உத்தமத்தை காத்துக்கொள்வதே என் முக்கிய நோக்கம்
உத்தமத்தை காத்துக்கொள்வதே என் முக்கிய நோக்கம்
அலெக்ஸி டேவிட்ஜக் சொன்னபடி
ஆண்டு 1947; உக்ரைனிலுள்ள லாஸ்கோஃப் என்ற கிராமம். இது போலந்தின் எல்லைக்கு அருகில் இருக்கிறது. அந்த கிராமத்தில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். அருகில்தான் அந்த மறக்க முடியாத சம்பவம் நடந்தது. ஸ்டீபான் என் நண்பன், என்னைவிட வயதில் பெரியவன்; அவன் ஒரு ஆபத்தான வேலையை செய்துவந்தான். யாருக்கும் தெரியாமல் போலந்திலிருந்து உக்ரைனுக்கு பைபிள் பிரசுரங்களை எடுத்துவந்து கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு, எல்லைக் காவலாளி ஒருவர் இவனை பார்த்துவிட்டார். உடனே இவனை துரத்தினார். பிடிக்க முடியாததால் அவனை சுட்டு வீழ்த்தினார். ஸ்டீபானின் மரணம் என் மனதை ஆழமாக பாதித்தது. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மரணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது என்ன என்பதை நான் பின்னர் விளக்குகிறேன்.
லாஸ்கோஃப்-ல் 1932-ம் ஆண்டு நான் பிறந்தபோது, எங்கள் கிராமத்தில் பத்து குடும்பத்தினர் பைபிள் மாணாக்கர்களாக இருந்தனர். அப்போது யெகோவாவின் சாட்சிகள் பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். என் பெற்றோரும் அவர்களில் உட்படுவர். அவர்கள் 1970-களின் மத்திப வருடங்களில் மரிக்கும் வரை யெகோவாவிற்கு உத்தமத்தை காத்து, எனக்கு நல்ல முன்மாதிரிகளாக விளங்கினர். அவர்களைப் போலவே என் வாழ்நாள் முழுவதிலும் கடவுளுக்கு உத்தமத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.—சங்கீதம் 18:25.
இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய 1939-ம் ஆண்டில், போலந்தின் கிழக்கே இருந்த எங்கள் பகுதி, சோவியத் யூனியனோடு சேர்க்கப்பட்டது. ஜூன் 1941-ல் ஜெர்மானியர்கள் வந்து அதை கைப்பற்றும்வரை சோவியத் ஆட்சியின்கீழ்தான் வாழ்ந்தோம்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது, நான் படித்துவந்த பள்ளியில் அநேக பிரச்சினைகளை எதிர்ப்பட்டேன். பள்ளிப் பிள்ளைகளுக்கு தேசிய கீதம் பாட கற்றுக்கொடுக்கப்பட்டதோடு, இராணுவ பயிற்சியும் அளிக்கப்பட்டது. எரிகுண்டுகளை சரியாக எரிவதற்குரிய பயிற்சியும் அதில் உட்படும். அதனால் நான் தேசிய கீதம் பாடவும், இராணுவம் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஈடுபடவும் மறுத்துவிட்டேன். பைபிள் சார்ந்த நம்பிக்கைகளை உறுதியாக காத்துக்கொள்ள சிறுவயதிலேயே கற்றுக்கொண்டது, பிற்காலங்களிலும் கடவுளுக்கு உத்தமத்தை காத்துக்கொள்ள பெரிதும் உதவியது.
எங்கள் சபை பிராந்தியத்திலிருந்த அநேகர் பைபிள் சத்தியங்களில் ஆர்வம் காட்டினார்கள். அதனால், அவர்களுக்கு போதிக்க உதவும்படி பயனியர்கள் என்று அழைக்கப்படும் யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியர்கள் இருவர் எங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்டனர். அந்த பயனியர்களில் ஒருவரான, இல்யா ஃபெடெரோவிட்சிக் எனக்கு பைபிள் படிப்பு நடத்தி, ஊழியத்திலும் பயிற்சி அளித்தார். ஜெர்மன் ஆட்சியின்போது, இல்யா நாடுகடத்தப்பட்டு, நாசி கான்சென்ட்ரேஷன் முகாம்களில் அடைக்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார்.
