டெலிபோன் செக்ஸ்—இதில் என்ன தவறு?
இளைஞர் கேட்கின்றனர் . . .
டெலிபோன் செக்ஸ்—இதில் என்ன தவறு?
“காதல் கடிதம் அனுப்பிய காலமெல்லாம் போய் இப்பொழுது போன் செக்ஸ் வந்துவிட்டது, தொலைதூரத்தில் வசிக்கும் ஜோடிகள் ‘ரொமான்டிக்’காக உரையாட விரும்புகிற வழி இதுவே” என பிரபல அமெரிக்க பத்திரிகை கூறுகிறது.
போன் செக்ஸ் என்றால் என்ன? காம உணர்ச்சியை தூண்டும் விஷயங்களை அப்பட்டமாக போனில் பேசுவதே அல்லது கேட்பதே போன் செக்ஸ். a இந்தப் பழக்கமுடையவர்கள் தங்களுடைய காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பெரும்பாலும் சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார்கள். திருமண நோக்கோடு காதலிக்கும் ஜோடிகளுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும்சரி அந்நியர்களுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும்சரி, போன் செக்ஸ் பாப்புலராக இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. சொல்லப்போனால், சிலர் இதை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள்.
“இதுதான் ரொம்ப சேஃப் செக்ஸ்,” என ஒரு பெண் கூறிக்கொள்கிறாள். இதை பெரும்பாலோர் ஆமோதிப்பதாக தெரிகிறது. உதாரணமாக, அக்டோபர் 2000-ல், ஹெச்ஐவி தொற்றுகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு பதிலளிக்கையில், ரஷ்ய சுகாதார நிபுணர்களின் தொகுதி ஒன்று டெலிபோன் செக்ஸை ஊக்கப்படுத்த செய்தித்தாள் விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொண்டது.
ஆனால் மற்றவர்களோ டெலிபோன் செக்ஸை வெறுமனே லாபம் தரும் ஒரு தொழிலாக பயன்படுத்துகிறார்கள். போன் செக்ஸ் சர்வீஸ்கள், அதாவது பணம் கட்டினால் பச்சையான விஷயங்களை காதுகொடுத்துக் கேட்க உதவும் மையங்கள், இன்றைக்கு ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே நூறு கோடிக்கணக்கான டாலர் புரளும் ஒரு தொழிலாக விளங்குகின்றன.
இந்தத் தொழில் எப்படி இவ்வளவு பிரபலமானது? த ஃபான்டஸி பேக்டரி என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: “உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நெருக்கம் ஆபத்தானது. பாலியல் நோய் தொற்றும் ஆபத்துக்கள், விஷயம் சந்திக்கு வரும்போது தனிப்பட்ட/தொழில் ரீதியில் ஆபத்து, மற்றவர்களுடைய ஏளனத்துக்கு ஆளாகும் பயம், ‘இயல்பு மீறிய’ ஆசையால் வரும் பின்விளைவுகள் போன்ற தொல்லைகள் உள்ளன. ஆனால் போன் செக்ஸ் இந்த ஆபத்தையெல்லாம் போக்கிவிடுகிறது.”
போன் செக்ஸில் உடல் நெருக்கம் எதுவும் இல்லை என்பது வாஸ்தவம்தான். ஆனால் இதில் எந்த தவறுமில்லை அல்லது எந்த ஆபத்துக்களும் இல்லை என அர்த்தமாகுமா?
டெலிபோன் செக்ஸ் தீங்கற்றதா?
முக்கியமாக இளமைப் பருவத்தில் பாலியல் ஆசை சதிராட்டம் போடுகிறது. பாலியல் ஆசைகள் உச்சத்திலிருக்கும் இந்தப் பருவத்தை “இளமை மலர்ச்சிப்பருவம்” என பைபிள் அழைக்கிறது. (1 கொரிந்தியர் 7:36, NW) வாழ்க்கையின் இந்த இன்றியமையாத காலகட்டத்தில், ஒரு கிறிஸ்தவ இளைஞன் “தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி” அறிந்திருக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 4:5) அதாவது, பாலியல் உணர்ச்சிகளை சமாளிக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். செக்ஸ் பற்றி ஆரோக்கியமான, சமநிலையான ஒரு நோக்கை கொண்டிருப்பதற்கு இது மிக முக்கியம்.
