Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிரந்தர நன்மை தரும் வாலண்டியர் சேவை

நிரந்தர நன்மை தரும் வாலண்டியர் சேவை

நிரந்தர நன்மை தரும் வாலண்டியர் சேவை

தேவையில் இருப்பவர்களுக்கு நன்மை செய்ய இயேசு கிறிஸ்து தவறவில்லை. உதாரணமாக, பசியால் வாடியவர்களுக்கு உணவளித்தார், வியாதியால் அவதிப்பட்டவர்களை குணமாக்கினார். (மத்தேயு 14:14-21) ஆனால் எந்த வேலைக்கு முதலிடம் கொடுத்தார்? இயேசுவின் ஊழிய காலத்தின் ஆரம்பத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு விடையளிக்கிறது. இது மாற்கு சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலிலேயா கடலருகே இயேசு கப்பர்நகூமில் இருந்தபோது, அவரை சீமோன் அல்லது பேதுருவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே “சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்.” இயேசு அவளை குணப்படுத்தினார். (மாற்கு 1:29-31) அதன் பிறகு “பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த” அநேகர் உட்பட, பெரும் திரளானோர் பேதுருவின் வீட்டு வாசலில் கூடிவந்தனர். இயேசு அவர்களையும் குணப்படுத்தினார். (மாற்கு 1:32-34) இரவு வந்ததும் அனைவரும் உறங்கப் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் இயேசு “இருட்டோடே எழுந்து” வீட்டைவிட்டு “வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய்,” அங்கே ஜெபம் பண்ண ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திற்குள் சீஷர்களும் கண்விழித்துக் கொண்டார்கள், வீட்டுக்கு வெளியே பார்த்தால் அங்கே கதவண்டையில் பெரிய கூட்டம் காத்திருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள்? இயேசுவை காணவில்லையே! பேதுருவும் அவரோடுகூட இருந்தவர்களும் அவசரமாக அவரைத் தேடிப் போய் அவர் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தார்கள். “உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.” (மாற்கு 1:35-37; லூக்கா 4:42) அதாவது, ‘இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்? நேற்றிரவு நீர் வெற்றிகரமாக பலரை குணப்படுத்தினீர். இன்று மற்றொரு வாய்ப்பு உமக்காக காத்திருக்கிறது’ என்று அவர்கள் இயேசுவிடம் சொன்னதைப் போலவே தோன்றுகிறது.

ஆனால் இயேசுவின் பதிலை கவனியுங்கள்: ‘அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்.’ இயேசு சொன்ன பதில் மிகவும் முக்கியமானது. இயேசு மற்றவர்களை சுகப்படுத்துவதற்காக பேதுருவின் வீட்டுக்கு போகவில்லை. ஏன் என்பதை இயேசு விளக்கினார்: “இதற்காகவே [அதாவது, பிரசங்கிப்பதற்காகவே] புறப்பட்டு வந்தேன்.” (மாற்கு 1:38, 39; லூக்கா 4:43) அவருடைய சீஷர்களிடம் இயேசு என்ன சொன்னார்? நற்செயல்களைச் செய்வது அவருக்கு முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிப்பதும் போதிப்பதுமே.​—மாற்கு 1:⁠14.

‘இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றும்படி’ கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துவதால், எப்படிப்பட்ட வாலண்டியர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் இன்று உண்மை கிறிஸ்தவர்களுக்கு தெள்ளத் தெளிவான வழிநடத்துதல் இருக்கிறது. (1 பேதுரு 2:21, NW) முந்தைய கட்டுரையில் கவனித்தபடி, தேவையிலிருப்பவர்களுக்கு இயேசுவைப் போலவே அவர்கள் உதவி செய்கிறார்கள். மேலும் இயேசுவைப் போலவே, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பற்றிய பைபிளின் செய்தியை போதிக்கும் வேலைக்கு முதலிடம் தருகிறார்கள். a (மத்தேயு 5:14-16; 24:14; 28:19, 20) ஆனால் மதிப்புள்ள மற்ற வாலண்டியர் சேவைகளைக் காட்டிலும் பைபிளின் செய்தியை மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் வாலண்டியர் சேவைக்கு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?

பைபிள் கல்வி நன்மை தருகிறது​—⁠ஏன், எப்படி?

ஆசிய பழமொழி ஒன்று அதற்கு பதிலளிக்கிறது. அது இவ்வாறு கூறுகிறது: “ஒரு வருஷத்துக்கு திட்டமிட்டால் விதைகளை விதை. பத்து வருஷங்களுக்கு திட்டமிட்டால் மரங்களை நடு. நூறு வருஷங்களுக்கு திட்டமிட்டால் மக்களுக்கு கல்வி புகட்டு.” ஆம், நீண்ட நாள் பலன் தரும் முடிவுகளை எடுப்பதற்கு கல்வி முற்றிலும் அவசியம். ஏனென்றால் அது இருந்தால்தான் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்மானங்களைச் செய்வதற்கு வேண்டிய திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். அதன் காரணமாகவே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முழுநேர வாலண்டியர்களும் பகுதிநேர வாலண்டியர்களும் பொது மக்களுக்கு பைபிள் கல்வியை இலவசமாக அளிப்பதற்கு தங்கள் நேரத்தையும் உழைப்பையும் வளங்களையும் செலவழிக்கிறார்கள். காலத்தால் சோதிக்கப்பட்டிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய இந்த வாலண்டியர் திட்டம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எவ்வாறு?

