படிப்புக் கட்டுரை 21
பாட்டு 21 கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!
அழியாத நகரத்துக்காக ஆவலோடு காத்திருங்கள்!
“வரப்போகிற நகரத்துக்காகவே நாம் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.”—எபி. 13:14.
என்ன கற்றுக்கொள்வோம்?
எபிரெயர் 13-வது அதிகாரம் இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று கற்றுக்கொள்வோம்.
1. முதல் நூற்றாண்டில் எருசலேமுக்கு என்ன நடக்கும் என்று இயேசு சொல்லியிருந்தார்?
இயேசு தன் மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசனம் சொன்னார். அதில், எருசலேம் நகரத்தை ஒருநாள் ‘படைகள் சுற்றிவளைக்கும்’ என்று சொன்னார். (லூக். 21:20) அதைப் பார்த்தவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தன் சீஷர்களை எச்சரித்தார். (லூக். 21:21, 22) இயேசு சொன்ன மாதிரியே எருசலேமை ஒரு படை சுற்றிவளைத்தது. அதுதான் ரோமப் படை! இயேசு சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம், எருசலேமும் அதன் ஆலயமும் அழிந்த சமயத்தில் முதல்முதலாக நிறைவேறியது.
2. யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்த கிறிஸ்தவர்களை பவுல் எதைச் சந்திக்க தயார்படுத்தினார்?
2 ரோமப் படை எருசலேமை சுற்றிவளைப்பதற்குக் கொஞ்ச வருஷத்துக்கு முன்பு, அப்போஸ்தலன் பவுல் ஒரு முக்கியமான கடிதத்தை எழுதினார். அதுதான் பைபிளில் இருக்கிற எபிரெயர் புத்தகம். அந்தக் கடிதத்தில், யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான ஆலோசனையை பவுல் கொடுத்திருந்தார். அந்த ஆலோசனை எருசலேமுக்கு வரப்போகிற அழிவிலிருந்து தப்பிக்க அவர்களைத் தயார்படுத்தும். அவர்கள் உயிர்பிழைக்க வேண்டும் என்றால் வீடு, தொழில் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை” என்று எருசலேமைப் பற்றி பவுல் சொன்னார். அதோடு, “வரப்போகிற நகரத்துக்காகவே நாம் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்” என்றும் சொன்னார்.—எபி. 13:14.
3. ‘உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரம்’ எது, நாம் ஏன் அதற்காகக் காத்திருக்கிறோம்?
3 யூதேயாவையும் எருசலேமையும் விட்டு வெளியேற முடிவெடுத்த கிறிஸ்தவர்களை, சுற்றியிருந்தவர்கள் கேலி கிண்டல் செய்திருக்கலாம்; முட்டாள்கள் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எடுத்த அந்த முடிவுதான், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றியது. இன்று நம்மையும் மக்கள் கிண்டல் செய்கிறார்கள்; முட்டாள்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், நாம் காசு-பணத்தின்மேல் நம்பிக்கை வைப்பதில்லை. எல்லா பிரச்சினைகளையும் மனிதர்கள் தீர்ப்பார்கள் என்று நினைப்பதில்லை. இந்த மோசமான உலகம் நிலையானது அல்ல, அது அழியப்போகிறது என்று நமக்குத் தெரியும். அப்படியென்றால், நம் நம்பிக்கை எதன்மேல் இருக்கிறது? ‘உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்தின்மேல்’ இருக்கிறது. அதுதான் “வரப்போகிற” கடவுளுடைய ராஜ்யம், a அதாவது கடவுளுடைய அரசாங்கம். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். (எபி. 11:10; மத். 6:33) இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிற ஒவ்வொரு தலைப்பிலும் இந்த மூன்று விஷயங்களைக் கவனிப்போம்: (1) பவுல் எழுதிய கடிதம் “வரப்போகிற நகரத்துக்காக” காத்திருக்க அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவியது? (2) எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களுக்காக பவுல் எப்படி அவர்களைத் தயார்படுத்தினார்? (3) அவருடைய ஆலோசனை இன்று நமக்கு எப்படி உதவும்?
