நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு மனநோய் இருக்கையில்
நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு மனநோய் இருக்கையில்
ஜான்சன் குடும்பத்தாருக்கு அந்த நாள் எப்போதும் போலவே விடிந்தது. a அந்தக் குடும்பத்தார் நான்கு பேரும் படுக்கையை விட்டு எழுந்து, அவரவர் தத்தம் வேலையைச் செய்ய தயாரானார்கள். ஸ்கூல் பஸ்ஸைப் பிடிப்பதற்கு நேரமாகிவிட்டதை 14 வயது மகன் மாத்யூவிற்கு அவனது அம்மா மரியா நினைப்பூட்டினார். அதற்குப் பின் துளியும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. அரைமணி நேரத்திற்குள்ளாக மாத்யூ படுக்கை அறை சுவர் முழுவதும் பெயின்ட்டை ஸ்ப்ரே செய்ய ஆரம்பித்தான், கார் ஷெட்டிற்கு தீ வைக்க முற்பட்டான், மாடி அறையில் தூக்குப் போட்டுக்கொள்ள முயன்றான்.
பின்பு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டான்; மரியாவும் அவரது கணவர் ஃபிராங்க் ஜான்ஸனும் அந்த ஆம்புலன்ஸுக்குப் பின்னாக சென்றார்கள். மாத்யூவுக்கு என்ன நடந்ததென்றே அவர்களுக்குப் புரியவில்லை. வருத்தகரமாக, இது வெறும் ஆரம்பக் கட்டமாகத்தான் இருந்தது. இதற்குப் பிறகு, அவனுக்கு மனநோய் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திய பல சம்பவங்கள் நிகழ்ந்தன; மனநோயாளிகளின் இருண்ட உலகிற்குள் மாத்யூ தள்ளப்பட்டான். வேதனை நிறைந்த இந்த ஐந்து வருட காலத்தின்போது அவன் பல முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறான், இரு முறை கைது செய்யப்பட்டிருக்கிறான், ஏழு முறை மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான், எண்ணற்ற முறை மனநோய் மருத்துவர்கள் பலரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான். ஆறுதலாக என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்களும் உறவினர்களும் குழம்பினார்கள்.
உலக மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் மனநோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்தப் புள்ளிவிவரத்தை வைத்துப் பார்க்கும்போது, ஏதாவது ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரோ, பிள்ளையோ, உடன்பிறப்போ, அல்லது நண்பரோ ஒருவேளை உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு இந்நிலை ஏற்படுகையில் நீங்கள் என்ன செய்யலாம்?
● அறிகுறிகளைக் கண்டறிதல். ஒருவருக்கு மனநோய் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாதிருக்கலாம். அப்படி அறிகுறிகள் தென்படும்போது நண்பர்களும் உறவினர்களும் அது ஹார்மோன் மாற்றங்களால்தான் என்றோ, உடல்நிலை சரியில்லாததால்தான் என்றோ, அவருடைய குணாம்சத்திலுள்ள பலவீனங்களால்தான் என்றோ, அல்லது கஷ்டமான சூழ்நிலையால்தான் அவ்வாறு நடந்துகொள்கிறார் என்றோ உடனடியாக முடிவுகட்டி விடுகிறார்கள். மாத்யூவிடமும் பிரச்சினை இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை அவனுடைய அம்மா கவனித்திருந்தார், ஆனால், வயசுக் கோளாறு காரணமாகவே அவ்வப்போது அவன் சிடுசிடுவென இருக்கிறான், போகப்போக சரியாகிவிடுவான் என்றே அவர் நினைத்தார், அவனுடைய அப்பாவும் அப்படியே நினைத்தார். என்றாலும், உண்ணுவதில், உறங்குவதில், நடத்தையில் ஒருவரிடம் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மோசமான பிரச்சினை இருப்பதைச் சுட்டிக்காட்டலாம். மருத்துவரிடம் காட்டுவது சிறந்த சிகிச்சை பெற வழிவகுக்கலாம்; அதோடு, நீங்கள் நேசிக்கிற அந்த நபரின் வாழ்க்கையையும் அது மேம்படுத்தலாம்.