நடுநிலை வகிக்க அப்பா பட்ட கஷ்டம்
போர் நிதிக்கு உதவ பணம் செலுத்துவதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கும்படி 1941-ம் ஆண்டு சோவியத் அதிகாரிகள் என் அப்பாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், உண்மையான கடவுளின் ஊழியனாக, எந்த போர் படையாக இருந்தாலும் அதை ஆதரிக்க முடியாது, நடுநிலை வகிப்பேன் என சொன்னார். அதற்காக அவரை எதிரி என குற்றஞ்சாட்டி நான்கு வருட சிறை தண்டனை வழங்கினர். ஆனால் அவர் நான்கே நாள்தான் சிறையில் இருந்தார். ஏன்? ஏனென்றால் அவர் சிறையிலடைக்கப்பட்டதற்கு அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் வசித்துவந்த பகுதியை ஜெர்மன் படை கைப்பற்றியது.
ஜெர்மானியர்கள் தங்களை நெருங்கிவிட்டதாக சிறைக் காவலர்கள் கேள்விப்பட்டபோது, சிறைக் கதவை திறந்துவிட்டுவிட்டு ஓடிவிட்டனர். அங்கிருந்து தப்பியோடிய அநேக சிறைக்கைதிகள் வெளியே, சோவியத் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் அப்பா உடனே வெளியே போகவில்லை, கொஞ்ச நேரம் கழித்து தன் நண்பர் வீட்டிற்கு தப்பிச் சென்றார். போரில் சோவியத் படையை ஆதரிக்க மறுத்ததால்தான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை நிரூபிக்கும் அவருடைய பத்திரத்தை எடுத்துவரும்படி அம்மாவிற்கு அங்கிருந்து சொல்லி அனுப்பினார். அதை ஜெர்மன் அதிகாரிகளிடம் காட்டியதால், அவர்கள் அப்பாவை கொல்லாமல் விட்டனர்.
சோவியத் படையை ஆதரித்த எல்லாருடைய பெயர்களையும் ஜெர்மானியர்கள் தெரிந்துகொள்ள விரும்பினர். அப்பாவை சொல்லும்படி கட்டாயப்படுத்தினர், ஆனால் அப்பா சொல்ல மறுத்துவிட்டார். அவர் தன் நடுநிலையைக் குறித்து அவர்களுக்கு தெளிவாக விளக்கினார். அவர் யாருடைய பெயரையாவது சொல்லியிருந்தால், அந்த நபரை சுட்டு தள்ளியிருப்பர். அதனால், அப்பாவின் நடுநிலைமை மற்ற அநேகரின் உயிர்களை காப்பாற்றியது. இவ்வாறு தப்பியவர்கள் அப்பாவிற்கு நன்றி கூறினர்.
மறைமுகமாக வேலை செய்தல்
ஆகஸ்ட் 1944-ல் சோவியத் படையினர் மீண்டும் உக்ரைனுக்கு வந்தனர். மே 1945-ல் இரண்டாம் உலக யுத்தம் ஐரோப்பாவில் முடிவடைந்தது. அதன் பிறகு, எங்கள் வாழ்க்கை இரும்புத் திரைக்கு பின் என்று சொல்லலாம். ஏனென்றால், சோவியத் யூனியனில் வாழ்ந்துவந்த எங்களுக்கும் வெளி உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. போலந்து எல்லையின் அருகே வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்வதுகூட மிகக் கடினமாக ஆனது. இருப்பினும் சில தைரியமான சாட்சிகள், யார் கண்ணிலும் படாமல் எல்லையை கடந்து, மதிப்புமிக்க காவற்கோபுரம் பத்திரிகைகள் சிலவற்றுடன் திரும்பிவந்தனர். லாஸ்கோஃப்-ல் உள்ள எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலேயே போலந்தின் எல்லை இருந்தது. அதனால் பத்திரிகைகளை எடுத்துவரச் செல்பவர்கள் படும் கஷ்டங்களை நான் கேள்விப்படுவதுண்டு.
