கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
தேதி: டிசம்பர் 26, 1993. இடம்: அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவிற்கு அருகில். சம்பவம்: ஆறு வயது சிறுவன் அகஸ்டோ திறந்த வெளியில் காலார நடந்துகொண்டிருந்தான். தரையில் பளபளவென்று மின்னிய ஒரு பொருள் அவன் கண்களை உறுத்தியது. ஆர்வம் மேலிட அதை எடுப்பதற்காக சென்றான். அடுத்த அடியெடுத்து வைத்தபோது ஒரு கண்ணி வெடி வெடித்தது.
அந்தக் கொடிய விபத்தில் அகஸ்டோ தன் கண்ணையும் வலது காலையும் பறிகொடுத்தான். இப்போது அவனுக்கு 12 வயது, ஆனால் வீல்சேர்தான் வாழ்க்கை.
ஆட்களுக்கு எதிரான ஒரு கண்ணி வெடியே அகஸ்டோவை முடமாக்கியது. இந்த வகை வெடிகள், டாங்கிகளையோ இராணுவ வாகனங்களையோ அல்ல ஆட்களை தாக்குவதற்காகவே தயாரிக்கப்படுகின்றன. இன்றுவரை ஏறக்குறைய 50 தேசங்கள், இவ்வாறு ஆட்களுக்கு எதிரான சுமார் 350 வகை கண்ணி வெடிகளை தயாரித்துள்ளன என்று கூறப்படுகிறது. இவை அநேகமாக ஆட்களை முடமாக்குவதற்காகவே தயாரிக்கப்படுகின்றன, கொல்லுவது இவற்றின் நோக்கமல்ல. ஏன்? ஏனென்றால், காயம்பட்ட வீரர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் ஆதலால் இராணுவ வேலைகள் மந்தமாகும். இதுதானே எதிரிக்கும் வேண்டும். அதுமட்டுமல்ல, காயம்பட்ட வீரனின் ஓலங்கள் அவனுடைய சகாக்களின் மனங்களில் பீதியை கிளப்பிவிடும். ஆகவே, ஒருவர் காயப்பட்டு, அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தாலும்கூட அவர் பிழைத்தால்தான் கண்ணி வெடிகள் அதிக பிரயோஜனமுள்ளவை என்று கருதப்படுகின்றன.
ஆனால், கண்ணி வெடிகளால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் அல்ல பொதுமக்களே என்று முந்தைய கட்டுரையில் வாசித்தோம் அல்லவா? இதுவும்கூட தற்செயலாக நிகழும் ஒன்றல்ல. ஏனென்றால், ‘குடியிருப்பு பகுதியிலிருந்து ஆட்களை வெளியேற்ற, உணவு உற்பத்தியை அழித்துப்போட, அதிகமான ஆட்களை அகதிகளாக்க அல்லது வெறுமனே பீதியைக் கிளப்ப சில கண்ணி வெடிகளை வேண்டுமென்றே பொதுமக்கள் இருக்கும் இடத்தில் வைக்கின்றனர்’ என்று கண்ணி வெடிகள்—ஆபத்தான ஓர் சொத்து என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.
உதாரணமாக, கம்போடியாவில் நடந்த ஒரு யுத்தத்தில் எதிரியின் கிராமங்களைச் சுற்றி கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. அதற்கு பிறகு அந்தக் கிராமங்களை பீரங்கிகளால் தாக்கினர். பீரங்கி குண்டுகளுக்கு தப்பியோட நினைத்த மக்கள் கிராமத்தைச் சுற்றி புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளுக்கு பலியானார்கள். இதற்கிடையில், பேச்சு வார்த்தை நடத்த அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக கமெர் ரூஷை சேர்ந்தவர்கள் நெல் வயல்களில் கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயல்களில் கால் வைக்கவே பயந்து நடுங்கியதால் விவசாயம் ஸ்தம்பித்தது.
