படிப்புக் கட்டுரை 19
அன்பும் நியாயமும்—அக்கிரமம் நடக்கும்போது
“நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”—சங். 5:4.
பாட்டு 129 நம் நங்கூர நம்பிக்கை
இந்தக் கட்டுரையில்... *
1-3. (அ) சங்கீதம் 5:4-6 சொல்கிறபடி, அக்கிரமத்தைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்? (ஆ) குழந்தை பாலியல் வன்கொடுமை, ‘கிறிஸ்துவின் சட்டத்துக்கு’ விரோதமானது என்று ஏன் சொல்கிறோம்?
எல்லா விதமான அக்கிரமத்தையும் யெகோவா வெறுக்கிறார். (சங்கீதம் 5:4-6-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், குழந்தை பாலியல் வன்கொடுமை என்ற கேவலமான, பயங்கரமான அக்கிரமத்தை அவர் இன்னும் எந்தளவு வெறுப்பார்! யெகோவாவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், இந்த அக்கிரமத்தை வெறுக்கிறோம். கிறிஸ்தவ சபையில் இப்படி நடப்பதை நாம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!—ரோ. 12:9; எபி. 12:15, 16.
2 குழந்தை பாலியல் வன்கொடுமையோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலும் ‘கிறிஸ்துவின் சட்டத்துக்கு’ விரோதமானது. (கலா. 6:2) ஏன் அப்படிச் சொல்கிறோம்? முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், கிறிஸ்துவின் சட்டம், அதாவது தன்னுடைய சொல்லாலும் செயலாலும் இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள், அன்பை அடிப்படையாகக் கொண்டவை; அவை எப்போதும் நியாயமானவை. உண்மை கிறிஸ்தவர்கள் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதால், பிள்ளைகள் பாதுகாப்பாக உணரும் விதத்தில் அவர்களை நடத்துகிறார்கள். அதோடு, மற்றவர்கள் தங்களை உண்மையிலேயே நேசிக்கிறார்கள் என்று பிள்ளைகள் உணரும் விதத்தில் அவர்களை நடத்துகிறார்கள். ஆனால், குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது சுயநலமான, அநியாயமான ஒரு செயல். தங்களைப் பாதுகாக்கவோ நேசிக்கவோ யாருமே இல்லை என்று அது பிள்ளைகளை நினைக்க வைக்கிறது.
3 இந்த மோசமான பிரச்சினை உலகம் முழுவதும் பரவி இருப்பது, வருத்தமான ஒரு விஷயம். உண்மை கிறிஸ்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், “பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும்” அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலர், சபையில் நுழைவதற்குக்கூட முயற்சி செய்யலாம். (2 தீ. 3:13) அதுமட்டுமல்ல, சபையின் பாகமாக இருக்கும் சிலர்கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான பாவ ஆசைகளுக்கு இடம்கொடுத்திருக்கிறார்கள்; பிள்ளைகளுக்குப் பாலியல் ரீதியில் கொடுமை செய்திருக்கிறார்கள். குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது ஏன் படுமோசமான பாவம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, இதுபோன்ற பாவங்கள் உட்பட மற்ற படுமோசமான பாவங்களை மூப்பர்கள் எப்படிக் கையாளு கிறார்கள் என்பதைப் பற்றியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம். *
படுமோசமான ஒரு பாவம்
4-5. குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது, அந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு விரோதமாகச் செய்யப்படுகிற ஒரு பாவம் என்று எப்படிச் சொல்கிறோம்?
4 குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப நாட்களுக்கு வேதனையை அனுபவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், அந்தக் குழந்தையை நேசிக்கிற குடும்பத்துக்கும், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் அது வேதனையைத் தருகிறது. குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது படுமோசமான ஒரு பாவம்!
5 பாதிக்கப்பட்டவருக்கு * விரோதமான ஒரு பாவம். அநியாயமாக ஒருவருக்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவதே ஒரு பாவம்! அடுத்த கட்டுரையில் பார்க்கப்போகிறபடி, குழந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர், இப்படிப்பட்ட ஒரு பாவத்தைத்தான் செய்கிறார். அந்தக் குழந்தைக்குப் படுபயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறார். இந்தப் பாவத்தைச் செய்பவர், தன்மீது அந்தக் குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுத்துவிடுகிறார். அந்தக் குழந்தையின் பாதுகாப்பு உணர்வை சிதைத்துவிடுகிறார். இப்படிப்பட்ட அக்கிரமத்திலிருந்து பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் உதவியும் தேவைப்படுகின்றன.—1 தெ. 5:14.
