படிப்புக் கட்டுரை 28
உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்
“நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி.”—2 தீ. 3:14.
பாட்டு 64 சத்யத்தை நெஞ்சில் வை
இந்தக் கட்டுரையில்... *
1. எதை ‘சத்தியம்’ என்று சொல்கிறோம்?
“நீங்க எப்படி சத்தியத்துக்கு வந்தீங்க?” “பிறந்ததிலிருந்தே நீங்க சத்தியத்தில இருக்கீங்களா?” “நீங்க சத்தியத்துக்கு வந்து எத்தனை வருஷங்கள் ஆச்சு?” இதுபோன்ற கேள்விகளை உங்களிடம் யாராவது கேட்டிருக்கலாம் அல்லது நீங்கள் யாரிடமாவது கேட்டிருக்கலாம். அப்படியென்றால், ‘சத்தியம்’ என்று எதை சொல்கிறோம்? நம்முடைய நம்பிக்கைகள், வழிபாடு, நாம் வாழ்கிற விதம் ஆகியவற்றைத்தான்! சத்தியத்தில் இருக்கிறவர்கள் பைபிளில் இருக்கிற உண்மைகளைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பார்கள். அதிலிருக்கிற நியமங்களின்படி வாழ்வார்கள். அதனால், பொய் மதத்தின் இரும்புப் பிடியிலிருந்து அவர்களால் வெளியேவர முடிந்திருக்கிறது. இந்த மோசமான உலகத்திலும் சந்தோஷமாக வாழ முடிகிறது.—யோவா. 8:32.
2. யோவான் 13:34, 35-ன்படி, முதன்முதலாகக் கூட்டத்துக்கு வருபவர்களுக்கு பொதுவாக எது ரொம்பப் பிடிக்கிறது?
2 நீங்கள் சத்தியத்துக்கு வந்ததற்கு என்ன காரணம், எது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது? ஒருவேளை, யெகோவாவின் சாட்சிகளுடைய நல்ல நடத்தையைப் பார்த்து நீங்கள் சத்தியத்துக்கு வந்திருக்கலாம். (1 பே. 2:12) இல்லையென்றால், அவர்கள் காட்டிய அன்பைப் பார்த்து வந்திருக்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஏனென்றால், அன்புதான் தன்னுடைய சீஷர்களின் அடையாளமாக இருக்கும் என்று இயேசு சொன்னார். (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.) முதன்முதலாகக் கூட்டத்துக்கு வருகிற நிறைய பேருக்கு அங்கே கொடுக்கப்படுகிற பேச்சுகள் மனதில் பதியவில்லை என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் காட்டுகிற அன்பு அவர்களுடைய மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுகிறது. ஆனால், பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு அது மட்டுமே போதாது.
3. சகோதர சகோதரிகள் காட்டுகிற அன்பை வைத்து மட்டுமே உங்கள் விசுவாசத்தைக் கட்டினால், என்ன ஆகலாம்?
3 யெகோவாவின் மக்கள், கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்டுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உங்கள் விசுவாசம் என்ற வீட்டைக் கட்டுவதற்கு அது மட்டுமே அஸ்திவாரமாக இருக்கக் கூடாது. ஏன்? ஒருவேளை, ஒரு மூப்பரோ பயனியரோ அல்லது வேறொரு சகோதரரோ சகோதரியோ மோசமான பாவத்தைச் செய்துவிடலாம். அல்லது, ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைப் புண்படுத்திவிடலாம். சிலசமயங்களில், ரோ. 12:2.
நம்மிடம் சத்தியம் இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் விசுவாசதுரோகிகளாக மாறிவிடலாம். உங்கள் விசுவாசத்துக்கு அன்பு மட்டுமே அஸ்திவாரமாக இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன ஆகலாம்? இதையெல்லாம் பார்த்து நீங்கள் நிலைதடுமாறி, யெகோவாவைவிட்டே போய்விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதிலிருந்து என்ன பாடம்? உங்கள் விசுவாசம் என்ற வீட்டை, யெகோவாவுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கிற பந்தத்தின் அடிப்படையில் கட்டாமல், வெறுமனே மற்றவர்கள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்து கட்டினால், அது ஆட்டம்கண்டுவிடும். விசுவாசம் என்ற வீட்டை, உணர்ச்சிகள் என்ற மென்மையான பொருள்களை வைத்துக் கட்டாதீர்கள்! பைபிளில் இருக்கிற உண்மைகள் என்ற பலமான பொருள்களை வைத்துக் கட்டுங்கள்!! யெகோவாவைப் பற்றிய உண்மைகள் பைபிளில் இருக்கின்றன என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.—4. மத்தேயு 13:3-6, 20, 21-ன்படி, சோதனைகள் தாக்கும்போது சிலருக்கு என்ன ஆகலாம்?
