உலகக் கருத்துகளை ஒதுக்கித்தள்ளுங்கள்
“[இந்த உலகத்தின்] தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.”—கொலோ. 2:8.
பாடல்கள்: 60, 26
1. கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதினார்? (ஆரம்பப் படம்)
அப்போஸ்தலன் பவுல் ரோமில் கைதியாக இருந்தபோது, அதாவது கி.பி. 60-61-ல், கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘ஆன்மீக விஷயங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதல்,’ அதாவது விஷயங்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கும் திறன், அவர்களுக்கு ஏன் தேவை என்று விளக்கினார். (கொலோ. 1:9) “சாமர்த்தியமாகப் பேசி யாரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை” என்று அவர் சொன்னார். (கொலோ. 2:4, 8) பிறகு, பிரபலமான சில கருத்துகள் ஏன் தவறாக இருக்கின்றன என்றும், நிறையப் பேர் ஏன் அவற்றை விரும்புகிறார்கள் என்றும் விளக்கினார். உதாரணத்துக்கு, மற்றவர்களைவிட தாங்கள் அறிவாளிகள் அல்லது மேலானவர்கள் என்று அவை மக்களை நினைக்க வைக்கின்றன. அதனால், உலகக் கருத்துகளையும் தவறான பழக்கவழக்கங்களையும் ஒதுக்கித்தள்ள சகோதரர்களுக்கு உதவுவதற்காக பவுல் அந்தக் கடிதத்தை எழுதினார்.—கொலோ. 2:16, 17, 23.
2. நாம் ஏன் உலகக் கருத்துகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
2 இந்த உலகத்துக்கு ஏற்றபடி யோசிக்கிறவர்கள் யெகோவாவின் நெறிமுறைகளை அசட்டை செய்கிறார்கள். நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், அவர்களுடைய கருத்துகள் கடவுளுடைய ஞானத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம். டிவியிலும், இன்டர்நெட்டிலும், வேலை செய்யும் இடத்திலும், பள்ளியிலும் உலகக் கருத்துகளைப் பற்றி நாம் அடிக்கடி கேட்கிறோம். அவை நம்மைப் பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கட்டுரையில், உலகத்திலுள்ள ஐந்து கருத்துகளைப் பற்றிப் பார்ப்போம். அவற்றை நாம் எப்படித் தவிர்க்கலாம் என்றும் கவனிப்போம்.
நாம் கடவுளை நம்ப வேண்டுமா?
3. நிறையப் பேருக்கு என்ன கருத்து பிடித்திருக்கிறது? ஏன்?
3 “நான் நல்லவனா/ளா இருந்தா போதும், கடவுளை நம்பணுங்கற அவசியம் இல்ல.” இன்று நிறைய நாடுகளில் மக்கள் இப்படிச் சொல்வது சகஜம். இப்படிச் சொல்கிறவர்கள், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அலசிப் பார்க்காதவர்களாக இருக்கலாம்; தங்களுடைய இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறவர்களாக இருக்கலாம். (சங்கீதம் 10:4-ஐ வாசியுங்கள்.) இன்னும் சிலர், தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொள்வதற்குத்தான், “நான் நல்ல கொள்கைகளோட வாழ்ந்தா போதும், கடவுளை நம்பணுங்கற அவசியம் இல்ல” என்று சொல்கிறார்கள்.
4. படைப்பாளர் இல்லை என்று சொல்கிறவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
4 படைப்பாளர் இல்லை என்று நம்புவது நியாயமா? அறிவியலில் இதற்கான பதில் இருக்கிறது என்று நினைக்கிறவர்களுக்குக் குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஆனால், உண்மை ரொம்ப எளிமையானது. ஒரு வீடு தானாகவே வந்திருக்குமா? கண்டிப்பாக இல்லை! யாரோ ஒருவர் அதைக் கட்டியிருக்க வேண்டும். உயிருள்ள எல்லாமே, எந்த வீட்டையும்விட பல மடங்கு சிக்கலானவை. பூமியிலுள்ள உயிரினங்களின் செல்களிலேயே மிக எளிமையான செல்களால்கூட அவற்றைப் போலவே புதிய செல்களை உருவாக்க முடியும். ஒரு வீட்டினால் இதைச் செய்யவே முடியாது. செல்களால் தகவல்களைச் சேமித்து வைக்கவும் முடியும், புதிய செல்களுக்கு அவற்றைக் கடத்தவும் முடியும். அதனால், அந்த செல்களாலும் புதிய செல்களை உருவாக்க முடியும். இதையெல்லாம் செய்யும் திறனை செல்களுக்குக் கொடுத்தது யார்? பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.”—எபி. 3:4.
