உங்களுக்குத் தெரியுமா?
பூர்வ காலங்களில், கப்பல் பயணம் செய்வதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டியிருந்தது?
பொதுவாக, பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு போகும் கப்பல்கள் பவுலின் காலத்தில் இருக்கவில்லை. பயணம் செய்ய நினைக்கும் ஒருவர், தான் போக விரும்பும் திசையில் ஏதாவது சரக்குக் கப்பல்கள் போகின்றனவா என்று கேட்க வேண்டியிருந்தது. அதோடு, அந்தக் கப்பலில் பயணிகளை ஏற்றிக்கொள்வார்களா என்றும் கேட்க வேண்டியிருந்தது. (அப். 21:2, 3) ஒருவேளை, தான் போகவேண்டிய இடத்துக்கு ஒரு கப்பல் போகவில்லை என்றாலும், வழியில் இருக்கும் ஒரு துறைமுகத்தில் அவர் இறங்கிக்கொள்வார். பிறகு, தான் போக வேண்டியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஊர்வரை போவதற்கு வேறு ஏதாவது கப்பல் இருக்கிறதா என்று பார்ப்பார்.—அப். 27:1-6.
வருஷத்தில் சில நாட்களில் மட்டும்தான் கடலில் பயணம் செய்தார்கள். அதோடு, கப்பல்களுக்கென்று ஒரு பயண அட்டவணை இருக்கவில்லை. சாதகமற்ற வானிலையால் மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளின் காரணமாகவும் மாலுமிகள் பயணத்தைத் தள்ளிப்போட்டார்கள். உதாரணத்துக்கு, கப்பலிலிருந்து ஓர் அண்டங்காக்கை கத்தினாலோ சேதமடைந்த ஒரு கப்பலை கரையில் பார்த்தாலோ, அவர்கள் பயணத்தைத் தள்ளிப்போட்டார்கள். தாங்கள் போகவேண்டிய திசையில் காற்று அடிக்கும்போது, மாலுமிகள் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பயணத்தை ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கப்பலில் பயணம் செய்வதற்கு பயணிக்கு அனுமதி கிடைத்துவிட்டால், அவர் தன்னுடைய மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு துறைமுகத்துக்குப் பக்கத்தில் போக வேண்டியிருந்தது. பிறகு, கப்பல் புறப்படும் அறிவிப்பைக் கேட்கும்வரை அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது.
“ரோம் நகரத்திலிருந்து கப்பல் பயணம் செய்பவர்களால் சுலபமாகக் கப்பல்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதற்காக அவர்கள் ரொம்ப சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை” என்று சரித்திராசிரியரான லையனல் கேஸன் சொல்கிறார். “டைபர் ஆற்றின் முகத்துவாரத்தில் அதன் [ரோம்] துறைமுகம் இருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த ஆஸ்டியா என்ற ஊரில் ஒரு பெரிய பொதுசதுக்கம் இருந்தது. அதைச் சுற்றிலும் வெவ்வேறு துறைமுகங்களைச் சேர்ந்த கப்பல்காரர்களுடைய அலுவலகங்கள் இருந்தன. நார்பொனைச் சேர்ந்த கப்பல்காரர்களுக்கு (இன்றைய பிரான்ஸ்) ஒன்று, கார்த்தேஜைச் சேர்ந்த (இன்றைய டுனீஷியா) கப்பல்காரர்களுக்கு இன்னொன்று, . . . என நிறைய அலுவலகங்கள் இருந்தன. பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்! அதாவது, அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடம்வரையில் என்னென்ன நகரங்கள் இருக்கின்றன என்று அந்த அலுவலகங்களில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.”
கப்பல் வழிப் பயணம், பயணிகளுடைய நேரத்தை மிச்சப்படுத்தியது. ஆனால், அதில் ஆபத்துகளும் இருந்தன. தன்னுடைய மிஷனரி பயணத்தின்போது பவுல் நிறைய தடவை கப்பல்சேதத்தில் மாட்டிக்கொண்டார்.—2 கொ. 11:25.