4 சிலர் சத்தியத்தை “சந்தோஷமாக” ஏற்றுக்கொள்வார்கள் என்றும், ஆனால் சோதனைகள் தாக்கும்போது அவர்களுடைய விசுவாசம் வாடி வதங்கிவிடும் என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 13:3-6, 20, 21-ஐ வாசியுங்கள்.) ஏன் இப்படி நடக்கலாம்? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்குச் சோதனைகளும் கஷ்டங்களும் வரும் என்பது அவர்களுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். (மத். 16:24) இல்லையென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையை அவர்கள் ‘ரோஜா படுக்கை’ என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதில் முட்களும் இருக்கும் என்பது அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்த மோசமான உலகத்தில் நாம் வாழ்வதால், பிரச்சினைகள் நம்மைத் தாக்கும் என்பதுதான் யதார்த்தம். சூழ்நிலைகள் மாறலாம், அதனால் நம்முடைய சந்தோஷம் கொஞ்சம் குறைந்துவிடலாம்!—சங். 6:6; பிர. 9:11.
5. சகோதர சகோதரிகளில் ஏராளமான பேர், தங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதை எப்படி நிரூபித்திருக்கிறார்கள்?
5 நம்முடைய சகோதர சகோதரிகளில் ஏராளமான பேர், தங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதில் நிச்சயமாக இருக்கிறார்கள். இதை அவர்கள் எப்படி நிரூபித்திருக்கிறார்கள்? சகோதர சகோதரிகள் யாராவது தங்களைப் புண்படுத்திவிட்டால் அல்லது மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், தங்களுடைய விசுவாசம் ஆட்டம்காணுவதற்கு அவர்கள் விடுவதில்லை. (சங். 119:165) ஒவ்வொரு சோதனை தாக்கும்போதும், அவர்களுடைய விசுவாசம் பலமாகிக்கொண்டே போகிறதே தவிர, பலவீனமாவது இல்லை. (யாக். 1:2-4) அப்படிப்பட்ட பலமான விசுவாசத்தை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
‘[கடவுளை] பற்றிய திருத்தமான அறிவை’ பெற்றுக்கொள்ளுங்கள்
6. முதல் நூற்றாண்டு சீஷர்கள் எதன் அடிப்படையில் தங்கள் விசுவாசத்தைக் கட்டினார்கள்?
6 முதல் நூற்றாண்டு சீஷர்கள், வேதவசனங்களின் அடிப்படையிலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய போதனைகளின் அடிப்படையிலும், அதாவது ‘நல்ல செய்தியின் சத்தியத்தின்’ அடிப்படையிலும், தங்கள் விசுவாசத்தைக் கட்டினார்கள். (கலா. 2:5) இந்தச் சத்தியத்தில், இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலி மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் உட்பட கிறிஸ்தவ போதனைகள் எல்லாமே அடங்குகின்றன. இந்த எல்லா விஷயங்களும் உண்மைதான் என்பதை அப்போஸ்தலன் பவுல் நிச்சயப்படுத்திக்கொண்டார். எப்படிச் சொல்கிறோம்? “கிறிஸ்து பாடுகள் படுவதும், பின்பு உயிரோடு எழுந்திருப்பதும் அவசியமாக இருந்ததென்று . . . மேற்கோள்கள்” காட்டி விளக்குவதற்கு அவர் வேதவசனங்களைப் பயன்படுத்தினார். (அப். 17:2, 3) முதல் நூற்றாண்டு சீஷர்கள் இந்தப் போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள். கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய சக்தியை நம்பியிருந்தார்கள். இந்தப் போதனைகள் வேதவசனங்களின் அடிப்படையில்தான் இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். (அப். 17:11, 12; எபி. 5:14) அவர்கள் வெறுமனே உணர்ச்சிகளின் அடிப்படையில் தங்களுடைய விசுவாசத்தைக் கட்டவில்லை. சகோதர சகோதரிகளோடு சேர்ந்திருப்பது தங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது என்பதற்காக மட்டும் அவர்கள் யெகோவாவை வணங்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘[கடவுளை] பற்றிய திருத்தமான அறிவின்’ அடிப்படையில், தங்கள் விசுவாசம் என்ற வீட்டைக் கட்டினார்கள்.—கொலோ. 1:9, 10.