5. நல்லது எதுவென்று நாமே தெரிந்துகொள்ளலாம் என்ற கருத்தைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்?
5 ‘நல்லது எதுன்னு நாமே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு கடவுள நம்பணுங்கற அவசியம் இல்ல’ என்ற கருத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுளை நம்பாதவர்களுக்குக்கூட நல்ல கொள்கைகள் இருக்கலாம் என்று பைபிள் சொல்வது உண்மைதான். (ரோ. 2:14, 15) உதாரணத்துக்கு, ஒருவர் தன்னுடைய அப்பா அம்மாவை நேசிக்கலாம், அவர்களுக்கு மரியாதை காட்டலாம். ஆனால், யெகோவாவின் தராதரங்களை அவர் பின்பற்றாவிட்டால் ரொம்பவே தவறான தீர்மானங்களை எடுத்துவிடலாம். (ஏசா. 33:22) நன்றாக யோசிக்கும் திறனுள்ள நபர்கள், இந்த உலகத்திலுள்ள பயங்கரமான பிரச்சினைகளைக் கடவுளால் மட்டும்தான் தீர்க்க முடியுமென்று ஒத்துக்கொள்கிறார்கள். (எரேமியா 10:23-ஐ வாசியுங்கள்.) அதனால், ‘நல்லது எதுன்னு நாமே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு கடவுள நம்பணுங்கற அவசியம் இல்ல, அவரு சொல்ற மாதிரி நடக்கணுங்கற அவசியமும் இல்ல’ என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது.—சங். 146:3.
நமக்கு ஒரு மதம் தேவையா?
6. மதத்தைப் பற்றி நிறையப் பேர் என்ன நினைக்கிறார்கள்?
6 “சந்தோஷமா இருக்கறதுக்கு மதம் தேவையில்ல.” ‘மதம்னாலே சலிப்பா இருக்கு, மதத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல’ என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நிறைய மதங்கள் நரகத்தைப் பற்றிக் கற்றுத்தருகின்றன, வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கின்றன, அல்லது அரசியல்வாதிகளுக்குத் துணைபோகின்றன. தாங்கள் எந்த மதத்திலும் இல்லாததால்தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதில் ஆச்சரியமே இல்லை! ‘நான் கடவுள நம்பறேன், ஆனா மதத்தில எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்ல’ என்று அவர்கள் சொல்லலாம்.
7. உண்மை மதம் உங்களுக்கு எப்படி சந்தோஷத்தைத் தரும்?
7 எந்த மதத்திலும் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது உண்மையா? நாம் பொய் மதத்தில் இல்லாவிட்டால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவாவின் நண்பராக இல்லாவிட்டால் யாராலும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியாது. (1 தீ. 1:11) யெகோவா என்ன செய்தாலும் அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறது. அவருடைய ஊழியர்களான நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகளைத் தேடுவதால் சந்தோஷமாக இருக்கிறோம். (அப். 20:35) உதாரணத்துக்கு, குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு உண்மை வணக்கம் எப்படி உதவுகிறது என்று யோசித்துப் பாருங்கள். மரியாதை காட்டுவதற்கும், மணத்துணைக்கு உண்மையாக இருப்பதற்கும், மரியாதை காட்ட பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கும், ஒருவருக்கு ஒருவர் உண்மையான அன்பைக் காட்டுவதற்கும் அது நமக்குக் கற்றுத்தருகிறது. சபையிலுள்ள சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சமாதானத்தோடு வேலை செய்யவும், அவர்கள்மேல் அன்பு காட்டவும் யெகோவாவின் மக்களுக்கு உண்மை வணக்கம் உதவி செய்கிறது.—ஏசாயா 65:13, 14-ஐ வாசியுங்கள்.
8. உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருவது எதுவென்று புரிந்துகொள்ள மத்தேயு 5:3 நமக்கு எப்படி உதவுகிறது?
