யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா?
“யெகோவாவின் சித்தம் என்னவென்று பகுத்துணர்ந்துகொண்டே இருங்கள்.”—எபே. 5:17.
பாடல்கள்: 69, 57
1. பைபிளில் இருக்கும் சில கட்டளைகள் என்ன, அதற்கு கீழ்ப்படிவதால் நமக்கு என்ன நன்மை?
பைபிளில் யெகோவா சில நேரடியான கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, சிலைகளை வணங்க கூடாது, அளவுக்கு அதிகமாக குடிக்கக் கூடாது, பாலியல் முறைகேட்டில் ஈடுபட கூடாது என்றெல்லாம் கட்டளை கொடுத்திருக்கிறார். (1 கொ. 6:9, 10) அதேபோல் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் நமக்கு இந்த தெளிவான கட்டளையைக் கொடுத்திருக்கிறார்: “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.” (மத். 28:19, 20) யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் கொடுத்திருக்கிற எல்லா கட்டளைகளும் நம்முடைய நன்மைக்குத்தான். அதற்கு கீழ்ப்படியும்போது குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும், நாம் ஆரோக்கியமாக இருப்போம், நம் தன்னம்பிக்கையும் அதிகமாகும். யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படியும்போது முக்கியமாக, பிரசங்க வேலையை நாம் செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுவார், நம்மை ஆசீர்வதிப்பார்.
2, 3. (அ) நம் வாழ்க்கையில் எதிர்ப்படுகிற எல்லா சூழ்நிலைகளுக்கும் பைபிளில் ஏன் நேரடியான சட்டங்கள் இல்லை? (ஆ) இந்த கட்டுரையில் என்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள போகிறோம்? (ஆரம்பப் படம்)
2 நம் வாழ்க்கையில் எதிர்ப்படுகிற எல்லா சூழ்நிலைக்கும் பைபிளில் நேரடியான சட்டங்கள் இல்லை. உதாரணத்துக்கு, எப்படிப்பட்ட துணிமணிகளை நாம் போடவேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை. யெகோவா எவ்வளவு ஞானமுள்ளவர் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், ஒவ்வொருவரும் அவரவருடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி துணிகளை போட்டுக்கொள்கிறார்கள். அதோடு, அவர்கள் போடும் துணிகளும் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை உடையைப் பற்றி பைபிளில் திட்டவட்டமான கட்டளைகள் இருந்திருந்தால் அது நிச்சயம் இந்த காலத்துக்கு ஒத்துவராமல் இருந்திருக்கும். அதனால்தான், உடை உடுத்தும் விஷயத்திலும் வேலை, பொழுதுபோக்கு, ஆரோக்கியம் போன்ற விஷயங்களிலும் யெகோவா எந்த குறிப்பிட்ட சட்டங்களையும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, இதைப் பற்றி தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். குடும்ப தலைவர்களுக்கும் அந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.
3 அப்படியென்றால், ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்கும்போது... அதுவும் அதைப் பற்றி பைபிளில் எந்த கட்டளையும் இல்லாதபோது... நாம் இப்படி யோசிக்கலாம்: ‘நான் எடுக்கிற தீர்மானத்தை கடவுள் முக்கியமா நினைக்கிறாரா? பைபிளுக்கு விரோதமா இல்லாதவரைக்கும் நான் எடுக்கிற தீர்மானத்தை யெகோவா ஏத்துக்குவாரா? யெகோவாவுக்கு பிடிச்ச மாதிரி தீர்மானம் எடுத்திருக்கேன்னு நான் எப்படி உறுதியா இருக்கலாம்?’
நீங்கள் எப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்கிறீர்கள் என்பது முக்கியமா?
4, 5. நாம் எடுக்கும் தீர்மானம் நம்மையும் மற்றவர்களையும் எப்படி பாதிக்கும்?