7. பைபிள் சத்தியங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட விசுவாசம் நம்மை எப்படித் தாங்கிப்பிடிக்கும்?
7 பைபிள் சத்தியங்கள் என்றுமே மாறாதவை! (சங். 119:160) ஆனால், சூழ்நிலைகள் மாறலாம். உதாரணத்துக்கு, ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைப் புண்படுத்திவிடலாம் அல்லது மோசமான பாவத்தைச் செய்துவிடலாம். இல்லையென்றால், பிரச்சினைகள் உங்களைப் பாடாய்ப்படுத்தலாம். இப்படி, சூழ்நிலைகள் மாறினாலும் பைபிள் சத்தியங்கள் என்றுமே மாறாது. அதனால், பைபிள் போதனைகளை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதுதான் சத்தியம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். சூறாவளி தாக்கும்போது நங்கூரம் எப்படி ஒரு கப்பலைத் தாங்கிப்பிடிக்கிறதோ, அதேபோல் சோதனைகள் நம்மைத் தாக்கும்போது, பைபிள் போதனைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட விசுவாசம் நம்மைத் தாங்கிப்பிடிக்கும். உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை இன்னும் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
நீங்கள் கற்றுக்கொண்டவை சத்தியம்தான் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்
8. இரண்டு தீமோத்தேயு 3:14, 15 சொல்வதுபோல், தன்னிடம் இருப்பது சத்தியம்தான் என்பதை தீமோத்தேயு எப்படி நிச்சயப்படுத்திக்கொண்டார்?
8 தன்னிடம் சத்தியம் இருக்கிறது என்பதை தீமோத்தேயு உறுதியாக நம்பினார். எதை வைத்து அவர் அப்படி நம்பினார்? (2 தீமோத்தேயு 3:14, 15-ஐ வாசியுங்கள்.) அவருடைய அம்மாவும் பாட்டியும் “பரிசுத்த எழுத்துக்களை” அவருக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். அதேசமயத்தில், நேரமும் முயற்சியும் எடுத்து அவரும் அவற்றை ஆழமாகப் படித்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், அவற்றில் சத்தியம் இருக்கிறது என்பதை அவர் நிச்சயப்படுத்திக்கொண்டார். பிற்பாடு, தீமோத்தேயுவும் அவருடைய அம்மாவும் பாட்டியும் கிறிஸ்தவ போதனைகளைக் கற்றுக்கொண்டார்கள். இயேசுவின் சீஷர்கள் காட்டிய அன்பு தீமோத்தேயுவின் மனதைக் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு, சகோதர சகோதரிகளோடு பழகுவதும் அவர்களுக்கு உதவுவதும் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கும்! (பிலி. 2:19, 20) ஆனால், தன்னுடைய விசுவாசம் என்ற வீட்டை, சகோதர சகோதரிகள் காட்டிய அன்பை மட்டுமே அஸ்திவாரமாக வைத்து அவர் கட்டவில்லை. பைபிள் சத்தியங்களை அஸ்திவாரமாக வைத்துதான் கட்டினார். இந்தச் சத்தியங்கள்தான் யெகோவாவின் நண்பராவதற்கு அவருக்கு உதவின. இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்? பைபிளிலிருந்து யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்ட விஷயங்களெல்லாம் உண்மைதான் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
9. நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டிய மூன்று அடிப்படை உண்மைகள் என்ன?
9 இதைச் செய்வதற்கு, குறைந்தபட்சம் மூன்று அடிப்படை உண்மைகளை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்று, யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (யாத். 3:14, 15; எபி. 3:4; வெளி. 4:11) இரண்டு, பைபிள் என்பது மனிதர்களுக்காக கடவுள் கொடுத்த புத்தகம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (2 தீ. 3:16, 17) மூன்று, தன்னை வணங்குவதற்காக கிறிஸ்துவின் தலைமையின் கீழ் செயல்படுகிற ஒரு தொகுதியை யெகோவா ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதையும், யெகோவாவின் சாட்சிகள்தான் அந்தத் தொகுதி என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (ஏசா. 43:10-12; யோவா. 14:6; அப். 15:14) இதையெல்லாம் செய்வதற்கு, பைபிளை அக்குவேறு ஆணிவேறாக தெரிந்துவைத்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. “சிந்திக்கும் திறனைப்” பயன்படுத்தி உங்களிடம் இருப்பது சத்தியம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்!—ரோ. 12:1.