8 ஒருவர் கடவுளுக்குச் சேவை செய்யாமலேயே சந்தோஷமாக இருக்க முடியுமா? உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருவது எது? வேலையோ தொழிலோ விளையாட்டோ பொழுதுபோக்கோ சிலருக்கு சந்தோஷத்தைத் தருகிறது. இன்னும் சிலருக்கு, குடும்பத்தாரையும் நண்பர்களையும் அக்கறையாகக் கவனித்துக்கொள்வது சந்தோஷத்தைத் தருகிறது. இவையெல்லாம் நமக்கு சந்தோஷம் தந்தாலும், இவற்றைவிட முக்கியமான ஒன்றையும் நாம் செய்ய வேண்டும். நாம் மிருகங்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக இருப்பதால், நம் படைப்பாளரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்க நம்மால் முடியும். இதைச் செய்யும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கும். இந்த விதத்தில்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். (மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நம் சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வந்து யெகோவாவை வணங்கும்போது நமக்கு சந்தோஷமும் உற்சாகமும் கிடைக்கின்றன. (சங். 133:1) உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதும், சுத்தமான வாழ்க்கை வாழ்வதும், அருமையான எதிர்கால நம்பிக்கையைப் பெற்றிருப்பதும்கூட நமக்கு சந்தோஷத்தைத் தருகின்றன.
ஒழுக்க தராதரங்கள் அவசியமா?
9. (அ) செக்ஸ் பற்றிய பிரபலமான கருத்து என்ன? (ஆ) கல்யாணம் செய்துகொள்ளாமல் செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று கடவுளுடைய வார்த்தை ஏன் சொல்கிறது?
9 “கல்யாணம் செஞ்சுக்காம செக்ஸ் வச்சுக்கறதுல என்ன தப்பு?” சிலர் நம்மிடம், “இவ்ளோ கண்டிப்பெல்லாம் எதுக்கு? வாழ்க்கைய ஜாலியா அனுபவியுங்க” என்று சொல்லலாம். ஆனால், பாலியல் முறைகேட்டைக் கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 தெசலோனிக்கேயர் 4:3-8-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மைப் படைத்திருப்பதால் நமக்குச் சட்டங்களைக் கொடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. கல்யாணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்கிறார். நம்மேல் அன்பு இருப்பதால்தான் இதுபோன்ற சட்டங்களை அவர் கொடுக்கிறார். அவற்றைக் கடைப்பிடித்தால் நம்மால் சந்தோஷமாக வாழ முடியுமென்று அவருக்குத் தெரியும். கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிற ஒரு குடும்பம், அதிக அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்ளும்; பாதுகாப்பாகவும் இருக்கும். ஆனால், கடவுளுடைய சட்டங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் அவற்றுக்குக் கீழ்ப்படியாமல் போகிறவர்களைக் கடவுள் தண்டிப்பார்.—எபி. 13:4.
10. ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பாலியல் முறைகேட்டைத் தவிர்க்கலாம்?
10 பாலியல் முறைகேட்டை நாம் எப்படித் தவிர்க்கலாம் என்று பைபிள் சொல்லித்தருகிறது. நம் கண்களுக்கு நாம் காவல் போட வேண்டும். “ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு” என்று இயேசு சொன்னார். (மத். 5:28, 29) அதனால், ஆபாசத்தையும் ஒழுக்கக்கேடான இசையையும் நாம் தவிர்க்க வேண்டும். ‘பாலியல் முறைகேட்டை . . . தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்’ என்று பவுல் எழுதினார். (கொலோ. 3:5) நம்முடைய யோசனைகளையும் பேச்சையும்கூட நாம் கட்டுப்படுத்த வேண்டும்.—எபே. 5:3-5.
வேலை அல்லது தொழிலிலேயே மூழ்கியிருக்க வேண்டுமா?
11. நாம் ஏன் ஒரு நல்ல வேலையை அல்லது தொழிலை விரும்பலாம்?
11 “நல்ல வேலயோ தொழிலோ இருந்தாதான் சந்தோஷமா இருக்க முடியும்.” பேர்புகழும் பணமும்
செல்வாக்கும் தருகிற ஒரு வேலையோ தொழிலோ செய்ய வேண்டும்... நம் நேரத்தையும் சக்தியையும் அதற்காகவே செலவழிக்க வேண்டும்... என்றெல்லாம் மற்றவர்கள் நம்மிடம் சொல்லலாம். நல்ல வேலை இருந்தால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்று நிறையப் பேர் நினைப்பதால், நாமும் அவர்களைப் போலவே நினைக்க ஆரம்பித்துவிடலாம்.12. நல்ல வேலையோ தொழிலோ உங்களுக்குச் சந்தோஷம் தருமா?
