படிப்புக் கட்டுரை 51
நெருக்கடியான சமயத்திலும் சமாதானத்தோடு இருக்க முடியும்
“நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம்.”—யோவா. 14:27.
பாட்டு 112 யெகோவா, சமாதானத்தின் கடவுள்
இந்தக் கட்டுரையில்... a
1. “தேவசமாதானம்” என்றால் என்ன, அதனால் நமக்கு என்ன நன்மை? (பிலிப்பியர் 4:6, 7)
இன்றைக்கு உலகத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாத ஒரு விதமான சமாதானம் இருக்கிறது. அதுதான் “தேவசமாதானம்.” கடவுளோடு நெருக்கமான நட்பு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கிற ஒருவிதமான மன அமைதிதான் இந்த “தேவசமாதானம்.” தேவசமாதானம் இருந்தால் நாம் ரொம்ப பாதுகாப்பாக உணர்வோம். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, கடவுளை நேசிக்கிற நல்ல நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைப்பார்கள். அதோடு, ‘சமாதானத்தின் கடவுளோடு’ நம்மால் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள முடியும். (1 தெ. 5:23) யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்தோம் என்றால் நமக்குத் தேவசமாதானம் கிடைக்கும். அப்போது, பிரச்சினை வந்தால்கூட நம்மால் பதட்டப்படாமல்... கவலைப்படாமல்... நிம்மதியாக... இருக்க முடியும்.
2. தேவசமாதானம் நமக்குக் கிடைக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
2 கொள்ளைநோய், பேரழிவு, கலவரம், துன்புறுத்தல் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகள் வரும்போது நம்மால் தேவசமாதானத்தோடு இருக்க முடியுமா? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு ரொம்ப பயமாகத்தான் இருக்கும். ஆனால் இயேசு, “நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம்” என்று தன்னுடைய சீஷர்களுக்குச் சொன்னார். (யோவா. 14:27) சந்தோஷமான விஷயம் என்னவென்றால், நிறைய சகோதர சகோதரிகள் இயேசுவின் அறிவுரையைக் கேட்டு நடந்திருக்கிறார்கள். கடுமையான சோதனைகள் வந்தபோதுகூட யெகோவாவின் உதவியோடு அவர்கள் சமாதானத்தை இழக்காமல் இருந்திருக்கிறார்கள்.
கொள்ளைநோய் சமயத்தில் எப்படிச் சமாதானமாக இருக்கலாம்?
3. பெருந்தொற்றோ அல்லது கொள்ளைநோயோ நம்முடைய சமாதானத்தை எப்படிக் கெடுக்கலாம்?
3 ஒரு கொள்ளைநோய் வந்தால் நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடலாம். அதற்கு ஒரு உதாரணம்தான் கோவிட்-19. இந்தப் பெருந்தொற்று சமயத்தில் ஜனத்தொகையில் பாதிப் பேருக்கும் அதிகமானவர்கள் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அதுமட்டுமல்ல கவலை, மன அழுத்தம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம், தற்கொலை முயற்சி, குடும்பத்தில் அடிதடி இவையெல்லாம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இந்தச் சமயத்தில் ரொம்பவே அதிகமாகிவிட்டன. நீங்கள் வாழ்கிற இடத்தில் பெருந்தொற்று பரவிக்கொண்டு வருகிறது என்றால், அளவுக்கு அதிகமாகக் கவலைப்படாமல் இருப்பதற்கும் தேவசமாதானத்தோடு இருப்பதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்?
4. கடைசி நாட்களைப் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தைத் தெரிந்துகொள்வது நமக்கு ஏன் சமாதானத்தைக் கொடுக்கிறது?
4 கடைசி நாட்களில், ‘அடுத்தடுத்து பல இடங்களில் கொள்ளைநோய்கள்’ வரும் என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். (லூக். 21:11) இதைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படிச் சமாதானத்தை கொடுக்கிறது? கொள்ளைநோய் பரவுகிற செய்தியைக் கேட்டு நாம் அதிர்ச்சி அடைவதில்லை. ஏனென்றால், இயேசு சொன்னதுதான் அப்படியே நடக்கிறது என்று நமக்குத் தெரியும். அதனால், “திகிலடையாதீர்கள்” என்று கடைசி நாட்களில் வாழ்பவர்களுக்கு இயேசு சொன்ன அறிவுரைப்படி நாம் நடக்கிறோம்.—மத். 24:6.
