“விரிவடையும் மாநகரங்கள்”
“விரிவடையும் மாநகரங்கள்”
“மனிதர்கள் என்றுமே இல்லாதளவு இன்று அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். வளம் கொழிக்கும் வாழ்வைத் தேடிச் செல்பவர்களில் அநேகர் மாநகரங்களை நோக்கியே படையெடுக்கின்றனர்.”
“வளரும் நாடுகளின் விரிவடையும் மாநகரங்கள்” என்ற கட்டுரையின் முன்னுரையே இது. ஃபாரின் அஃபையர்ஸ் என்ற பிரசுரத்தில் இந்தக் கட்டுரை வெளிவந்தது. நகரத்தின் “பகட்டாரவாரத்தால் கவரப்படும் அல்லது கிராமத்தின் அரசியல், பொருளாதார குழப்பங்கள், ஜனத்தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் துரத்தப்படும்” அநேகர் மாநகரங்களுக்கு வந்து சேர்கின்றனர் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
மாநகரங்கள் எவ்வளவு வேகமாக விரிவடைகின்றன தெரியுமா? அதன் எண்ணிக்கையைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள். வாரத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநகரங்களில் வந்து குவிகின்றனர் என்பதே சிலரின் கணிப்பு! வளரும் நாடுகளிலுள்ள 200-க்கும் அதிகமான மாநகரங்களில் இன்று 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். அவற்றுள் சுமார் 20, ஒரு கோடியை தொட்டுவிட்டன! ஆனாலும் அவற்றின் வளர்ச்சி நின்றபாடில்லை. நைஜீரியாவிலுள்ள லாகோஸ் மாநகரை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிட்யூட் அறிக்கையின்படி, “2015-க்குள் லாகோஸில் ஏறக்குறைய 2.5 கோடி மக்கள் வாழ்வர்; ஆகவே அது, உலகின் மாபெரும் மாநகரங்களின் வரிசையில் 13-வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடும்.”
இதை கவனிக்கும் அநேக வல்லுனர்கள், எதிர்காலம் அந்தளவு பிரகாசமாக இருக்காது என்றே நினைக்கின்றனர். உதாரணத்திற்கு, 2035-க்குள் “இன்றுள்ள நகரங்களில் இன்னும் 300 கோடி மக்கள் வாழ்வர்” என ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் ஃபெடரிகோ மேயர் எச்சரிக்கிறார். மலைக்க வைக்கும் இந்த ஜனத்தொகையை சமாளிக்க, “அடுத்த 40 வருடங்களில், 30 லட்சம் பேர் வாழக்கூடிய ஆயிரம் மாநகரங்களை நாம் கட்ட வேண்டும். அதாவது வருடத்திற்கு 25 என்ற விகிதத்தில் உருவாக்க வேண்டும்.”
மாநகரங்களின் ஜனத்தொகை கிடுகிடுவென அதிகரிப்பதால் உலகம் முழுவதிலுமுள்ள மாநகரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். செழுமை மிக்க, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் மாநகரங்களும் இதில் உட்பட்டுள்ளன. மாநகரங்களின் பிரச்சினைகள்தான் என்ன? அவை உங்களை எவ்வாறு பாதிக்கலாம்? நிவாரணத்திற்கு ஏதாவது வழி உண்டா? இந்த முக்கியமான கேள்விகளை பின்வரும் கட்டுரைகள் அலசி ஆராயும்.(g01 4/8)