12 செல்வாக்கோ பேர்புகழோ தேடித்தரும் ஒரு வேலை அல்லது தொழில் உங்களுக்கு சந்தோஷத்தையும் தேடித்தரும் என்பது உண்மையா? இல்லை. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தனக்குச் செல்வாக்கும் பேர்புகழும் கிடைக்க வேண்டுமென்று சாத்தான் ஆசைப்பட்டான். ஒரு விதத்தில், ஆசைப்பட்டது அவனுக்குக் கிடைத்தும்விட்டது. ஆனால், அவன் சந்தோஷமாகவா இருக்கிறான்? இல்லை, கோபமாகத்தான் இருக்கிறான். (மத். 4:8, 9; வெளி. 12:12) இப்போது, நம்மைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கடவுளைப் பற்றியும் அவர் வாக்குக் கொடுத்திருக்கும் அருமையான எதிர்காலத்தைப் பற்றியும் மற்றவர்களுக்குக் கற்றுத்தரும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது! இப்படிப்பட்ட சந்தோஷத்தை எந்த வேலையும் தொழிலும் உங்களுக்குத் தராது! அதுமட்டுமல்ல, நல்ல வேலையையோ தொழிலையோ தேடுகிறவர்களுக்குப் போட்டி மனப்பான்மையும் வெறித்தனமும் பொறாமையும் வந்துவிடுகிறது. என்னதான் பாடுபட்டாலும், வெறுமை உணர்ச்சிதான் அவர்களுக்கு மிஞ்சுகிறது. அவர்கள் ‘காற்றைப் பிடிக்க ஓடுகிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—பிர. 4:4.
13. (அ) நம் வேலைக்கு அல்லது தொழிலுக்கு எந்தளவு முக்கியத்துவம் தர வேண்டும்? (ஆ) எது பவுலுக்கு உண்மையான சந்தோஷத்தைத் தந்தது?
13 பிழைப்புக்காக நாம் வேலை செய்ய வேண்டியது அவசியம்தான். நமக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதுதான் வாழ்க்கை என்பதுபோல் நினைப்பது தவறு. “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னார். (மத். 6:24) யெகோவாவுக்குச் சேவை செய்வதும் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதும்தான் வேறு எதையும்விட அதிக சந்தோஷத்தைத் தரும். அப்போஸ்தலன் பவுல் இந்தச் சந்தோஷத்தை அனுபவித்தார். பெரிய ஆளாக வர வேண்டும் என்பதுதான் இளவயதில் அவருடைய லட்சியமாக இருந்தது. ஆனால், பிற்பாடு கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மக்களுக்குப் பிரசங்கித்தபோதுதான் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்தார். ஏனென்றால், கடவுளுடைய செய்தி மக்களின் வாழ்க்கையை மாற்றியதைக் கண்கூடாகப் பார்த்தார். (1 தெசலோனிக்கேயர் 2:13, 19, 20-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்குச் சேவை செய்வதிலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதிலும் கிடைக்கிற சந்தோஷம் இந்த உலகத்திலுள்ள எந்த வேலையிலும் தொழிலிலும் கிடைக்காது!
உலகத்திலுள்ள பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியுமா?
14. மனிதர்களாலேயே பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்ற கருத்து ஏன் சிலருக்குப் பிடித்திருக்கிறது?
14 “மனுஷங்களே அவங்களோட பிரச்சினைகள தீர்த்துக்க முடியும்.” மனிதர்களாலேயே பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றால், கடவுளுடைய வழிநடத்துதல் நமக்குத் தேவை இல்லை என்று அர்த்தம். அதோடு, நம் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அர்த்தம். அதனால்தான், நிறையப் பேருக்கு இந்தக் கருத்து பிடித்திருக்கிறது. போர், குற்றச்செயல், வியாதி, வறுமை போன்ற பிரச்சினைகள் குறைந்துவருவதாகச் சிலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு அறிக்கை இப்படிச் சொன்னது: “இந்த உலகத்தை மேம்படுத்த மனிதர்கள் முடிவு செய்திருப்பதால்தான் மனித வாழ்க்கை முன்னேறிவருகிறது.” ஆனால், அது உண்மையா? உலகத்திலுள்ள பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பதென்று மனிதர்கள் ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டார்களா? உண்மைகளைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.