பைபிள் தரும் நடைமுறையான புத்திமதியை புரிந்துகொண்டு அதன்படி வாழ மக்களுக்கு உதவி செய்கையில் அவர்களால் வாழ்க்கையின் பிரச்சினைகளை நன்கு சமாளிக்க முடிகிறது. தீய பழக்க வழக்கங்களை விட்டுவிட தேவையான மனோபலத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பிரேஸிலில் வாழும் நெல்சோன் என்ற இளைஞன் பைபிள் கல்வியால் கிடைக்கும் மற்றொரு நன்மையைப் பற்றி கூறுகிறான்: “யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்ததிலிருந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் இப்போது நோக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன்.” (பிரசங்கி 12:13) கடவுளுடைய வார்த்தையை சமீபத்தில் படிக்க ஆரம்பித்திருக்கும் லட்சோபலட்ச இளைஞரும் முதியோரும் இப்படித்தான் உணருகிறார்கள். வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க மாணவர்களுக்கு பைபிள் உதவி செய்வதோடு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தி அவர்களுக்கு மேன்மையான எதிர்கால நம்பிக்கையையும் அளிக்கிறது. இந்த நம்பிக்கைதான் மிகவும் கஷ்டமான சூழ்நிலைமைகளிலும் வாழ்க்கையை பிரயோஜனமுள்ளதாய் ஆக்கியிருக்கிறது. (1 தீமோத்தேயு 4:8)​—⁠“கடவுளுடைய ராஜ்யம் தரும் நன்மை” என்ற பெட்டியைக் காண்க.

பைபிள் கல்வியை புகட்டுவதால் யெகோவாவின் சாட்சிகள் நிரந்தர நன்மைகளைத் தரும் வாலண்டியர் சேவையை செய்கிறார்கள். அது எவ்வளவு நிரந்தரம்? கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.’ நித்திய நன்மை தரும் ஒரு திட்டத்தில் பங்கெடுப்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள். இப்போதும் இப்படிப்பட்ட ஒரு வாலண்டியர் சேவைதான் உண்மையிலேயே பயனளிப்பதாய் இருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயல்பட்டால் அதற்காக நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள்.(g01 7/22)

[அடிக்குறிப்பு]

a பிரசங்க வேலையை அப்போஸ்தலனாகிய பவுல் எப்படி கருதினாரோ அப்படியே யெகோவாவின் சாட்சிகளும் கருதுகிறார்கள், அதாவது, உண்மை கிறிஸ்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு வேலையாக இதை கருதுகிறார்கள். பவுல் இவ்வாறு சொன்னார்: “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 9:16) ஆனாலும் அவர்கள் செய்யும் பிரசங்க வேலை மனமுவந்து செய்யப்படும் வேலை, ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆனதும் மனமுவந்து செய்த தீர்மானம்தான்; அது பெரும் பாக்கியமாய் இருக்க, அத்துடன் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் அவர்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

“ஒரு வருஷத்துக்கு திட்டமிட்டால் விதைகளை விதை. பத்து வருஷங்களுக்கு திட்டமிட்டால் மரங்களை நடு. நூறு வருஷங்களுக்கு திட்டமிட்டால் மக்களுக்கு கல்வி புகட்டு”

[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]

நன்மை செய்கிறார், நம்பிக்கை அளிக்கிறார்

வெப்பமண்டல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்தவர் 43 வயதான பிரான்ஸ் நாட்டு நாடீன் என்ற நர்ஸ். இவர் மத்திய ஆப்பிரிக்காவில் வேலை செய்திருக்கும் வாலண்டியர்களில் ஒருவர். “நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று எல்லாரும் கேட்கிறார்கள். நான் கடவுளை நம்புகிறேன்; மக்களை நேசிக்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் என்னையே அர்ப்பணிக்க விரும்புகிறேன். அதோடு நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் துன்பப்படுகிறவர்களுக்கு பரிகாரத்தையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.” இவ்வாறு அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆப்பிரிக்காவில், வாலண்டியராக பணிபுரிந்து வந்தாலும், தனக்கிருக்கும் நேரத்தை நிவாரண உதவி அளிப்பதிலும் உள்ளூர் சாட்சிகள் செய்துவரும் பைபிள் கல்வி புகட்டும் வேலையிலும் நாடீன் செலவழிக்கிறார்.

[படங்கள்]

ஆப்பிரிக்காவில் நாடீன்

[பக்கம் 12-ன் பெட்டி]

கடவுளுடைய ராஜ்யம் தரும் நன்மை

தயவுசெய்து இந்த வேதவசனங்களை உங்களுடைய பைபிளில் வாசித்துப்பார்த்து, பின்வரும் விஷயங்களில் மனிதரின் தேவைகளை பூர்த்திசெய்ய கடவுள் எவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதை பாருங்கள்:

உடல் ஆரோக்கியம் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—⁠வெளிப்படுத்துதல் 21:4; ஏசாயா 33:24; 35:5, 6.

கல்வி “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”​—⁠ஏசாயா 11:9; ஆபகூக் 2:⁠14.

வேலை வாய்ப்பு “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை. . . . அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”​—⁠ஏசாயா 65:21-23.

உணவு “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.”​—⁠சங்கீதம் 67:6; 72:16; ஏசாயா 25:⁠6.

சமுதாய நிலைமைகள் ‘கர்த்தர் [“யெகோவா,” NW] துஷ்டரின் தண்டாயுதத்தை முறித்துப்போட்டார். . . . பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது.’​—⁠ஏசாயா 14:5, 7.

நீதி “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.”​—⁠ஏசாயா 11:3-5; 32:1, 2.