“அபார ஒளி”
“அபார ஒளி”
கொஞ்ச நேரம் எரிந்துகொண்டிருந்த ஒரு மின்சார பல்பை நீங்கள் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது எவ்வளவு சூடாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். பல்பு அவ்வளவு சூடாவதற்கு காரணம், வீணாகும் ஆற்றலே. சாதாரண ஒரு பல்ப் 10 சதவீத ஆற்றலை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு எரிகிறது; மீதமுள்ள 90 சதவீத ஆற்றல் வீணாகிறது. ஆனால் ஒளியை உமிழும் சின்னஞ்சிறிய மின்மினிப் பூச்சி (மேலே, பெரிதாக்கப்பட்ட அளவில்) கிட்டத்தட்ட 100 சதவீத ஆற்றலையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டு ஒளிர்கிறது.
மின்மினிப் பூச்சிகள் அற்பசொற்ப ஆற்றலையே வெப்பமாக வீணாக்குவதால் “அபார ஒளி” வீசுவதாக சொல்லப்படுகின்றன. அவற்றால் எப்படி இதைச் செய்ய முடிகிறது? மின்மினியின் அடிவயிற்றில் லூஸிஃபெரின் என்ற கரிமப்பொருள் உள்ளது. அப்டாமினல் டிரக்கியா என்ற சுவாசக் குழாய் வழியாக ஆக்ஸிஜன் அடிவயிற்றுக்குள் செல்லும்போது அது லூஸிஃபெரினோடு இரண்டறக் கலக்கிறது; அப்போது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து பழுப்பு-மஞ்சள் நிறம் முதல் சிவப்பு-பச்சை நிறம் வரை பல்வகை நிறங்களில் ஒளி வெளிப்படுகிறது.
ஒளியை உற்பத்தி செய்யும் மின்மினியின் செல்களில் யூரிக்-அமில படிகங்களும் உள்ளன; இவை பூச்சியின் அடிவயிற்றிலிருந்து ஒளி பிரதிபலிப்பதற்கு உதவுகின்றன. மின்மினிகள் துணைகளை வசீகரிப்பதற்கு மினுமினுப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்; ஒவ்வொரு இன மின்மினிகளும் வெவ்வேறு விதங்களிலும் இடைவெளிகளிலும் ஒளியை மினுமினுப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளின் உருவமைப்பு அவற்றை படைத்த யெகோவா தேவனுக்கு துதிசேர்ப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள், சங்கீதக்காரன் சொன்ன விதமாக, “சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.”—சங்கீதம் 150:6, திருத்திய மொழிபெயர்ப்பு. (g02 9/22)
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
© Darwin Dale/Photo Researchers, Inc.