உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
புதிய பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
“1998 முதற்கொண்டு மொத்தம் 28 புதிய [பறவை] இனங்களைப் பற்றி விஞ்ஞான இதழ்கள் விவரிக்கின்றன; உலகெங்கும் மொத்தத்தில் சுமார் 9,700 இனங்கள் இருக்கையில் ஆய்வினால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்” என லண்டனில் வெளியாகும் தி இன்டிப்பென்டன்ட் செய்தித்தாள் சொல்கிறது. பர்டிங் உவர்ல்ட் என்ற ஆங்கில பத்திரிகையின் பதிப்பாசிரியர் ஸ்டீவ் கான்ட்லட் சொல்கிறபடி, “உலகில் எங்கும் எளிதில் செல்ல முடிவதே இந்தக் கண்டுபிடிப்புகளில் அநேகத்திற்குக் காரணம்; அதாவது, சில பத்தாண்டுகளுக்கு முன்பு செல்ல முடியாதிருந்த ஒதுக்குப்புறமான இடங்களுக்கும் பறவையியல் வல்லுநர்கள் இன்று செல்ல முடிவதே அதற்குக் காரணம்.” “அவற்றின் சப்தங்களை வைத்தே இனங்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமை அதிகரித்திருப்பதையும்” இந்தக் கண்டுபிடிப்புகள் “காட்டுகின்றன; அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள பெரும்பாலும் இது மட்டுமே ஒரே வழியாக உள்ளது” என அவர் சொல்கிறார். இன்னும் கண்டுபிடிப்பதற்கு அநேக இனங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எனினும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்ட அநேக புதிய இனங்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம், “காரணம் அவை எண்ணிக்கையில் குறைவாகவும் சிறியளவு பகுதிகளிலேயே வாழ்பவையாகவும் உள்ளன” என தி இன்டிப்பென்டன்ட் விளக்குகிறது. (g03 10/22)
குழந்தையை உலுக்கவே உலுக்காதீர்கள்!
வேகமாக குழந்தையை உலுக்கினால் அந்த திடீர் அசைவின் காரணமாக அதன் “தலைக்குள் இரத்தக் கசிவும், மூளை இரண்டாக பிளக்கும் அளவுக்கு அதிக அழுத்தமும் ஏற்படுகிறது” என டோரான்டோ ஸ்டார் செய்தித்தாள் சொல்கிறது. குழந்தையின் தசைநார்கள் முழு வளர்ச்சியடையாததாகவும், மூளைத் திசு ரொம்பவே வலுவற்றதாகவும் இருப்பதால் “குழந்தையை ஒருசில விநாடிகள் உலுக்கினால்கூட நிரந்தர சேதத்தை விளைவிக்கலாம். மூளையில் வீக்கம் கண்டு சேதமடைவது, பெருமூளை வாதம் ஏற்படுவது, மனநலம் குன்றுவது, வளர்ச்சி தாமதப்படுவது, குருடாவது, செவிடாவது, முடக்குவாதம், மரணம் ஆகியவையும் அந்த சேதங்களில் அடங்கும்.” குழந்தைகளை உலுக்குவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சில்ரன்ஸ் ஹாஸ்பிட்டல் ஆஃப் ஈஸ்டர்ன் ஒன்டாரியோ என்ற மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் கிங் ஆராய்ச்சி செய்திருக்கிறார். ஏற்பட்டுள்ள சேதம் பலருடைய விஷயத்தில் வெளிப்படையாய் அப்போதே தெரியாது, குழந்தைக்கு ஜுரம் அல்லது வைரல் ஜுரம் வந்திருப்பதாக நினைக்கப்படலாம்; எனவே அதைக் குறித்து பொது ஜனங்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்கிறார் அவர். “குழந்தையை ஒருபோதும் உலுக்கக்கூடாது என்பதை உறுதியாக சொல்ல வேண்டும்” என்கிறார் டாக்டர் கிங். “முதன்முதலாக பிள்ளையைப் பெற்றெடுக்கும் பெற்றோர்கள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.” (g03 10/08)
மதத்தில் ஈடுபாடில்லை
“தற்போதைய சோர்வூட்டும் நிலைமைகளை சமாளிப்பதற்கு போராடுகையில் [ஜப்பானியர்கள்] அதற்கான பரிகாரத்திற்காக மதத்தை எதிர்நோக்குவதாக தெரியவில்லை” என IHT ஆஸாஹி ஷிம்புன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “மதத்தில் உங்களுக்கு கொஞ்சமாவது ஈடுபாடு இருக்கிறதா அல்லது எந்த வித நம்பிக்கையாவது இருக்கிறதா?” என்ற கேள்விக்கு ஆண்களிலும் பெண்களிலும் 13 சதவீதத்தினர் மட்டுமே ஆம் என பதிலளித்தார்கள். மேலும் ஆண்களில் 9 சதவீதத்தினரும் பெண்களில் 10 சதவீதத்தினரும் தங்களுக்கு “ஓரளவு” ஈடுபாடிருப்பதாக