என்றும் கைவிடாதவரை என்றென்றும் நம்புங்கள்
4. கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் ஏன் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது?
4 அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் முக்கியமான நகரமாக இருந்தது. ஏனென்றால், முதல்முதலில் கிறிஸ்தவ சபை கி.பி. 33-ல் அங்கேதான் உருவானது. ஆளும் குழுவும் அங்கேதான் இருந்தது. அதுமட்டுமல்ல, நிறைய கிறிஸ்தவர்களுக்கு சொந்தமாக வீடும் சொத்துப்பத்துகளும் அந்த ஊரில் இருந்தது. இருந்தாலும் அவர்கள் எருசலேமை விட்டு, சொல்லப்போனால் யூதேயாவை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என்று இயேசு எச்சரிப்பு கொடுத்தார்.—மத். 24:16.
5. வரப்போகிற சம்பவங்களுக்காக பவுல் எப்படிக் கிறிஸ்தவர்களைத் தயார்படுத்தினார்?
5 அடுத்து வரப்போகிற சம்பவங்களுக்காக பவுல் கிறிஸ்தவர்களைத் தயார்படுத்தினார். எருசலேம் நகரத்தைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார் என்பதை அவர்களுக்குப் புரியவைத்தார். அங்கிருந்த ஆலயத்தையோ குருமார்களையோ அங்கே கொடுக்கப்பட்ட பலிகளையோ யெகோவா இனிமேலும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதைச் சொன்னார். (எபி. 8:13) அந்த நகரத்திலிருந்த பெரும்பாலானவர்கள் மேசியாவை ஒதுக்கித்தள்ளியிருந்தார்கள். எருசலேம் ஆலயம் இனிமேலும் உண்மை வணக்கத்துக்கான இடமாக இல்லை. அது அழியப்போகிறது.—லூக். 13:34, 35.
6. எபிரெயர் 13:5, 6-ல் பவுல் கொடுத்திருக்கிற ஆலோசனை ஏன் அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப அவசியமாக இருந்தது?
6 எபிரெயர்களுக்கு பவுல் கடிதம் எழுதிய சமயத்தில் எருசலேம் ரொம்ப செல்வச்செழிப்பாக இருந்தது. “கிழக்கத்திய நகரங்களிலேயே எருசலேம் ரொம்ப பிரபலமான நகரமாக இருந்தது” என்று அந்தக் காலத்தைச் சேர்ந்த ஒரு ரோம எழுத்தாளர் சொன்னார். காரணம், எருசலேமில் நடந்த பண்டிகைகளுக்காக நிறைய யூதர்கள் பல இடங்களிலிருந்து வருஷாவருஷம் அங்கே வந்தார்கள். அதனால், அந்த ஊரில் நல்ல பணப்புழக்கம் இருந்தது. இந்தச் சூழ்நிலைமையால் அங்கிருந்த சில கிறிஸ்தவர்களும் நன்றாகப் பணம் சம்பாதித்திருப்பார்கள். ஒருவேளை அதனால்தான் பவுல் அவர்களிடம்: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” என்று சொல்லியிருக்கலாம். அதைச் சொன்ன பிறகு, யெகோவா கொடுத்திருக்கிற உறுதியான வாக்குறுதியை சொல்லி அவர்களைப் பலப்படுத்தினார். அது என்ன? “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லியிருக்கிறார். (எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்; உபா. 31:6; சங். 118:6) எருசலேமிலும் யூதேயாவிலும் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த வாக்குறுதி ரொம்ப அவசியமாக இருந்தது. ஏன்? இந்தக் கடிதம் கிடைத்தக் கொஞ்ச காலத்திலேயே அவர்கள் வீட்டையும் தொழிலையும் சொத்துப்பத்துகளையும் விட்டுப்போக வேண்டியிருந்தது. தெரியாத ஒரு ஊரில் போய் மறுபடியும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
7. யெகோவாமேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நாம் ஏன் இப்போதே பலப்படுத்த வேண்டும்?