5. (அ) பிலிப்பியர் 4:8, 9 சொல்கிறபடி, கொள்ளைநோய் பரவும்போது நாம் எதற்காக ஜெபம் பண்ண வேண்டும்? (ஆ) பைபிள் ஆடியோவைக் கேட்பதால் நமக்கு என்ன நன்மை?
5 ஒரு பெருந்தொற்று பரவிக்கொண்டிருக்கிறது என்றால் அடுத்து என்ன நடக்குமோ என்று நமக்குப் பயமாக இருக்கும், ரொம்ப பதட்டமாகக்கூட இருக்கும். டெய்ஸி என்ற சகோதரிக்கு இதுதான் நடந்தது. b அவருடைய சித்தப்பாவும், பெரியப்பா பையனும், டாக்டரும் கொரோனாவால் இறந்துவிட்டார்கள். அதனால், தனக்கும் கொரோனா வந்துவிடும் என்று அந்தச் சகோதரி பயந்தார். தனக்கு வந்தால் தன்னுடைய வயதான அம்மாவுக்கும்கூட வந்துவிடுமோ என்றும் அவர் பயந்தார். கொரோனா காரணமாக வேலை போய்விட்டால் சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் என்ன பண்ணுவது என்று கவலைப்பட்டார். இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவருக்கு ராத்திரியெல்லாம் தூக்கம்கூட வரவில்லை. ஆனால், இழந்துபோன சமாதானம் டெய்ஸிக்கு மறுபடியும் கிடைத்தது. எப்படி? பதட்டப்படாமல் இருப்பதற்கும், நம்பிக்கையான விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்கும் உதவி செய்யச் சொல்லி யெகோவாவிடம் குறிப்பாக ஜெபம் பண்ணினார். (பிலிப்பியர் 4:8, 9-ஐ வாசியுங்கள்.) அவர் பைபிள் ஆடியோவைப் போட்டுக் கேட்டார். அதைக் கேட்டபோது, யெகோவாவே அவரிடம் பேசிய மாதிரி அவருக்கு இருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “ஆடியோல வந்த குரலெல்லாம் கேக்கறதுக்கு ரொம்ப இதமா இருந்ததுனால என் மனசு லேசாச்சு. யெகோவா என் மேல அக்கறையா இருக்காருங்கறத அது எனக்கு ஞாபகப்படுத்துச்சு” என்று சொல்கிறார்.—சங். 94:19.
6. தனிப்பட்ட படிப்பு படிப்பதும் கூட்டங்களில் கலந்துகொள்வதும் உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?
6 நீங்கள் இருக்கிற இடத்தில் கொள்ளைநோய் பரவ ஆரம்பித்தால், எப்போதும் செய்வதுபோல் உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், தனிப்பட்ட படிப்பு படிப்பதையும் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே பிரச்சினைகள் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் யெகோவாவுக்கு எப்படி உண்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நம்முடைய பிரசுரங்களிலும் வீடியோக்களிலும் பாருங்கள். (1 பே. 5:9) பைபிளில் இருக்கிற நம்பிக்கையான விஷயங்களால் உங்களுடைய மனதை நிரப்ப கூட்டங்கள் உங்களுக்கு உதவி செய்யும். அதுமட்டுமல்ல, கூட்டங்களுக்குப் போனால் உங்களுக்கு உற்சாகம் கிடைக்கும். மற்றவர்களையும் உங்களால் உற்சாகப்படுத்த முடியும். (ரோ. 1:11, 12) சகோதர சகோதரிகள் உடம்பு முடியாமல் இருக்கிறபோது... பயந்துபோயிருக்கிறபோது... தனிமையில் வாடுகிறபோது... யெகோவா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் உங்களுடைய விசுவாசம் பலமாகும். யெகோவா உங்களுக்கும் உதவி செய்வார் என்பதை நீங்கள் முழுமையாக நம்புவீர்கள்.