4 ‘என் இஷ்டப்படிதான் நான் வாழ்வேன்’ என்று சிலர் சொல்லலாம். ஆனால், யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழவே நாம் ஆசைப்படுகிறோம். அதனால், ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்; பிறகு அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு, இரத்தத்தை பயன்படுத்துவதைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். (ஆதி. 9:4; அப். 15:28, 29) யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானங்கள் எடுக்க ஜெபம் நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
5 வாழ்க்கையில் நாம் எடுக்கும் முக்கியமான தீர்மானங்கள் நம்மை எப்படி பாதிக்கும்? நாம் சரியான தீர்மானங்களை எடுத்தால் யெகோவாவிடம் இன்னும் நெருங்கி போவோம். தவறான தீர்மானங்களை எடுத்தால் அவரோடு இருக்கும் நட்பை நாம் இழந்துவிடுவோம். அதுமட்டுமல்ல, நாம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றவர்களையும் பாதிக்கலாம். நம் சகோதர சகோதரிகளுடைய மனதைக் கஷ்டப்படுத்தலாம், அவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கலாம். அதோடு, சபையில் இருக்கிற சமாதானத்தைக் கெடுத்துவிடலாம். அப்படியென்றால், சரியான தீர்மானங்களை எடுப்பது ரொம்ப முக்கியம் என்பது தெளிவாக தெரிகிறது.—ரோமர் 14:19; கலாத்தியர் 6:7-ஐ வாசியுங்கள்.
6. ஒரு தீர்மானம் எடுக்கும்போது நாம் எதைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்?
6 ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் தெளிவான சட்டங்கள் இல்லாதபோது நாம் எப்படி சரியான தீர்மானத்தை எடுக்க முடியும்? நமக்கு பிடித்த தீர்மானத்தை எடுப்பதற்கு பதிலாக நம் சூழ்நிலையைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதோடு, யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் எடுக்கும் தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 37:5-ஐ வாசியுங்கள்.
யெகோவா என்ன எதிர்பார்க்கிறார்?
7. ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான சட்டங்கள் இல்லாதபோது நாம் என்ன செய்ய வேண்டும்?
7 ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான சட்டங்கள் இல்லாதபோது நாம் எடுக்கும் தீர்மானம் யெகோவாவுக்கு பிடித்திருக்கிறதா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்? “யெகோவாவின் சித்தம் என்னவென்று பகுத்துணர்ந்துகொண்டே இருங்கள்” என்று எபேசியர் 5:17 சொல்கிறது. அப்படியென்றால், அந்த விஷயத்தைப் பற்றி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும், அவருடைய சக்தி மூல மாக அவர் கொடுக்கிற வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8. யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்று இயேசு எப்படி நன்றாக புரிந்துவைத்திருந்தார்? இதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
8 யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதை இயேசு எப்போதும் புரிந்துவைத்திருந்தார். உதாரணத்துக்கு, பசியாக இருந்த மக்களுக்கு இரண்டு முறை அற்புதமாக உணவு கொடுத்தார். ஒவ்வொரு முறையும் ஜெபம் செய்த பிறகு அந்த அற்புதங்களை செய்தார். (மத். 14:17-20; 15:34-37) ஆனால் அவர் வனாந்தரத்தில் பசியாக இருந்த சமயத்தில் கற்களை ரொட்டிகளாக மாற்றும்படி பிசாசு சொன்னபோது அவர் அதை மறுத்துவிட்டார். (மத்தேயு 4:2-4-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால் அவருடைய அப்பாவைப் பற்றி அவர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார். சொந்த விருப்பத்திற்காக கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தினால் அது யெகோவாவுக்கு பிடிக்காது என்று இயேசுவுக்கு தெரியும். அதோடு, தனக்கு தேவையானதை யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
9, 10. சரியான தீர்மானங்களை எடுக்க எது நமக்கு உதவும்? உதாரணம் கொடுங்கள்.
9 யெகோவாவையே நாம் நம்பியிருந்தால் நாமும் இயேசுவைப் போல் நல்ல தீர்மானங்களை எடுப்போம். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:5-7) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நாம் பைபிளை படிக்க வேண்டும். அப்படி செய்தால் முக்கியமான தீர்மானம் எடுக்கும் சமயத்தில் யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். யெகோவாவைப் பற்றி நாம் எந்தளவுக்கு அதிகமாக தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவருக்கு பிடித்த மாதிரி தீர்மானங்களை எடுப்போம். அப்போது ‘கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கிற இருதயம்’ நமக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.—எசே. 11:19, NW அடிக்குறிப்பு.
