என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?
இளைஞர் கேட்கின்றனர் . . .
என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?
“‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று யார் முதலில் சொல்ல வேண்டும், ஆணா? பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்குமா?—லாரா. a
அவரை நீங்கள் சமீபத்தில் சந்தித்திருக்கலாம் அல்லது கொஞ்ச காலமாகவே அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரை ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டாக நீங்கள் நினைப்பதில்லை. அதற்கும் மேலாக, அவருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள். அவருக்கும் அதே ஆசை இருக்கிறதென்று நம்புகிறீர்கள். அவர் வெட்கப்படுவதால் சொல்வதற்கு கூச்சப்படுவதாக நினைக்கிறீர்கள். அதனால் நீங்களே முதலில் போய் அவரிடம் பேச நினைக்கிறீர்கள். ஆனால் அது சரியாக இருக்குமா என்று தெரியாமல் குழம்புகிறீர்கள். b
முதலில் உங்கள் குடும்பத்தாருடைய உணர்ச்சிகளையும் சுற்றியுள்ளவர்களுடைய உணர்ச்சிகளையும் யோசித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து வைப்பதுதான் நீங்கள் வசிக்கும் இடத்தில் வழக்கமா? c உண்மைதான், காதல், கல்யாணம் இதெல்லாம் சொந்த விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை அநாவசியமாக புண்படுத்தாமலிருக்கவே முயற்சி செய்கிறார்கள். அதோடு குடும்பத்தினரின் உணர்ச்சிகளையும் அன்பானவர்களின் உணர்ச்சிகளையும் அவர்கள் மதிக்க விரும்புகிறார்கள்.
என்றாலும் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன் ஆணும் பெண்ணும் பேசி பழகிப் பார்ப்பது இன்று அநேக நாடுகளில் ரொம்ப சகஜம். அப்படியானால், ஆணிடம் பெண் முதலில் தன் காதலைச் சொல்லலாமா? இங்கு மறுபடியும் குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரின் உணர்ச்சிகள் முகம்காட்டலாம். முதலில் ஒரு பெண் தன் காதலைச் சொல்வது பலருக்கு அதிர்ச்சியாகவோ புண்படுத்துவதாகவோ இருக்குமா?
ஒரு பெண் வலியப்போய் தன் காதலை சொல்வது சரியாக இருக்குமா என்பதைப் பற்றி பைபிள் வேறென்ன சொல்கிறது? பைபிள் காலங்களில், தேவ பக்தியுள்ள ரூத் என்ற ஒரு பெண் கல்யாண விஷயம் பேச போவாஸ் என்ற மனிதனை அணுகினாள். யெகோவா தேவன் அவளுடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார்! (ரூத் 3:1-13) எனினும் ரூத் ஒன்றும் வாலிபப் பெண் கிடையாது. அவள் ஒரு விதவை. எனவே நிச்சயமாகவே அவளுக்கு கல்யாணம் செய்துகொள்கிற வயது இருந்தது. என்றாலும், பைத்தியமாக போவாஸ் பின்னாலேயே சுற்றித்திரிகிறவளாக அவள் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, திருமணத்தைக் குறித்து கடவுள் கொடுத்திருந்த சட்டங்களை அவள் கவனமாகப் பின்பற்றினாள்.—உபாகமம் 25:5-10.
சரி, உங்களுக்குக் கல்யாண வயசு ஆகிவிட்டது என்றும் நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகிற நபர் உங்களை விரும்புகிறாரா இல்லையா என்பது தெரியாமல் உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டிவிடுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம். அப்படிச் செய்வது உங்கள் இதயத்தை எடுத்து வேறொருவர் கையில் வைப்பது போல இருக்கும். அவர் அதை மென்மையாக வைத்துக்கொள்வாரா அல்லது கீழே போட்டு உடைத்துவிடுவாரா? இப்படிப்பட்ட அநாவசியமான தர்மசங்கடத்தை தவிர்ப்பதற்கும் மனமுடைந்து போகாமல் இருப்பதற்கும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது சிறந்தது.
விவேகமாய் நடந்துகொள்ளுங்கள்
வெகு சுலபமாக நீங்கள் காதல் கனவுகளில் மூழ்கிவிடலாம். ஏன், உங்கள் கல்யாண நாள், அதன் பிறகு வாழ்க்கை இவற்றைக் நீதிமொழிகள் 13:12) நீங்கள் நியாயமாக சிந்திக்க முடியாதபடியும் பகல் கனவுகள் உங்கள் மனதைப் போட்டு குழப்பலாம். எனினும் நீதிமொழிகள் 14:15 சொல்கிறது: “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” நடைமுறை அறிவும் நியாயமாக சிந்திக்கும் முன்மதியும் உடையவனே விவேகி. சரி, காதலில் எப்படி விவேகத்துடன் நடந்துகொள்வது?