7 நமக்கு என்ன பாடம்? சீக்கிரத்தில் “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பிக்கப்போகிறது. (மத். 24:21) இந்த மோசமான உலகமும் அழியப்போகிறது. அன்று இருந்த கிறிஸ்தவர்கள் மாதிரியே நாமும் விழிப்பாக இருக்க வேண்டும். (லூக். 21:34-36) எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களுக்காக இப்போதே தயாராக வேண்டும். ஏனென்றால், மிகுந்த உபத்திரவம் நடக்கிற சமயத்தில் நம் சொத்துப்பத்துகளில் சிலவற்றை அல்லது எல்லாவற்றையுமே நாம் இழக்க வேண்டியிருக்கலாம். அந்தச் சமயத்தில், யெகோவா தன்னுடைய மக்களை கைவிடவே மாட்டார் என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு முன்பு, இப்போதே—மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பே—யெகோவாவைத்தான் நம்பியிருக்கிறோம் என்பதை நம்மால் காட்ட முடியும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய செயல்களும் லட்சியங்களும் யெகோவா என்னைப் பார்த்துக்கொள்வார் என்று நான் நம்புவதைக் காட்டுகிறதா? அல்லது, பணம்-பொருள்மேல் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறதா?’ (1 தீ. 6:17) “மிகுந்த உபத்திரவம்” சமயத்தில் யெகோவாவை நம்பியிருக்க, எபிரெய கிறிஸ்தவர்களுடைய உதாரணம் நமக்கு உதவும். ஆனால், அவர்களுக்கு வந்த கஷ்டங்களைவிட “மிகுந்த உபத்திரவம்” ரொம்ப பயங்கரமாக இருக்கப்போகிறது. இந்த மாதிரி ஒரு உபத்திரவத்தை இதுவரை யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படியென்றால், அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எப்படித் தெரிந்துகொள்வோம்?
முன்னின்று வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
8. இயேசு என்ன சொல்லியிருந்தார்?
8 எபிரெயர்களுக்கு பவுல் கடிதம் எழுதிய கொஞ்ச வருஷத்திலேயே ரோமப் படை எருசலேமைச் சுற்றிவளைத்தது. எருசலேம் நகரத்துக்கு அழிவு நெருங்கிவிட்டது என்பதை அன்று இருந்த கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் தப்பி ஓடுவதற்கான நேரமும் வந்துவிட்டது. (மத். 24:3; லூக். 21:20, 24) ஆனால் இப்போது அவர்கள் எங்கே ஓடிப்போவார்கள்? “யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்” என்றுதான் இயேசு சொல்லியிருந்தார். எந்த மலை என்று அவர் சொல்லவில்லை. (லூக். 21:21) அந்தப் பகுதியில் நிறைய மலைகள் இருந்தன. அவர்கள் எந்த மலைக்குத் தப்பித்துப் போவார்கள்?
9. எந்த மலைக்கு ஓடிப்போவது என்று கிறிஸ்தவர்கள் ஏன் யோசித்திருப்பார்கள்? (வரைபடத்தையும் பாருங்கள்.)
9 எருசலேமைச் சுற்றி எங்கெல்லாம் மலைகள் இருந்தன என்று யோசித்துப் பாருங்கள். சமாரியாவில் மலைகள் இருந்தன, கலிலேயாவில் மலைகள் இருந்தன, எர்மோன் மலை இருந்தது, லீபனோனில் மலைகள் இருந்தன, யோர்தான் ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலும் மலைகள் இருந்தன. (வரைபடத்தைப் பாருங்கள்.) இந்த மலைகளில் இருந்த சில நகரங்கள் வாழ்வதற்கு ரொம்ப பாதுகாப்பான இடம்போல் தெரிந்திருக்கலாம். உதாரணத்துக்கு, காம்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நகரம் உயரமான மலையின் மேல் இருந்தது. அந்த நகரத்துக்கு போவதே ரொம்ப ரொம்ப கஷ்டம். அதனால், அங்கே வாழ்வது ரொம்ப பாதுகாப்பாக இருக்கும் என்று சில யூதர்கள் நினைத்தார்கள். ஆனால் பிறகு, காம்லாவில்தான் யூதர்களுக்கும், ரோமர்களுக்கும் வெறித்தனமான ஒரு சண்டை நடந்தது. அதில் அந்த ஊர் மக்கள் நிறைய பேர் இறந்துவிட்டார்கள். b
அன்று இருந்த கிறிஸ்தவர்கள் தப்பித்து ஓட நிறைய மலைகள் இருந்தன. ஆனால் எல்லாமே பாதுகாப்பானதாக இல்லை (பாரா 9)
10-11. (அ) அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கலாம்? (எபிரெயர் 13:7, 17) (ஆ) முன்னின்று வழிநடத்தியவர்களுக்குக் கீழ்ப்படிந்ததால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது? (படத்தையும் பாருங்கள்.)