சொன்னார்கள். “6 சதவீதமே உள்ள 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அற்பசொற்ப ஈடுபாடே இருந்தது முக்கியமாக குறிப்பிடத்தக்கது” என்றும் அந்த செய்தித்தாள் சொல்கிறது. எந்த மதத்திலும் தங்களுக்கு துளிகூட ஈடுபாடில்லை என்றும் எந்த வித நம்பிக்கையும் துளிகூட இல்லை என்றும் ஜப்பானிலுள்ள 77 சதவீத ஆண்களும் 76 சதவீத பெண்களும் சொல்வதாக வருடாந்தர சுற்றாய்வு காட்டியது. இதுபோன்று 1978-ல் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பிலிருந்து பார்க்கையில், மதத்தில் ஜப்பானியருக்கு இருந்த ஈடுபாடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டிருப்பது தெரிகிறது. பொதுவாக தங்களுக்கு மதத்தில் ஈடுபாடிருப்பதாக சொல்லிக் கொண்டவர்கள் பெரியவர்கள், அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். (g03 10/08)
மண வாழ்க்கையும் இருதயமும்
“ஒருவருக்கு மணவாழ்க்கை அமைந்திருப்பதைப் பொருத்து அவர் இருதய அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைவதை கணித்துவிடலாம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன” என்கிறது லண்டனில் வெளியாகும் செய்தித்தாளான த டெய்லி டெலிகிராஃப். அ.ஐ.மா., பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் காயின் என்பவரின்படி சந்தோஷமான மண வாழ்க்கை, ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்காக போராடும்படி நோயாளியை ஊக்குவிக்கலாம், ஆனால் “மணமாகாதவரைவிட, சந்தோஷமற்ற மண வாழ்க்கை நடத்தும் நோயாளி குணமடைவது ரொம்பவே கஷ்டம்.” வீட்டில் தம்பதியினருக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை டாக்டர் காயினும் அவரது குழுவினரும் வீடியோ டேப் செய்தார்கள்; தங்கள் மணத்துணையுடன் நன்கு ஒத்துப்போகிற இருதய நோயாளிகளை அப்படி ஒத்துப்போகாதவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் நான்கு ஆண்டுக்குள் மரிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிப்பதாக கண்டுபிடித்தார்கள். முடிவாக, நல்ல மணவாழ்க்கையை, “ஆரோக்கியமான உணவை உண்பது, உடற்பயிற்சி செய்வது, புகைக்காமல் இருப்பது ஆகியவற்றிற்குச் சமமாக” கருதலாம் என சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியையாக இருக்கும் டாக்டர் லின்டா உவேட் சொல்கிறார். (g03 10/08)
துடைத்தழிக்க முடியாமல் தொடரும் நோய்
“உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி 2002-ல் உலகம் முழுவதும் புதிதாக 7,00,000-க்கும் அதிகமானோருக்கு குஷ்டரோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என அறிக்கை செய்கிறது ஸ்பெயினில் வெளியாகும் செய்தித்தாளான எல் பாயிஸ். பைபிள் காலங்கள் முதற்கொண்டே குஷ்டரோகம் பயமுறுத்தி வந்திருக்கிறது. இன்றுள்ள குஷ்டரோக வகையை இப்போது குணப்படுத்த முடியும். சொல்லப்போனால், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 1.2 கோடி பேர் குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். எனினும் “குஷ்டரோகம் முற்றிலும் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதாக நாம் எண்ண முடியாது” என ஆய்வாளரான ஜாநெட் ஃபாரெல் குறிப்பிடுகிறார். சுகாதார அதிகாரிகளால் அந்த நோயைத் துடைத்தழிக்க முடியவில்லை, புதிதாக வேறு நபர்களுக்கு அது இன்னும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியா, நேப்பாளம், பிரேசில், மடகாஸ்கர், மியன்மார், மொசம்பிக் ஆகியவை குஷ்டரோகத்தால் இன்னும் பாதிக்கப்படுகிற முக்கிய நாடுகள் ஆகும். மனித ஜினோமின் சிக்கலான தன்மையை சமீபத்தில் தெளிவாக புரிந்துகொண்டிருப்பதால், பொருத்தமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். (g03 10/08)
எடை குறைகிறதா, பணம் கரைகிறதா?