குறித்துக்கூட நீங்கள் கற்பனையில் மிதக்கலாம். உண்மைதான், இப்படிப்பட்ட பகல் கனவுகள் ரொம்ப இனிமையாக இருக்கலாம். ஆனால் அவை வெறும் மாயையே. அதுமட்டுமல்ல, உங்களால் திருப்தி செய்யவே முடியாத அளவுகடந்த ஆசைகளை அவை உசுப்பிவிடும். என்றாலும், அவற்றை உங்களால் அடையவே முடியாது. பைபிள் சொல்கிறபடி, ‘நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.’ (முதலில் ‘அறிவோடு நடந்துகொள்ள’ முயற்சி செய்யுங்கள். (நீதிமொழிகள் 13:16) “ஒருவரைப் புரிந்துகொள்ளாமல் அவரை உண்மையில் காதலிக்கவே முடியாது” என்று ஒரு இளைஞி சொல்கிறாள். உங்கள் இதயத்தை ஒருவரிடம் பறிகொடுப்பதற்கு முன், அவர் என்ன செய்கிறார், எப்படிப் பேசுகிறார், மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதையெல்லாம் கவனியுங்கள். “அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள அவருடைய நண்பர்களிடமும் அவரை நன்றாக அறிந்த பெரியவர்களிடமும் கேளுங்கள்” என்கிறார் ஒரு வாலிபர். அவர் கிறிஸ்தவ சபையில் ‘நற்சாட்சி பெற்றவராயிருக்கிறாரா?’ என்பதையும் விசாரியுங்கள். (அப்போஸ்தலர் 16:2) அதோடு, “குரூப்பாக சேர்ந்து போவதும் அவருடைய குடும்பத்தாரைத் தெரிந்து கொள்வதும் ரொம்ப உதவியாக இருக்கும்” என இஸாபெல் என்ற வாலிபப் பெண் சொல்கிறாள். இப்படி நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து குரூப்பாக செல்வது எந்த டென்ஷனும் இல்லாமல் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும்.
இப்படி ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கு நேரமும் பொறுமையும் அவசியப்பட்டாலும் அவருடைய மனப்பான்மை, பழக்கவழக்கம், சுபாவம் ஆகியவற்றை புரிந்துகொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் இன்னும் உறுதிப்படலாம் அல்லது அவை மாறிவிடலாம். நீதிமொழிகள் 20:11 இவ்வாறு சொல்கிறது: ‘பிள்ளையின் [இளைஞனின்] செய்கை சுத்தமோ செம்மையோ என்பது அவன் நடக்கையினால் விளங்கும்.’ ஆம், அவருடைய செயல்கள் அவருடைய உண்மையான சுபாவத்தை காலப்போக்கில் வெளிப்படுத்திவிடும்.
எனவே, உங்கள் உணர்ச்சிகள் உருப்பெறுமுன் வேகத்தில் போய் அவசரப்பட்டு அவற்றை சொல்லிவிடாதபடி ஞானமாக நடந்துகொள்ளுங்கள். அவசரப்பட்டு அவரிடம் உங்கள் காதலைச் சொல்லி, அதற்கு அவரும் சரி என்று தலையாட்ட, பிற்பாடு அவர் உங்களுக்கு ஏற்ற துணையல்ல என்பதை நீங்கள் உணர, ஏன் இந்த வம்பு. d நீங்களே போய் அவரைக் காதலிப்பதாக சொல்லிவிட்டு பிறகு போய் நீங்களே உறவை அறுத்துக்கொண்டால் அது அந்த இளைஞனின் மனதை ஒருவேளை கடுமையாகவே புண்படுத்திவிடும்.