7. அப்போஸ்தலன் யோவானிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7 சகோதர சகோதரிகளோடு எப்போதுமே தொடர்பில் இருங்கள். ஒரு கொள்ளைநோய் பரவிக்கொண்டிருக்கும்போது, சகோதர சகோதரிகளிடம்கூட நாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அந்த மாதிரி சமயத்தில் அப்போஸ்தலன் யோவானைப் போல நீங்கள் உணரலாம். அவர் தன்னுடைய நண்பர் காயுவை நேரில் பார்க்க ஆசைப்பட்டார். (3 யோ. 13, 14) ஆனால், அப்போதைக்கு அவரைப் பார்க்க முடியாது என்பதை யோவான் புரிந்துகொண்டார். அதனால், அந்தச் சமயத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். காயுவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். உங்களாலும் சகோதர சகோதரிகளை நேரில் பார்க்க முடியவில்லை என்றால், அவர்களிடம் ஃபோன் மூலமாகவோ வீடியோ-கால் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ பேசுங்கள். இப்படி, சகோதர சகோதரிகளுடன் நீங்கள் தொடர்பில் இருந்தீர்கள் என்றால் தனியாக இருப்பதாக நினைத்துப் பதட்டப்படாமல் மன அமைதியோடு இருப்பீர்கள். உங்களுக்கு ரொம்ப கவலையாக இருந்தால் மூப்பர்களிடம் பேசுங்கள். உங்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்கள் அன்பாகச் செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்.—ஏசா. 32:1, 2.
பேரழிவு சமயத்தில் எப்படிச் சமாதானமாக இருக்கலாம்?
8. ஒரு பேரழிவு உங்கள் நிம்மதியை எப்படிக் கெடுக்கலாம்?
8 வெள்ளத்தாலோ நிலநடுக்கத்தாலோ தீ விபத்தாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், ரொம்ப நாளுக்கு கவலை உங்களுடைய மனதை உருக்கியிருக்கலாம். அதுவும், பாசமானவர்களையும், வீடுவாசலையும் இழந்திருந்தீர்கள் என்றால் தாங்க முடியாத வலியையும் வேதனையையும் நீங்கள் அனுபவித்திருக்கலாம், உங்களுக்குக் கோபம் கோபமாகக்கூட வந்திருக்கலாம். அதற்காக, நீங்கள் பண ஆசைபிடித்தவர் என்றோ உங்களுக்கு விசுவாசமே இல்லை என்றோ அர்த்தம் கிடையாது. இந்த மாதிரி சோதனை வரும்போது நாம் இடிந்துபோவது இயல்புதான். இது மற்றவர்களுக்கும் தெரியும். (யோபு 1:11) ஆனாலும், உங்களால் மன சமாதானத்தோடு இருக்க முடியும். எப்படி?
9. பேரழிவுகளைச் சந்திப்பதற்கு இயேசு நம்மை எப்படித் தயார்படுத்தியிருக்கிறார்?
9 இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை யோசித்துப் பாருங்கள். இந்த உலகத்துக்கு முடிவு வருவதற்கு முன்னால் ‘பெரிய நிலநடுக்கங்களும்’ மற்ற பேரழிவுகளும் வரும் என்று சீஷர்களிடம் அவர் சொன்னார். (லூக். 21:11) உலகத்தில் இருக்கிற மக்கள் தாங்கள் ஒரு பேரழிவில் சிக்குவார்கள் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால், இயேசு சொன்னது நமக்குத் தெரிந்ததால் பேரழிவுகள் நாளுக்கு நாள் அதிகமாகும் என்றும், சில பேரழிவுகள் நம்மைப் பாதிக்கலாம் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். ‘அக்கிரமம் அதிகமாகும்’ என்றும்கூட இயேசு தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். (மத். 24:12) அவர் சொன்ன மாதிரியே எங்கே பார்த்தாலும் குற்றச்செயலும், வன்முறையும், தீவிரவாத தாக்குதலும்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட பேரழிவுகளிலும் அக்கிரமங்களிலும் யெகோவாவை வணங்காதவர்கள்தான் சிக்குவார்கள் என்று இயேசு சொல்லவே இல்லை. சொல்லப்போனால் யெகோவாவின் ஊழியர்களில் நிறையப் பேர் இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். (ஏசா. 57:1; 2 கொ. 11:25) எல்லா விதமான அழிவிலிருந்தும் யெகோவா நம்மை அற்புதமாக காப்பாற்றுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், பதட்டப்படாமல் மன அமைதியோடு இருப்பதற்கு நமக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் தருவார் என்று நாம் நம்பலாம்.