10 உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் ஷாப்பிங் போகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அழகான ஒரு புடவையைப் பார்க்கிறாள். ஆனால் அதன் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. தன் கணவன் தன்னோடு வரவில்லை என்றாலும் அதை வாங்கினால் அவர் என்ன நினைப்பார் என்று அவளுக்கு தெரியும். எப்படி? அவளுக்கு கல்யாணமாகி சில வருடங்கள் ஆகிவிட்டதால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் தன் கணவனைப் பற்றி அவள் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறாள். அதேபோல் யெகோவா எப்படி யோசிக்கிறார், முன்பு தன் ஜனங்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ளும்போது எப்படிப்பட்ட தீர்மானங்களை எடுத்தால் அவர் சந்தோஷப்படுவார் என்பதைப் புரிந்துகொள்வோம்.
யெகோவா எப்படி யோசிக்கிறார்?
11. பைபிளை படிக்கும்போது நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? ( ‘‘பைபிளை படிக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்ற பெட்டியைப் பாருங்கள்.)
11 யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள தினமும் பைபிளை படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். பைபிளை படிக்கும்போது, ‘இதுல இருந்து நான் யெகோவாவை பத்தி என்ன கத்துக்குறேன்? இந்த சூழ்நிலையில அவர் ஏன் அப்படி நடந்துகிட்டாரு?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். அதோடு யெகோவாவைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள உதவும்படி தாவீதைப் போல் நாமும் ஜெபம் செய்யலாம். “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்” என்று தாவீது எழுதினார். (சங். 25:4, 5) யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளும் விஷயங்களை எந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் கடைப்பிடிக்கலாம் என்று யோசித்துப் பார்க்கலாம். உதாரணத்துக்கு குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், ஊழியத்தில் என எந்த இடத்தில் கடைப்பிடிக்கலாம் என்று யோசிக்கலாம். அப்போது அதை எப்படி கடைப்பிடிக்கலாம் என்று நம்மால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
12. யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அமைப்பு வெளியிடும் புத்தகங்களும் கூட்டங்களும் எப்படி உதவும்?
12 யெகோவாவுடைய அமைப்பு பைபிளிலிருந்து சொல்லும் விஷயங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்துவதன் மூலமாகவும் அவர் எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, நாம் ஒரு விஷயத்தைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு முன்பு அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் மற்றும் ஆராய்ச்சிக் கையேட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். அதோடு, கூட்டங்களில் நன்றாக கவனிக்கும்போது... பதில்கள் சொல்லும்போது... அங்கு கற்றுக்கொள்ளும் விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது... யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அப்போது யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானங்களை எடுக்க முடியும். யெகோவாவின் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க முடியும்.
யெகோவாவை போல் யோசியுங்கள்
13. யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டால் சரியான தீர்மானம் எடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
13 யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால் நம்மால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும். அதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: நீங்கள் பயனியர் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள். அதற்காக வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்கிறீர்கள். ஆனால், குறைவான பணத்தையும் பொருள்களையும் வைத்து சந்தோஷமாக இருக்க முடியுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். நாம் பயனியர் செய்ய வேண்டும் என்று பைபிளில் எந்த கட்டளையும் இல்லைதான். ஒரு பிரஸ்தாபியாக இருந்தால்கூட நம்மால் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியும். இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்துக்காக தியாகங்களைச் செய்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்று இயேசு சொன்னார். (லூக்கா 18:29, 30-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு புகழ் சேர்ப்பதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, அதுவும் மனப்பூர்வமாக செய்யும்போது, யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங். 119:108; 2 கொ. 9:7) நன்றாக ஜெபம் செய்துவிட்டு இந்த விஷயங்களையெல்லாம் யோசிக்கும்போது நாம் சரியான தீர்மானத்தை எடுப்போம். யெகோவாவும் நம்மை ஆசீர்வதிப்பார்.
14. உடை உடுத்தும் விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?