“2002-ல் யூரோப்பியன் யூனியனிலுள்ள சுமார் 23.1 கோடி பேர் உணவு பழக்கங்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்றார்கள்” என பாரிஸில் வெளியாகும் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் குறிப்பிடுகிறது. தொழிற்சாலையின் முன்னேற்றத்தை கண்டறியும் குழுவான டேட்டாமானிட்டர் அறிக்கையின்படி ஐரோப்பாவிலுள்ளவர்கள் எடையை குறைக்க உதவும் பொருட்களுக்காக கடந்த வருடம் 10,000 கோடி டாலரை செலவிட்டார்கள்; இது “மொராக்கோ நாட்டின் வருடாந்தர மொத்த உற்பத்திக்கு சமமாக உள்ளது.” எனினும் “ஒரு வருடத்துக்கு மேலாக குண்டாகாமல் இருப்பதில் சுமார் 40 லட்சத்திற்கும் குறைவானோரே வெற்றி காண்பார்கள், ஐரோப்பாவில் சுமார் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே நிரந்தரமாக குண்டாகாமல் இருக்கிறார்கள்” என அந்த செய்தித்தாள் சொல்கிறது. எடை குறைக்கும் பொருட்களுக்காக பெருமளவு பணத்தை வாரியிறைக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது ஜெர்மனி; அங்குள்ளவர்கள் எடை குறைக்க கிட்டத்தட்ட 2,100 கோடி டாலரை செலவிடுகையில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் சுமார் 1,600 கோடி டாலரை செலவிடுகிறார்கள். இத்தாலியிலும் பிரான்சிலுமுள்ளவர்கள் முறையே சுமார் 1,500 கோடி டாலரையும் 1,400 கோடி டாலரையும் செலவிடுகிறார்கள். டேட்டாமானிட்டரின்படி, “மிஞ்சின பருமனுக்கு உணவுக் கட்டுப்பாடு மட்டுமே நீண்ட கால தீர்வு அல்ல என்பதை ஆட்கள் புரிந்துகொள்வது முக்கியம்” என ட்ரிப்யூன் சொல்கிறது. (g03 10/22)
இரைச்சலிடும் மீன்கள்
“டாம்செல்ஃபிஷ், சோல்ஜர்ஃபிஷ், கார்டினல்ஃபிஷ் போன்ற [மீன்கள்] . . . உறுமல்களாலும், கீச்சொலிகளாலும், சீழ்க்கை ஒலிகளாலும் உரையாடியதாக” ஆஸ்ட்ரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெரைன் ஸயன்ஸ் (AIMS) என்பதன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என த வெஸ்ட் ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. குட்டி மீன்கள் கடலின் நீரடிப்பாறையிலிருந்து அடித்துச் செல்லப்படுகையில் மீண்டும் எப்படி ‘வீடு’ திரும்புகின்றன என்பதை விளக்குவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது. AIMS ஆராய்ச்சியாளர்கள் நீரடிப்பாறையின் இரைச்சல்களை பதிவு செய்து அவற்றை மீன் பிடிப்பதற்காக வலை விரித்த இடங்களில் ஒலி பரப்பினார்கள். “இரைச்சலை ஒலி பரப்பாத இடங்களைவிட இரைச்சலை ஒலி பரப்பிய இடங்களில் ஏராளமான குட்டி மீன்கள் வந்து குவிந்தது குறிப்பிட்ட ஒலிகளிடம் மீன்கள் ஈர்க்கப்படுவதைக் காட்டுகிறது” என டாக்டர் மார்க் மீக்கன் என்ற விஞ்ஞானி செய்தித்தாளுக்குத் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த சில மீன்களின் ஒலிகளை 15 கிலோமீட்டர் தூரம் வரை உணரலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். “மீன்கள் கூட்டம் எழுப்பும் ஒலிகள் காலையிலும் மாலையிலும் உச்சக்கட்டத்தை அடைகின்றன, கால்பந்தாட்ட மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் எழுப்பும் இரைச்சலுக்கு சமமாக அது இருக்கும்” என்றார் மீக்கன். எனினும் இந்த “ஒலிகள்” மனித காதுகளுக்கு கேட்பதில்லை. (g03 10/22)
