எண்களும் நீங்களும்
எண்களும் நீங்களும்
எண்களுக்குள் ஏதேனும் அர்த்தம் புதைந்திருக்கிறதா? “கண்டிப்பாக!” என்கின்றனர் சிலர், அதற்கு சுவாரஸ்யமான உதாரணமும் தருகின்றனர். அதுதான், செப்டம்பர் 11, 2001 அன்று நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள்.
“நான் செய்தியைக் கேட்டவுடனேயே தேதியைப் பார்த்தேன்: 9-11-2001” என்கிறார் எண்சோதிடர் ஒருவர். எண் 11-ஐ “மாஸ்டர் நம்பர்களில்” ஒன்றாக எண்சோதிடர்கள் பொதுவாக கருதுகின்றனர். ஆகவே தீவிரவாத தாக்குதலோடு தொடர்புள்ளதும், “மாஸ்டர் நம்பர்” 11-உடன் சம்பந்தப்பட்டதுமான வெவ்வேறு காரியங்களை எண்சோதிட ஆர்வலர்கள் பட்டியலிட்டிருக்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்தவற்றில் சில இதோ:
▪ அந்தத் துயர சம்பவம் நடந்த தேதி 9/11. . . . 9 + 1 + 1 = 11.
▪ செப்டம்பர் 11, வருடத்தின் 254-வது நாளாக இருந்தது. . . . 2 + 5 + 4 = 11.
▪ வடக்கு கோபுரத்தை மோதியது விமானம் 11.
▪ அந்த விமானத்தில் 92 பேர் இருந்தனர். . . . 9 + 2 = 11.
▪ தெற்குக் கோபுரத்தை மோதிய விமானத்தில் 65 பயணிகள் இருந்தனர் . . . . 6 + 5 = 11.
▪ இரட்டை கோபுரங்கள் பார்ப்பதற்கு எண் 11-ஐ போலிருந்தன.
▪ “நியூ யார்க் சிட்டி” என்ற ஆங்கில சொற்றொடரில் 11 எழுத்துக்கள் உள்ளன.
எண்கள், எண்களின் சேர்க்கை, எண்களின் கூட்டல் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு விசேஷ அர்த்தம் கற்பிக்கும் எண்சோதிடம் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் பெருகி வருகிறது. மக்களுக்கு ஏன் இதன்மீது இவ்வளவு மோகம்? ஒரு வெப் சைட்டின்படி, பெயர்களிலுள்ள எழுத்துக்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை கண்டுபிடிப்பதன் மூலம் “ஒருவருடைய ஆளுமை, சுபாவம், குணங்கள், குறைகள் ஆகியவற்றை அச்சுப்பிசகாமல் தெரிந்துகொள்ள முடியும்.” இதுவே எண்சோதிடத்தின் ஒரு பிரபல அம்சம். “நம்முடைய பிறந்த தேதியை ஆராய்கையில் நம் வாழ்க்கையில் வரவிருக்கும் இன்ப துன்பங்களை அறிய முடியும்” என அதே வெப் சைட் சொல்கிறது.
இதெல்லாம் உண்மையா? அல்லது எண்களை ஆராய்வதில் ஏதேனும் ஆபத்துக்கள் மறைந்துள்ளனவா? (g02 9/8)