10 உயிர்தப்புவதற்குத் தேவையான ஆலோசனைகளை, முன்னின்று வழிநடத்தியவர்கள் மூலமாக யெகோவா கொடுத்ததாகத் தெரிகிறது. எப்படிச் சொல்கிறோம்? சரித்திர ஆசிரியரான யூசிபியஸ் பிற்பாடு இப்படி எழுதினார்: “எருசலேமில் கிறிஸ்தவ சபையை வழிநடத்தின ஆட்களுக்கு கடவுளிடமிருந்து ஒரு வெளிப்படுத்துதல் கிடைத்தது. . . . போர் ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த நகரத்தை விட்டு பெரேயாவில் இருக்கிற பெல்லா என்ற நகரத்தில் குடியேறும்படி அவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.” கிறிஸ்தவர்கள் பெல்லாவுக்குப் போனது ரொம்ப சரியான முடிவாக இருந்தது. அந்த நகரம் எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்தில் இல்லை. அங்கே போவதும் அவ்வளவு கஷ்டம் இல்லை. அங்கிருந்த பெரும்பாலான மக்கள் யூதர்கள் கிடையாது. அதனால் ரோமர்களை எதிர்த்து அங்கே யாரும் சண்டை போடவில்லை.—வரைபடத்தைப் பாருங்கள்.
11 ‘உங்களை வழிநடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படிந்து நடங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனைக்கு அன்று இருந்த கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) அதனால், உயிர்தப்பினார்கள். “உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக” காத்திருந்தவர்களை, அதாவது கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவர்களை, கடவுள் கைவிடவே இல்லை என்று சரித்திரம் காட்டுகிறது.—எபி. 11:10.
பெல்லா, ஆபத்து இல்லாத பகுதியாக இருந்தது (பாராக்கள் 10-11)
12-13. கஷ்டமான சமயத்தில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறார்?
12 நமக்கு என்ன பாடம்? நாம் என்ன செய்ய வேண்டும்... ஏது செய்ய வேண்டும்... என்பதை முன்னின்று வழிநடத்துகிறவர்கள் மூலமாகத்தான் யெகோவா நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். அதற்கு நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கிறது. கஷ்டமான காலத்தில் அவர் தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்காக சில உண்மையுள்ள ஆட்களைப் பயன்படுத்தியிருக்கிறார். (உபா. 31:23; சங். 77:20) இன்றும் யெகோவா அப்படித்தான் செய்கிறார். அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.
