உங்கள் சபைக்கு உதவ முடியுமா?
இயேசு பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு தன் சீடர்களிடம், “பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (அப். 1:8) ஆனால், அவர்களால் எப்படிப் பூமி முழுவதும் சாட்சி கொடுக்க முடியும்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், மார்ட்டின் குட்மேன் இப்படிச் சொன்னார்: “முதல் நூற்றாண்டில் ரோமர்கள் ஆட்சி செய்த சமயத்தில், கிறிஸ்தவர்களை மற்ற மதங்களிலிருந்தும் யூதர்களிலிருந்தும் வித்தியாசப்படுத்தி காட்டியதே அவர்கள் செய்த ஊழிய வேலைதான்.” இயேசுவும் ஒவ்வொரு ஊராக சென்று நற்செய்தியைச் சொன்னார். கிறிஸ்தவர்கள் அவருடைய உதாரணத்தைப் பின்பற்றி, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை” எல்லா இடங்களிலும் சொல்ல வேண்டியிருந்தது. கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள மக்களை தேடி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. (லூக். 4:43) அதனால்தான் முதல் நூற்றாண்டில் “அப்போஸ்தலர்கள்” (அதாவது, அனுப்பப்பட்டவர்கள்) இருந்தார்கள். (மாற். 3:14) அதுமட்டுமல்ல தன்னை பின்பற்றியவர்களிடம் இயேசு, ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்ற கட்டளையைக் கொடுத்தார்.—மத். 28:18-20.
இயேசுவுடைய 12 அப்போஸ்தலர்கள் இப்போது பூமியில் இல்லை. ஆனால், யெகோவாவின் மக்கள் நிறையப் பேர் அவர்களைப் போலவே சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறார்கள். தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்ய வேண்டியிருந்தால் “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொல்கிறார்கள். (ஏசா. 6:8) உதாரணத்துக்கு, கிலியட் பள்ளியில் பட்டம்பெற்ற ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் ஊழியம் செய்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களுடைய நாட்டிலேயே வேறு இடத்துக்குப் போய் ஊழியம் செய்கிறார்கள். நிறையப் பேர் புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு அந்த மொழியைப் பேசும் சபைக்கோ தொகுதிக்கோ உதவி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் யெகோவாமீதும் மக்கள்மீதும் இருக்கும் அன்புதான். அதோடு, அவர்கள் நன்றாக திட்டமிட்டு அவர்களுடைய நேரம், சக்தி, பணம் எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள். (லூக். 14:28-30) இவர்களுடைய சேவையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
நம் எல்லாராலும் தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்யவோ புதிய மொழியை
கற்றுக்கொள்ளவோ முடியாது. ஆனால் நம் சபையிலேயே ஒரு மிஷனரியைப் போல் சேவை செய்ய முடியும். எப்படி?உங்கள் சபையிலேயே மிஷனரிகளைப் போல் சேவை செய்யுங்கள்
முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் ஊழியத்தைச் சுறுசுறுப்பாக செய்தார்கள். அவர்களில் நிறையப் பேர் மிஷனரிகளாக இல்லாவிட்டாலும், தங்களுடைய சொந்த ஊர்களில் இருந்துகொண்டே யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள். “நற்செய்தியாளரின் வேலையைச் செய், உன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்று” என்று தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். (2 தீ. 4:5) இந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் பொருந்துகிறது. நற்செய்தியைப் பிரசங்கித்து, சீடராக்கும் வேலையை கிறிஸ்தவர்கள் எல்லாருமே செய்ய வேண்டும். அதோடு, நம்முடைய சபையிலேயே பல வழிகளில் மிஷனரிகளைப் போல் சேவை செய்ய முடியும்.
உதாரணத்துக்கு, மிஷனரிகள் வேறொரு நாட்டுக்குப் போகும்போது அங்கு இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருவேளை நம்மால் வேறொரு இடத்துக்கு போய் ஊழியம் செய்ய முடியவில்லை என்றாலும் புதுப்புது வழிகளில் பிரசங்கிக்க முடியுமா? உதாரணத்துக்கு, 1940-ல் வாரத்துக்கு ஒரு நாள் தெரு ஊழியம் செய்யும்படி சகோதரர்களுக்கு சொல்லப்பட்டது. நீங்கள் தெரு ஊழியம் செய்திருக்கிறீர்களா? வீல்-ஸ்டாண்ட் ஊழியம் செய்திருக்கிறீர்களா? புதுப்புது வழிகளில் நற்செய்தியைச் சொல்ல நீங்கள் ஆர்வமாக முயற்சி செய்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி முயற்சி செய்தால் உங்களால் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் நற்செய்தியைச் சொல்ல முடியும்.
