செல்வத்தைக் கொடுத்து கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
பைபிளின் கருத்து
செல்வத்தைக் கொடுத்து கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
“[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
கடவுள் தமது ஊழியர்களுக்கு சொத்துசுகங்களைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் என இந்த பைபிள் வசனம் அர்த்தப்படுத்துகிறதா? சிலர் அப்படித்தான் நினைத்துக்கொள்கிறார்கள். ஆஸ்திரேலிய பெந்தெகொஸ்தே பிரசங்கியாரும் நூலாசிரியருமான ஒருவர் சொல்வதை கவனியுங்கள்: “ஏன் நிறைய பணம் தேவை என்பதையும், நீங்கள் எப்படி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதையும் [என்] புத்தகத்தில் சொல்லப் போகிறேன். . . . உங்களுடைய சிந்தையை மாற்றிக்கொண்டு பணத்தைப் பற்றிய சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஆண்டவர் தரும் ஆசீர்வாதத்திலும் செல்வச்செழிப்பிலும் திளைத்திருப்பீர்கள்; அதோடு, உங்களுக்கு மறுபடியும் ஒருபோதும் பணப் பிரச்சினையே வராது.”
ஆனால் இப்படியெல்லாம் சொல்வது ஏழைகளிடம் கடவுள் கருணை காட்டுவதில்லை என மறைமுகமாய் குறிப்பிடுவதற்கு சமம். பொருட்செல்வங்கள் உண்மையிலேயே கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு அத்தாட்சியா?
ஒரு நோக்கத்தோடு ஆசீர்வதித்தார்
உண்மையுள்ள ஊழியர்களுக்கு கடவுள் செல்வத்தை வாரிவழங்கி ஆசீர்வதித்ததைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. உதாரணமாக, யாக்கோபு தன் வீட்டை விட்டுப் போனபோது கோலும் கையுமாகத்தான் சென்றார், ஆனால் 20 ஆண்டுகள் கழித்து இரண்டு பரிவாரங்கள் அளவுக்கு ஆடுமாடுகளோடும் கழுதைகளோடும் திரும்பினார். பைபிள் சொல்கிறபடி, யாக்கோபுக்கு இந்தச் செல்வங்களெல்லாம் கடவுள் தந்த பரிசு. (ஆதியாகமம் 32:10) மற்றொரு உதாரணம்: யோபு தனக்கிருந்த எல்லா சொத்துபத்துக்களையும் இழந்துவிட்டார், இருந்தாலும் யெகோவா அவருக்கு “பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும்” தந்து ஆசீர்வதித்தார். (யோபு 42:12) அரசனாகிய சாலொமோனுக்கு யெகோவா அந்தளவு செல்வத்தை வாரிவழங்கியதால் அச்செல்வத்தின் புகழ் இன்றும் வீசுகிறது.—1 இராஜாக்கள் 3:13.
மறுபட்சத்தில், கடவுளுக்கு உண்மையுடன் கீழ்ப்படிந்து
நடந்த ஏழை எளியோரைப் பற்றிய எண்ணற்ற பதிவுகள் பைபிளில் உள்ளன. நிச்சயமாகவே, கடவுள் சிலரை வறுமையால் தண்டிக்கவுமில்லை, சிலரை செல்வத்தால் ஆசீர்வதிக்கவுமில்லை. அப்படியானால், சிலருக்கு செல்வத்தை வழங்கியதில் கடவுளுடைய நோக்கம் என்ன?ஒவ்வொருவருடைய விஷயத்திலும் அந்த நோக்கம் வித்தியாசமாக இருக்கிறது. யாக்கோபுக்கு பொருளுடைமைகளைத் தந்து ஆசீர்வதித்ததன் மூலம், வாக்குப்பண்ணப்பட்ட வித்து வருவதற்கு ஆயத்தம் செய்யும் வகையில், ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான அஸ்திவாரத்தை கடவுள் அமைத்தார். (ஆதியாகமம் 22:17, 18) யோபுவுக்கு கிடைத்த செல்வச்செழிப்பு அவருக்கு துன்பத்தைக் கொடுத்தது யார் என்பதற்கான எந்தவொரு சந்தேகத்தையும் போக்கியது, இவ்வாறு யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தியது. (யாக்கோபு 5:11) சாலொமோனோ கடவுள் அருளிய செல்வத்தில் பெரும்பாலானவற்றை பிரமாண்டமான ஆலயம் கட்டுவதற்கு அர்ப்பணித்தார். (1 இராஜாக்கள் 7:47-51) அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், செல்வத்தால் கிடைக்கும் அற்ப பயனைப் பற்றி சொந்த அனுபவத்திலிருந்து எழுதுவதற்கும் சாலொமோனை யெகோவா பயன்படுத்தினார்.—பிரசங்கி 2:3-11; 5:10; 7:12.