உதாரணமாக, சில்வெஸ்டெர் என்ற சாட்சி இரண்டு முறை எல்லையைக் கடந்து எந்த பிரச்சினையுமின்றி திரும்பினார். ஆனால் மூன்றாவது முறை சென்றபோது, எல்லையில் ரோந்துவரும் காவலர்கள் மற்றும் அவர்களுடைய நாய்களின் கண்களில் பட்டுவிட்டார். காவலர்கள் ஓடவேண்டாம் என எச்சரித்தனர், ஆனால் சில்வெஸ்டரோ தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினார். அவர்களுடைய நாய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி அருகிலிருந்த குளம்தான். அதனால் அந்த குளத்தில் இறங்கி, உயரமான புற்களின் நடுவே மறைந்துகொண்டு, கழுத்துவரை தண்ணீரில் அந்த இரவு முழுவதையும் கழித்தார். கடைசியில், காவலர்கள் தேடுவதை நிறுத்திவிட்டபின், சில்வெஸ்டர் நடக்கக்கூட முடியாமல் வீட்டிற்கு கஷ்டப்பட்டு போய் சேர்ந்தார்.
ஆரம்பத்தில் சொன்னவிதமாக, இதேபோல எல்லையை கடக்க முயற்சித்தபோதுதான் சில்வெஸ்டரின் உறவினனான ஸ்டீபான் கொல்லப்பட்டான். ஆனாலும் மனம் தளர்ந்துவிடாமல், யெகோவாவின் ஜனங்களோடு நாங்கள் தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வது அவசியமாக இருந்தது. தைரியமுள்ள சகோதரர்கள் எல்லையைக் கடந்து பைபிள் இலக்கியங்களை கடத்தி வந்ததால், ஆவிக்குரிய உணவையும், பேருதவியளிக்கும் வழிநடத்துதல்களையும் தொடர்ந்து பெற்றோம்.
அடுத்த வருடம் அதாவது 1948-ல் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய குளத்தில் இரவு நேரத்தில் முழுக்காட்டப்பட்டேன். முழுக்காட்டப்படவிருந்த நாங்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் கூடினோம். ஆனால் அப்போது இருட்டாக இருந்ததாலும், எல்லா நிகழ்ச்சிகளும் ரகசியமாக சத்தமின்றி நடைபெற்றதாலும் யார் யார் வந்திருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. முழுக்காட்டுதல் பெறவிருந்த நாங்கள் யாரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. யார் முழுக்காட்டுதல் பேச்சு கொடுத்தது, குளத்திற்கு அருகிலிருக்கும்போது யார் முழுக்காட்டுதலுக்குரிய கேள்விகளை கேட்டது, யார் என்னை தண்ணீரில் அமிழ்த்தியது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பல வருடங்கள் கழித்து, நானும் என் நெருங்கிய நண்பரும் பேசிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் இருவரும் அன்று இரவு ஒன்றாகத்தான் முழுக்காட்டுதல் எடுத்தோம் என்பதை தெரிந்துகொண்டோம்!
1949-ம் ஆண்டு புரூக்ளினிலிருந்து உக்ரைனிலிருந்த சாட்சிகளுக்கு ஒரு செய்தி வந்தது. சோவியத் யூனியனில் பிரசங்க வேலையை சட்டப்பூர்வமாக்க, மாஸ்கோ அரசாங்கத்திடம் மனுசெய்யும்படி அந்த செய்தி உற்சாகப்படுத்தியது. அந்த வழிநடத்துதலை பின்பற்றி, உள்துறை அமைச்சர் வழியாக ஐ.சோ.சோ.கு.-வின் உயர் சோவியத்தினுடைய குழுவிற்கு ஒரு மனு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, மனுவிற்கு அரசாங்கத்தின் பதிலைப் பெற, மிகேலா பியாடோகா மற்றும் பாபிஜ்சக் என்ற சகோதரர்கள் மாஸ்கோவிற்கு போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு கோடைகாலத்தில் மாஸ்கோவிற்கு சென்றனர்.