1988-ல் சோமாலியாவில் நடந்தது இதைவிட கொடுமையானது. ஹர்கீஸா நகரில் குண்டு மழை பொழிந்தபோது தப்பித்தோம் பிழைத்தோம் என்று மக்கள் ஓடினர். அதற்கு பின்னர், கைவிடப்பட்ட அவர்களுடைய வீடுகளில் வீரர்கள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்தனர். யுத்தம் முடிந்த பிறகு மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர், ஆனால்
அந்தோ பரிதாபம்! மறைந்திருந்த வெடிகளால் அவர்கள் முடமானார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.கண்ணி வெடிகளால் உடலுக்கும் உயிருக்கும் மாத்திரம் சேதம் ஏற்படுவதில்லை. கொடூரமான இந்தக் கருவிகளின் மற்ற பாதிப்புகளையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
பொருளாதார, சமூக பாதிப்புகள்
“ஒரே ஒரு கண்ணி வெடி இருந்தால் அல்லது இருக்கிறது என்ற பயம் மக்கள் மனதில் இருந்தாலே போதும் அந்த நிலத்தையே தரிசாக போட்டுவிடுவார்கள், அதனால் ஒரு முழு கிராமமே பட்டினி கிடக்க நேரிடும். இதன் விளைவாக ஒரு நாடு மறுபடியும் வளர்ந்து, முன்னேற்ற பாதையில் செல்வது தடைப்படும்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் கோஃபி அன்னான் கூறினார். ஆகவே, ஆப்கானிஸ்தானிலும் கம்போடியாவிலும் உள்ள விவசாயிகள் பயப்படாமல் நிலத்தில் இறங்கி வேலை செய்தால் இன்னும் சுமார் 35 சதவிகித நிலத்தை உபயோகிக்க முடியும் என்று கூறுப்படுகிறது. சிலரோ தங்கள் உயிரைப் பணயம் வைக்க துணிகின்றனர். “கண்ணி வெடிகள் என்றாலே எனக்கு குலை நடுங்கும். ஆனால் நான் வெளியே சென்று வேலை செய்யவில்லை என்றால் நாங்கள் செத்துப்போக வேண்டியதுதான்” என்று கம்போடியாவிலுள்ள ஒரு விவசாயி கூறுகிறார்.
கண்ணி வெடிகளில் சிக்கி தப்பியவர்கள் பொருளாதார ரீதியிலும் படுமோசமாக பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, வளரும் நாடு ஒன்றில் ஒரு குழந்தை பத்து வயதில் தன் காலை இழந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் வாழ்நாள் முழுவதும் அதற்கு சுமார் 15 செயற்கை கால்கள் தேவைப்படும். அவை ஒவ்வொன்றும் சராசரியாக ரூ. 5,375 ஆகும். அது என்ன பெரிய செலவா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அங்கோலாவின் குடிமக்களில் பெரும்பாலானோர் மூன்று மாதம் வேலை செய்தால்கூட ரூ. 5,375 சம்பாதிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
கை, காலை இழந்தவர்கள் சமுதாயத்தில் எதிர்ப்படும் வேதனைதரும் பிரச்சினைகளையும் சற்று சிந்தித்து பாருங்கள். உதாரணமாக, இவர்களோடு தோழமை வைத்துக்கொண்டால் “துரதிர்ஷ்டம்” வரும் என்று ஆசியாவிலுள்ள ஒரு நாட்டினர் நினைப்பதால் அவர்களை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். இப்படிப்பட்ட ஓர் ஆளுக்கு கல்யாணம் என்பது எட்டாக் கனிதான். “கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் கனவுகூட காண்பது கிடையாது. வேலை செய்ய முடிந்த ஒருவனைத்தானே ஒரு பெண் மணந்துகொள்வாள்?” கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட பிறகு தன் காலை இழந்த அங்கோலா நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபனின் புலம்பல்தான் இது.
