Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நீங்க சாகப்போறீங்க!”

“நீங்க சாகப்போறீங்க!”

“நீங்க சாகப்போறீங்க!”

லீயன் கோர்லின்ஸ்கி சொன்னபடி

ஸ்பெய்னில், இரத்தமில்லாத சிறந்த சிகிச்சைக்கான தேடல்

உலகத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் எங்கு போக விரும்புவீர்கள்? என்னால் இதற்கு சுலபமாகவே பதிலளிக்க முடிந்தது. நான் ஒரு பள்ளியில் ஸ்பானிய மொழி கற்றுக்கொடுக்கிறேன், அத்துடன் என் கணவர் ஜே, மகன் ஜோயெலுடன், அ.ஐ.மா., வர்ஜீனியாவிலுள்ள கேலக்ஸ் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஸ்பானிய மொழி சபையுடன் கூட்டுறவு கொள்கிறேன். அதனாலோ என்னவோ, ஸ்பெய்னிற்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் என்னை பாடாய்ப்படுத்தியது. அந்த சமயம் பார்த்து என் பெற்றோர், அங்கு என்னை கூட்டிச்செல்வதாக சொன்னார்கள். அப்போது நான் எவ்வளவு சந்தோஷமடைந்திருப்பேன் என சற்று கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் என் கணவன், மகன் இருவராலும் என்னுடன் வர இயலாதபோதிலும், என் நெடுநாள் ஆசை நிறைவேறப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டேன். நானும் என் பெற்றோரும், மாட்ரிட்டிற்கு விமானத்தில் பறந்தோம். அங்கு ஏப்ரல் 21 அன்று இறங்கியவுடன், வட ஸ்பெய்னிலுள்ள, நவாரா என்ற பகுதியிலிருக்கும் ஒரு சிறு பட்டணமான எஸ்டெல்லாவிற்கு காரில் செல்ல தீர்மானித்தோம். ஒரு காரை வாடகைக்கு எடுத்தோம். வண்டி புறப்பட்டதும் பின் சீட்டில் வசதியாக உட்கார்ந்தபடி அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

அதற்கு பிறகு என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது, எனக்கு நினைவிலிருக்கும் அடுத்த சம்பவம், நான் ஏதோ வயலில் படுத்திருந்தேன், சூரிய வெளிச்சம் என் கண்களை ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டிருந்தது. ‘நான் எங்கே இருக்கேன்? இங்கு எப்படி வந்தேன்? நான் காண்பது கனவா?’ இந்தக் கேள்விக்கணைகள் என் மூளையை தாக்கிக்கொண்டிருந்த சமயம், அந்த உண்மை விளங்கியது. இது கனவல்ல, நிஜம்தான், ஏதோ தவறு நடந்திருக்கிறது என உணர்ந்தேன். எனது இடதுகை சட்டைத்துணி கந்தல் கந்தலாக கிழிந்துவிட்டிருந்தது. என் கை, கால்களை என்னால் அசைக்கக்கூட முடியவில்லை. எங்கள் கார் ஒரு வேலியில் மோதி, 20 மீட்டர் உயரத்திலிருந்த ரோட்டிலிருந்து கீழே உருண்டோடியபோது நான் அதிலிருந்து தூக்கியெறியப்பட்டேன் என பின்பு தெரிந்துகொண்டேன். சந்தோஷகரமாக, அந்த விபத்தைப் பற்றிய எந்த நினைவும் எனக்கோ என் பெற்றோருக்கோ இல்லை.