13 ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் முன்னின்று ‘வழிநடத்துகிறவர்களிடமிருந்து’ நமக்குத் தேவையான அறிவுரைகள் கிடைத்தன. அவர்கள், மூப்பர்களுக்கு அறிவுரை கொடுத்தார்கள். சபைக் கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும்... வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்படிச் செய்ய வேண்டும்... என்று சொன்னார்கள். பெருந்தொற்று ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நாம் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினோம். 500-க்கும் அதிகமான மொழிகளில் இன்டர்நெட் மற்றும் டிவி மூலமாக அதைப் பார்ப்பதற்கும், ரேடியோ மூலமாக கேட்பதற்கும் ஏற்பாடு செய்தோம். யெகோவாவிடமிருந்து நமக்குத் தேவையான ஆலோசனைகள் கிடைத்துக்கொண்டே இருந்தன; தடையாகவே இல்லை. அதனால் நம் எல்லாருக்கும் ஒரே விதமான வழிநடத்துதல் கிடைத்தது. எதிர்காலத்தில் நமக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நம்பிக்கையோடு இருக்கலாம்: நம்மை வழிநடத்துகிறவர்கள் ஞானமான முடிவுகளை எடுக்க யெகோவா அவர்களுக்குத் தொடர்ந்து உதவுவார். சீக்கிரத்தில் வரப்போகிற மிகுந்த உபத்திரவம் உலகத்தையே உலுக்கி எடுக்கப்போகிறது. அதற்குத் தயாராவதற்கும் அந்தக் கஷ்டமான காலத்தில் ஞானமான முடிவுகளை எடுப்பதற்கும் யெகோவாவை நம்புவதும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் ரொம்ப முக்கியம். இதைத் தவிர வேறென்ன நமக்குத் தேவை?
சகோதர அன்பையும், உபசரிக்கும் குணத்தையும் காட்டுங்கள்
14. எபிரெயர் 13:1-3, சொல்வதுபோல் எருசலேமுடைய அழிவுக்கு முன்பு என்னென்ன குணங்களைக் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டியிருந்தது?
14 யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்த கிறிஸ்தவர்கள் எப்போதுமே ஒருவர்மேல் ஒருவர் அன்பாகத்தான் இருந்தார்கள். இருந்தாலும் எருசலேமுடைய அழிவுக்கு முன்பு இருந்த கொஞ்ச வருஷங்களில் ‘சகோதர அன்பையும்’ ‘உபசரிக்கும் குணத்தையும்’ அவர்கள் இன்னும் அதிகமாகக் காட்ட வேண்டியிருந்தது. c (எபிரெயர் 13:1-3-ஐ வாசியுங்கள்.) அதேமாதிரிதான் இப்போது நாமும் செய்ய வேண்டியிருக்கிறது. மிகுந்த உபத்திரவம் ரொம்ப சீக்கிரத்தில் வரப்போகிறது. அந்தச் சமயத்தில், முன்பைவிட அதிகமான அன்பை ஒருவர்மேல் ஒருவர் நாம் காட்ட வேண்டியிருக்கும்.—எபி. 10:32-34.
15. ஊரைவிட்டு வெளியேறிய பிறகு எபிரெய கிறிஸ்தவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும், உபசரிக்கும் குணத்தையும் காட்ட வேண்டியிருந்திருக்கும்?
15 ரோமர்களுடைய படை எருசலேமை சுற்றிவளைத்தது. ஆனால் திடீரென்று பின்வாங்கியது. அப்போது கிறிஸ்தவர்கள் தப்பிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒருசில பொருள்களை மட்டும்தான் அவர்களால் எடுத்துக்கொண்டு போக முடிந்திருக்கும். (மத். 24:17, 18) மலைகளுக்குத் தப்பி ஓடிய சமயத்திலும், புதிதாக ஒரு இடத்தில் குடியேறிய சமயத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியிருந்திருக்கும். கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது “அவசரத் தேவை” ஏற்பட்டிருக்கும். இந்த மாதிரி சமயங்களில் கிறிஸ்தவர்கள் உண்மையான சகோதர அன்பையும் உபசரிக்கும் குணத்தையும் காட்ட வேண்டியிருந்திருக்கும்; அவர்களிடம் இருந்த பொருள்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்திருக்கும்.—தீத். 3:14.