ஆகவே, பாதிக்கப்பட்ட அநேகர் தாங்கள் லாயக்கற்றவர்கள் என்று உணருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை அல்லவா? “என்னால் என் குடும்பத்திற்கு சம்பாதித்துப்போட முடியவில்லை. அதை நினைத்தாலே எனக்கு அவமானமாக இருக்கிறது” என்று கம்போடியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் கூறுகிறான். சில சமயங்களில், கை அல்லது காலை இழந்ததைவிட இப்படிப்பட்ட உணர்ச்சிகளே அதிக வேதனை ஏற்படுத்தலாம். மொஸாம்பிக்கில் வாழும் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட ஆர்தர் கூறுவதாவது: “உணர்ச்சிப்பூர்வமாகத்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். யாராவது என்னை திரும்பி பார்த்தாலே போதும் ஒரே எரிச்சலாக இருக்கும். யாரும் என்னை மதிப்பதே இல்லை என்றுதான் நினைத்தேன். இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவே முடியாது என்றும் உணர்ந்தேன்.” a
கண்ணி வெடிகளை நீக்கிவிடலாமே!
சமீப வருடங்களில், கண்ணி வெடிகள் உபயோகிப்பதை தேசங்கள் தடைசெய்ய வேண்டும் என்ற கடுமையான கோஷங்கள் எழுந்துள்ளன. அதுபோதாதென்று, ஏற்கெனவே புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை நீக்கும் ஆபத்தான வேலையையும் சில நாடுகள் தொடங்கியுள்ளன. ஆனால் இதில் பல தடைகள் உள்ளன. அதில் ஒன்று, நேரம். கண்ணி வெடிகளை நீக்குவதற்கு மிகவும் அதிக நேரம் எடுக்கும். ஒரு கண்ணி வெடியை புதைப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அதை நீக்குவதற்கு நூறு மடங்கு நேரம் எடுக்கிறது என்று இவற்றை நீக்கும் வல்லுனர்கள் கணிக்கின்றனர். இதற்காகும் செலவு, மற்றொரு தடையாகும். ஒரு கண்ணி வெடியின் விலை ரூ. 129 முதல் ரூ. 645 வரை ஆகும், ஆனால் ஒன்றை நீக்குவதற்கோ ரூ. 43,000 செலவாகலாம்!
ஆகவே, கண்ணி வெடிகள் அனைத்தையும் நீக்குவது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, கம்போடியாவிலுள்ள எல்லா கண்ணி வெடிகளையும் நீக்க வேண்டுமென்றால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இன்னும் பல வருடங்களுக்கு தங்கள் சம்பளம் முழுவதையும் இந்த வேலைக்காக அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு தேவையான பணம் கிடைத்தாலும்கூட அந்த நாட்டிலுள்ள எல்லா கண்ணி வெடிகளையும் நீக்குவதற்கு நூறு வருடங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்டின் நிலைமை இப்படியிருக்க, உலக முழுவதிலும் உள்ள நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தை உபயோகித்து பூமி முழுவதிலும் உள்ள கண்ணி வெடிகளை நீக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? ரூ. 1,41,900 கோடி, அதுவும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்று கணிக்கின்றனர்!
கண்ணி வெடிகளை நீக்குவதற்கு அதிநவீன முறைகளை கண்டுபிடித்து வருகிறார்கள் என்பதும் உண்மையே. உதாரணமாக, மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட கண்ணி வெடிகளை ‘மோப்பம் பிடிக்கும்’ திறமையுள்ள பழ ஈக்களை உபயோகிப்பது, ரேடியோ அலைகளால் இயக்கப்படும் மிகப் பெரிய வாகனங்களை உபயோகிப்பது போன்றவை அதில் அடங்கும். இந்த வாகனங்கள், ஒரு மணிநேரத்தில் ஐந்து ஏக்கர் நிலத்திலுள்ள கண்ணி வெடிகளை நீக்கிவிடுகின்றன. ஆனால் இந்த முறைகளை பெருமளவில் உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு கொஞ்ச காலம் செல்லும். அப்படியே அவை உபயோகத்திற்கு வந்தாலும் பணக்கார நாடுகளால் மட்டுமே இவற்றை உபயோகிக்க முடியும்.
