மருத்துவம் உங்கள் சாய்ஸ்
மருத்துவம் உங்கள் சாய்ஸ்
மாற்று மருத்துவம் என்ற புத்தகத்தில் டாக்டர் இஸாடார் ரோஸின்ஃபீல்டு பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: “குத்து மதிப்பாக சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் ஒரு சிகிச்சை முறை அல்லது புதிய மருந்து கண்டிப்பாக ‘குணமாக்கும்’ என்று சொல்லி கொடுத்தால் பாதி பேரிடத்திலாவது முன்னேற்றம் தெரியும்.”
இதைத்தான் மன வைத்தியம் (placebo effect) என்கிறோம். அதாவது வியாதி குணமாவது மனதை பெருமளவு சார்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு, சாதாரண ஒரு மிட்டாய் மாத்திரையைக்கூட நோயாளி தனக்கு நோய் குணமாகும் என்று நம்பிக்கையோடு சாப்பிடும்போது அது பலனளிக்கிறது. இத்தகைய மன வைத்தியத்தால் வலி, வாந்தி, சோர்வு, மயக்கம், கவலை, மன இறுக்கம் போன்ற நோய் அறிகுறிகள் இருந்த இடம் தெரியாமல் மறையலாம். இந்த உண்மை எதைத் தெரிவிக்கிறது?
ஒருவர் எத்தகைய மருத்துவம் பார்த்தாலும், அது தனது நோயை குணமாக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இது பல நோயாளிகளின் விஷயத்தில் உண்மை. அதே நேரத்தில் ஒரு மருத்துவம் நோய் அறிகுறிகளை மட்டும் இன்றி, நோயிற்கான காரணத்தையும் நீக்குகிறதா என்று அறிந்துகொள்வது புத்திசாலித்தனம். இதை சில பரிசோதனைகள் செய்தோ அல்லது எக்ஸ்-ரே எடுத்தோ அறிந்துகொள்ளலாம்.
ஆனால், ஏதோ ஒரு வைத்திய முறையை சட்டுப்புட்டென்று தேர்ந்தெடுப்பதற்கு முன் பல விஷயங்களை கருத்தில் கொள்க!
யோசிக்க வேண்டியவை
எந்தச் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன், கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள். இதோ சில ஆராய்ச்சி கேள்விகள்: எதற்காக இந்த மருத்துவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? இதிலுள்ள நன்மை, தீமைகள் யாவை? எவ்வளவு செலவாகும்? எவ்வளவு காலம் வைத்தியம் பார்க்க வேண்டும்? அதே மருத்துவத்தை பார்த்துக்கொண்டவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களுக்கு பலனளித்ததா என்று கேளுங்கள். ஆனால், அந்த மருத்துவத்தைப் பற்றி ஏதோ சில துணுக்கு சேதியைக் கேட்டுவிட்டு அதில் இறங்காதீர்கள்.
ஒருவேளை ஆங்கில மருத்துவத்தில் பலன் குறைவாக இருந்தாலும், அதே மருத்துவத்தை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் மாற்று வைத்தியம் பார்ப்பது நல்லதல்ல. இரண்டு இளம் புற்றுநோயாளிகள் ஆங்கில மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார்கள், திடீரென்று அதை நிறுத்திவிட்டு, மாற்று மருந்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அதனால் ஒருவர் பரிதாபமாக இறந்துவிட்டார் என்ற செய்தி த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகையில் வெளிவந்தது.
போலி வைத்தியர்களின் நடமாட்டம் ஜாஸ்தியாக இருப்பதால் ஜாக்கிரதையாக இருங்கள்! குறிப்பாக தீரா வியாதியுடையவர்களும், உயிர்கொல்லி வியாதியுடையவர்களும் இத்தகைய வைத்தியர்களிடம் மாட்டாமல் இருக்க வேண்டும். எல்லா வியாதிகளையும் விரட்டியடிக்கும் என்று விற்கிற எந்த மருந்தையும் உடனே நம்பிவிட வேண்டாம். “மூச்சு கோளாறு முதல் உயிர் மூச்சை நிறுத்துகிற எல்லா வியாதிகளையும் விரட்டுகிற” புதிய வைட்டமின் கிடைத்துவிட்டதாக சமீபத்தில் கூறினார்கள். ஆனால், ‘வைட்டமினை’ ஆராய்ந்து பார்த்தால் அது வெறும் உப்பு நீர்!
உடல் நலத்திற்கு நலம் தரும் நல்ல மாற்று மருத்துவம் நடமாட்டத்தில் உள்ளது என்பது உண்மையே! ஆனால் அவற்றால் கிடைக்கும் பலன்களை அளவுக்கு மீறி எதிர்பார்க்காமல், எதார்த்தமாக இருங்கள். மேலும், சத்துள்ள உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி ஆகியவை ஆரோக்கியத்திற்கு அவசியம். அதோடு தேவையான மருத்துவத்தை தேடிப்பிடித்து தேர்ந்தெடுங்கள்.
வியாதிகள் தீரும் நாள்
இன்று, எந்தச் சிகிச்சையாலும் எல்லா வியாதிகளையும் தீர்க்க முடியாது. வியாதிகளால் விளைகிற மரணத்தையும் நிறுத்த முடியாது. ஏனென்றால் இந்த வியாதியும் மரணமும் நம் ஆதி தந்தை ஆதாம் வழி வந்த ஆஸ்திகள். (யோபு 14:4; சங்கீதம் 51:5; ரோமர் 5:12) பல்வேறு மருத்துவ முறைகள் பலனளித்தாலும், அது சொற்ப காலத்திற்கே. அவற்றால் ஆயுள் கூடி, வாழ்வில் இனிமை கூடலாம். ஆனால் நிரந்தரம் இல்லையே! ஆனால் நோயால் நொந்துபோன நெஞ்சங்களுக்கு ஆறுதல் தரும் செய்தி: தீரா வியாதிகளும் தீரப்போகும் நாள் வந்து கொண்டிருக்கிறது. இந்தச் செய்தியில் லட்சக்கணக்கானோர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
வியாதிகளை தீர்க்கப்போவது சாதாரண வைத்தியர் அல்ல. வைத்தியர்களுக்கு எல்லாம் வைத்தியராய் விளக்கும் படைப்பாளர் யெகோவா தேவன். அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். நோய் இல்லாத புதிய உலகில், நம்மை முழுமையான ஆரோக்கியத்தோடும், நிரந்தர ஆயுளோடும் வாழ வைப்பதற்காக கடவுள் தமது மகன் இயேசு கிறிஸ்துவை பாவ நிவாரண பலியாக கொடுத்துள்ளார். ஆகவே நாம் அவரது பலியில் விசுவாசம் வைத்து, அதனால் வரக்கூடிய நன்மைகளை ஆசீர்வாதமாக பெறுவோமாக! (மத்தேயு 20:28) புதிய உலகில் “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்ல மாட்டார்கள்.”—எசாயா 33:24, பொ.மொ.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
வியாதியே இல்லா வாழ்க்கையை யாரால் மட்டும் தரமுடியும் என்பதை லட்சக்கணக்கானோர் கண்டுகொண்டனர்