குடும்ப ஸ்பெஷல் | அப்பா-அம்மாவுக்காக...
பிள்ளைப் பருவம் மாறும்போது...
பிரச்சினை...
“நேத்துதான் பிறந்த மாதிரி இருந்துச்சு! அதுக்குள்ள வளர்ந்துட்டான்(ள்)” என்று சில அப்பா-அம்மா பெருமையாக சொல்வதை கேட்டிருப்பீர்கள். பிள்ளைகளுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் வேகமாக வந்துவிடுகிறது. உங்கள் மகனோ, மகளோ உங்களுடைய பார்வையில் இன்னும் சின்னப் பிள்ளையாக இருக்கலாம். ஆனால், சீக்கிரத்தில் அவர்கள் ‘பெரிய மனுஷனாக’... ‘பெரிய மனுஷியாக’... வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்துவிடலாம்.
பிள்ளைகள் வயதுக்கு வரும்போது அவர்களுடைய மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தலாம். இந்த சமயத்தில் அப்பா-அம்மா எப்படி உதவி செய்யலாம்?
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...
எந்த வயதில் நடக்கும்? பொதுவாக, 8-லிருந்து 15 வயதிற்குள் அல்லது அதற்குப் பிறகும்கூட பிள்ளைகள் பருவமடையலாம். இதைப் பற்றி, லெட்டிங் கோ வித் லவ் அண்டு கான்ஃபிடன்ஸ் என்ற ஆங்கில புத்தகம் இப்படி சொல்கிறது: “வயதுக்கு வருவது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்; இந்த வயதில்தான் நடக்கும் என்று சொல்லமுடியாது.”
என்ன நடக்கிறது என்றே அவர்களுக்கு புரியாது. மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று டீனேஜ் பிள்ளைகள் ரொம்பவே யோசிப்பார்கள். “நான் பார்க்கிறதுக்கு எப்படி இருக்கேன்... மத்தவங்க முன்னாடி எப்படி நடந்துக்கிறேன்னு ரொம்ப யோசிப்பேன். சிலசமயம், நான் கிறுக்கன் மாதிரி நடந்துக்கிறேன்னு மத்தவங்க நினைப்பாங்களோனு பயந்திருக்கேன்” என்று இளைஞரான ஜானி சொல்கிறார். a அதுவும், முகத்தில் பரு வந்துவிட்டால் அவ்வளவுதான்! அவர்களுடைய தன்னம்பிக்கையை இழந்து கவலையில் மூழ்கிவிடுவார்கள். 17 வயது மோனா இப்படி சொல்கிறார்: “என் முகத்துக்கு என்னமோ ஆயிடுச்சுனு நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேன். நான் ரொம்ப அசிங்கமா இருக்கேன்னு நினைச்சு அழுதேன்.”
சிறு வயதிலேயே வயதுக்கு வரும்போது... சிறு வயதிலேயே வயதுக்கு வரும் பெண் பிள்ளைகளுக்கு இதை சமாளிப்பது கஷ்டமாக இருக்கலாம். அவர்களது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்போது மற்றவர்கள் அவர்களை கேலி கிண்டல் செய்யலாம். “வயதில் பெரியவர்களாக இருக்கும் ஆண் பிள்ளைகளின் கவனம் இவர்களிடம் திரும்பலாம். சில பேர், இந்த இளம் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது” என்று எ பேரண்ட்ஸ் கைடு டு த டீன் இயர்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.
வயதுக்கு வந்துவிட்டால் பொறுப்பும் வந்துவிடுமா? “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் [அதாவது, முட்டாள்தனம்] ஒட்டியிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டதால், அவர்களிடம் ஒட்டியிருக்கும் முட்டாள்தனம் போய்விடும் என்று சொல்ல முடியாது. வயதுக்கு வந்த பிள்ளைகள், பார்ப்பதற்கு பெரிய ஆட்கள் போல இருக்கலாம். ஆனால், “அந்த பிள்ளைகள் நல்ல தீர்மானங்கள் எடுப்பார்கள், அடக்கமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்வார்கள் அல்லது மற்ற எல்லா விஷயங்களையும் சரியாகத்தான் செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது” என்பதாக யூ அண்டு யுவர் அடோலசென்ட் என்ற புத்தகம் சொல்கிறது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முன்னதாகவே பிள்ளைகளிடம் பேசுங்கள். பிள்ளைகள் வயதுக்கு வரும் முன்பே, அவர்களிடம் என்னவெல்லாம் நடக்கும் என்று பேசுங்கள். பெண் பிள்ளைகளாக இருந்தால் மாதவிடாய் (பீரியட்ஸ்) பற்றியும், ஆண் பிள்ளைகளாக இருந்தால் இரவில் விந்து வெளியேறுதல் பற்றியும் அவர்களிடம் பேசுங்கள். பிள்ளைகளுடைய உடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்களால் அவர்கள் குழம்பி போகலாம், ரொம்பவும் பயப்படலாம். இதுபோன்ற விஷயங்களை பிள்ளைகளிடம் பேசும்போது, அவர்களது மனதில் நம்பிக்கையை வளர்ப்பது போல் பேசுங்கள். பெரியவர்களாக ஆகும்போது இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்.—பைபிள் தரும் ஆலோசனை: சங்கீதம் 139:14.
