படிப்புக் கட்டுரை 18
இயேசுவை முன்னிட்டு நீங்கள் தடுமாற்றம் அடைகிறீர்களா?
“என்னை முன்னிட்டு தடுமாற்றம் அடையாதவன் சந்தோஷமானவன்.”—மத். 11:6, அடிக்குறிப்பு.
பாட்டு 54 ‘இதுதான் வழி!’
இந்தக் கட்டுரையில்... *
1. நீங்கள் தெரிந்துகொண்ட சத்தியத்தை மற்றவர்களிடம் சொன்னபோது நிறைய பேர் என்ன செய்திருக்கலாம்?
நீங்கள் முதன்முதலில் பைபிள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டபோது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பீர்கள்! அந்தச் சத்தியங்கள் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும், தெள்ளத்தெளிவாக இருந்திருக்கும். நிச்சயம் மற்றவர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். இவர்கள் மட்டும் இதை ஏற்றுக்கொண்டால் இன்றைக்கும் எதிர்காலத்திலும் இவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் நினைத்திருப்பீர்கள். (சங். 119:105) அதனால், ஆசை ஆசையாகப் போய் உங்களுடைய சொந்தக்காரர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லியிருப்பீர்கள். ஆனால், நிறைய பேர் நீங்கள் சொன்னதை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டார்கள்.
2-3. அன்றைக்கு இருந்த நிறைய பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்களா? விளக்கவும்.
2 நாம் சொல்கிற பைபிள் சத்தியங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது அதைப் பார்த்து நாம் அதிர்ச்சியடைய வேண்டுமா? தேவையில்லை. இயேசுவையே நிறைய பேர் ஏற்றுக்கொள்ளவில்லையே! அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்தார். கடவுளுடைய துணை அவருக்கு இருக்கிறது என்பதை இவையெல்லாம் காட்டின. ஆனாலும், ஜனங்கள் அவரை ஒதுக்கித் தள்ளினார்கள். உதாரணத்துக்கு, லாசருவை அவர் உயிரோடு எழுப்பிய விஷயத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியவில்லை. இருந்தாலும், யூதத் தலைவர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய், அவரையும் லாசருவையும் கொல்லத் துடித்தார்கள்.—யோவா. 11:47, 48, 53; 12:9-11.
3 நிறைய பேர் தன்னை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். (யோவா. 5:39-44) அதனால்தான், யோவான் ஸ்நானகரின் சீஷர்களிடம், “என்னை முன்னிட்டு தடுமாற்றம் அடையாதவன் சந்தோஷமானவன்” என்று சொன்னார். (மத். 11:2, 3, 6, அடிக்குறிப்பு) நிறைய பேர் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 முதல் நூற்றாண்டில் இருந்த நிறைய பேர் இயேசுவை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்ப்போம். அதோடு, நாம் சொல்லும் செய்தியை இன்று நிறைய பேர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதைப் பற்றியும் பார்ப்போம். ரொம்ப முக்கியமாக, எந்தச் சந்தேகத்துக்கும் இடங்கொடுக்காமல் இயேசுவை நம்புவதற்கு அவர்மேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது ஏன் அவசியம் என்பதையும் பார்ப்போம்.
(1) இயேசுவின் பின்னணி
5. இயேசுதான் மேசியா என்பதை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளாமல் போயிருக்கலாம்?
5 இயேசு அருமையாகப் போதித்தார் என்பதையும் நிறைய அற்புதங்களைச் செய்தார் என்பதையும் அன்றைக்கு இருந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டார்கள். இருந்தாலும், அவர்களைப் பொருத்தவரைக்கும் இயேசு ஒரு சாதாரண தச்சனுடைய மகன்தான். அவர் வாழ்ந்த இடமான நாசரேத்தும் ஒரு சாதாரண ஊர்தான். அவருடைய சீஷரான நாத்தான்வேலும்கூட ஒருசமயம், “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்டார். (யோவா. 1:46) ஒருவேளை, நாத்தான்வேலுக்கு அந்த ஊர் பிடிக்காமல் இருந்திருக்கலாம். இல்லையென்றால், மேசியா நாசரேத்தில் அல்ல, பெத்லகேமில்தான் பிறப்பார் என்று மீகா 5:2-ல் சொன்ன தீர்க்கதரிசனம் அவருடைய ஞாபகத்தில் இருந்திருக்கலாம். இப்படி, இயேசுவின் பின்னணியைப் பார்த்து நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளாமல் போயிருக்கலாம்.
