Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளுமா?

உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளுமா?

உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளுமா?

மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்

“சில நண்பர்களை சந்திப்பதற்காக நானும் என் கணவரும், மெக்ஸிகோவிலுள்ள, பியூப்லா என்ற நகரத்திற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விருந்தளித்தவர்களிடம் சொந்தமாக பசு மாடுகள் இருந்ததால் காலையிலும், மாலையிலும் எங்களுக்கு உணவுடன் அப்போது கறந்த பாலை கொடுத்தனர்.

“முதல் நாள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் அடுத்தநாள் இன்னும் ரொம்ப மோசமாகிவிட்டது. என் வயிறு பயங்கரமாக உப்பிவிட்டது, பார்ப்பதற்கு ஏதோ கர்ப்பிணி போல இருந்தேன். அத்துடன் எங்கள் இருவருக்குமே கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

“எங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளவில்லை என்பது அநேக வருடங்கள் கழித்துதான் தெரியவந்தது.”—பெர்டா.

பெர்டா எதிர்ப்பட்ட இந்த பிரச்சினை ஏதோ அபூர்வமான ஒன்றல்ல. உதாரணமாக உலகிலுள்ள எல்லா பெரியவர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுள் சுமார் 75 சதவீதத்தினர் இந்தப் பிரச்சினையின் அறிகுறிகள் சிலவற்றால் அல்லது எல்லாவற்றாலுமே அவதிப்படலாம் என்று சிலர் அனுமானிக்கின்றனர். a முதலில், லாக்டோஸ் ஒவ்வாமை என்றால் என்ன? இதற்கு காரணம் என்ன? இந்தப் பிரச்சினையை சமாளிப்பதுதான் எப்படி?

‘லாக்டோஸ் ஒவ்வாமை’ என்ற இந்த வார்த்தை, பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸை ஜீரணிக்கும் சக்தி ஒருவருக்கு இல்லாததை குறிக்கிறது. இந்த லாக்டோஸ் இரத்த ஓட்டத்தில் ஒன்றர கலக்க வேண்டுமெனில், க்ளூக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக மாற்றப்பட வேண்டும். இதற்கு லாக்டேஸ் என்ற ஒருவகை என்ஸைம் தேவை. இப்போது பிரச்சினை என்னவென்றால், ஒருவர் குழந்தைப் பருவத்தை தாண்டும்போது உடலில் லாக்டேஸ் உற்பத்தியாகும் அளவு குறைந்துவிடுகிறது. லாக்டேஸில் குறைவு ஏற்படுவதால்தான் அநேகர் லாக்டோஸ் ஒவ்வாமையால் அவதிப்படுகின்றனர்.

பாலிலும், பாலில் செய்யப்படும் மற்ற உணவுப் பொருட்களிலுமுள்ள லாக்டோஸை ஒருவர் தன் ஜீரண சக்திக்கும் அதிகமாக உட்கொள்கிறார் என்றால், அப்போது பெருங்குடலிலுள்ள பாக்டீரியா அதை லாக்டிக் அமிலமாகவும் கார்பன்-டையாக்ஸைடாகவும் மாற்றுகிறது. அதன் பிறகு வெறும் 30 நிமிடம் போதும், குமட்டல், தசை பிடிப்பு, வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிடும். தங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கிறது என்பதை அறியாதவர்கள், தங்கள் வயிற்றில் நடக்கும் யுத்தத்தை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் கூடுதலாக பாலைக் குடிக்கலாம்; இது அவர்களுடைய பிரச்சினையை அதிகமாக்கிவிடுகிறது.

ஒருவருடைய உடல் எந்தளவு லாக்டோஸை ஏற்றுக்கொள்ளும் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. ஒருவரால், எந்த பாதிப்புகளுமின்றி ஒரு கிளாஸ் பாலை குடிக்க முடியும். ஆனால் மற்றவர்களுக்கோ, கொஞ்சம் பாலைக் குடித்தாலும் இப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும். உங்கள் உடல் எந்தளவுக்கு லாக்டோஸை ஏற்றுக்கொள்ளும் என்பதை கண்டுபிடிக்க கொஞ்சம் பாலை குடித்துப் பார்க்கலாம் என சிலர் சொல்கின்றனர். பிறகு ஒவ்வொருமுறை குடிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அளவை அதிகரிக்கவும். லாக்டோஸ் ஒவ்வாமையால் ஏற்படும் அறிகுறிகள் உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம், இருப்பினும் அவை அவ்வளவு ஆபத்தானவை அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது

லாக்டோஸ் ஒவ்வாமையால் ஒருவேளை நீங்கள் அவதிப்பட்டால், எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது பெரும்பாலும் உங்கள் உடல் எந்தளவு அதை ஏற்கும் என்பதை பொருத்திருக்கிறது. பால், ஐஸ் கிரீம், தயிர், வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் லாக்டோஸ் உள்ளது. கேக், சீரியல், சேலடில் சேர்க்கப்படும் மற்ற பொருட்கள் போன்றவற்றிலும் லாக்டோஸ் இருக்கலாம். ஆகவே லாக்டோஸ் ஒவ்வாமையுள்ளவர்கள் இப்படிப்பட்ட பொருட்களில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்ற விவரப்பட்டியலை கவனிக்க வேண்டும்.

கால்சியத்திற்கு பால் மிகவும் முக்கியம். உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லையென்றால் ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற எலும்பு மெலிதல் நோய் வரலாம். அதனால் லாக்டோஸ் ஒவ்வாமையுடையவர்கள் தேவையான கால்சியத்தை மற்ற பொருட்களிலிருந்து பெற வேண்டும். கால்சிய சத்துள்ள ப்ரோக்கலி, முட்டைக்கோஸ், பசலைக்கீரை போன்ற காய்கறிகளையும், பாதாம் பருப்பு, எள் போன்றவற்றையும் சாளை, சால்மன் போன்ற மென்மையான எலும்புடைய மீன்களையும் அவர்கள் சாப்பிடலாம்.

உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பால் அல்லது பால் பொருட்கள் பக்கமே திரும்பக்கூடாது என அர்த்தமாகாது. அதற்கு மாறாக, உங்கள் உடல் எந்தளவுக்கு லாக்டோஸை ஏற்றுக்கொள்ளும் என்பதை முதலில் கண்டறியுங்கள், பிறகு அந்த அளவிற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். கூடுமானவரை, லாக்டோஸ் இருக்கும் உணவை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள். நாள்பட்ட சீஸில் லாக்டோஸின் அளவு குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் வைக்கவும், ஒருவேளை அவற்றால் உங்களுக்கு எந்த பின்விளைவும் ஏற்படாது. தயிரைப் பற்றி என்ன? பாலில் எந்தளவு லாக்டோஸ் இருக்குமோ அதே அளவு இதிலும் இருக்கும். ஆனால், சில லாக்டோஸ் ஒவ்வாமையுடையவர்கள் இதை எளிதாகவே ஜீரணித்துவிட முடியும். எப்படியென்றால், லாக்டேஸை உண்டுபண்ணும் சில நுண்ணுயிரிகள் தயிரில் இருக்கின்றன, இவை லாக்டோஸை ஜீரணிப்பதற்கு பெரும் உதவியாயிருக்கின்றன.

ஆக, நீங்கள் லாக்டோஸ் ஒவ்வாமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், கவலைப்படாதீர்கள். நாம் பார்த்தவண்ணம், இதைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதன் மூலம் இதை எளிதில் சமாளிக்கலாம். பின்வரும் குறிப்புகளை உங்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது:

(1) உங்கள் உடல் எந்தளவுக்கு லாக்டோஸை ஒத்துக்கொள்ளும் என்பதை தெரிந்துகொள்ள, மற்ற உணவுப் பொருட்களுடன், சிறிதளவு பாலையும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களையும் சாப்பிடுங்கள்.

(2) பெரும்பாலும், எளிதாக ஜீரணமாகும் தயிர் அல்லது நாள்பட்ட சீஸை சாப்பிடுங்கள்.

(3) லாக்டோஸ் இல்லாத, அல்லது லாக்டேஸ் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றி, நீங்கள் லாக்டோஸ் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

a மற்ற எல்லோரையும்விட ஆசியாவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த லாக்டோஸ் ஒவ்வாமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வட ஐரோப்பிய தேசங்களில் வாழ்வோரை இது பெரும்பாலும் பாதிப்பதே இல்லை.