14 மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள்: உங்களுக்கு பிடித்த மாதிரி உடை உடுத்த நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அது சபையில் இருக்கிற சிலருக்கு பிடிக்காது என்று உங்களுக்கு தெரியும். எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை. அப்படியென்றால், இதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்? “பெண்கள் விதவிதமான பின்னல் சடைகளினாலும் தங்கத்தினாலும் முத்துக்களினாலும் விலை உயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல், 1 தீ. 2:9, 10) இந்த ஆலோசனை சகோதரர்களுக்கும் பொருந்தும். நாம் அடக்கமுள்ளவர்களாக இருந்தால் நாம் உடுத்தும் உடையைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் யோசிப்போம். சகோதர சகோதரிகளை நாம் நேசித்தால் அவர்கள் மனதை கஷ்டப்படுத்த மாட்டோம். (1 கொ. 10:23, 24; பிலி. 3:17) ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று யோசித்தால் யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வோம். அப்போது அவருக்கு பிடித்த மாதிரி தீர்மானத்தை எடுப்போம்.
நேர்த்தியான உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்; அதோடு, தேவபக்தியுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பெண்களுக்குத் தகுந்தபடி நற்செயல்களினால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்” என்று பைபிள் சொல்கிறது. (15, 16. (அ) ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி நாம் யோசித்துக்கொண்டிருந்தால் யெகோவா எப்படி உணருவார்? (ஆ) நாம் பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதை எப்படி தெரிந்துகொள்ளலாம்? (இ) முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது நாம் என்ன செய்யலாம்?
15 மக்கள் மோசமான காரியங்களைச் செய்யும்போது... தவறான விஷயங்களை யோசிக்கும்போது... யெகோவா ரொம்ப வேதனைப்படுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:5, 6-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பது யெகோவாவுக்கு சுத்தமாக பிடிக்காது என்று இதிலிருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட விஷயங்களை யோசித்துக்கொண்டிருந்தால் அதை நாம் நிஜமாகவே செய்துவிடுவோம். அதனால்தான், நாம் எப்போதும் நல்ல விஷயங்களையே யோசிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யெகோவாவிடமிருந்து வருகிற “ஞானமோ முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிவேஷமற்றதாகவும் இருக்கிறது” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 3:17) அப்படியென்றால், தவறான விஷயங்களை யோசிக்க தூண்டும் எந்தவொரு பொழுதுபோக்கையும் நாம் பார்க்க கூடாது. யெகோவாவுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை பைபிளில் இருந்து புரிந்துகொண்டால் எப்படிப்பட்ட புத்தகங்களை, படங்களை, விளையாட்டுகளை தேர்ந்தெடுப்பது என்று நமக்கே தெரியும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்காமலேயே நம்மால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும்.
16 சில விஷயங்களில் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுப்பதற்கு நிறைய வழிகள் இருக்கலாம். ஆனால், முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது மூப்பர்களிடம் அல்லது அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் ஆலோசனை கேட்பது நல்லது. (தீத். 2:3-5; யாக். 5:13-15) நமக்காக தீர்மானம் எடுக்கும்படி அவர்களிடம் கேட்பதற்கு பதிலாக பைபிள் வசனங்களை யோசித்துப் பார்த்து நாம் சொந்தமாக தீர்மானம் எடுக்க வேண்டும். (எபி. 5:14) அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல் “ஒவ்வொருவனும் தன்தன் பாரத்தைச் சுமக்க” வேண்டும்.—கலா. 6:5.
17. யெகோவா பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கும்போது நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
17 யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கும்போது அவரிடம் நாம் இன்னும் நெருங்கி போவோம், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிப்போம். (யாக். 4:8) யெகோவாமீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும் பலமாகும். அதனால் நாம் பைபிளை படிக்கும்போதெல்லாம் யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சொல்லப்போனால், ஒவ்வொரு முறையும் பைபிளை படிக்கும்போது நாம் நிச்சயம் யெகோவாவைப் பற்றி ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொள்வோம். (யோபு 26:14) யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் இப்போதே கடினமாக முயற்சி செய்யும்போது நாம் ஞானமுள்ளவர்களாக ஆவோம், சரியான தீர்மானங்களை எடுப்போம். (நீதி. 2:1-5) மனிதர்களுடைய யோசனைகளும் திட்டங்களும்தான் மாறும், ஆனால் யெகோவா என்றுமே மாறாதவர். அதனால்தான் சங்கீதக்காரன் இப்படி எழுதினார்: “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.” (சங். 33:11) யெகோவா யோசிப்பது போல் நாம் யோசித்தால் அவருக்கு பிடித்த மாதிரி தீர்மானங்களை எடுப்போம், அவர் மனதையும் சந்தோஷப்படுத்துவோம்.