மற்றவர்களும் நிச்சயப்படுத்திக்கொள்ள உதவுங்கள்
10. சத்தியத்தைத் தெரிந்துகொள்வதோடு வேறு எதையும் செய்ய வேண்டும்?
10 முந்தின பாராவில் பார்த்த மூன்று உண்மைகளை நிச்சயப்படுத்திக்கொண்டதற்குப் பிறகு, நீங்கள் இன்னொன்றையும் செய்ய வேண்டும். அதாவது, இந்த விஷயங்களை மற்றவர்கள் நம்புமளவுக்கு பைபிளிலிருந்து வசனங்களை எடுத்துச் சொல்கிற திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஏன் முக்கியம்? கிறிஸ்தவர்களான நமக்கு, நாம் தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற பொறுப்பு இருக்கிறது. * (1 தீ. 4:16) இந்தச் சத்தியங்களை மற்றவர்கள் நம்புகிற விதத்தில் எடுத்துச் சொல்லும்போது, நம்முடைய நம்பிக்கை இன்னும் பலமாகிறது.
11. மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்?
11 அப்போஸ்தலன் பவுல் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்று இப்போது பார்க்கலாம். மோசேயின் திருச்சட்டத்திலிருந்தும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப் பற்றிய விஷயங்களை மற்றவர்கள் நம்பும் விதத்தில் அவர் விளக்கிச் சொன்னார். (அப். 28:23) நாம் எப்படி பவுலைப் போலவே கற்றுக்கொடுக்கலாம்? பைபிளில் என்னென்ன சத்தியங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லிக்கொண்டே போனால் மட்டும் போதாது. அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் அவற்றை ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்கும் நாம் உதவ வேண்டும். அப்போதுதான், அவர்களால் யெகோவாவிடம் நெருங்கிவர முடியும். வெறுமனே நம்மேல் இருக்கிற மரியாதையாலோ பாசத்தாலோ அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவாவைப் பற்றி அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மைதான் என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
12-13. பிள்ளைகள் சத்தியத்தில் நிலைத்திருக்க பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
12 பெற்றோர்களே! உங்கள் அருமைச் செல்வங்கள் சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு நிச்சயம் இருக்கும். சபையில் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தால், அவர்கள் சத்தியத்தில் முன்னேறுவார்கள் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால், தங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதை உங்கள் பிள்ளைகள் நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு, வெறுமனே சபையில் இருப்பவர்களோடு நட்பு வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. யெகோவாவோடும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்! பைபிள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்!!
13 கடவுளைப் பற்றிய சத்தியங்களை உங்கள் அருமைச் செல்வங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் பைபிளை நன்றாகப் படிப்பதன் மூலம் அவர்களுக்கு முன்மாதிரி வைக்க வேண்டும். நீங்கள் தெரிந்துகொண்டதை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். அப்போதுதான், அதேபோல் செய்யும்படி உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் சொல்ல முடியும். மற்றவர்களுக்கு பைபிள் சொல்லித்தரும்போது என்ன செய்வீர்களோ, அதை உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும் செய்ய வேண்டும். அதாவது, பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கு அமைப்பு தந்திருக்கிற எல்லா கருவிகளையும் பயன்படுத்துவதற்குப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அப்படிச் செய்யும்போது, யெகோவாவை நேசிக்கவும், பைபிளைப் புரிந்துகொள்ள ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ யெகோவா பயன்படுத்துகிறார் என்று நம்பவும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவ முடியும். (மத். 24:45-47) அன்பான பெற்றோர்களே! உங்கள் பிள்ளைச் செல்வங்களுக்கு பைபிளில் இருக்கிற அடிப்படைச் சத்தியங்களைச் சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்திவிடாதீர்கள். அவர்களுடைய வயதுக்கும் திறமைக்கும் தகுந்தபடி “கடவுளுடைய ஆழமான காரியங்களை” சொல்லிக்கொடுப்பதன் மூலம் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.—1 கொ. 2:10.
பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படியுங்கள்
14. பைபிள் தீர்க்கதரிசனங்களை ஏன் படிக்க வேண்டும்? (“ இந்தத் தீர்க்கதரிசனங்களை விளக்க முடியுமா?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
14 தீர்க்கதரிசனங்கள், பைபிளில் இருக்கிற முக்கியமான ஒரு அம்சம்! யெகோவாமீது பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அவை உதவுகின்றன. எந்தெந்த தீர்க்கதரிசனங்கள் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்? ஒருவேளை, ‘கடைசி நாட்களை’ பற்றிய தீர்க்கதரிசனங்களாக இருக்கலாம். (2 தீ. 3:1-5; மத். 24:3, 7) ஆனால், நிறைவேறி முடிந்த வேறு எந்தத் தீர்க்கதரிசனங்கள் உங்கள் நம்பிக்கையை இன்னும் ஆழமாக்கும்? உதாரணத்துக்கு, தானியேல் 2-ம் அதிகாரத்தில் அல்லது 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறின என்றும், நிறைவேறிவருகின்றன என்றும் உங்களால் விளக்க முடியுமா? * உங்கள் விசுவாசம் என்ற வீடு பைபிள் சத்தியங்கள் என்ற அஸ்திவாரத்தின் மேல் உறுதியாகக் கட்டப்பட்டால், அது ஒருபோதும் இடிந்து விழாது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் பயங்கர கொடுமைகளை அனுபவித்த நம் சகோதர சகோதரிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் எல்லா விவரங்களும் அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், பைபிளிலிருந்து அவர்கள் தெரிந்துவைத்திருந்த விஷயங்களின் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது.
15-17. பைபிளில் இருக்கிற விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தது, நாசி அரசாங்கத்தின் சித்திரவதைகளைத் தாக்குப்பிடிக்க நம் சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவியது?
15 நாசி அரசாங்கம் ஜெர்மனியில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, நம் சகோதர சகோதரிகளில் ஆயிரக்கணக்கான பேர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஹிட்லரும், அந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரியான ஹைன்ரீக் ஹிம்லரும் யெகோவாவின் சாட்சிகள்மீது பயங்கர வெறுப்பைக் காட்டினார்கள். ஒரு சித்திரவதை முகாமில், நிறைய சகோதரிகளுக்கு முன்பாக, “உங்க யெகோவா பரலோகத்துல வேணும்னா ஆட்சி செய்யலாம். ஆனா, இந்த பூமியில நடக்கிறது எங்க ஆட்சிதான்! நீங்க ரொம்ப நாள் இருப்பீங்களா இல்ல நாங்க இருப்போமாங்குறத உங்களுக்கு காட்டுறோம்!” என்று ஹிம்லர் சொன்னதாக ஒரு சகோதரி சொன்னார். இந்தச் சூழ்நிலையில், தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க அவர்களுக்கு எது உதவியது?
16 கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் பரலோகத்தில்
ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்ட விஷயம் அந்தச் சகோதர சகோதரிகளுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தாங்கள் பயங்கரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதை நினைத்து அவர்கள் ஆச்சரியப்படவில்லை. கடவுளுடைய விருப்பத்தைத் தடுத்து நிறுத்துகிற சக்தி எந்த மனித அரசாங்கத்துக்கும் கிடையாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஹிட்லரால், உண்மை வழிபாட்டை ஒழிக்கவும் முடியவில்லை; கடவுளுடைய அரசாங்கத்தைவிட வலிமையான ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தவும் முடியவில்லை. என்றாவது ஒருநாள் ஹிட்லருடைய அரசாங்கத்துக்குச் சாவு மணி அடிக்கப்படும் என்பதை நம் சகோதர சகோதரிகள் உறுதியாக நம்பினார்கள்.17 அவர்கள் நம்பியது நடந்தது! சீக்கிரத்திலேயே நாசி அரசாங்கம் கவிழ்ந்தது!! “இந்த பூமியில நடக்கிறது எங்க ஆட்சிதான்!” என்று சொன்ன ஹைன்ரீக் ஹிம்லருக்கு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஓடியபோது, சகோதரர் ல்யூப்கேவை அவர் பார்த்தார். முன்பு சிறையிலிருந்த யெகோவாவின் சாட்சிதான் அவர் என்பதை ஹிம்லர் அடையாளம் கண்டுபிடித்ததும், ல்யூப்கேவிடம் “பைபிள் மாணாக்கரே, இனிமேல் என்ன நடக்கும்?” என்று கேட்டாராம். நாசி அரசாங்கம் கவிழும் என்பதும், தாங்கள் விடுதலையாவோம் என்பதும் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஏற்கெனவே தெரியும் என்று ல்யூப்கே சொன்னாராம். முன்பு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தாறுமாறாகப் பேசிய ஹிம்லரால் அப்போது வாயே திறக்கமுடியவில்லையாம். பிறகு, சீக்கிரத்திலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். இவையெல்லாம் நமக்கு என்ன பாடத்தைச் சொல்லித்தருகின்றன? தீர்க்கதரிசனங்கள் உட்பட பைபிள் விஷயங்களை நாம் நன்றாகப் படித்துவைத்திருந்தால், நம்முடைய விசுவாசம் ஆட்டம்காணாது. அதோடு, சோதனைகள் நம்மைத் தாக்கும்போது, நம்பிக்கை இழந்துவிட மாட்டோம்.—2 பே. 1:19-21.