● நோயைப் பற்றி அறிந்திருத்தல். பொதுவாக மன நோயாளிகளுக்குத் தங்களுடைய நிலையைப் பற்றி கூடுதலாக ஆராய்ச்சி செய்து அறிந்துகொள்ள அவ்வளவாக திறனிருக்காது. எனவே தகவல் சேவைகளிலிருந்து சமீபத்திய, நம்பகமான தகவலைப் பெற்றுக்கொள்வது, நீங்கள் நேசிக்கும் நபரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். மற்றவர்களிடம் இதைப் பற்றி விவரமறிந்து பேசுவதற்கும், மனம்விட்டு பேசுவதற்கும் உதவும். உதாரணத்திற்கு, மாத்யூவுடைய தாத்தா பாட்டியிடம் சில மருத்துவ சிற்றேடுகளை மரியா கொடுத்தார்; அந்தச் சிற்றேடுகளை வாசித்த பிறகு அவனுடைய நிலைமையை அவர்கள் நன்கு புரிந்துகொண்டார்கள், அவனுக்கு எப்படி ஒத்தாசையாக இருக்கலாம் என்பதையும் தெரிந்துகொண்டார்கள்.
● சிகிச்சையை நாடுங்கள். சில வகை மனநோய்க்கு ஆளானவர்கள், நீண்ட காலம் அவதிப்பட்டாலும் பொருத்தமான சிகிச்சை அளிக்கப்படும்போது அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும் பயனுள்ளதாகவும் ஆகலாம். ஆனால், பலர் வருடக்கணக்காக உதவியை நாடாமல் இருந்திருக்கிறார்கள், இது வருத்தகரமான விஷயம். இருதய நோய் ஏற்படுகையில் இருதய நிபுணரை அணுகுவது எப்படி அவசியமோ அப்படியே மனநோய் வருகையில் அதற்குரிய சிகிச்சையளிக்கும் நிபுணர்களை அணுகுவது அவசியம். உதாரணமாக, மனநோய் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவலாம், கவலையைக் குறைக்கலாம், சம்பந்த சம்பந்தமில்லாமல் சிந்திக்கும் மனப்போக்குகளை மாற்றலாம். b
● உதவியை நாடும்படி அவதிப்படுபவரை உற்சாகப்படுத்துங்கள். மனநோயால் அவதிப்படுபவர்கள் தங்களுக்கு உதவி தேவை என்பதை உணராதிருக்கலாம். அவதிப்படுபவர் ஒரு குறிப்பிட்ட டாக்டரை போய் சந்திக்கும்படியோ பயனுள்ள சில கட்டுரைகளை வாசிக்கும்படியோ நீங்கள் ஆலோசனை அளிக்கலாம்; இதே நோயால் துன்பப்பட்டு, இப்போது அதிலிருந்து மீண்டிருக்கும் ஒருவருடன் பேசிப் பார்க்க சொல்லலாம். என்றாலும், நீங்கள் நேசிக்கிறவர் உங்களுடைய அறிவுரையை உதாசீனப்படுத்தலாம். ஆனாலும், உங்கள் பராமரிப்பிலுள்ள ஒருவர் தனக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்கப் போகிறார் என்றால் உடனடியாக செயல்படுங்கள், கொஞ்சங்கூட தயங்காதீர்கள்.
● பழி சுமத்துவதைத் தவிருங்கள். ஜீன்களும் சுற்றுச்சூழலும் சமூகமும் எவ்வாறு மூளையின் இயக்கத்தை பாதிக்கின்றன என்பதை அறிவியலாளர்களால் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. மூளையில் காயம், ஏதோவொரு வகை போதைப்பொருள் அல்லது மதுபான துஷ்பிரயோகம், சுற்றுச்சூழலின் அழுத்தங்கள், உயிர்வேதியியல் சமநிலையின்மை, பிறப்பிலேயே மனநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு போன்ற பிற அம்சங்களாலும் மனநோய் ஏற்படுகிறது. அவர் ஏதோவொன்றை செய்ததால்தான் அவருக்கு அந்த நோய் வந்ததென்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு அவர் மீது பழி சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக, உங்களுடைய சக்தி எல்லாவற்றையும் திரட்டி அவருக்குத் தேவையான உதவியையும் உற்சாகத்தையும் அளிக்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
● நியாயமான எதிர்பார்ப்புகளுடன் இருங்கள். அவதிப்படுகிறவரிடம் அவரது சக்திக்கு மிஞ்சி எதிர்பார்த்தால் அவர் சோர்ந்துபோய் விடலாம். அதோடு, அவரால் செய்ய முடியாத காரியங்களை அவரிடம் திரும்பத் திரும்ப சொல்லும்போது, தன்னுடைய இயலாமையை நினைத்து அவர் மேலும் சோர்ந்து போய்விடலாம். எனவே உங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானவையாக இருக்கட்டும். என்றாலும், தவறான செயல்களை அப்படியே விட்டுவிடக் கூடாது. எல்லாரையும் போலவே மன நோயாளிகளும் தங்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம் அல்லது அவர்களுடைய நலனுக்காகவோ மற்றவர்களுடைய பாதுகாப்பிற்காகவோ சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கலாம்.