ஆனால் டெலிபோன் செக்ஸ் ஒருவருடைய பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக அவற்றைத் திருப்திப்படுத்தவே கற்றுக்கொடுக்கிறது. அதோடு, எதிர்பாலாரைப் பற்றிய இழிவான, தவறான அபிப்பிராயத்தை வளர்க்கிறது. பால் சம்பந்தமாக நெருங்கிய உறவுகள் திருமண பந்தத்திற்குள் மட்டுமே அனுபவிக்கப்பட வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது. (எபிரெயர் 13:4) ஆனால் போன் செக்ஸோ திருமணம் எனும் பந்தமின்றி பாலியல் இன்பங்களை நுகர இளைஞரை ஊக்குவிக்கிறது. உண்மையான மகிழ்ச்சி, கொடுப்பதால் வருகிறது—பெறுவதால் அல்ல—என பைபிள் போதிக்கிறது. (அப்போஸ்தலர் 20:35) ஆனால் போன் செக்ஸ், சுயநலத்துடன் தனது ஆசையை திருப்திப்படுத்திக் கொள்வதற்கு பிறரை ஒரு போகப்பொருளாக பயன்படுத்த கற்பிக்கிறது. தம்பதிகள் பரஸ்பர சிநேகத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் உண்மையான நெருக்கத்தைப் பெற பைபிள் கற்பிக்கிறது. (எபேசியர் 5:22, 33) ஆனால் டெலிபோன் செக்ஸ் கரிசனையற்ற தன்மையையும் யார் என்றே தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத நிலையையும் உருவாக்குகிறது.
தீங்கிழைக்கும் கெட்ட பழக்கம்
பூர்வ கொரிந்து பட்டணம் ஒழுக்கங்கெட்ட பழக்கங்களுக்குப் பேர்போனது. அதனால்தான் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:3) இன்றைய இளைஞர்களை மோசம்போக்குவதற்கு பிசாசாகிய சாத்தான் பயன்படுத்தும் ஒரு கண்ணியே டெலிபோன் செக்ஸ்.
இளைஞர்கள் சிலர், டெலிபோன் செக்ஸுக்கு அடிமையாகி சதா டெலிபோனும் கையுமாகவே இருக்கிறார்கள். ஒருவர் அதில் எந்தளவு “சிக்கிக்கொள்ள” முடியும் என்பதற்கு ஓர் இளைஞரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்; அவரை நாம் ஜிம் என அழைக்கலாம். டெலிபோன் செக்ஸ் நம்பரை ஒரு விளம்பர பலகையில் ஜிம் பார்த்தார். ஆர்வக்கோளாறினால் அந்த நம்பருக்கு டயல் செய்தார். அவ்வளவுதான், டெலிபோனே கதியென ஆகிவிட்டார். பிறகென்ன? 28,000 ரூபாய்க்கு டெலிபோன் பில்!
நீங்கள் மணமாகாமல் இருக்கும்போது பாலியல் ஆசைகளைத் தூண்டுவது கடவுளுடைய வார்த்தைக்கு முரணானது. “விபசாரம், அசுத்தம், மோகம், . . . ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள் [“மரத்துப்போகச் செய்யுங்கள்,” NW]” என அது உந்துவிக்கிறது.—கொலோசெயர் 3:5.
காதலீடுபாட்டில் ஆபத்துக்கள்
திருமண நோக்கோடு காதலீடுபாடு கொள்கிற இளைஞர்களைப் பற்றியென்ன? காதலிக்கிற இருவர் ஒருவருக்கொருவர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானதே. பைபிள் காலங்களில், கடவுளுக்கு பயந்த இளம் பெண் ஒருத்தி தனது காதலனைப் பற்றி இவ்வாறு கூறினாள்: “நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என் மேலிருக்கிறது.” (உன்னதப்பாட்டு 7:10) திருமண நாள் நெருங்குகையில், நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் அன்யோன்யமான சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொள்வது சரியானதே. ஆனால் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு போன் செக்ஸ் நல்லதா?
இல்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளும் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரையைப் பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங் கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ் செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.”—எபேசியர் 5:3-5; கொலோசெயர் 3:8.
ஒழுக்கயீனமான சிந்தைகளை வேண்டுமென்றே எழுப்புகிற அல்லது சுயஇன்பத்தைத் தூண்டுகிற அன்யோன்ய பேச்சு யெகோவாவின் பார்வையில் கண்டிப்பாக அசுத்தமானது. மேலும் பல தெய்வீக நியமங்களை மீறுவதற்கும்கூட அது வழிநடத்தலாம். உதாரணமாக, தூரதூரமாக வசித்துவந்த ஒரு ஜோடி காதலித்து
வந்தார்கள். முதலில், ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்வதற்கு போனில் அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள். ஆனால் சீக்கிரத்தில், ஒழுக்கயீனமான விஷயங்களை போனில் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தார்கள். போகப் போக பச்சையாகவே பேசிக்கொண்டார்கள். ஆகவே, அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கும் சூழல் ஏற்பட்டபோது சடுதியில் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் வீழ்ந்துவிட்டார்கள்!நிச்சயமாகவே, கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற நாம் டெலிபோன் செக்ஸ் எனும் கண்ணியில் வீழ்ந்துவிடுவதை தவிர்ப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். இதில் எவ்வாறு நாம் வெற்றி பெறலாம்?