18. பவுல் சொன்ன ‘திருத்தமான அறிவும் முழுமையான பகுத்தறிவும்’ நமக்குத் தேவை என்பதை யோவான் 6:67, 68 எப்படிக் காட்டுகிறது?
18 உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமே அன்புதான்! அதனால், நாம் ஒவ்வொருவரும் அன்பு காட்ட வேண்டும். அதேசமயத்தில், ‘திருத்தமான அறிவும் முழுமையான பகுத்தறிவும்’ நமக்கு இருக்க வேண்டும். (பிலி. 1:9) இல்லையென்றால், விசுவாசதுரோகிகள் உட்பட, ‘மனிதர்களுடைய தந்திரங்களாகிய’ ‘போதனைகள்’ என்ற ‘பலவிதமான காற்று’ நம்மை அடித்துக்கொண்டுபோய்விடும். (எபே. 4:14) முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களில் சிலர், இயேசுவைப் பின்பற்றுவதை நிறுத்தியபோது, பேதுரு என்ன சொன்னார்? “முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள்” இயேசுவிடம்தான் இருக்கின்றன என்று தான் உறுதியோடு நம்பியதை அவரிடம் சொன்னார். (யோவான் 6:67, 68-ஐ வாசியுங்கள்.) எல்லா விவரங்களும் அப்போதைக்கு பேதுருவுக்குத் தெரியவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து உத்தமத்தோடு இருந்தார். ஏனென்றால், கிறிஸ்துவைப் பற்றிய உண்மையை அவர் புரிந்துவைத்திருந்தார். அதேபோல், பைபிள் சத்தியங்கள்மீது இருக்கிற நம்பிக்கையை உங்களாலும் பலப்படுத்திக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால், சோதனைகள் தாக்கும்போது, உங்களால் உறுதியாக நிற்க முடியும். மற்றவர்களின் விசுவாசத்தையும் பலப்படுத்த முடியும்.—2 யோ. 1, 2.
பாட்டு 101 சத்தியம் அறிவிப்போம்
^ பாரா. 5 பைபிளில் இருக்கிற உண்மைகளை ரொம்ப உயர்வாக மதிப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும். நாம் நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் உண்மையானவை என்பதை எப்படியெல்லாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
^ பாரா. 10 பைபிளின் அடிப்படை போதனைகளை மற்றவர்களிடம் காரணங்காட்டிப் பேசுவதற்கு, 2010-லிருந்து 2015-வரை காவற்கோபுரத்தில் வெளிவந்த “உங்க கேள்விக்கு பதில்...” என்ற தொடர் கட்டுரைகள் உங்களுக்கு உதவும். அவற்றின் தலைப்புகள்: “இயேசு கடவுளா?” (ஆங்கிலம்), “கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது?” (தமிழ்), “நரகத்துல போட்டு ஜனங்கள கடவுள் வாட்டிவதைக்கிறாரா?” (ஆங்கிலம்).
^ பாரா. 14 இந்தத் தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, ஜூன் 15, 2012 மற்றும் மே 2020 காவற்கோபுரத்தை பாருங்கள்.
^ பாரா. 60 படங்களின் விளக்கம்: குடும்ப வழிபாட்டில், மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து ஒரு தம்பதி படிக்கிறார்கள்.
^ பாரா. 62 படங்களின் விளக்கம்: மிகுந்த உபத்திரவத்தின்போது, அந்தக் குடும்பத்தார் அதிர்ச்சியடைவதில்லை.