10. பேரழிவுக்காக இப்போதே தயாராகும்போது யெகோவாவை நம்புகிறோம் என்று எப்படிக் காட்டுகிறோம்? (நீதிமொழிகள் 22:3)
10 திடீரென்று ஒரு பேரழிவு வரும்போது நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக முன்கூட்டியே தயாராவது முக்கியம். ஆனால், அப்படித் தயாராவதால் யெகோவாமேல் நமக்கு நம்பிக்கையே இல்லை என்று அர்த்தமா? கிடையவே கிடையாது. இப்படித் தயாராகும்போது யெகோவா நம்மைப் பார்த்துக்கொள்வார் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறோம். இப்படி, பேரழிவைச் சமாளிப்பதற்கு முன்கூட்டியே தயாராகும்படிதான் கடவுளுடைய வார்த்தையும் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3-ஐ வாசியுங்கள்.) கட்டுரைகள்... கூட்டங்கள்... அறிவிப்புகள்... மூலமாக இப்படிப்பட்ட அவசர நிலைக்காக நம்மைத் தயாராகச் சொல்லி கடவுளுடைய அமைப்பு திரும்பத் திரும்பச் சொல்கிறது. c நாம் யெகோவாவை நம்புகிறோமா? அப்படியென்றால் இப்போதே, பேரழிவு வருவதற்கு முன்பாகவே, அவருடைய அமைப்பு தரும் அறிவுரையைக் கேட்டு நடப்போம்.
11. மார்கரெட்டின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
11 மார்கரெட் என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் இருந்த ஏரியாவில் காட்டுத் தீ பரவியதால் எல்லாரையும் உடனடியாகக் கிளம்பிச் சொல்லி அதிகாரிகள் சொன்னார்கள். எல்லாரும் ஒரே சமயத்தில் கிளம்பியதால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டிகள் எதுவும் சுத்தமாக நகரவே இல்லை. எங்கே பார்த்தாலும் கண்ணங்கறேல் என்று புகையாக இருந்தது. அதனால், கொஞ்ச நேரத்துக்கு மார்கரெட் காரிலிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டார். ஆனால், அந்தப் பேரழிவிலிருந்து அவர் தப்பித்துவிட்டார். ஏனென்றால், முன்கூட்டியே அதற்காக அவர் தயாராக இருந்தார். இந்த மாதிரி அவசர ஆபத்து வரும்போது எந்த வழியில் தப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்வதற்கு அவருடைய பர்ஸில் ஒரு வரைபடத்தை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, முன்கூட்டியே அந்த வழியில் போய்வந்து அந்த ரூட்டை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். இப்படி அவர் முன்கூட்டியே தயாராக இருந்ததால், அந்தப் பேரழிவிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்தது.
12. பாதுகாப்புக்காக நமக்குக் கிடைக்கிற எச்சரிப்புகளுக்கு நாம் ஏன் கீழ்ப்படிகிறோம்?
12 நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு போடலாம். நாம் இருக்கிற இடத்தைவிட்டு அவர்கள் நம்மை வெளியேறச் சொல்லலாம். அல்லது, வேறு ஏதாவது செய்யச் சொல்லலாம். சிலர் அரசாங்கம் சொல்வதற்கு உடனடியாகக் கீழ்ப்படிவதில்லை. ஏனென்றால், தங்களுடைய சொத்துபத்துக்களை எல்லாம் விட்டுவிட்டுப் போவதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? “அதிகாரத்தில் இருக்கிற எல்லாருக்கும், எஜமானை முன்னிட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ராஜாவாக இருந்தாலும் சரி, . . . அவரால் அனுப்பப்பட்ட ஆளுநராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்” என்று பைபிள் சொல்கிற ஆலோசனைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். (1 பே. 2:13, 14) நம்மைப் பாதுகாப்பதற்காகக் கடவுளுடைய அமைப்பும் நமக்கு வழிநடத்துதல் கொடுக்கிறது. அவசர நிலை வரும்போது மூப்பர்கள் நம்மைத் தொடர்புகொள்வதற்காக நம்முடைய போன் நம்பரையும் முகவரியையும் மூப்பர்களிடம் இப்போதே கொடுத்து வைக்கச் சொல்லி அமைப்பு திரும்பத் திரும்பச் சொல்கிறது. நீங்கள் கொடுத்துவிட்டீர்களா? ஏதாவது அவசர நிலை வரும்போது அமைப்பு நமக்கு வேறு சில ஆலோசனைகளைக்கூடச் சொல்லலாம். வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லலாம். இருக்கிற இடத்தைவிட்டு வெளியேறச் சொல்லலாம். நிவாரண உதவிகள் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்போது, எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக்கூடச் சொல்லலாம். அதற்கெல்லாம் நாம் கீழ்ப்படியவில்லை என்றால் நம்முடைய உயிருக்கும் ஆபத்து, மூப்பர்களுடைய உயிருக்கும் ஆபத்து. நம்மைப் பார்த்துக்கொள்வதற்கு இவர்களைத்தான் யெகோவா நியமித்திருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். (எபி. 13:17) இதைப் பற்றி மார்கரெட் சொல்லும்போது, “மூப்பர்களும் அமைப்பும் கொடுத்த ஆலோசனைக்கு கீழ்ப்படிஞ்சதாலதான் நான் உயிர் தப்பிச்சேங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல” என்று சொல்கிறார்.