இதை விசாரித்த அதிகாரிகளிடம் சகோதரர்கள் எங்கள் வேலை பைபிள் அடிப்படையிலானது என்பதை விளக்கினர். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்ற இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேற்றமாகவே இந்த வேலை செய்யப்படுகிறது என்பதை விளக்கினார்கள். (மத்தேயு 24:14) இருப்பினும் எங்களை அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது என அந்த அதிகாரிகள் சொன்னார்கள்.
வீடுதிரும்பிய சகோதரர்கள் விடாமுயற்சியுடன், உக்ரைனில் மட்டுமாவது எங்கள் வேலைக்கு சட்டப்படி அங்கீகாரம் பெற்றுக்கொள்ள உக்ரைனின் தலைநகரமான கீவ்-ற்கு சென்றனர். அங்கும், அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கத்தை ஆதரித்தால் மட்டுமே யெகோவாவின் சாட்சிகள் நிம்மதியாக இருக்க முடியும் என அதிகாரிகள் சொன்னார்கள். சாட்சிகள் ஆயுதமேந்திய படைகளிலும், தேர்தல்களிலும் கலந்துகொள்ள வேண்டுமென சொன்னார்கள். அங்கும், நம் தலைவரான இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இந்த உலகத்தின் பாகமானவர்களாக இருக்கக்கூடாது என எங்கள் நடுநிலைமையைக் குறித்து சாட்சிகள் விளக்கினர்.—யோவான் 17:14-16.
அதைத் தொடர்ந்து கொஞ்ச நாளில், சகோதரர்கள் மிகேலா பியாடோகா மற்றும் பாபிஜ்சக் கைதுசெய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு, 25 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டனர். அப்போது, அதாவது 1950-ல் அநேக சாட்சிகளை அதிகாரிகள் கைதுசெய்தனர். என் அப்பாவும் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 25 வருட சிறை தண்டனை வழங்கி, காபாரோவ்ஸ்க் என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அது 7,000 கிலோமீட்டருக்கு அப்பால், சோவியத் யூனியனின் கிழக்கு எல்லையில் இருந்தது.
சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுதல்
இன்று லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, மால்டோவியா, பெலாரூஸ், உக்ரேன் என அழைக்கப்படும் மேற்கு குடியரசு நாடுகளில் சோவியத் யூனியன், ஏப்ரல் 1951-ல் சாட்சிகளுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. அதே மாதத்தில், நான் மற்றும் என் அம்மா உட்பட சுமார் 7,000 பேர் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டோம். இரவு நேரத்தில் காவலர்கள் திடீரென எங்கள் வீட்டிற்குள் வந்தார்கள், எங்களை ரயில் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு மிருகங்களை அடைக்கும் இரயில் பெட்டிகளில் எங்களை அடைத்தனர். ஒவ்வொரு பெட்டியிலும் ஐம்பது பேர் அடைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இர்குட்ஸ்க் மாவட்டத்திலுள்ள பைகால் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும் ஜலாரி என்ற இடத்தில் எங்களை இறக்கிவிட்டனர்.