‘உங்கள் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துங்கள்’
டெலிபோன் செக்ஸ் என்பது அடிமைப்படுத்தும் ஒரு பழக்கமாகிவிடலாம். யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற ‘நம்முடைய சரீரத்தை ஓர் அடிமையைப் போல ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவது’ அவசியம். (1 கொரிந்தியர் 9:27, NW) தற்பொழுது நீங்கள் டெலிபோன் செக்ஸில் ஈடுபட்டு வந்தால், ஏதாவது உதவியை ஏன் நாடக் கூடாது? உங்களுடைய கிறிஸ்தவ பெற்றோர்களிடம் சொல்வது, நீங்கள் எடுக்க வேண்டிய ஒரு நல்ல படியாக இருக்கும். ஆம், நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால் நீங்கள் மீண்டும் அந்தக் கண்ணியில் விழாதவாறு உங்களுடைய நடத்தையைக் கண்காணித்து உதவ அவர்களே மிகச் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை மூப்பர்களும் உங்களுக்கு உதவ மனமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
நீங்கள் திருமண நோக்கத்தோடு காதலித்தால், டெலிபோனில் பேசும்போதுகூட கற்புடன் நிலைத்திருக்க திடதீர்மானமாயிருங்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த லெட்டிஸ்யா என்ற கிறிஸ்தவ பெண் ஒருத்தி இவ்வாறு கூறுகிறாள்: “கற்புடன் நிலைத்திருப்பதைப் பற்றிய பைபிள் அடிப்படையிலான கட்டுரைகளை நானும் என காதலனும் ஒன்றுசேர்ந்து வாசித்திருக்கிறோம். சுத்தமான மனசாட்சியுடன் இருப்பதற்கு அவை எங்களுக்கு பேருதவியாக இருந்ததற்கு அதிக நன்றியுடன் இருக்கிறோம்.” உங்களுடைய உரையாடல் தரங்கெட்ட விஷயத்திற்கு தாவினால், பேச்சை மாற்ற தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உரையாடல்களை சுத்தமானவையாக வைத்திருப்பதன் அவசியத்தைக் குறித்து இருவரும் கலந்துபேசுங்கள்.
சில நாடுகளில், டெலிபோன் செக்ஸ் பற்றிய விளம்பரங்கள் நடுராத்திரியில் டெலிவிஷனில் வருகின்றன. நேரங்கழித்து டிவி பார்ப்பதை தவிர்ப்பதே நல்லது. இது போலவே சுயஇன்பம் கொள்ளும் பழக்கமும் ஒழுக்கயீனமான சிந்தைகளை மரத்துப்போகச் செய்வதற்குப் பதிலாக அதைத் தூண்டிவிடுகிற காரணத்தால், இந்த அசுத்தமான பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். b உங்களுடைய மனதை நல்ல விஷயங்கள் மீது லயித்திருக்கச் செய்வதன் மூலம் அசுத்தமான சிந்தைகளை மனதிலிருந்து உங்களால் வெற்றிகரமாக விரட்ட முடியும். (பிலிப்பியர் 4:8) உங்களுடைய தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, ஆரோக்கியமான விஷயங்களைப் பேசுகிற நண்பர்களுடன் பழகுங்கள், கடவுளுடைய வார்த்தையையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் தினமும் வாசியுங்கள். இந்த முறையில், ஒழுக்கங்கெட்ட கற்பனைக் காட்சிகள் மெதுவாக நுழைந்து உங்களுடைய மனதை கறைபடுத்த இடங்கொடாமல் இருப்பீர்கள். மிக முக்கியமாய், உதவிக்காக கடவுளிடம் ஜெபியுங்கள். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—1 பேதுரு 5:6, 7.
“முறைகெட்ட பாலுறவில் ஈடுபட இளைஞருக்கு உண்டாகும் அழுத்தம் ரொம்ப பலமானது” என பிரேஸில் நாட்டு இளம் கிறிஸ்தவ பெண் கூறுகிறாள். ஆனால், நீங்கள் எதிர்ப்படும் சவால்களை யெகோவா அறிந்திருக்கிறார். அவருடைய பார்வையில் சுத்தமாய் நிலைத்திருக்க தேவைப்படும் எல்லா உதவியையும் அவர் உங்களுக்கு செய்வார் என்பதில் உறுதியுடனிருங்கள்.—எபேசியர் 6:14-18. (g04 2/22)
[அடிக்குறிப்புகள்]
a இதைப் போன்ற மற்றொரு ஒழுக்கங்கெட்ட பழக்கம் சிலசமயங்களில் சைபர்செக்ஸ் என அழைக்கப்படுகிறது; இது இன்டர்நெட் சாட் ரூம்களில் நடைபெறும் பாலியல் பரிபாஷைகள்.
b சுயஇன்பம் என்ற பழக்கத்தை மேற்கொள்வது எப்படி என்பதன் சம்பந்தமாக கூடுதலான ஆலோசனைகளுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் 198-211 பக்கங்களைக் காண்க.
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
டெலிபோன் செக்ஸும் சைபர்செக்ஸும் பிரபலமாகி வருகின்றன
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
காதலீடுபாடு கொள்கிறவர்கள் தங்களுடைய உரையாடல் அசுத்தமானதாய் ஆகாதிருக்க கவனமாயிருக்க வேண்டும்
[பக்கம் 22-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பது கற்புடன் நிலைத்திருக்க நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தைப் பலப்படுத்தும்