உதவிக்காக என்னால் முடிந்தளவுக்கு கத்தினேன், அப்போது ஒரு டிரக் டிரைவர் என்னிடம் ஓடிவந்தார். பிறகு கார் இருந்த இடத்திற்கு அவர் கீழே இறங்கிப்போனார், அங்கு என் பெற்றோர் சிக்கிக்கொண்டிருந்தனர். “ஆம்புலன்ஸ சீக்கிரமா வரச்சொல்லு, கார்ல இருக்கறவங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு!” என அந்த மனிதர் தன் நண்பனை நோக்கி கத்தினார். நான் செயலற்றுகிடந்திருந்த இடத்திற்கு அவர் மீண்டும் வந்தார், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் என் காலை நேராக்க முயற்சித்தார். ஆனால் நானோ வலி தாங்க முடியாமல் கத்தினேன், அப்போதுதான் நான் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம், லோக்ரோனோவிலுள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். அப்பகுதியைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு, நடந்த சம்பவத்தைக் குறித்து போலீஸ் தகவல் கொடுத்தது. கொஞ்ச நேரத்தில், எஸ்டெல்லா மற்றும் லோக்ரோனோ சபைகளைச் சேர்ந்த அநேகர் என் அருகில் இருந்தனர்; அவர்களுடன் அந்த பகுதிக்குரிய மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்களும் அங்கு இருந்தனர். இதுவரை நான் சந்தித்திராத இந்த உடன் கிறிஸ்தவர்கள் என்னிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்கள் தெரியுமா! நான் மருத்துவமனையில் கஷ்டத்தை அனுபவிக்கும்போது எனக்கு உதவவும் பராமரிக்கவும் என் தேவைகளை கவனித்துக்கொள்ளவும் 24 மணிநேரமும் என் அருகிலேயே இருந்தனர். அவர்கள் என் பெற்றோரையும் நன்கு பார்த்துக்கொண்டனர், அவர்களுடைய உடல் நலம் ஓரளவுக்கு தேறியதால் விபத்து நடந்து ஒரே வாரத்தில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆயினர்.

புதன்கிழமையன்று, அதிகாலை சுமார் 1 மணியளவில், உடைந்திருந்த என் இடுப்பை அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் வந்தனர். அப்போது நான் இரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என டாக்டர்களிடம் சொன்னேன். a அப்படியானால் நான் செத்துவிடுவேன் என அந்த டாக்டர் சொன்னார், இருப்பினும் நான் உறுதியாக இருந்ததால் அவர் என் விருப்பத்தை விருப்பமின்றி ஏற்றுக்கொண்டார். எப்படியோ, நான் அந்த அறுவை சிகிச்சையிலிருந்து உயிர் பிழைத்தேன். ஆனால் என் காயங்கள் சுத்தம் செய்யப்படவோ, பேன்டேஜ்கள் பின்பு மாற்றப்படவோ இல்லை என்பதை கவனித்தேன்.

வெள்ளிக்கிழமைக்குள்ளாக என் இரத்த அளவு 4.7 ஆக குறைந்துவிட்டிருந்தது, அத்துடன் நான் கொஞ்சம் கொஞ்சமாக என் சக்தியையும் இழந்துகொண்டிருந்தேன். இரும்பு சத்து மற்றும் இரத்த அளவை அதிகரிக்கும் பொருட்களுடன்கூட, இரத்தத்தில் சிவப்பு அணு உற்பத்தியைத் தூண்டுவதற்கு உதவும் எரித்ரோபொய்டீன் (EPO) ஊசியை, மாற்று சிகிச்சையாக எனக்கு கொடுக்க அந்த டாக்டர் ஒத்துக்கொண்டார். b அதற்குள் ஜேவும் ஜோயெலும் அங்கு வந்துவிட்டனர். என் கணவனையும் மகனையும் பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷம்!

அதிகாலை சுமார் 1:30 மணியளவில் ஒரு டாக்டர் வந்தார், ஒருவேளை என் நிலைமை மோசமடைந்தால், இரத்தத்தை ஏற்றுவதற்கு நீதிமன்ற ஆணையை ஏற்கெனவே மருத்துவமனை வாங்கிவிட்டதாக அவர் ஜேயிடம் சொன்னார். எந்த சூழ்நிலையிலும் இரத்தத்தை ஏற்ற வேண்டாம் என்பதே என்னுடைய விருப்பம் என்பதை ஜே டாக்டரிடம் சொன்னார். “அப்படீனா அவங்க செத்துடுவாங்க!” என டாக்டர் பதிலளித்தார்.