6. என்ன செய்திருந்தால் அன்றைக்கு இருந்த மக்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்?
6 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? இயேசுவின் எதிரிகள், மேசியாவுடைய “வம்சத்தின் விவரங்களைப் பற்றி” கவலைப்பட மாட்டார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்கிறது. (ஏசா. 53:8) மேசியாவைப் பற்றிய நிறைய விவரங்கள் ஏற்கெனவே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டிருந்தன. மக்கள் நேரமெடுத்து இந்த விவரங்களை அலசி ஆராய்ந்திருந்தால், இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்றும் தாவீதின் வம்சத்தில் வந்தார் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். (லூக். 2:4-7) ஏனென்றால், அவர் பெத்லகேமில்தான் பிறப்பார் என்று மீகா 5:2 சொல்லியிருந்தது. அப்படியிருந்தும், மக்கள் ஏன் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை? ஏனென்றால், அவர்கள் எல்லா விவரங்களையும் அலசி ஆராயாமலேயே சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
7. நிறைய பேர் ஏன் யெகோவாவின் சாட்சிகளை ஏற்றுக்கொள்வதில்லை?
7 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. பொதுவாக, யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் அவ்வளவு வசதியானவர்கள் கிடையாது. அதனால், அவர்கள் “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். (அப். 4:13) நாம் பிரபலமான இறையியல் பள்ளிகளில் படித்து பட்டம் வாங்காததால் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் தகுதி நமக்கு இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், நம்முடைய மதம் “அமெரிக்காவைச் சேர்ந்த மதம்” என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் யெகோவாவின் சாட்சிகளில் வெறும் 14 சதவீதம் பேர்தான் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். நம்மை “கம்யூனிஸ்டுகள்” அல்லது “அமெரிக்க உளவாளிகள்” என்றும் “தீவிரவாதிகள்” என்றும் இவ்வளவு வருஷங்களாக முத்திரை குத்தியிருக்கிறார்கள். இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் கேள்விப்படுகிற நிறைய பேர் உண்மைகளை அலசி ஆராயாததால் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்கு விரும்புவது இல்லை.
8. இன்று கடவுளுடைய மக்கள் யார் என்று தெரிந்துகொள்வதற்கு அப்போஸ்தலர் 17:11 சொல்கிறபடி மக்கள் என்ன செய்ய வேண்டும்?
8 தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எல்லா விவரங்களையும் அலசி ஆராய வேண்டும். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா அதைத்தான் செய்தார். ‘எல்லா விஷயங்களையும் ஆரம்பத்திலிருந்தே [அவர்] துல்லியமாக ஆராய்ந்தார்.’ சுவிசேஷ புத்தகத்தைப் படிக்கிறவர்கள் இயேசுவைப் பற்றி இதில் சொல்லியிருக்கிற ‘விஷயங்கள் எவ்வளவு நம்பகமானவை என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள’ வேண்டும் என்று ஆசைப்பட்டார். (லூக். 1:1-4) பெரோயாவில் இருந்த யூதர்களும் லூக்கா மாதிரியேதான் செய்தார்கள். இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அவர்கள் முதன்முதலாகக் கேட்டபோது, அந்த விஷயங்கள் எல்லாம் எபிரெய வேதாகமத்தோடு ஒத்துப்போகிறதா என அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். (அப்போஸ்தலர் 17:11-ஐ வாசியுங்கள்.) இன்றும் யெகோவாவின் சாட்சிகள் சொல்வதெல்லாம் பைபிளோடு ஒத்துப்போகிறதா என்று மக்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அதோடு, நவீன காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி யெகோவாவின் சாட்சிகளைத் தவறாக நினைக்க மாட்டார்கள்.
(2) மற்றவர்களைக் கவருவதற்காக இயேசு அடையாளங்களைச் செய்யவில்லை
9. வானத்திலிருந்து இயேசு அடையாளத்தைக் காட்ட மறுத்ததால் சிலர் என்ன செய்தார்கள்?
9 இயேசு அருமையாக போதித்தார். ஆனால், சிலருக்கு அதில் திருப்தி இல்லை, அதைவிட அதிகமாக எதிர்பார்த்தார்கள். அவர்தான் மேசியா என்பதை நிரூபிப்பதற்காக “வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டச்” சொன்னார்கள். (மத். 16:1) ஒருவேளை, தானியேல் 7:13, 14-ல் சொல்லப்பட்ட விஷயங்களைத் தப்பாக புரிந்துகொண்டு அவர்கள் அப்படிக் கேட்டிருக்கலாம். ஆனால், அதில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கான சமயம் அது இல்லை. அவர்தான் மேசியா என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அவருடைய போதனைகளே போதுமானதாக இருந்தன. ஆனால், அவர் எந்தவொரு அடையாளத்தையும் செய்யாததால் அவரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.—மத். 16:4.
10. மேசியாவைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தை இயேசு எப்படி நிறைவேற்றினார்?
10 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? மேசியா “சத்தம்போட்டுப் பேசவோ, குரலை உயர்த்திப் பேசவோ, தெருவில் எல்லாரும் கேட்கும்படி கத்திப் பேசவோ மாட்டார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். (ஏசா. 42:1, 2) தீர்க்கதரிசனம் சொன்ன மாதிரியே இயேசு எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஊழியம் செய்தார். அவர் ஆடம்பரமான ஆலயங்களைக் கட்டவில்லை. தன்னைத் தனியாக அடையாளம் காட்டிக்கொள்கிற மாதிரியான உடைகளை உடுத்தவில்லை. பகட்டான பட்டப் பெயர்களால் மற்றவர்கள் தன்னைக் கூப்பிட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய உயிர் ஆபத்தில் இருந்த சமயத்தில்கூட ஏரோது ராஜாவின் தயவைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர் எந்தவொரு அடையாளத்தையும் செய்யவில்லை. (லூக். 23:8-11) இயேசு சில அற்புதங்களைச் செய்தார் என்பது உண்மைதான். ஆனால், அவருடைய முக்கிய குறிக்கோள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுதான். அதனால்தான், அவருடைய சீஷர்களிடம், “இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.—மாற். 1:38.
11. இன்று சிலருக்கு என்ன தவறான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன?
11 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. இன்று வழிபாட்டுக் கட்டிடங்களை சில இடங்களில் பிரம்மாண்டமாக கட்டுகிறார்கள். ஏராளமான பணத்தை வாரி இறைத்து அதை அலங்கரிக்கிறார்கள். மதத் தலைவர்களும் பகட்டான பட்டப் பெயர்களைத் தங்களுக்கு வைத்துக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஜனங்கள் அசந்துபோகிறார்கள். அதோடு, நிறைய சடங்கு சம்பிரதாயங்களையும் மக்கள் செய்கிறார்கள். சொல்லப்போனால், அவை எல்லாம் எங்கிருந்து வந்தன என்பதே அவர்களுக்குத் தெரியாது. அந்த மாதிரி இடங்களுக்கு வருபவர்களால் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறதா? நீங்களே யோசித்துப்பாருங்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருபவர்களால் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக்கொள்ள முடிகிறது. நம்முடைய ராஜ்ய மன்றங்கள் எப்படி இருக்கின்றன? மற்ற வழிபாட்டு கட்டிடங்கள் மாதிரி ஆடம்ப ரமாக இல்லைதான். ஆனால், சுத்தமாகவும் போதுமான வசதிகளோடும் இருக்கின்றன. நம்மை வழிநடத்துபவர்களும் விசேஷமான உடைகளை உடுத்துவதில்லை. பகட்டான பட்டப் பெயர்களையும் வைத்துக்கொள்வதில்லை. கூட்டங்களில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களும் நம்பும் விஷயங்களும் பைபிளின் அடிப்படையில்தான் இருக்கின்றன. இருந்தாலும், நிறைய பேர் இன்றைக்கு நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், வழிபாட்டில் எந்தவொரு சடங்கு சம்பிரதாயமும் இல்லை என்று நினைக்கிறார்கள். அதோடு, நாம் போதிக்கும் விஷயங்கள் அவர்கள் காதுகளுக்கு இனிமையாக இருப்பதில்லை.
12. எபிரெயர் 11:1, 6 சொல்கிறபடி, எதன் அடிப்படையில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும்?
12 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? ரோமர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்ன விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி சொல்லப்பட்டால்தான் அதைக் கேட்க முடியும்” என்று அவர் எழுதினார். (ரோ. 10:17) அதனால், பைபிளை நன்றாகப் படித்தால்தான் நம்முடைய விசுவாசம் பலமாகுமே தவிர, சடங்கு சம்பிரதாயங்களில் கலந்துகொள்வதால் பலமாகாது. அந்தச் சம்பிரதாயங்கள் கண்ணுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி. அதனால், திருத்தமான அறிவின் அடிப்படையில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது.” (எபிரெயர் 11:1, 6-ஐ வாசியுங்கள்.) அதனால், நாம் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று தெரிந்துகொள்வதற்காக வானத்திலிருந்து ஏதோ பெரிய அடையாளம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படித்தாலே நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும், எப்பேர்ப்பட்ட சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ள முடியும்.