13. ஊரைவிட்டுப் போன நிறைய சகோதர சகோதரிகளுக்கு எது சந்தோஷத்தையும் மன சமாதானத்தையும் கொடுத்திருக்கிறது?
13 பேரழிவாலோ போராலோ உள்நாட்டுக் கலவரத்தாலோ நிறைய சகோதர சகோதரிகள் தங்களுடைய ஊரைவிட்டே போயிருக்கிறார்கள். அப்படிப் போனவர்கள், புது சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வதற்கும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யெகோவாவின் சேவையை ஆரம்பிப்பதற்கும் தங்களால் முடித்த எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். துன்புறுத்தலால் சிதறிப்போன முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, “கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை” தொடர்ந்து மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். (அப். 8:4) பிரசங்க வேலை செய்வதால், தங்களுடைய கஷ்டங்களைப் பற்றியே யோசிக்காமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களால் யோசிக்க முடிகிறது. அதனால், அவர்களால் சந்தோஷத்தோடும் மன சமாதானத்தோடும் இருக்க முடிகிறது.
துன்புறுத்தப்படும்போது எப்படி சமாதானமாக இருக்கலாம்?
14. துன்புறுத்தல் நம்முடைய சமாதானத்தை எப்படிக் கெடுத்துப்போட்டுவிடலாம்?
14 கைது செய்துவிடுவார்கள் என்ற பயமில்லாமல் சுதந்திரமாக கூட்டங்களுக்கும் பொது ஊழியத்துக்கும் போகும்போது... மற்ற ஆன்மீக விஷயங்களைச் செய்யும்போது... நமக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். ஆனால், துன்புறுத்தல் வந்துவிட்டது என்றால் இந்தச் சுதந்திரமெல்லாம் பறிபோய்விடும், மன சமாதானத்தையும் நிம்மதியையும் நாம் இழந்துவிடலாம். அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையிலும் பயத்திலும் நாம் மூழ்கிவிடலாம். இது இயல்புதான். ஆனாலும், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், துன்புறுத்தல் வரும்போது சீஷர்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று இயேசு சொல்லியிருக்கிறார். (யோவா. 16:1, 2) அப்படியென்றால், துன்புறுத்தல் வரும்போது நாம் எப்படி மன சமாதானத்தோடு இருக்கலாம்?
15. துன்புறுத்தலை நினைத்து நாம் ஏன் பயப்படக் கூடாது? (யோவான் 15:20; 16:33)
15 “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:12) இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஆன்ட்ரே என்ற சகோதரருக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் வாழ்ந்த நாட்டில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டபோது, ‘இங்க எத்தன சாட்சிகள் இருக்காங்க. இவங்க எல்லாரையும் அதிகாரிகளால எப்படி கைது செய்ய முடியும்?’ என்று அவர் யோசித்தார். கைது செய்ய முடியாது என்று யோசித்ததால் அவருக்கு மன சமாதானம்தானே கிடைத்திருக்க வேண்டும்? ஆனால் உண்மையில், அவருக்குக் கவலை இன்னும் அதிகம்தான் ஆனது. மற்ற சகோதரர்கள், பிரச்சினையை யெகோவாவின் கையில் விட்டுவிட்டார்கள். தங்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தாலும் அவர்கள் ஆன்ட்ரே அளவுக்குக் கவலைப்படவில்லை. அதனால், அவர்களைப் போல் யோசிப்பதற்கும் யெகோவாவை முழுமையாக நம்புவதற்கும் ஆன்ட்ரே முடிவு பண்ணினார். அப்படிச் செய்ததால் அவருக்கும் மன சமாதானம் கிடைத்தது. இப்போது, பிரச்சினைகள் இருந்தாலும் அவர் சந்தோஷமாக இருக்கிறார். நாமும் இந்தச் சகோதரர்கள் மாதிரி நடந்துகொள்ளும்போது நமக்கு மன சமாதானம் கிடைக்கும். நமக்கு துன்புறுத்தல் வரும் என்று இயேசு சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், நம்மால் உண்மையாக இருக்க முடியும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.—யோவான் 15:20; 16:33-ஐ வாசியுங்கள்.