பிறகு, என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு இடத்திற்கு என்னை மாற்றுவதைக் குறித்து ஜே, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுவிடம் பேசினார். ஆனால் இந்த மருத்துவமனையிலிருந்த எல்லோரும் மோசமானவர்கள், நம் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இது அர்த்தமாகாது. உதாரணமாக, ஒரு டாக்டர் என்னிடம் வந்து, நான் மதிப்புடன் நடத்தப்படவும் நன்கு சிகிச்சை அளிக்கப்படவும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் மற்ற டாக்டர்கள் விரைவிலேயே அதிக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். “உங்கள் குடும்பத்தையெல்லாம் தனியே விட்டுவிட்டு நீங்கள் சாகவேண்டுமா?” என அவர்கள் கேட்டனர். இரத்தமின்றி வேறு எந்த சிகிச்சையாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயார் என உறுதியாக கூறினேன். ஆனால் டாக்டர்களோ எனக்கு உதவ மனதிறங்கவில்லை. “நீங்க சாகப்போறீங்க!” என்றார் ஒருவர் மொட்டையாக.

எனக்கு இரத்தமின்றி சிகிச்சை அளிப்பதாக ஒத்துக்கொண்ட பார்சிலோனாவிலுள்ள ஒரு மருத்துவமனையை, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு கண்டுபிடித்தது. இவ்விரண்டு மருத்துவமனைகளுக்குமிடையே எவ்வளவு வித்தியாசம்! பார்சிலோனா மருத்துவமனையில் இருந்தவர்கள் என்னை அன்பாக கவனித்துக்கொண்டனர். அங்கிருந்த இரண்டு நர்ஸ்கள் என்னை மெல்ல கழுவிவிட்டு, நான் வசதியாக இருப்பதற்கு அநேக உதவிகளை செய்தனர். என் பேன்டேஜை மாற்றும்போது, அவை பச்சை நிறத்திற்கு மாறியிருந்ததையும், இரத்தம் காய்ந்துபோய் அசுத்தமாக இருந்ததையும் ஒரு நர்ஸ் கவனித்தார். தன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்னை இவ்வாறு மோசமாக கவனித்துக்கொண்டதற்காக தான் வெட்கப்படுவதாக அவர் சொன்னார்.

லோரோனோ மருத்துவமனையில் அப்போதே துவங்கியிருக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை இப்போது பெற்றேன். அதன் விளைவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை துவங்கிய சில நாட்களிலேயே என் முக்கியமான உடல் உறுப்புகள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டன. என்னுடைய இரத்தத்தின் சிவப்பு அணு அளவு 7.3 ஆக உயர்ந்தது. நான் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்குள், அது 10.7 ஆக உயர்ந்துவிட்டிருந்தது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக சென்றிருந்தபோது அது 11.9-ஆக அதிகரித்திருந்தது.

நோயாளிகள் தங்கள் கருத்துகளை ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, அந்த நோயாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் முயற்சிகளுக்கு நான் நிச்சயம் கடன்பட்டிருக்கிறேன். எப்போது மருத்துவமனை அங்கத்தினர்கள் தங்கள் நோயாளிகளின் நம்பிக்கையை மதித்து செயல்படுகிறார்களோ, அப்போதுதான் அவர்கள் முழு மனிதனையும் கவனித்துகொள்கின்றனர்; அதன்மூலம் இருப்பதிலேயே மிகச் சிறந்த சிகிச்சையை அளிக்கின்றனர்.

[அடிக்குறிப்புகள்]

a சில பைபிள் சார்ந்த காரணங்களுக்காக, யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்ற மறுக்கின்றனர்.—காண்க, ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 7:26, 27; 17:10-14; உபாகமம் 12:23-25; 15:23; அப்போஸ்தலர் 15:20, 28, 29; 21:25.

b ஒரு கிறிஸ்தவர் EPO-வை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்பது அவருடைய சொந்த தீர்மானத்திற்குரியது.காவற்கோபுரம், அக்டோபர் 1, 1994, பக்கம் 31-ஐ பார்க்கவும்.

[பக்கம் 12-ன் படம்]

நான் என் கணவர் மற்றும் மகனுடன்

[பக்கம் 13-ன் படம்]

மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுவின் இரு அங்கத்தினர்கள்