அங்கு ஆயுதம் ஏந்திய வீரர்கள் எங்களை சுற்றியிருக்க, பனியில் நாங்கள் நடுங்கிக்கொண்டிருந்தோம். ரத்தத்தை உறைய வைக்கும் பனிக்காற்று சில்லென வீசிக்கொண்டிருக்க, என்ன நடக்கப் போகிறதோவென்று ஒன்றும் புரியாமல் குழம்பிப்போயிருந்தேன். யெகோவாவுக்கு எவ்வாறு இங்கு என் உத்தமத்தை காத்துக்கொள்ளப் போகிறேன்? அங்குள்ள குளிரைப் பற்றியே நினைத்துக் கொண்டில்லாமலிருக்க ராஜ்ய பாடல்களை பாட ஆரம்பித்தோம். பின்பு, அங்குள்ள அரசாங்க நிறுவனங்களின் மேனேஜர்கள் வந்தனர். அவர்களுக்கு கடினமாய் உழைக்கும் ஆண்களும், வீட்டு விலங்குகளை பார்த்துக்கொள்வது போன்ற வேலைக்கு பெண்களும் தேவைப்பட்டனர். இந்த வேலைகளை செய்வதற்காக எங்களை கூட்டிச்செல்ல அவர்கள் வந்திருந்தனர். நானும் என் அம்மாவும் டாக்னின்ஸ்காயா நீர்மின்சக்தி நிலையம் கட்டப்படும் கட்டுமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு வந்து சேர்ந்தபோது வரிசையாக இருந்த மரத்தாலான குடியிருப்புகளை பார்த்தோம், இவை நாடுகடத்தப்பட்டவர்களுக்காக பயன்படுத்தப்பட்டன. நான் ஒரு டிராக்டர் டிரைவராகவும் எலெக்டிரிஷனாகவும் வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டேன். அம்மா பண்ணையில் வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தின் பதிவுகளின்படி நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்கள், சிறைகைதிகள் அல்ல. அதனால் அந்த மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம். ஆனாலும் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்த வேறொரு குடியிருப்புக்கு செல்ல அனுமதி இல்லை. நாங்கள் வாழ்க்கை முழுக்க அங்கேயே இருந்து வேலை செய்வதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்திடும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கு அப்போது 19 வயது, வாழ்நாள் முழுவதும் என்பது மிகவும் அதிக காலம் என்று நினைத்தேன், அதனால் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டேன். இருப்பினும், அந்த இடத்தில்தான் 15 வருடங்கள் இருந்தோம்.
முன்பு நாங்கள் இருந்த இடத்திலிருந்து போலந்தின் எல்லை எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இப்போதோ சைபீரியாவிலிருந்து 6,000 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்தது! சாட்சிகளாக நாங்கள் முன்புபோல சபையாக செயல்பட முடிந்தளவு முயற்சித்தோம். சபையை முன்நின்று நடத்த சகோதரர்கள் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில், உக்ரைனிலிருந்து சிலர் மறைத்து எடுத்துவந்திருந்த ஒருசில பைபிள் பிரசுரங்களைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை. இவற்றை கையால் எழுதி, நகல் எடுத்து, எங்களுக்குள் சுற்றியனுப்பிக் கொண்டோம்.
விரைவிலேயே கூட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். எங்களில் பெரும்பாலானோர் அங்கிருந்த குடியிருப்புகளிலேயே வசித்ததால், ஏறக்குறைய எல்லா சாயங்காலங்களிலும் கூடுவோம். எங்கள் சபையில் சுமார் 50 அங்கத்தினர்கள் இருந்தனர். நான் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்தும்படி நியமிக்கப்பட்டேன். எங்கள் சபையில் ஆண்கள் குறைவாக இருந்ததால், பெண்களும் மாணாக்கர் பேச்சை கொடுத்தனர். இந்த முறை 1958-ம் ஆண்டு முதல் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. எல்லோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பேச்சுகளை சீரியஸாக கருதி, நல்ல முறையில் கொடுத்தனர். யெகோவாவை துதிப்பதற்கான வழியாகவும்
சபையிலுள்ள மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கான வழியாகவும் இந்தப் பள்ளியை கருதினார்கள்.ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டது
நாங்கள் குடியிருப்புகளிலேயே வசித்து வந்ததால், சாட்சிகள் அல்லாத மற்றவர்களும் எங்களோடு இருந்தனர். அதனால் ஒவ்வொரு நாளும் எங்கள் நம்பிக்கைகளைப் பற்றி அவர்களுடன் பேசினோம். ஆனால் அவ்வாறு பேசக்கூடாது என கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டிருந்தோம். 1953-ல் சோவியத் பிரதமரான ஜோசஃப் ஸ்டாலின் இறந்தபோது நிலைமை முன்னேறியது. எங்கள் பைபிள் சார்ந்த நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் இன்னும் வெளிப்படையாக பேச அனுமதிக்கப்பட்டோம். உக்ரைனில் உள்ள சில நண்பர்களை தொடர்பு கொண்டு, எங்கள் பகுதிக்கு அருகில் மற்ற சகோதரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டோம். பிறகு அவர்களை தொடர்புகொண்டோம். இது சபைகளை வட்டாரமாக ஒழுங்கமைக்க எங்களுக்கு உதவியது.