ஆகவே, பெரும்பாலான இடங்களில் இன்னும் பழைய முறையிலேயே கண்ணி வெடிகளை நீக்குகின்றனர். அதாவது ஒரு ஆள் கையில் ஒரு குச்சியை பிடித்துக்கொண்டு, முன்னால் இருக்கும் நிலத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டே தரையில் மெதுவாக தவழ்ந்து செல்வார். அவ்வாறு ஒவ்வொரு சென்டிமீட்டராக அவர் ஊர்ந்து செல்கையில் ஒரு நாளைக்கு 20 முதல் 50 சதுர மீட்டர் நிலப்பரப்பிலுள்ள கண்ணி வெடிகளை நீக்குவார். இது ஆபத்தானது ஆயிற்றே! உண்மைதான். 5,000 கண்ணி வெடிகள் நீக்கப்படுகையில் அவற்றால் ஒருவர் மரிக்கிறார், இருவர் காயமடைகின்றனர்.
கண்ணி வெடிகளை எதிர்க்க கைக்கோர்த்தல்
டிசம்பர் 1997-ல், ஆட்களுக்கு எதிரான கண்ணி வெடிகளை உபயோகித்தல், சேமித்து வைத்தல், தயாரித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடைசெய்து அவற்றை அழிப்பது சம்பந்தமான ஓர் ஒப்பந்தத்தில் அநேக நாடுகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர். இது ஒட்டாவா ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. “சர்வதேச ஆயுத குறைப்பிலோ, சர்வதேச மனிதாபிமான சட்டத்திலோ இந்தச் சாதனைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்று கனடா நாட்டு பிரதம மந்திரி ஷான் கிரேட்யன் கூறினார். b ஆனாலும், இன்னும் சுமார் 60 நாடுகள் இதில் கையொப்பமிடவில்லை. அந்த நாடுகளில், கண்ணி வெடி தயாரிப்பில் உலகிலேயே முதன்மையாக விளங்கும் சில நாடுகளும் உட்பட்டுள்ளன.
கண்ணி வெடிகள் என்ற சாபத்தை நீக்குவதில் ஒட்டாவா ஒப்பந்தம் வெற்றி பெறுமா? ஓரளவு வெற்றி பெறலாம். ஆனால் அநேகருக்கு இதில் நம்பிக்கையில்லை. “உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒட்டாவா ஒப்பந்தத்தைப் பின்பற்றினாலும்கூட கண்ணி வெடிகள் பற்றிய பயத்தை இந்தப் பூமியிலிருந்து முழுமையாக துடைத்தழிக்க முடியாது” என
பிரான்ஸில் உள்ள ஊனமுற்றோருக்கான சர்வதேச அமைப்பின் இணை இயக்குநர் க்லாட் சிமோனோ கூறுகிறார். ஏன்? ஏனென்றால், “இன்னமும் கோடிக்கணக்கான கண்ணி வெடிகள் பூமியில் புதைந்து கிடக்கின்றன. பலியாட்களுக்காக அவை பொறுமையோடு காத்திருக்கின்றன” என்கிறார் சிமோனோ.இராணுவ சரித்திராசிரியர் ஜான் கீகன் மற்றொரு விஷயத்தைப் பற்றியும் கூறுகிறார். யுத்தம் என்பது ‘மனித இதயத்தின் ஆழங்களில் ஆரம்பமாகிறது. . . . அங்கே தற்பெருமை குடிகொண்டிருக்கிறது, அங்கே உணர்ச்சிகளே ஆளுகை செய்கின்றன’ என்று அவர் கூறியது எவ்வளவு உண்மை. மனித இதயத்தில் ஆழமாக வேர்விட்டு கிடக்கும் வெறுப்பு, பேராசை போன்ற குணங்களை ஒப்பந்தங்களால் நீக்கிப்போட முடியாது. அப்படியென்றால், கண்ணி வெடிகள் என்ற வலையில் விழுந்த மனிதர்கள் எப்போதுமே கஷ்டப்பட வேண்டியதுதானா?