தேவையுள்ள இடத்தில் சேவை செய்கிறவர்களும், புதிய மொழியைக் கற்றுக்கொண்டு ஊழியம் செய்கிறவர்களும் பெரும்பாலும் அனுபவமுள்ள சகோதர சகோதரிகளாகவே இருப்பார்கள். இவர்கள் சபைக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு அவர்கள் பிரசங்க வேலையை வழிநடத்துகிறார்கள். மிஷனரிகளாக இருப்பவர்கள் சபையிலுள்ள மற்ற சகோதரர்கள் தகுதி பெறும்வரை சபை பொறுப்புகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த சகோதரரா? உங்கள் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், ஒரு உதவி ஊழியராக அல்லது மூப்பராக ஆக நீங்கள் முயற்சி செய்யுங்கள்.—1 தீ. 3:1.
‘பக்கபலமாக இருங்கள்’
சபையில் இருக்கிறவர்களுக்கு நாம் இன்னும் நிறைய வழிகளில் உதவி செய்யலாம். இளைஞர்கள், பெரியவர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என நம் எல்லாராலும் கொலோ. 4:11.
தேவையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு “பக்கபலமாக” இருக்க முடியும்.—சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் நாம் முதலில் அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். நாம் கூட்டங்களுக்கு வரும்போது ‘ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிக்க’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபி. 10:24) அதற்காக அவர்களுடைய சொந்த விஷயங்களில் நாம் தலையிட வேண்டும் என்று அர்த்தமில்லை. அதற்கு பதிலாக அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை நடைமுறையான உதவி ஏதாவது அவர்களுக்குத் தேவைப்படலாம். பைபிளில் இருந்து ஆறுதலோ உற்சாகமோ அவர்களுக்கு தேவைப்படலாம். அல்லது நாம் அவர்களுக்கு ஆதரவாக, பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம். சில உதவிகளை மூப்பர்களாலும் உதவி ஊழியர்களாலும் மட்டும்தான் கொடுக்க முடியும். (கலா. 6:1) ஆனால், வயதான சகோதர சகோதரிகளுக்கும் கஷ்டத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கும் நம் எல்லாராலும் உதவி செய்ய முடியும்.
சால்வாடோர் என்ற சகோதரருக்கு இப்படிப்பட்ட உதவி கிடைத்தது. அவருக்கு திடீரென பணப் பிரச்சினை வந்ததால் அவர் செய்துகொண்டிருந்த வியாபாரத்தை, வீட்டை, சில பொருள்களை எல்லாம் விற்க வேண்டியிருந்தது. எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று நினைத்து அவர் ரொம்ப கவலைப்பட்டார். அந்த சபையில் இருந்த இன்னொரு குடும்பத்தார் அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்கள். கஷ்டத்தைச் சமாளிக்க கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்தார்கள். ஒரு வேலையைக் கண்டுபிடிக்க அவருக்கும் அவருடைய மனைவிக்கும் உதவி செய்தார்கள். அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்குப் போய் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள், அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டார்கள். இப்போது இவர்கள் எல்லாரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். கஷ்ட காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் சொல்ல தயங்குவதில்லை. அப்படியென்றால் நாமும் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி யெகோவா கொடுத்திருக்கும் அருமையான வாக்குறுதிகளை எல்லாரிடமும் சொல்ல வேண்டும். தேவை அதிகம் இருக்கும் இடத்தில் சிலரால் போய் சேவை செய்ய முடியும், சிலரால் செய்ய முடியாது. ஆனால் நம் எல்லாராலும் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நிச்சயம் உதவி செய்ய முடியும். (கலா. 6:10) இப்படி நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம். அதோடு ‘எல்லா நற்செயல்களிலும் பலன் தருகிறவர்களாக’ இருப்போம்.—கொலோ. 1:10; அப். 20:35.