உக்ரைனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருத்தியான ஓல்காவை நான் 1954-ல் மணமுடித்தேன். யெகோவாவுக்கான என் சேவையில் பல வருடங்கள் உறுதுணையாக இருந்தாள். 1947-ல் உக்ரைன் மற்றும் போலந்து எல்லையில் கொல்லப்பட்ட ஸ்டீபானின் சகோதரிதான் ஓல்கா. பிறகு, எங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, வேலண்டீனா என பெயர் வைத்தோம்.
சைபீரியாவில் நானும் ஓல்காவும் எங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் அநேக ஆசீர்வாதங்களை அனுபவித்தோம். உதாரணமாக, ஜார்ஜ் என்ற ஒருவரை சந்தித்தோம். அவர் பாப்டிஸ்ட் குழுவினருக்கு தலைவராக இருந்தார். அவரை நாங்கள் தொடர்ந்து சந்தித்து, எங்களிடமிருந்த காவற்கோபுரம் பத்திரிகைகளிலிருந்து அவருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம். விரைவிலேயே, யெகோவாவின் ஊழியர்கள் பைபிளிலிருந்து சொல்வதுதான் சத்தியம் என்பதை அவர் உணர்ந்தார், அதை போற்றினார். அதன்பிறகு, அவருடைய அநேக பாப்டிஸ்ட் நண்பர்களுக்கும் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தோம். ஜார்ஜும் அவருடைய அநேக நண்பர்களும் முழுக்காட்டுதல் பெற்று எங்கள் ஆவிக்குரிய சகோதரர்களாக ஆனபோது நாங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டோம் தெரியுமா!
1956-ல் நான் பிரயாணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அதனால் ஒவ்வொரு வாரமும் எங்கள் பகுதியிலிருந்த ஒரு சபையை நான் விஜயம் செய்ய வேண்டியிருந்தது. நான் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, சபைகளை சந்திக்க மாலை மோட்டார் பைக்கில் கிளம்பிச் செல்வேன். அடுத்தநாள் அதிகாலையே திரும்பி வந்து வேலைக்கு செல்வேன். இந்த பிரயாண வேலையில் எனக்கு உதவ மைகைலோ செர்டின்ஸ்கீ என்ற சகோதரர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் 1958-ல் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் புதன்கிழமை இறந்தபோதிலும், அவருடைய சவ அடக்கத்தில் முடிந்தளவுக்கு எல்லா சாட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அடக்கத்தை ஞாயிற்றுக்கிழமை வரை ஒத்திவைத்தோம்.
ஒரு பெரிய கூட்டமாக நாங்கள் கல்லறையை நோக்கி நடந்து செல்வதை பார்த்த அரசாங்க காவலர்கள் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். பைபிள் சார்ந்த நம்பிக்கையான உயிர்த்தெழுதலைப் பற்றிய பேச்சை கொடுத்தால் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருந்தது. ஆனால் மைகைலோ-வைப் பற்றியும் அவருடைய அருமையான எதிர்கால நம்பிக்கையைப் பற்றியும் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. பேச்சில் நான் பைபிளைப் பயன்படுத்தி பேசியபோதிலும், காவலர்கள் என்னை கைது செய்யவில்லை. என்னைக் கைது செய்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால், என்னை விசாரணைக்கு என்று “விருந்தினனாக” அடிக்கடி அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர்; அங்கு, அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்திருப்பதால் நன்றாகவே என்னை அறிந்திருந்தனர்.
