப் பாம்புகள் மற்றும் விரியன் பாம்புகளே. இப்படிப்பட்ட பிராணிகள் சுற்றித் திரிவதால், ‘விஷப் பாம்புகள் ஜாக்கிரதை’ போன்ற எச்சரிப்புப் பலகையைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள்!
வித்தியாசமான தண்ணீர்
நைரோபியின் பெயரைத் தாங்கி ஓடும் நதி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தாலும் அதன் நீர் தொழிற்சாலைக் கழிவுகளாலும் வீடுகளிலிருந்து வெளியேறுகிற கழிவுநீராலும் மாசுபடுத்தப்படுகிறது. வளரும் நகரங்கள் பலவற்றில் இந்நிலை சகஜமானதுதான். ஆனால் பல வருடங்களாக உயர்ந்த ஓர் ஊற்றுமூலத்திலிருந்து பாய்ந்துவரும் “தண்ணீரை” நைரோபியில் உள்ளவர்கள் பெற்று வருகின்றனர். அது என்ன தண்ணீர்? அதுதான் யெகோவாவின் சாட்சிகள் கற்றுத்தரும் பைபிளின் உயிர்காக்கும் செய்தி.—யோவான் 4:14.
நைரோபி தற்போதைய சிறப்பை அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, அதாவது 1931-ல், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரே ஸ்மித், ஃபிராங்க் ஸ்மித் என்ற இரு சகோதரர்கள் பைபிள் சத்தியங்களை கென்யாவில் பரப்பும் குறிக்கோளோடு வந்திருந்தனர். மொம்பாஸாவிலிருந்து ரயில் பாதை வழியாகவே வந்தனர், வழியில் அநேக ஆபத்துகளைத் தைரியத்துடன் எதிர்ப்பட்டனர். சில சமயங்களில் வனவிலங்குகளுக்கு பக்கத்திலேயே இரவுகளைக் கழித்துள்ளனர். நைரோபியில் 600 சிறு புத்தகங்களையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்துள்ளனர். இன்று நைரோபி மாநகரிலுள்ள 61 சபைகளில் சுமார் 5,000 யெகோவாவின் சாட்சிகள் இருக்கின்றனர். சபைக் கூட்டங்கள், அசெம்பிளிகள், மாவட்ட மாநாடுகள், சர்வதேச மாநாடுகள் மூலம் அங்கு வாழ்பவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை நன்கு அறிந்திருக்கின்றனர். பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையளிக்கும் செய்தியை அநேகர் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கின்றனர்.
ஒளிமயமான எதிர்காலம்
“தொழில்மயமான நகரங்கள் வீட்டுவசதிக் குறைவினால் அடிக்கடி அவதிப்படுகின்றன . . . காற்று மற்றும் தண்ணீர் வளங்களைத் தொழிற்சாலைகள் மாசுபடுத்துகின்றன” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. இதற்கு நைரோபி மட்டும் விதிவிலக்கா என்ன! தினமும் ஜனங்கள் கிராமப் புறங்களிலிருந்து இங்கு வந்து குடியேறுவதால், பிரச்சினைகள் இன்னும் அதிகரிக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், நைரோபி என்ற வைரத்தின் பொலிவு மங்கிவிடலாம்.
ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் எல்லா மக்களும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் காலம் வரும் என்பதே சந்தோஷத்திற்குரிய விஷயம். நகர வாழ்க்கையை இன்று கடினமாக்குகிற எல்லா பிரச்சினைகளும் அப்போது ஒழிந்துவிட்டிருக்கும்.—2 பேதுரு 3:13. (g04 11/8)
[அடிக்குறிப்புகள்]
a ரயில் பாதை அமைத்ததைப் பற்றிய முழு விவரத்தைத் தெரிந்துகொள்ள செப்டம்பர் 22, 1998, விழித்தெழு! இதழில் பக்கங்கள் 21-4-லுள்ள “கிழக்கு ஆப்பிரிக்காவின் ‘பைத்தியக்கார எக்ஸ்பிரஸ்’” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 16-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நைரோபி
[பக்கம் 18-ன் படம்]
கிளிமஞ்சாரோ மலை
[பக்கம் 18-ன் படம்]
கென்யா மலை
[படத்திற்கான நன்றி]
Duncan Willetts, Camerapix
[பக்கம் 18-ன் படம்]
திறந்த வெளிச் சந்தை
[பக்கம் 19-ன் படம்]
1931-ல் ஃபிராங்க் மற்றும் கிரே ஸ்மித்
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
© Crispin Hughes/Panos Pictures