(3) யூதர்களுடைய தேவையில்லாத பாரம்பரியங்களை இயேசு ஒதுக்கித் தள்ளினார்
13. நிறைய பேர் இயேசுவை ஏன் ஒதுக்கித் தள்ளினார்கள்?
13 இயேசுவின் சீஷர்கள் விரதம் இருக்காததைப் பார்த்து யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது, தான் இருக்கும் வரைக்கும் அவர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இயேசு சொன்னார். (மத். 9:14-17) அவர் அப்படிச் சொல்லியும் பரிசேயர்களும் மற்ற எதிரிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், பாரம்பரியங்களையும் சடங்காச்சாரங்களையும் இயேசு ஒதுக்கித் தள்ளினார். ஓய்வுநாளில் அவர் மற்றவர்களை குணமாக்கியதைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சல் வந்தது. (மாற். 3:1-6; யோவா. 9:16) ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அந்த நாளில் ஆலயத்தில் வியாபாரம் செய்வதற்கு மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். இந்த விஷயத்தை இயேசு கண்டித்தபோது, அவர்மேல் அவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. (மத். 21:12, 13, 15) அதோடு, நாசரேத்தில் இருந்த ஜெபக்கூடத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மக்கள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதையும் அவர்களுக்கு விசுவாசம் எவ்வளவு குறைவாக இருந்தது என்பதையும் வெட்டவெளிச்சமாக்குவதற்காக இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் நடந்த சில சம்பவங்களை எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. (லூக். 4:16, 25-30) அவர்கள் எதிர்பார்க்காத விஷயங்களை இயேசு செய்ததாலும் நிறைய பேர் அவரை ஒதுக்கித் தள்ளினார்கள்.—மத். 11:16-19.
14. பாரம்பரிய பழக்கவழக்கங்களை இயேசு ஏன் கண்டித்தார்?
14 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? “இந்த ஜனங்கள் வாயளவில் என்னிடம் வேண்டுகிறார்கள். உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது. மனுஷர்கள் கற்றுக்கொடுத்த கோட்பாடுகளின்படிதான் என்னை வணங்குகிறார்கள்” என்று ஏசாயா மூலம் யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (ஏசா. 29:13) அப்படியென்றால், வேதவசனங்களோடு ஒத்துப்போகாத பாரம்பரிய பழக்கவழக்கங்களை இயேசு கண்டித்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது, இல்லையா? வேதவசனங்களைவிட மனிதர்கள் உண்டாக்கிய சட்டதிட்டங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யெகோவாவையும் அவர் அனுப்பிய மேசியாவையும் ஒதுக்கித் தள்ளினார்கள்.
15. இன்று நிறைய பேருக்கு யெகோவாவின் சாட்சிகளை ஏன் பிடிப்பதில்லை?
15 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. வேதவசனங்களோடு ஒத்துப்போகாத பழக்கவழக்கங்களை யெகோவாவின் சாட்சிகள் செய்வதில்லை. பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கிறிஸ்துமஸ் மாதிரியான கொண்டாட்டங்களிலும் அவர்கள் கலந்துகொள்வதில்லை. அதனால், நிறைய பேருக்கு அவர்களைப் பிடிப்பதில்லை. அதோடு, தேசிய விழாக்களிலும் பைபிளோடு ஒத்துப்போகாத சவ அடக்கம் சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்ளாததால் சிலர் அவர்கள்மேல் கோபப்படுகிறார்கள். இந்த மாதிரியான காரணங்களுக்காக நம்மை வெறுப்பவர்கள் கடவுளை உண்மையோடு வழிபட்டுக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பைபிளில் இருக்கிற விஷயங்களைவிட பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களால் கடவுளைச் சந்தோஷப்படுத்தவே முடியாது!—மாற். 7:7-9.
16. சங்கீதம் 119:97, 113, 163-165 சொல்கிறபடி, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?
16 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும். (சங்கீதம் 119:97, 113, 163-165-ஐ வாசியுங்கள்.) யெகோவாமேல் நமக்கு அன்பு இருந்தது என்றால், அவருக்குப் பிடிக்காத எந்தப் பாரம்பரிய பழக்கவழக்கங்களிலும் நாம் ஈடுபட மாட்டோம். அவருக்கும் நமக்கும் இடையில் எதையும் வரவிட மாட்டோம்.