கண் இமைக்கும் பொழுதில்
“இமைகளில் அசைவை ஏற்படுத்துவதற்கு 30-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நரம்பணுக்கள் (neurons) தேவைப்படுகின்றன” என ஸ்பெயினில் வெளியாகும் எல் பாயிஸ் செய்தித்தாள் விளக்குகிறது. “கண் இமையை பெருமூளைப் புறணியுடன் (cerebral cortex)” இணைக்கும் இந்த நரம்பணு தொகுதிகள் செய்யும் பணிகள், ஸ்பெயின் நாட்டு நரம்பியல் விஞ்ஞானிகளின் ஒரு குழு நடத்திய ஆராய்ச்சியால் முன்பைவிட இப்போது வெகு துல்லியமாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன; இக்குழுவினர் விலங்குகளை வைத்து அந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள். இமைகளுக்கு இந்தளவுக்கு அதிகமான, சிக்கலான நரம்பணுக்களின் தொகுதி ஏன் தேவை? ஏனென்றால் எப்போதும் அவை ஒரே விதமாக மூடுவதில்லை அல்லது ஒரே காரணத்திற்காக மூடுவதில்லை. எப்போதும் கருவிழிப்படலம் ஈரப்பசையுடன் இருப்பதற்காக நிமிடத்துக்கு சுமார் 15 முறை தானாகவே இமைப்பது உட்பட, திடீரென ஏதோவொன்று கண்ணருகே வருகையில் தன்னிச்சையாக, அதாவது வேண்டுமென்றே இமைப்பதும் கண் இமையின் செயல்பாட்டில் அடங்கும். ஒருவேளை குறிப்பிட்ட உணர்ச்சிகளுக்கு பிரதிபலிக்கும் விதமாக கண் இமைகள் பல்வேறு கால அளவுகளுக்கு பாதி மூடிக் கொள்ளலாம் அல்லது முழுமையாக மூடிக் கொள்ளலாம். (g03 10/22)
கம்ப்யூட்டர்கள்—சுற்றுச்சூழலுக்கு வைக்கும் வேட்டு
“நவீன கம்ப்யூட்டரால் உண்மையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நாசத்தை பார்க்கையில், அதன் பளிச்சென்ற, பளபளக்கும் தோற்றம் பொய்யானதே” என நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. வெறுமனே அடிப்படை நினைவக சில்லை (basic memory chip) உருவாக்கி, அதை நான்கு வருடம் உழைக்கும் சாதாரண கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்கே, “அந்த சில்லின் எடையைவிட 800 மடங்கு அதிக நிலத்தடி எரிபொருள் செலவாகிறது” என அந்தப் பத்திரிகை விளக்குகிறது. இரண்டு கிராம் எடையுள்ள 32 மெகாபைட் நினைவக சில்லை தயாரித்துப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 1.6 கிலோகிராம் நிலத்தடி எரிபொருளும், குறைந்தது 32 கிலோகிராம் தண்ணீரும், 72 கிராம் அம்மோனியா, ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற நச்சுத்தன்மைமிக்க இரசாயனங்களும் தேவையென ஜப்பான், பிரான்சு, ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றை சேர்ந்த பகுப்பாய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள். “நினைவக சில்லுகள் சுற்றுச்சூழலுக்கு வைக்கும் வேட்டு அவற்றின் சின்னஞ்சிறிய அளவைவிட ரொம்ப ரொம்ப அதிகம்” என்பது பகுப்பாய்வாளர்களின் முடிவு. (g03 10/22)