16. உதவி தேவைப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி அன்பு காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)
16 நமக்கு என்ன பாடம்? சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவி தேவை என்றால், ஓடிப்போய் அவர்களுக்கு உதவ அன்புதான் நம்மைத் தூண்டுகிறது. சமீபத்தில் நடந்த போர்களாலும் இயற்கை பேரழிவுகளாலும் நிறைய சகோதர சகோதரிகள் அகதிகள் ஆகியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும், யெகோவாவோடு அவர்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கும், நிறைய சகோதர சகோதரிகள் கைகொடுத்திருக்கிறார்கள். உக்ரைனில் இருந்த ஒரு சகோதரியும், போர் காரணமாக தன் வீட்டைவிட்டு வரவேண்டிய சூழ்நிலைமை வந்தது. அவர் சொன்னதைக் கவனியுங்கள்: “சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா எங்களை வழிநடத்துவதையும் உதவுவதையும் எங்களால் பார்க்க முடிந்தது. உக்ரைனிலும் சரி, ஹங்கேரியிலும் சரி, சகோதர சகோதரிகள் எங்களை அன்பாக வரவேற்று எங்களுக்குத் தேவையானதை எல்லாம் செய்தார்கள். இப்போது நாங்கள் ஜெர்மனியில் இருக்கிறோம். இங்கேயும் அவர்கள் எங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள்.” நீங்களும் சகோதர சகோதரிகளை உபசரித்து, அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்கள் மூலமாக அவர்களுக்கு உதவி செய்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்!—நீதி. 19:17; 2 கொ. 1:3, 4.
இன்று அகதிகளாக இருக்கும் சகோதரர்களுக்கு நம் உதவி தேவை (பாரா 16)
17. சகோதர அன்பையும் உபசரிக்கிற குணத்தையும் இப்போதே வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
17 இப்போது நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நாம் அப்படி உதவியாக இருப்பது இன்னும் அதிகமாகத் தேவைப்படும். (ஆப. 3:16-18) சகோதர அன்பையும், உபசரிக்கும் குணத்தையும் நாம் அப்போது காட்டுவதற்காகத்தான் இப்போதே யெகோவா நமக்குப் பயிற்சி கொடுக்கிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது
18. நாம் எப்படி அன்று இருந்த எபிரெய கிறிஸ்தவர்கள் மாதிரி நடந்துகொள்ளலாம்?
18 மலைகளுக்கு ஓடிப்போன கிறிஸ்தவர்கள் எருசலேமுக்கு வந்த அழிவிலிருந்து உயிர் தப்பினார்கள். சரித்திரமும் அதைத்தான் காட்டுகிறது. அவர்கள் தங்கள் ஊரையும் சொத்துப்பத்துகளையும் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தாலும், யெகோவா அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்; அவர்களைக் கைவிடவே இல்லை. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் நமக்குத் தெரியாது. ஆனால், நாம் கீழ்ப்படியத் தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு எச்சரிப்பு கொடுத்திருக்கிறார். (லூக். 12:40) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையும் நமக்கு உதவியாக இருக்கும். அதோடு, “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா கொடுத்த உறுதியான வாக்குறுதியும் நமக்கு இருக்கிறது. (எபி. 13:5, 6) அதனால் அழியாத, நிலையான நகரத்துக்காக, அதாவது கடவுளுடைய அரசாங்கத்துக்காக, நாம் ஆவலோடு காத்திருக்கலாம். அந்த அரசாங்கம் கொடுக்கப்போகிற ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவிக்கலாம்.—மத். 25:34.
பாட்டு 157 பூமியெங்கும் நிம்மதி!
a பைபிள் காலங்களில் பெரும்பாலும் நகரங்களை ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். அப்படிப்பட்ட ஒரு நகரத்தை ராஜ்யம் என்றுகூட சொல்லலாம்.—ஆதி. 14:2.
b இது கி.பி. 67-ல் நடந்தது. அதாவது, கிறிஸ்தவர்கள் யூதேயாவையும் எருசலேமையும் விட்டுப்போன கொஞ்சக் காலத்தில் நடந்தது.
c “சகோதர அன்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தை, நெருங்கிய சொந்தங்களுக்குள் இருக்கிற அன்பைக் குறிக்கலாம். அந்த வார்த்தையை, சகோதர சகோதரிகளிடம் நாம் காட்ட வேண்டிய அன்புக்கு பவுல் பயன்படுத்தியிருக்கிறார்.