இறைவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு ஆசீர்வாதம்
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று மூஸா நபி சொன்னார். (உபாகமம் 10:13; 11:27) இறைவன் நம்மை தண்டித்து விடுவாரோ என்ற பயத்தில் நாம் அவருக்கு கீழ்ப்படிவது இல்லை. அவருடைய அருமையான குணங்களை நினைத்துப் பார்க்கும்போது அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. நாம் அவர்மீது அன்பு வைத்திருப்பதால் அவர் மனதை கஷ்டப்படுத்துகிற மாதிரி எதையும் செய்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்” என்று இறைவேதம் சொல்கிறது.—1 யோவான் 5:3.
இறைவனுக்குக் கீழ்ப்படியும்போது நமக்கு எப்படி ஆசீர்வாதம் கிடைக்கும்? இரண்டு வழிகளைப் பார்க்கலாம்.
1. இறைவனுக்குக் கீழ்ப்படியும்போது நமக்கு ஞானம் கிடைக்கும்
“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்.”—ஏசாயா 48:17.
நம்முடைய படைப்பாளரான யெகோவாவுக்கு நம்மைப் பற்றித் தெரியும். நமக்குத் தேவையான ஆலோசனைகளை அவர் கொடுக்கிறார். அந்த ஆலோசனைகளை இறைவேதத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதிலிருக்கும் விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும்.
2. இறைவனுக்குக் கீழ்ப்படியும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கும்
“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”—லூக்கா 11:28.
இன்று கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு நடக்கிற லட்சக்கணக்கானவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஸ்பெயின் நாட்டில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மனைவியையும் சரி, மற்றவர்களையும் சரி, ரொம்ப மோசமாக நடத்துவார். எப்போதும் கோபமாக, கடுகடுப்பாக நடந்துகொள்வார். ஒரு நாள் அவர் மூஸா நபி எழுதிய புத்தகங்களைப் படித்தார். அதில் யாகூபின் மகன் யுஸூஃபைப் பற்றிப் படித்தார். யுஸூஃப் அடிமையாக விற்கப்பட்டார். அநியாயமாகச் சிறையில் தள்ளப்பட்டார். ஆனாலும், அவர் ரொம்ப சாந்தமாக இருந்தார். சமாதானமாக நடந்துகொண்டார். எல்லாரையும் தாராளமாக மன்னித்தார். (ஆதியாகமம், அதிகாரங்கள் 37-45) இந்தப் பதிவைப் படித்த அந்த நபர் இப்படிச் சொல்கிறார்: “யோசேப்பை (யுஸூஃப்) பத்தி படிச்சது சாந்தமா இருக்கவும், கருணை காட்டவும், சுயக்கட்டுப்பாட்ட வளர்த்துக்கவும் என்னை தூண்டுச்சு. அத வளர்த்துக்கிட்டதுனால இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
மற்றவர்களை நாம் எப்படி நடத்தவேண்டும் என்பதைப் பற்றி இறைவேதத்தில் நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன. அதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.