15. உலகத்திலுள்ள பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
15 போர்: முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் ஆறு கோடிக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கிறார்கள். 2015-ல் மட்டுமே, போர் அல்லது துன்புறுத்தலால் ஒரு கோடியே இருபத்து நான்கு லட்சம் பேர் தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதுவரை மொத்தம் ஆறரை கோடி மக்கள் அப்படி வெளியேற்றப்பட்டிருந்தார்கள். குற்றச்செயல்: சில இடங்களில், சில வகையான குற்றச்செயல்கள் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் இன்டர்நெட் மோசடி, குடும்பத்தில் நடக்கும் வன்முறை, தீவிரவாதம், ஊழல் போன்ற குற்றச்செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. வியாதி: சில விதமான வியாதிகளை மனிதர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், 2013-ல் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு வருஷமும் 60 வயதை எட்டாத 90 லட்சம் பேர் இதய நோயாலும், பக்கவாதத்தாலும், புற்றுநோயாலும், சுவாசக் கோளாறினாலும், நீரிழிவு நோயாலும் இறந்துபோகிறார்கள். வறுமை: உலக வங்கியின் அறிக்கைப்படி, ஆப்பிரிக்காவில் மட்டுமே வறுமையின் அடிமட்டத்தில் இருந்தவர்களுடைய எண்ணிக்கை 1990-ல் 28 கோடியாக இருந்தது; ஆனால் 2012-ல் 33 கோடியாக உயர்ந்துவிட்டது.
16. (அ) உலகத்திலுள்ள பிரச்சினைகளை கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் தீர்க்க முடியுமென்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும் என்று ஏசாயாவும் சங்கீதக்காரரும் சொன்னார்கள்?
16 இந்த விவரங்களைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவது இல்லை. இன்று, அரசியல் அமைப்புகளும் வர்த்தக அமைப்புகளும் சுயநலம்பிடித்த ஆட்களின் கையில் இருக்கின்றன. போர், குற்றச்செயல், வியாதி, வறுமை போன்ற பிரச்சினைகளுக்கு இவர்களால் முடிவுகட்ட முடியாது. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும். யெகோவா மனிதர்களுக்காக என்ன செய்யப்போகிறார் என்று யோசித்துப் பாருங்கள். போருக்குக் காரணமான எல்லாவற்றையும் அவருடைய அரசாங்கம் அழித்துவிடும். அதாவது, சுயநலத்தையும் ஊழலையும் தேசப்பற்றையும் பொய் மதத்தையும், ஏன், சாத்தானையும்கூட அழித்துவிடும். (சங். 46:8, 9) கடவுளுடைய அரசாங்கம் குற்றச்செயலை முடிவுக்குக் கொண்டுவரும். இன்றும்கூட, ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை வைக்கவும் அது லட்சக்கணக்கான மக்களுக்குக் கற்றுத்தருகிறது. இதை வேறு எந்த அரசாங்கத்தாலும் செய்ய முடியாது! (ஏசா. 11:9) யெகோவா சீக்கிரத்தில் வியாதிக்கு முற்றுப்புள்ளி வைப்பார். எல்லா மனிதர்களுக்கும் பரிபூரணமான ஆரோக்கியத்தைக் கொடுப்பார். (ஏசா. 35:5, 6) அவர் வறுமையையும் தீர்த்துவைப்பார். இப்படி, எல்லாருமே சந்தோஷமாக வாழ்வதற்கும் அவரோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிப்பதற்கும் வழிசெய்வார். எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்குமா?—சங். 72:12, 13.
‘எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்’
17. உலகக் கருத்துகளை நீங்கள் எப்படி ஒதுக்கித்தள்ளலாம்?
17 உங்கள் நம்பிக்கைக்கு எதிரான ஒரு பிரபல கருத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று கற்றுக்கொள்ளுங்கள். முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரரிடம் அல்லது சகோதரியிடம் பேசுங்கள். மக்களுக்கு ஏன் அந்தக் கருத்து பிடித்திருக்கிறது, அது ஏன் தவறு, அதை நீங்கள் எப்படி ஒதுக்கித்தள்ளலாம் என்றெல்லாம் யோசியுங்கள். உலகக் கருத்துகள் நம்மைப் பாதிக்காமல் இருப்பதற்கு, பவுல் சொன்ன இந்த அறிவுரையின்படி நாம் நடக்க வேண்டும்: ‘சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்; . . . ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.’—கொலோ. 4:5, 6.
^ பாரா. 9 சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் யோவான் 7:53–8:11 வசனங்கள் இருக்கின்றன. ஆனால், பைபிள் முதன்முதலில் எழுதப்பட்டபோது இவை இல்லை. சிலர் இந்த வசனங்களைப் படித்துவிட்டு, தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, எந்தப் பாவமும் செய்யாத ஒருவரால்தான் மணத்துணைக்குத் துரோகம் செய்தவரைத் தண்டிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டம் இப்படிச் சொன்னது: “ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொள்ளும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால், அவனும் அவளும் கொல்லப்பட வேண்டும்.”—உபா. 22:22.