● பேச்சுத் தொடர்பு. சில சமயங்களில், நீங்கள் சொல்வதை மன நோயாளி தவறாக புரிந்துகொண்டது போல் இருந்தாலும் பேச்சுத் தொடர்பு மிக மிக அவசியம். அவர்
எந்த நிமிடம் என்ன செய்வார், என்ன சொல்வார் என்பதை நம்மால் முன்னறிய முடியாதிருக்கலாம், அந்தச் சமயத்தில் அவர் வெளிக்காட்டும் உணர்ச்சிகள் பொருத்தமற்றவையாகவும் தோன்றலாம். இருந்தபோதிலும், அவர் சொல்கிற காரியங்களை நீங்கள் குத்திக்காட்டினால் என்னாகும்? ஏற்கெனவே அவருக்கு இருக்கிற அழுத்தம் போதாதென்று குற்ற உணர்வையும் அவருக்கு ஏற்படுத்திவிடும். பேசிப் பயனில்லை என தெரிய வந்தால் அமைதியாக உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேளுங்கள். கண்டனம் தெரிவிக்காமல் நோயாளியின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அமைதியாக இருக்க முயலுங்கள். உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை எப்போதும் வெளிக்காட்டி வந்தாலே போதும், அது உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும், நீங்கள் நேசிக்கிற அந்த நபருக்கும் பிரயோஜனமாக இருக்கும். மாத்யூவின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, தனக்கு உதவியவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவர்களுடைய “உதவியை நான் விரும்பாதபோதும் எனக்குத் தொடர்ந்து உதவினார்கள்” என்றார், தன் நன்றியையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.● குடும்பத்திலுள்ள மற்றவர்களின் தேவைகளுக்கும் கவனம் செலுத்துங்கள். எல்லாருடைய கவனமும் அவதிப்படும் நபரிடமே இருக்கையில் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அசட்டை செய்யப்பட்டு விடலாம். மாத்யூவுடைய நோயால் தனக்கு அதிக கவனம் கிடைக்காதது போல் அவன் அக்கா ஏமி கொஞ்ச நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருந்தாள். சொல்லப்போனால், அவன் மீதுள்ள கவனம் தன் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே எதிலும் சிறந்து விளங்காதிருந்தாள். ஆனால், அவள் சிறந்து விளங்க வேண்டுமென்றே அவளுடைய பெற்றோர் எதிர்பார்த்தனர்; மாத்யூவின் குறையை ஈடுசெய்வதற்காவது அவ்வாறு சிறந்து விளங்க வேண்டுமென எதிர்பார்த்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலுள்ள சில பிள்ளைகள் வேண்டுமென்றே ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி மற்றவர்களது கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்ப முயலுகிறார்கள். இதுபோல் வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் கவனிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக, மாத்யூவின் குடும்பத்தார் அவனைக் கவனிப்பதிலேயே ஒரேயடியாக மூழ்கிப் போயிருந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் இருந்த நண்பர்கள் ஏமிக்கு அதிக கவனம் செலுத்தி உதவி செய்தார்கள்.
● நல்ல மனநல பயிற்சிகளை ஊக்குவியுங்கள். மனநலனை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தில் உணவு, உடற்பயிற்சி, உறக்கம், பொழுதுபோக்குக் காரியங்கள் ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும். அப்படி சின்னச் சின்ன காரியங்களில் ஒருசில நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபடும்போது பொதுவாக அவர்கள் அவ்வளவாய் பயப்பட மாட்டார்கள். மேலும், நோய் அறிகுறிகளை மதுபானம் அதிகரிக்க செய்துவிடலாம் என்பதையும், பெற்று வரும் சிகிச்சையை வீணாக்கிவிடலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். ஜான்சன் குடும்பத்தார் தங்கள் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக தங்கள் மகனுக்கும் அதிக பயனுள்ளதாக உள்ள மனநல திட்டத்தை தவறாமல் பின்பற்ற முயலுகிறார்கள்.
● உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். மனநோய் உள்ளவரைக் கவனித்துக்கொள்வதால் ஏற்படுகிற அழுத்தம் உங்கள் உடல் நலனையும் பாதிக்கலாம். எனவே உங்களுடைய உடல், உணர்ச்சி, ஆன்மீகம் சம்பந்தமான எல்லா தேவைகளுக்கும் கவனம் செலுத்துவது அவசியம். ஜான்சன் குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது தன்னுடைய விசுவாசமே தனக்குப் பெரிதும் கைகொடுத்து உதவியதாக மரியா நினைக்கிறார். “கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது அழுத்தத்தைப் போக்கும் நிவாரணியாக இருந்தது. அப்போதைய கவலைகளையெல்லாம் தூக்கி ஒரு பக்கமாக வைத்துவிட்டு, மிக முக்கியமான விவாதங்களிடமும் எதிர்கால நம்பிக்கையிடமும் கவனத்தை ஒருமுகப்படுத்த அது உதவியது. என் வேதனை தணிய வேண்டுமென எத்தனையோ முறை ஜெபித்தேன், அந்த சமயத்திலெல்லாம் என் வேதனையை தணிக்கும் விதத்தில் ஏதோவொன்று நடக்கத்தான் செய்தது. சாத்தியமற்றதாக தோன்றிய எங்களது சூழ்நிலைமையிலும் யெகோவாவின் உதவியால் எனக்கு மன சமாதானம் கிடைத்தது” என்கிறார் அவர்.
மாத்யூ இப்போது வாலிப பருவத்தில் இருக்கிறார், வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டம் அவருக்கு இருக்கிறது. “நான் பட்ட கஷ்டமெல்லாம் சேர்ந்து என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியிருக்கிறது” என்கிறார். அந்த அனுபவம் தனக்கும் பயனளித்திருப்பதாக மாத்யூவின் அக்கா ஏமி உணருகிறாள். “மற்றவர்களைப் பற்றி நான் அதிகமாக குறைகூறுவதில்லை. ஒருவர் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறாரென்று யெகோவாவுக்குத்தான் தெரியும், வேறு யாருக்கும் தெரியாது” என்கிறாள்.
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மனநோயால் அவதிப்படுகையில், அவர் குணமாவதற்கும், சொல்லப்போனால் சிறந்து விளங்குவதற்கும் செவிகொடுத்துக் கேளுங்கள், உதவிக்கரம் நீட்டுங்கள், தப்பெண்ணத்தைத் தவிருங்கள். (g04 9/8)
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b மருந்து மாத்திரைகள் ஒருவேளை பயனளித்தாலும் அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட எந்த மருத்துவ சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. கிறிஸ்தவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தச் சிகிச்சை முறையும் பைபிள் நியமங்களுக்கு முரண்படாதவாறு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
[பக்கம் 25-ன் பெட்டி]
மனநோய்களின் சில அறிகுறிகள்
நீங்கள் நேசிக்கிற ஒருவரிடம் பின்வரும் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் அவரை பொதுநல மருத்துவரிடமோ மனநல நிபுணரிடமோ காட்டுவது அவசியமாக இருக்கலாம்:
• சதா கவலைப்படுவது அல்லது எரிச்சலடைவது
• யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியிருப்பது
• ஒரு சமயம் உணர்ச்சி ரீதியில் படுகுஷியாக இருப்பதும், மறுசமயம் படுசோகமாக இருப்பதும்
• கோபத்தில் சீறுவது
• மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது
• போதைப் பொருள், மதுபானம் போன்ற ஏதோவொரு துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது
• மிதமிஞ்சிய பயங்கள், கவலைகள், மன உளைச்சல்கள்
• குண்டாகி விடுவோமோ என்ற அநாவசிய பயம்
• உண்பதிலும், உறங்குவதிலும் குறிப்பிடத்தக்க மாற்றம்
• எப்போதும் படுபயங்கரமான கனவுகள் காண்பது
• சிந்தனையில் குழப்பம்
• தவறான நம்பிக்கைகள் அல்லது மனப்பிரமைகள்
• சாவு அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள்
• பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கும் திறனில்லாதிருப்பது
• அவருக்குள்ள பிரச்சினைகளை மறுப்பது
• விவரிக்க இயலாத எண்ணற்ற உடல் உபாதைகள்
[பக்கம் 26-ன் படம்]
நோயாளியிடம் பேசிப் பயனில்லை என தெரிய வந்தால் அமைதியாக உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேளுங்கள்