(4) அரசியல் மாற்றத்தை இயேசு கொண்டுவரவில்லை
17. என்ன எதிர்பார்ப்புகள் இருந்ததால் அன்றைக்கு இருந்த ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?
17 ஒருபக்கம் ரோமர்களின் அடக்குமுறையிலிருந்து மேசியா தங்களைக் காப்பாற்றுவார் என்று அன்றைக்கு இருந்த சிலர் எதிர்பார்த்தார்கள். அதனால், இயேசுவை ராஜாவாக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. (யோவா. 6:14, 15) இன்னொரு பக்கம் இயேசு ராஜாவாக ஆகிவிட்டார் என்றால், ரோமர்கள் கோபப்பட்டு தங்களுக்குக் கொடுத்திருந்த அதிகாரத்தைப் பறித்துவிடுவார்களோ என்று குருமார்களும் மற்றவர்களும் பயந்தார்கள். இந்த மாதிரி காரணங்களால் இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
18. மேசியாவை பற்றிய எந்தத் தீர்க்கதரிசனங்களை அன்றைக்கு இருந்தவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை?
18 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? கடைசியில் இயேசு ஒரு வெற்றிவீரராக வலம் வருவார் என நிறைய தீர்க்கதரிசனங்கள் சொன்னது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு அவர் நம்முடைய பாவங்களுக்காக இறக்க வேண்டியிருக்கும் என்றும் சில தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. (ஏசா. 53:9, 12) அப்படியிருக்கும்போது, அன்றைக்கு இருந்த ஜனங்கள் ஏன் தவறான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டார்கள்? ஏனென்றால், தங்களுடைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைப் பற்றி சொல்லாத தீர்க்கதரிசனங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.—யோவா. 6:26, 27.
19. மற்றவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
19 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. அரசியலில் நாம் நடுநிலையோடு இருப்பதால் நிறைய பேர் நம்மை ஏற்றுக்கொள்வது இல்லை. நாம் ஓட்டு போட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படி நாம் போட்டால் யெகோவாவை ஒதுக்கிவிட்டு ஒரு மனிதனை நம்முடைய தலைவராக ஏற்றுக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். (1 சா. 8:4-7) அதோடு, பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நாம் கட்ட வேண்டும் என்றும், வேறு விதமான பொது சேவைகளைச் செய்ய வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள். உலகத்தில் இருக்கிற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்குமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு ஊழிய வேலைக்கு நாம் முதலிடம் கொடுப்பதாக நம்மைக் குறை சொல்கிறார்கள்.
20. மத்தேயு 7:21-23 சொல்கிறபடி, எது நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்?
20 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (மத்தேயு 7:21-23-ஐ வாசியுங்கள்.) இயேசு கொடுத்த வேலையைச் செய்வதுதான் நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். (மத். 28:19, 20) அரசியலிலோ, இந்த உலக விவகாரத்திலோ நம்முடைய கவனம் திசைதிரும்பிவிடக் கூடாது. மக்களை நாம் நேசிக்கிறோம், அவர்களுடைய பிரச்சினைகள் சரியாக வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும், யெகோவாவுடன் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு உதவுவதும்தான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை.
21. நாம் எல்லாரும் என்ன முடிவெடுக்கலாம்?
21 முதல் நூற்றாண்டில் இருந்த சிலர் இயேசுவை ஏன் ஏற்றுக்கொள்ளாமல் போனார்கள் என்பதற்கும் இயேசுவின் சீஷர்களாக இருக்கிற நம்மை இன்று சிலர் ஏன் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்கும் நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். இவர்களை மாதிரி நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தோம். அடுத்த கட்டுரையில் இன்னும் நான்கு காரணங்களை பற்றிப் பார்க்கப்போகிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ள வேண்டுமென்ற உறுதியான முடிவை நாம் எடுக்கலாம், தொடர்ந்து நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தலாம்.
பாட்டு 56 யெகோவாவின் வழியில் நடப்போம்
^ இந்தப் பூமியில் இதுவரைக்கும் வாழ்ந்தவர்களிலேயே இயேசு மாதிரி ஒரு போதகர் இருந்ததே இல்லை. ஆனாலும், அன்றைக்கு இருந்த நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இன்றும், நாம் சொல்வதையும் செய்வதையும் பார்த்து நிறைய பேர் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு இயேசுமேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதையும் பார்க்கலாம். யெகோவாவின் சாட்சியாக ஆகத் தயங்குகிறவர்களுக்கு இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் ரொம்ப உதவியாக இருக்கும்.