Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

சவால்

  • உங்க பையனுக்கு பத்து வயசுதான் ஆகுது; ஆனா, ரொம்ப திமிரா நடந்துகுறான்!

  • எல்லாரும் அவன ரொம்ப ஸ்பெஷலா நடத்தணும்னு எதிர்பார்க்குறான்.

‘அவன் ஏன் இப்படி நடந்துகுறான்?’னு நீங்கள் யோசிக்கலாம். ‘அவன பத்தி அவன் நல்லா நினைச்சுக்கணும். அதுக்காக, மத்தவங்களவிட அவன்தான் உயர்ந்தவன்னு அவன் நினைக்கக் கூடாது!’

பிள்ளைகளுடைய சுயமரியாதையைப் பாதிக்காத விதத்தில், மனத்தாழ்மையாக நடப்பதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லித்தர முடியுமா?

சில உண்மைகள்

சமீப காலங்களில், பிள்ளைகளுடைய இஷ்டப்படி பெற்றோர் நடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பாராட்டும் அளவுக்கு பிள்ளைகள் எதையும் செய்யவில்லை என்றாலும், அவர்களைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும் என்றும், அவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது என்றும் சொல்லப்படுகிறது. தாங்கள் ரொம்ப ஸ்பெஷல் என்பதாகப் பிள்ளைகளை நினைக்க வைத்தால், அவர்கள் நல்ல விதத்தில் வளருவார்கள், அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். ஆனால், அதன் விளைவு என்ன? இதைப் பற்றி ஜெனரேஷன் மீ (Generation Me) என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பிள்ளைகள் சுயமரியாதையோடு வளர வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்திருக்கிறது. அனுசரித்துப் போகும், சந்தோஷமாக வாழும் பிள்ளைகளை உருவாக்குவதைவிட, குட்டி நார்ஸிஸ்ட் படையைத்தான் (அதாவது, தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிள்ளைகளைத்தான்) அது உருவாக்கியிருக்கிறது.”

பாராட்டைப் பெற்றே வளர்ந்த நிறைய பிள்ளைகள், ஏமாற்றத்தையோ, விமர்சனத்தையோ, தோல்வியையோ ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுகிறார்கள். தங்களுடைய சொந்த ஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட பிள்ளைகள், பெரியவர்களாக ஆன பிறகு, நிலையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள திண்டாடுகிறார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் கவலையாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

பிள்ளைகளிடம் ‘நீ ரொம்ப ஸ்பெஷல்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் மட்டும் அவர்களுக்கு சுயமரியாதை வந்துவிடாது; அவர்கள் உண்மையிலேயே ஏதாவது சாதித்திருக்க வேண்டும்! பிள்ளைகளுக்குத் தங்கள்மேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. தங்களுக்கு இருக்கும் திறமைகளை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். (நீதிமொழிகள் 22:29) அதுமட்டுமல்லாமல், அவர்கள் மற்றவர்களுடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 10:24) இதற்கெல்லாம் மனத்தாழ்மை தேவை!

நீங்கள் என்ன செய்யலாம்

பாராட்டைப் பெற தகுதியிருந்தால் மட்டுமே பாராட்டுங்கள். உங்கள் மகள் பள்ளி பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், அவளைப் பாராட்டுங்கள். குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், ஆசிரியர்மேல் பழி போடாதீர்கள். நீங்கள் ஒருவேளை அப்படிச் செய்தால், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது உங்கள் மகளுக்குக் கஷ்டமாகி விடும். அடுத்த முறை எப்படி நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று சொல்லுங்கள். உண்மையிலேயே ஏதாவது சாதித்திருந்தால் மட்டும் உங்கள் பிள்ளையைப் பாராட்டுங்கள்.

தேவைப்படும்போது கண்டியுங்கள். உங்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு தவறுக்காகவும் அவர்களைத் திருத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. (கொலோசெயர் 3:21) ஆனால், மோசமான தவறுகளைச் செய்யும்போது, தவறான மனப்பான்மையைக் காட்டும்போதும் அவர்களைக் கண்டியுங்கள். இல்லையென்றால், தங்களை மாற்றிக்கொள்வது அவர்களுக்குக் கஷ்டமாகி விடும்.

உதாரணத்துக்கு, உங்களுடைய மகன் பெருமையடித்துக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை நீங்கள் கண்டித்துத் திருத்தவில்லை என்றால், அவன் திமிர்பிடித்தவனாக ஆகிவிடுவான், மற்றவர்களிடமிருந்து பிரிந்து இருக்க ஆரம்பித்துவிடுவான். அதனால், பெருமையடித்துக்கொள்வது அவனை நல்லவனாகக் காட்டாது என்றும், அது அவனைக் கூனிக் குறுக வைக்கும் என்றும் சொல்லுங்கள். (நீதிமொழிகள் 27:2) அதோடு, தன்னைப் பற்றிய சரியான கண்ணோட்டம் இருக்கிற ஒருவர் தன்னுடைய திறமைகளைக் குறித்து மற்றவர்களிடம் தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை என்றும் சொல்லுங்கள். இப்படி உங்கள் மகனை அன்பாகக் கண்டித்துத் திருத்தும்போது, அவனுடைய சுயமரியாதையைக் கெடுக்காமல், மனத்தாழ்மையாக நடப்பதைப் பற்றி அவனுக்குச் சொல்லித்தர முடியும்.—பைபிள் அறிவுரை: மத்தேயு 23:12.

வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்க தயார்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுடைய எல்லா ஆசைகளுக்கும் நீங்கள் இணங்கிவிட்டால், தாங்கள் ரொம்ப ஸ்பெஷல் என்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளை கேட்கிற ஒரு பொருளை உங்களால் வாங்கித்தர முடியவில்லை என்றால், வருமானத்துக்குள் வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். வெளியே போவதையோ விடுமுறையில் செல்வதையோ நீங்கள் ரத்துசெய்யும்போது, ஏமாற்றங்கள் வருவது சகஜம் என்பதையும் அவர்களுக்குப் புரியவையுங்கள். ஏமாற்றத்தை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளை எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாப்பதற்குப் பதிலாக, சவால்களைச் சமாளிக்க அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான், பெரியவர்களாக ஆகும்போது வாழ்க்கையில் வரும் சவால்களை அவர்களால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்.—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 29:21.

மற்றவர்களுக்கு உதவி செய்ய சொல்லிக்கொடுங்கள். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். (அப்போஸ்தலர் 20:35) எப்படி? ஷாப்பிங் செய்வதற்கோ, பயணம் செய்வதற்கோ, பழுதுபார்க்கும் வேலை செய்வதற்கோ யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளையோடு சேர்ந்து பட்டியல் போடுங்கள். அவர்களுக்கு உதவி செய்யும்போது, உங்கள் பிள்ளையையும் உங்களோடு கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதால் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும் உங்கள் பிள்ளை பார்க்கட்டும். இப்படி, உங்கள் முன்மாதிரியால், மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி உங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தர முடியும்.—பைபிள் அறிவுரை: லூக்கா 6:38.