உங்கள் நடத்தை
நீங்கள் அந்த இளைஞரைக் கவனிப்பது போலவே அவரும் உங்களைக் கவனித்து கொண்டிருப்பார்! நீங்கள் தேவ பக்தியுள்ள குணங்களை உடையவர் என்று மற்றவர்கள் சொல்வதற்கேற்ப நீங்கள் தோற்றமளிக்கிறீர்களா? “நிறைய பெண்கள் ஒழுங்காகவே உடுத்துவதில்லை” என்று இஸாபெல் சொல்கிறாள். “ஆன்மீக கண்ணோட்டத்தை உடைய ஒரு நபர் உங்களைக் கவனிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் அடக்கமான உடை உடுத்துங்கள்.” ஃபேஷன் எதுவாயிருந்தாலும் சரி, “தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்” உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதுவே ஆன்மீக கண்ணோட்டத்தை உடையவரின் கண்ணுக்கு உங்களை அதிக இதமானவராய் தோன்றச் செய்யும்.—1 தீமோத்தேயு 2:10.
‘வார்த்தையில் . . . முன்மாதிரியாயிரு’ என்று இளம் கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 4:12) ஆம், நீங்கள் பேசுகிற விதம் உங்களைப் பற்றி பக்கம் பக்கமாக சொல்லும். நீங்கள் விரும்புகிற அந்த நபரிடம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? அவருக்குக் கூச்ச சுபாவமென்றால் ஒருவேளை பேசுவதற்கே அவர் வெட்கப்படலாம், பயப்படலாம். அதனால், “அவருடைய ரியாக்ஷனை தெரிந்துகொள்வதற்கு நீங்கள்தான் முதலில் போய் பேச வேண்டியிருக்கும்” என்று அபி என்ற இளம் பெண் சொல்கிறாள்.
பேச்சை எப்படி ஆரம்பிப்பது? நிறுத்தாமல் உங்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தீர்களென்றால் நீங்கள் சரியான ஒரு சுயநலவாதி என்றும், மேற்போக்கான இயல்புடையவர் என்றும் மனதுக்குள்ளேயே அவர் உங்களுக்கு ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துவிடுவார். “உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்” என்று பைபிள் ஆலோசனை வழங்குகிறது. (பிலிப்பியர் 2:4, தமிழ் கத்தோலிக்க பைபிள்) அவரைப் பற்றி, அவருக்கு ஈடுபாடுள்ள விஷயங்களைப் பற்றி சில கேள்விகளை நீங்கள் கேட்கலாம், அப்படிக் கேட்பது அவர் தன்னுடைய உணர்ச்சிகளைப் பற்றி பேச வாய்ப்பளிக்கும்.
‘கபட நாவையும்,’ ‘பொய் உதடுகளையும்’ பயன்படுத்தி முகஸ்துதி செய்யாதீர்கள். (சங்கீதம் 120:2) அப்படிப்பட்ட பேச்சுகள் உள்ளத்திலிருந்து வராதவை என்பதை ஞானமுள்ள ஒருவர் சட்டென கண்டுகொள்வார். அதே சமயத்தில், அவர் இதைத்தான் கேட்க விரும்புகிறார் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்காதீர்கள். முக்கியமாக உங்களுடைய ஆன்மீக இலக்குகள் போன்ற ஸீரியஸான விஷயங்களைப் பற்றி பேசும்போது இதில் மிகவும் கவனமாயிருங்கள். எப்போதும் உண்மையைப் பேசுங்கள்; நேர்மையாய் இருங்கள். இப்படியாக நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போதுதான் நீங்கள் இருவருமே ஒத்த இலக்குகளைக் கொண்டிருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
பதில் கிடைக்கவில்லை என்றால்
நீங்கள் என்னதான் விவேகமாக நடந்தும் அவருடைய மனதில் காதல் தீ பற்றவில்லை என்றால் என்ன செய்வது? 1 கொரிந்தியர் 11:3) யோசிக்க வேண்டிய இன்னொரு கேள்வி: ‘அவர் உண்மையிலேயே கூச்ச சுபாவமுள்ளவர் தானா? அல்லது என்னை அவருக்குப் பிடிக்கவில்லையா?’ அவருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியவந்தால் உங்கள் மனம் வேதனைப்படுமென்பது உண்மைதான். ஆனால் அதைத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்களைக் காதலிக்காத ஒருவரிடம் உங்கள் காதலைத் தெரியப்படுத்துவதால் ஏற்படும் தர்மசங்கடத்தை உங்களால் தவிர்க்க முடியும்.
