Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

சங்கீதம் 61:8-ல், தாவீது கடவுளுடைய பெயரைப்காலமெல்லாம்” புகழ்வேன் என்று சொன்னார். அப்படியென்றால், அவர் சாகவே மாட்டார் என்று நினைத்தாரா?

இல்லை. ஆனால், அவர் எழுதிய வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மை.

அந்த வசனத்திலும் அதுபோன்ற இன்னும் சில வசனங்களிலும் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம்: “நான் என்னுடைய நேர்த்திக்கடன்களைத் தினமும் செலுத்துவேன். உங்களுடைய பெயரைக் காலமெல்லாம் புகழ்ந்து பாடுவேன்.” “என் கடவுளாகிய யெகோவாவே, முழு இதயத்தோடு உங்களைப் புகழ்கிறேன். உங்களுடைய பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.” “உங்கள் பெயரை என்றென்றும் புகழ்வேன்.”—சங். 61:8; 86:12; 145:1, 2.

தாவீது இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது தான் சாகவே போவதில்லை என்றெல்லாம் நினைக்கவில்லை. பாவத்தால் மனுஷர்களுக்கு மரணம் வரும் என்று யெகோவா சொல்லியிருந்தது அவருக்குத் தெரியும். (ஆதி. 3:3, 17-19; சங். 51:4, 5) தான் ஒரு பாவி என்பதைக்கூட அவர் ஒத்துக்கொண்டார். கடவுளுக்குப் பிரியமானவர்களாக இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற ஆட்கள்கூட இறந்துபோய்விட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவரும்கூட ஒருநாள் இறந்துபோவார் என்றும் அவருக்குத் தெரியும். (சங். 37:25; 39:4) ஆனால் சங்கீதம் 61:8-ல் அவர் சொன்ன வார்த்தைகள், உயிரோடு இருக்கிற காலமெல்லாம் கடவுளைப் புகழ வேண்டும் என்ற ஆசையும் தீர்மானமும் அவருக்கு இருந்ததைக் காட்டுகின்றன.—2 சா. 7:12.

சங்கீதம் 18, 51 மற்றும் 52-ன் மேல்குறிப்பு காட்டுகிறபடி, தாவீது சிலசமயம் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதினார். 23-வது சங்கீதத்தில், ஆடுகளுக்கு வழிநடத்துதலையும் புத்துணர்ச்சியையும் பாதுகாப்பையும் தருகிற ஒரு மேய்ப்பர்போல் யெகோவா இருப்பதாக தாவீது சொல்லியிருக்கிறார். தாவீதும் அப்படிப்பட்ட ஒரு மேய்ப்பராகத்தான் இருந்தார். தன்னுடைய “வாழ்நாளெல்லாம்” கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.—சங். 23:6.

அதுமட்டுமல்ல, யெகோவாதான் தாவீதுக்கு அவருடைய சக்தியைக் கொடுத்து எல்லாவற்றையும் எழுத வைத்தார் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ரொம்ப நாட்களுக்கு பிறகு நடக்கப்போகும் விஷயங்களைக்கூட தீர்க்கதரிசனமாக தாவீது எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு, 110-வது சங்கீதத்தில், அவருடைய எஜமான் பரலோகத்தில் கடவுளுடைய ‘வலது பக்கத்தில் உட்காருவார்’ என்று தாவீது எழுதினார். எதிரிகளின் நடுவில் ஆட்சி செய்வதற்காகவும் பூமியில் இருக்கிற ‘எல்லா தேசங்களையும் தண்டிப்பதற்காகவும்’ அவருக்கு நிறைய அதிகாரமும் வல்லமையும் கொடுக்கப்படும் என்றும் சொன்னார். அதோடு, அவர் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார் என்றும், “என்றென்றும் குருவாக” இருப்பார் என்றும் தாவீது சொன்னார். (சங். 110:1-6) அவர்தான் தாவீதின் வம்சத்தில் வந்த மேசியா, அதாவது இயேசு. சங்கீதம் 110-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் இயேசுவைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறது என்றும், அது எதிர்காலத்தில் நிறைவேறும் என்றும் இயேசுவே சொல்லியிருக்கிறார்.—மத். 22:41-45.

முடிவாக நாம் என்ன சொல்லலாம்? தாவீது தன்னுடைய காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தில் அவர் திரும்ப உயிரோடு வந்து யெகோவாவை என்றென்றும் புகழப்போகிற அந்தக் காலத்தைப் பற்றியும் எழுதுவதற்கு யெகோவா அவரைத் தூண்டினார். இதை வைத்துப் பார்க்கும்போது, சங்கீதம் 37:10, 11, 29-ல் இருக்கிற வார்த்தைகள் அன்றைக்கு இஸ்ரவேல் காலத்திலும் நிறைவேறின, எதிர்காலத்தில் கடவுள் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும்போதும் நிறைவேறும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.—இந்த இதழில் இருக்கிற, “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்ற கட்டுரையில் பாரா 8-ஐப் பாருங்கள்.

அப்படியென்றால், சங்கீதம் 61:8-வது வசனமும், அதுபோன்ற மற்ற வசனங்களும் என்ன காட்டுகின்றன? அன்றைக்கு தாவீது சாகும்வரை யெகோவாவைப் புகழ வேண்டுமென்று ஆசைப்பட்டதைக் காட்டுகின்றன. அதோடு, எதிர்காலத்தில் யெகோவா மறுபடியும் அவரை உயிரோடு கொண்டுவரும்போது அவர் என்ன செய்வார் என்பதையும் காட்டுகின்றன.