[அடிக்குறிப்புகள்]
a கை அல்லது காலை இழந்தவர்கள் எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு ஜூன் 8, 1999, தேதியிட்ட விழித்தெழு! இதழில் பக்கங்கள் 3-10-ல் வெளியான “ஊனமுற்றோருக்கு நம்பிக்கை” என்ற முகப்பு கட்டுரைகளைக் காண்க.
b இந்த ஒப்பந்தம் மார்ச் 1, 1999 முதல் செயல்பட தொடங்கியது. ஜனவரி 6, 2000 வரை 137 தேசங்கள் இதில் கையொப்பமிட்டிருந்தன, அதில் 90 இதை அங்கீகரித்தன.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்?
கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களால் ஆபத்து ஏற்பட்டால் அந்தக் கம்பெனிகளே அதற்கு பொறுப்பாளி என்பதே வியாபாரத்தின் ஓர் அடிப்படை நியதியாகும். ஆகவே, கண்ணி வெடிகளை தயாரித்து கொள்ளை லாபம் ஈட்டிய கம்பெனிகளே அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கண்ணி வெடிகள் தகவல் குழுவைச் (Mines Advisory Group) சேர்ந்த லூ மேக்ரத் வாதாடுகிறார். ஆனால், கண்ணி வெடிகளை தயாரித்தவர்களே அவற்றை நீக்குவதிலும் அதிக லாபம் ஈட்டியுள்ளார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. உதாரணமாக, முன்பு ஜெர்மனியில் கண்ணி வெடி தயாரித்துக் கொண்டிருந்த நிறுவனம் ஒன்று, குவைத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் ரூ. 430 கோடி காண்ட்ராக்ட் ஒன்றை தட்டிச்சென்றது. அதேபோல மொஸாம்பிக்கில், முக்கிய சாலைகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற ரூ. 32.25 கோடி காண்ட்ராக்ட் ஒன்று, மூன்று கம்பெனிகளின் கூட்டிணைப்பிற்கு கிடைத்தது. அந்த மூன்றில் இரண்டு கம்பெனிகள் கண்ணி வெடிகள் தயாரித்தவை.
கண்ணி வெடிகளை தயாரிக்கும் கம்பெனிகளே அவற்றை நீக்குவதிலும் பணம் சம்பாதிப்பது ரொம்பவும் மோசமானது என சிலர் கருதுகின்றனர். கண்ணி வெடிகளை தயாரிப்பவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள் அல்லவா என்று அவர்கள் கூறுகின்றனர். எது எப்படியிருந்தாலும், கண்ணி வெடிகளை தயாரிப்பதும் அவற்றை அகற்றுவதும் சக்கைப்போடு போடும் வியாபாரங்களாக தொடர்ந்து வளருகின்றன.
[பக்கம் 5-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலகில் கண்ணி வெடிகள் மிகவும் அதிகமாக உள்ள 9 நாடுகளில், 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படும் சராசரி கண்ணி வெடிகளின் எண்ணிக்கை
போஸ்னியா, ஹெர்சகோவினா 152
கம்போடியா 143
க்ரோயேஷியா 137
எகிப்து 60
ஈராக் 59
ஆப்கானிஸ்தான் 40
அங்கோலா 31
ஈரான் 25
ருவாண்டா 25
[படத்திற்கான நன்றி]
தகவல்: United Nations Department of Humanitarian Affairs, 1996
[பக்கம் 7-ன் படங்கள்]
கம்போடியாவில், தெளிவான போஸ்டர்களும் அடையாளங்களும் கண்ணி வெடிகள் இருப்பதைப் பற்றி எச்சரிக்கின்றன
5,000 கண்ணி வெடிகள் நீக்கப்படுகையில் அவற்றால் ஒருவர் மரிக்கிறார், இருவர் காயமடைகின்றனர்
[படங்களுக்கான நன்றி]
பின்னணி: © ICRC/Paul Grabhorn
© ICRC/Till Mayer
© ICRC/Philippe Dutoit