காட்டிக்கொடுக்கப்பட்டோம்
1959-ல் பிரசங்க வேலையை முன்நின்று செய்துவந்த 12 சாட்சிகளை அரசாங்க காவலர்கள் கைது செய்தனர். நான் உட்பட அநேகர் விசாரணைக்கு அழைக்கப்பட்டோம். நான் விசாரிக்கப்படுவதற்கான தருணம் வந்தபோது, திகைத்துப்போனேன். அங்கிருந்த அதிகாரிகள் பிரசங்க வேலையைப்
பற்றி நாங்கள் இரகசியமாக காத்து வந்திருந்த விஷயங்களை அத்துப்படியாக சொன்னதைக் கேட்டு கதிகலங்கிப் போனேன். அவர்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? சந்தேகத்திற்கிடமின்றி யாரோ ஒரு ஒற்றன் எங்கள் மத்தியில் இருந்திருக்கிறான். அவன் அரசாங்கத்திற்காக வேலை செய்து எங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களை அவர்களுக்கு அறிவித்திருக்கிறான்.கைதுசெய்யப்பட்ட 12 சகோதரர்களும் அருகருகே இருந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகள் கேட்கும்போது தங்கள் வாயிலிருந்து ஒரு உண்மையையும் வெளியிடக்கூடாது என்று உறுதியாக இருந்தனர். அவ்வாறு செய்தால், வழக்கு விசாரணையின்போது சகோதரர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல, அந்த ஒற்றன் கட்டாயம் நேரடியாக வந்தாக வேண்டும். நான் கைது செய்யப்படாதபோதிலும், என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நீதிமன்றத்திற்கு போனேன். நீதிபதி கேள்வி கேட்டார், ஆனால் 12 பேரும் பதிலே சொல்லவில்லை. பிறகுதான் விஷயம் வெளியே வந்தது. எனக்கு பல ஆண்டுகள் நன்கு பழக்கமான கோன்ஸ்டேன்டைன் போலிஸ்சுக் என்ற சாட்சி 12 பேருக்கும் எதிராக சாட்சி சொன்னான். அவர்களில் சில சாட்சிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டபின் விசாரணை முடிந்தது. நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள தெருவில் நடந்து செல்லும்போது போலிஸ்சுக் மீது தெரியாமல் மோதிக்கொண்டேன்.
“எங்களை ஏன் காட்டிக்கொடுக்கிறாய்?” என நான் கேட்க.
“இப்போது எனக்கு அதில் நம்பிக்கையில்லை” என்றான் அவன்.
“எதில் உனக்கு நம்பிக்கையில்லை?” என கேட்டேன்.
“என்னால் இனிமேலும் பைபிளை நம்ப முடியவில்லை.” என்றான் அவன்.
போலிஸ்சுக் நினைத்திருந்தால் என்னையும் காட்டிக்கொடுத்திருக்கலாம், ஆனால் விசாரணையின்போது அவன் என் பெயரை குறிப்பிடவில்லை. எனவே, அவன் ஏன் என்னை காட்டிக்கொடுக்கவில்லை என கேட்டேன்.
அதற்கு அவன் சொன்ன பதில், “உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. உன் மனைவியின் சகோதரன் ஸ்டீபான் இறந்ததற்காக இன்றும் வருத்தப்படுகிறேன், என் மனசாட்சி குத்துகிறது. அவன் கொல்லப்பட்ட அன்று இரவு எல்லையை கடந்துசெல்ல அனுப்பியதற்கு நான்தான் பொறுப்பாளி. நான் உண்மையாகவே அதற்காக வருத்தப்படுகிறேன்.”