மனம் திறந்து பேசுங்கள். “இந்த விஷயத்தை பத்தி என்னோட அப்பா-அம்மா என்கிட்ட பேசினப்போ பட்டும்படாம பேசுனாங்க. இன்னும் கொஞ்சம் வெளிப்படையா பேசியிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்” என்று ஜான் சொல்கிறார். 17 வயதாகும் கவிதா இப்படி சொல்கிறார்: “உடம்புல என்னென்ன மாற்றங்கள் வரும்னு என்னோட அம்மா சொன்னாங்க. ஆனா, மனசுக்குள்ள என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு சொல்லவே இல்ல. அப்படி சொல்லியிருந்தா, இன்னும் நல்லா இருந்திருக்கும்.” அப்படியென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வயதுக்கு வரும்போது என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றி பிள்ளைகளிடம் மறைக்காமல் பேசுங்கள். உங்களுக்கு ஒருவேளை கூச்சமாக இருந்தாலும், பேசுங்கள்!—பைபிள் தரும் ஆலோசனை: அப்போஸ்தலர் 20:20.
மனதிலிருப்பதை தெரிந்துகொள்ள கேள்வி கேளுங்கள். வயதுக்கு வருவதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் பயத்தைப் போக்க, மற்ற பிள்ளைகள் இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் மகளிடம், “பீரியட்ஸ் பத்தி ஸ்கூல்ல பொண்ணுங்க ஏதாவது பேசுறாங்களா? யாராவது சீக்கிரமாகவே வயசுக்கு வந்துட்டா கேலி பண்றாங்களா?” என்று கேளுங்கள். மகனாக இருந்தால், “பார்க்கிறதுக்கு சின்ன பையன் மாதிரி இருக்கிற பசங்கள, மத்த பசங்க கிண்டல் பண்ணுவாங்களா?” என்று கேளுங்கள். இப்படி, மற்ற பிள்ளைகளைப் பற்றிக் கேட்கும்போது, உங்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிரச்சினையை பற்றி தயங்காமல் பேசுவார்கள். பிள்ளைகள் மனம்திறந்து பேசும்போது, “கேட்பதற்குத் தீவிரமாகவும் [அதாவது, தயாராகவும்] பேசுவதற்கு நிதானமாகவும்” இருங்கள்.—யாக்கோபு 1:19.
நன்றாக யோசிக்க கற்றுக்கொடுங்கள். (நீதிமொழிகள் 3:21) பிள்ளைகள் வயதுக்கு வரும்போது, அவர்கள் நன்றாக யோசிக்கவும் ஆரம்பிப்பார்கள். அதனால், இந்த சமயத்தை பயன்படுத்தி, உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுங்கள். இது, அவர்கள் நல்ல முடிவுகளை எடுக்க ரொம்ப உதவியாக இருக்கும்.—பைபிள் தரும் ஆலோசனை: எபிரெயர் 5:14.
தொடர்ந்து உதவி செய்யுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்காதது போல தெரியலாம். ஆனால், ஏமாந்துவிடாதீர்கள்! “பார்ப்பதற்கு உங்கள் பிள்ளைகள் எதையும் கேட்காதது போல், எதிலும் அக்கறை இல்லாதது போல், எதுவுமே பிடிக்காதது போல் தெரியலாம். ஆனால், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும், அவர்கள் நன்றாக கவனிக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!” என்று யூ அண்டு யுவர் அடோலசென்ட் என்ற புத்தகம் சொல்கிறது. ◼ (g16-E No. 2)
a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.