கடவுள் நம்மை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்
பொருளுடைமைகளுக்காக “கவலைப்படாதிருங்கள்” என்று இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு கற்பித்தார்; இதன் வாயிலாக, பணத்தைக் குறித்ததில் தெளிந்த மனநிலையுடன் இருக்கும்படி அவர்களிடம் கூறினார். சாலொமோன்கூட தன் சர்வ மகிமையிலும் காட்டுப் புஷ்பங்களைப் போல அவ்வளவு அழகாய் உடுத்தவில்லை என இயேசு அவர்களிடம் விளக்கினார். என்றாலும், “அற்ப விசுவாசிகளே! . . . காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவர் கூறினார். தம்மை பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவதாக தேடினால், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தும் கொடுக்கப்படும் என கிறிஸ்தவர்களுக்கு இயேசு உறுதியளித்தார். (மத்தேயு 6:25, 28-33) அந்த வாக்குறுதி எப்படி நிறைவேறுகிறது?
பைபிளின் அறிவுரையைப் பின்பற்றும்போது முக்கியமாக ஆன்மீக ரீதியில் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. (நீதிமொழிகள் 10:22) என்றபோதிலும், அது வேறுசில நன்மைகளையும் தருகிறது. உதாரணமாக, கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: “திருடுகிறவன் இனித் திருடாமல், . . . தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) “சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்” என்றும் அது கூறுகிறது. (நீதிமொழிகள் 10:4) இந்த அறிவுரையைப் பின்பற்றி கடினமாய் உழைக்கும் நேர்மையுள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இது ஓர் ஆசீர்வாதமாய் அமைகிறது.
பேராசையை வளர்க்கும் பொழுதுபோக்காகிய சூதாட்டம், சரீரத்தைக் கெடுக்கும் பழக்கமாகிய புகைப்பிடித்தல், பலவீனப்படுத்தும் பழக்கமாகிய குடிவெறி போன்றவற்றை தவிர்க்கும்படியும் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கற்பிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1; எபேசியர் 5:5) இந்த அறிவுரையைப் பின்பற்றுகிறவர்களுக்கு செலவு குறையும், ஆரோக்கியம் மேம்படும்.
வெள்ளியையோ பொன்னையோவிட அதிக விலையேறப்பெற்றது
என்றபோதிலும், கடவுளுடைய அங்கீகாரத்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் அத்தாட்சியாக பொருட்செல்வத்தையே நம்பியிருக்க முடியாது. உதாரணமாக, லவோதிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் ஆன்மீக ரீதியில் ஏழைகளாக இருந்ததை இயேசு அம்பலப்படுத்தியபோது இவ்வாறு கூறினார்: “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகி[றாய்].” (வெளிப்படுத்துதல் 3:17) மறுபட்சத்தில், பொருளாதார ரீதியில் ஏழ்மையிலும் ஆன்மீக ரீதியில் செழுமையிலும் இருந்த சிமிர்னா கிறிஸ்தவர்களுக்கு இயேசு இவ்வாறு கூறினார்: ‘உன் உபத்திரவத்தையும் உன் ஏழ்மையையும் . . . அறிந்திருக்கிறேன்—ஆனால் நீ ஐசுவரியன்.’ (வெளிப்படுத்துதல் 2:9, NW) இந்தக் கிறிஸ்தவர்கள், உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்டதன் நிமித்தம் துன்புறுத்தியவர்களால் ஒருவேளை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம், இருந்தாலும் வெள்ளியையோ பொன்னையோவிட அதிக மதிப்புமிக்க ஐசுவரியத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள்.—நீதிமொழிகள் 22:1; எபிரெயர் 10:34.
யெகோவா தேவன் தமது சித்தத்தைச் செய்வதற்கு கடினமாய் போராடுகிறவர்களின் முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார். (சங்கீதம் 1:2, 3) சோதனைகளை சமாளிப்பதற்கும், தங்கள் குடும்பங்களுக்கு அன்றாடம் படியளப்பதற்கும், ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கும் வேண்டிய பலத்தையும் வள ஆதாரங்களையும் அவர்களுக்குத் தருகிறார். (சங்கீதம் 37:25; மத்தேயு 6:31-33; பிலிப்பியர் 4:12, 13) ஆகவே, பொருளுடைமைகளே கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு முக்கியமான அத்தாட்சியென நினைப்பதற்குப் பதிலாக, மெய் கிறிஸ்தவர்கள் “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களா”வதற்கு கடினமாய் முயற்சி செய்கிறார்கள். படைப்பாளருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், கிறிஸ்தவர்கள் “வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக” வைக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 6:17-19; மாற்கு 12:42-44. (g03 9/08)