16. துன்புறுத்தல் இருக்கும்போது நாம் எந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
16 அரசாங்கம் நம்முடைய வேலைக்குக் கட்டுப்பாடோ தடையோ போடும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று கிளை அலுவலகமும் மூப்பர்களும் நமக்குச் சொல்லலாம். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்... நமக்கு ஆன்மீக உணவு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்... முடிந்தளவுக்கு நாம் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும்... என்பதற்காகத்தான் அவர்கள் அதையெல்லாம் சொல்வார்கள். அவர்கள் ஏதாவது ஆலோசனை கொடுக்கும்போது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ அதற்கு அப்படியே கீழ்ப்படியுங்கள். (யாக். 3:17) அதோடு, நம் சகோதர சகோதரிகளைப் பற்றியும் சபை விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவசியம் இல்லாதவர்களிடம் அதையெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள்.—பிர. 3:7.
17. முதல் நூற்றாண்டில் இருந்த அப்போஸ்தலர்களைப் போலவே என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?
17 சாத்தான் கடவுளுடைய மக்களுக்கு எதிராகப் போர் செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர்கள் ‘இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்வதுதான்.’ (வெளி. 12:17) சாத்தானையும் அவனுடைய உலகத்தையும் நினைத்துப் பயப்படாதீர்கள். எதிர்ப்பு வந்தாலும் நாம் ஊழியம் செய்யும்போது நமக்கு சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கும். பிரசங்கிக்கக் கூடாது என்று முதல் நூற்றாண்டில் இருந்த அப்போஸ்தலர்களுக்கு யூத அதிகாரிகள் கட்டளை போட்டார்கள். ஆனாலும், அப்போஸ்தலர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தொடர்ந்து பிரசங்கித்தார்கள். அதனால், அவர்களுக்கு சந்தோஷம் கிடைத்தது. (அப். 5:27-29, 41, 42) நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும்போது ஊழியத்தை ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும் என்பது உண்மைதான். (மத். 10:16) ஆனால், ஊழியம் செய்வதற்கு நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது கடவுளைச் சந்தோஷப்படுத்துவோம். மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிற வேலையைச் செய்கிறோம் என்ற நிம்மதியும் நமக்குக் கிடைக்கும்.
“சமாதானத்தின் கடவுள் உங்களோடு இருப்பார்”
18. யாரால் மட்டும்தான் உண்மையான சமாதானத்தைக் கொடுக்க முடியும்?
18 நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தில் இருந்தாலும் சரி, நம்மால் மன சமாதானத்தோடு இருக்க முடியும் என்று நாம் நம்பிக்கையாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில் நமக்குத் தேவசமாதானம்தான் தேவை. அதை யெகோவாவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதனால், கொள்ளைநோயோ பேரழிவோ துன்புறுத்தலோ வரும்போது அவரையே நம்பியிருங்கள். அவருடைய அமைப்பை உடும்பு மாதிரி பிடித்துக்கொள்ளுங்கள். வரப்போகிற அருமையான எதிர்காலத்துக்காக ஆசையாகக் காத்துக்கொண்டிருங்கள். அப்படியெல்லாம் செய்யும்போது, “சமாதானத்தின் கடவுள் உங்களோடு இருப்பார்.” (பிலி. 4:9) அடுத்த கட்டுரையில், கஷ்டங்கள் வந்தாலும் தேவசமாதானத்தோடு இருக்க சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
a யெகோவா தன்னை நேசிக்கிறவர்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். கடவுள் கொடுக்கிற சமாதானம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? கொள்ளைநோயோ, பேரழிவோ, துன்புறுத்தலோ வரும்போது அவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு “தேவசமாதானம்” நமக்கு எப்படி உதவி செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதில் தெரிந்துகொள்வோம்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
c “பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?” என்ற கட்டுரையை 2017-ல் வந்த விழித்தெழு! எண் 5-ல் பாருங்கள்.