இப்படியே பல வாரங்கள் கடந்து விடுகின்றன, பல மாதங்களும் பறந்து விடுகின்றன. இன்னும் அவர் உங்கள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய கூச்ச சுபாவத்தால்தான் அவர் அப்படி இருக்கிறார் என்று நினைத்து விட்டுவிடலாமா? பின்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவர் உண்மையிலேயே அந்தளவுக்கு கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தால் கல்யாணம் செய்துகொள்வதற்கு அவர் தயாரா? அப்படியே அவரை நான் கல்யாணம் செய்துகொண்டாலும் குடும்பத் தலைவனின் பொறுப்புகளை அவர் ஏற்பாரா? இல்லை, நான்தான் அந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமென எதிர்பார்ப்பாரா?’ (அவர் உங்களைக் காதலிப்பதற்கான அத்தாட்சியை நீங்கள் கண்டதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் தன் காதலைச் சொல்வதற்கு அவர் ரொம்பவும் தாமதிக்கிறாரே அல்லாமல் வேறொன்றுமல்ல என நீங்கள் நினைக்கலாம். வாய்விட்டு அவராகவே அதைச் சொல்ல அவருக்குக் கொஞ்சம் உந்துதல் தேவையென்றும் நீங்கள் நினைக்கலாம். அப்படிக்கூட இருக்கலாம். ஆனால் நீங்களே வலியப்போய் உங்கள் காதலைச் சொல்ல தீர்மானித்தால், அதில் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்போது சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதையும் நன்றாக யோசிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, “உங்களைக் காதலிக்கிறேன்” என வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக அவருடைய கவனத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை இலைமறை காயாக தெரியப்படுத்த நினைக்கலாம். அப்படியானால், ஒரு பொருத்தமான, அமைதியான சூழலில் ‘உங்களைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க விரும்பறேன்’ என்று அவரிடம் நீங்கள் சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது எங்கே வார்த்தைகளை உளறிவிடுவீர்களோ என நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுடைய உள்ளப்பூர்வமான உணர்ச்சிகள் உங்களுடைய வார்த்தைகளைவிட அதிகத்தைப் பேசும். இச்சமயத்தில், அவரோடு பழக விரும்புகிறீர்கள் என்பதை மட்டுமே சொல்லப் போகிறீர்களே தவிர கல்யாணம் செய்ய விரும்புவதாக சொல்லப் போவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். என்றாலும், நீங்கள் அப்படிப் பேசியதே அவருக்கு எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். அதனால் நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு டைம் கொடுங்கள்.
சரி, இந்த வாலிபரை நன்றாக புரிந்துகொண்டு அவர் அன்பானவர், கரிசனையானவர் என்பதைக் கண்டுகொண்டீர்கள். இப்போது அவரிடம் உங்கள் காதலைச் சொல்லும்போது எங்கே உங்கள் உணர்ச்சிகளை அவர் புண்படுத்திவிடுவாரோ, அவமானப்படுத்திவிடுவாரோ என்றெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் உங்கள் காதலை அவர் நாசூக்காக அதே சமயம் உறுதியாக மறுத்துவிட்டால் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் ஒரு வாலிபன் என்ன செய்ய வேண்டும்? அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும். (g04 10/22)
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் சில மாற்றப்பட்டுள்ளன.
b முக்கியமாக இளம் பெண்களை மனதில் வைத்துத்தான் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் காதலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிற இளம் ஆண்களும் மற்றவர்களும் இக்கட்டுரையிலுள்ள பைபிள் ஆலோசனையிலிருந்து நன்மை பெறலாம்.
c பெரியோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் எப்போதும் துக்கத்தில் முடிவடைவதில்லை. உதாரணத்திற்கு, பைபிள் காலங்களில் ஈசாக்குக்கு அவருடைய பெற்றோர்தான் பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அதற்குப் பிறகுதான் ஈசாக்கு ‘ரெபெக்காளை நேசித்தார்’ அல்லது காதலித்தார். (ஆதியாகமம் 24:67) இதில் நமக்கு ஏதாவது பாடம்? ஆம், இருக்கிறது; உள்ளூர் வழக்கங்கள் கடவுளுடைய சட்டங்களை மீறாதவரை அவசரப்பட்டு அவற்றை வேண்டாமென ஒதுக்கிவிடாதீர்கள்.—அப்போஸ்தலர் 5:29.
d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தில் 28-31 அதிகாரங்களிலுள்ள தகவல், திருமணம் செய்துகொள்ள அவர் உங்களுக்குப் பொருத்தமான நபரா என்பதைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
[பக்கம் 24-ன் படம்]
அவருடைய நடத்தையைப் பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையே ஒருவேளை நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள்
[பக்கம் 24-ன் படம்]
நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அவரை நன்றாக அறிந்த பொறுப்பான பெரியவர்களிடம் பேசுங்கள்