அவனுடைய வார்த்தைகள் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனுடைய மனசாட்சி எவ்வளவு மோசமாகிவிட்டிருந்தது! ஸ்டீபான் மரித்ததற்கு வருத்தப்படுகிறான், அதேசமயத்தில் யெகோவாவின் ஊழியர்களை காட்டிக்கொடுக்கிறான். அதன் பின் போலிஸ்சுக்கை நான் பார்க்கவே இல்லை. சில மாதங்கள் கழித்து அவன் இறந்துவிட்டான். அநேக வருடங்கள் நம்பி நன்கு பழகிய ஒருவன் நம் சகோதரர்களை காட்டிக்கொடுத்த செயல் என் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அனுபவம் எனக்கு ஓர் அருமையான பாடத்தை கற்றுத்தந்தது. அது: போலிஸ்சுக் விசுவாசமற்றவனாக மாறியதற்கான காரணம் அவன் தொடர்ந்து பைபிளை வாசிக்கவும் இல்லை, நம்பவும் இல்லை.
நிச்சயமாக நாம் இந்த பாடத்தை நம் மனதில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்: நாம் யெகோவா தேவனுக்கு உத்தமத்தை காத்துக்கொள்ள வேண்டுமென்றால், பரிசுத்த வேதாகமத்தை தொடர்ந்து படிக்க வேண்டும். “இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என பைபிள் சொல்கிறது. அதோடு அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி சொன்னார். ஏன்? “ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு.”—நீதிமொழிகள் 4:23; எபிரெயர் 3:12.
மீண்டும் உக்ரைனில்
1996-ல், சைபீரியாவுக்கு நாங்கள் நாடுகடத்தப்பட்ட காலம் முடிவடைந்தபோது, ஓல்காவும் நானும் மீண்டும் உக்ரைனுக்கு திரும்பினோம். விவ்-க்கு சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோகல் என்ற நகரத்தில் குடிபுகுந்தோம். சோகலிலும் அதற்கு அருகிலிருந்த செர்வோனோக்ராட் மற்றும் சோன்ஸ்நிவ்கா பகுதிகளிலும் மொத்தமே 34 சாட்சிகள்தான் இருந்ததால் நாங்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியிருந்தது. இந்த பகுதியில் இன்று, 11 சபைகள் உள்ளன!
1993-ல் ஓல்கா மரணமடைந்தாள், அவள் கடைசிவரை உத்தமத்தோடு வாழ்ந்தாள். மூன்று வருடங்கள் கழித்து நான் லிடியாவை திருமணம் செய்துகொண்டேன். அதுமுதல் அவள் எனக்கு பெரும் ஆதரவாக இருந்துவருகிறாள். அத்துடன், என் மகள் வேலண்டீனாவும் அவள் குடும்பத்தினரும் வைராக்கியமுள்ள யெகோவாவின் ஊழியர்களாக இருந்துவருகின்றனர். இது என்னை இன்னும் உற்சாகப்படுத்துகிறது. இன்றுவரை, உண்மையுள்ள கடவுளுக்கு உத்தமத்தை காத்துவருவதே எனக்கு அபரிமிதமான சந்தோஷத்தை அளிக்கிறது.—2 சாமுவேல் 22:26.
இந்த கட்டுரையை வெளியிட தயாரித்துக்கொண்டிருந்தபோது, பிப்ரவரி 18, 2000-ம் அன்று, அலெக்ஸி டேவிட்ஜக் யெகோவாவுக்கு கடைசிவரை உத்தமத்தை காத்து மரணமடைந்தார்.
[பக்கம் -ன் படங்கள்22]
1952-ம் ஆண்டு கிழக்கு சைபீரியாவில் குடியிருப்பில் கூடிவந்த எங்கள் சபை
[பக்கம் -ன் படங்கள்25]
1953-ல் எங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளி
[பக்கம் -ன் படங்கள்25]
1958-ல் மைகைலோ செர்டின்ஸ்கீ-ன் சவ அடக்க ஊர்வலம்
[பக்கம் -ன் படங்கள்26]
என் மனைவி லிடியாவுடன் நான்