6-7. குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது, சபைக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிரான பாவம் என்று ஏன் சொல்கிறோம்?
6 சபைக்கு விரோதமான பாவம். சபையின் பாகமாக இருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யும்போது, அவர் சபையின் நற்பெயரைக் கெடுக்கிறார். (மத். 5:16; 1 பே. 2:12) ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடிக்கொண்டிருக்கும்’ லட்சக்கணக்கான விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செய்யப்படுகிற எப்பேர்ப்பட்ட அநியாயம் இது! (யூ. 3) மனம் திருந்தாமல் இப்படிப்பட்ட அக்கிரமத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் சபையின் நற்பெயரைக் கெடுக்கிற ஆட்களை ஒருபோதும் சபையில் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
7 அரசாங்க அதிகாரிகளுக்கு விரோதமான பாவம். கிறிஸ்தவர்கள், “உயர் அதிகாரத்துக்கு . . . கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.” (ரோ. 13:1, அடிக்குறிப்பு) அரசாங்க சட்டங்களை மதிப்பதன் மூலம் நாம் இதைச் செய்கிறோம். சபையில் இருக்கிற ஒருவர் குற்றவியல் சட்டங்களை மீறினால், உதாரணத்துக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைச் செய்தால், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக அவர் பாவம் செய்கிறார் என்று அர்த்தம். (அப்போஸ்தலர் 25:8-ஐ ஒப்பிடுங்கள்.) அரசாங்க சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கிற அதிகாரம் மூப்பர்களுக்கு இல்லை என்பது உண்மைதான். அதற்காக, குழந்தை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனையிலிருந்து அவர்கள் அவரைக் காப்பாற்ற மாட்டார்கள். (ரோ. 13:4) பாவம் செய்தவர், எதை விதைத்தாரோ அதையே அறுவடை செய்வார்.—கலா. 6:7.
8. மனிதர்களுக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
8 எல்லாவற்றையும்விட, அது கடவுளுக்கு விரோதமான பாவம். (சங். 51:4) ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது, அவன் யெகோவாவுக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறான். இதைப் புரிந்துகொள்ள, திருச்சட்டத்திலிருந்த ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றும்போது, அவன் “யெகோவாவுக்கு உண்மையில்லாமல்” நடந்துகொள்கிறான் என்று அது சொன்னது. (லேவி. 6:2-4) அப்படியென்றால், சபையின் பாகமாக இருக்கிற ஒருவர், ஒரு குழந்தையைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும்போது, அவர் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடக்கிறார். ஏனென்றால், அவர் அந்தக் குழந்தையை ஏமாற்றுகிறார். எப்படி? அந்தக் குழந்தை அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அதனால், தனக்குப் பாதுகாப்பு இல்லாததைப் போல் அந்தக் குழந்தை உணருகிறது. இப்படிப்பட்ட பாவத்தைச் செய்பவர் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்துகிறார். குழந்தை பாலியல் வன்கொடுமை என்பது கடவுளுக்கு எதிராகச் செய்யப்படுகிற படுமோசமான பாவம் என்பதால், இது கண்டனத்துக்குரிய ஒரு செயல்!
9. பைபிள் அடிப்படையிலான என்ன தகவல்களை அமைப்பு பல வருஷங்களாகக் கொடுத்துவருகிறது, ஏன்?
9 பல வருஷங்களாக, குழந்தை பாலியல் வன்கொடுமையைப் பற்றிய பைபிள் அடிப்படையிலான நிறைய தகவல்களை யெகோவாவின் அமைப்பு கொடுத்துவருகிறது. உதாரணத்துக்கு, இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட தீராத மனவேதனையை எப்படிச் சமாளிக்கலாம்... மற்றவர்கள் எப்படி உதவியையும் உற்சாகத்தையும் தரலாம்... பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்... என்பதைப் பற்றியெல்லாம் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையில் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி மூப்பர்களுக்கு பைபிள் அடிப்படையிலான விரிவான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாவத்தை சபை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி அமைப்பு தொடர்ந்து மறுபார்வை செய்துவருகிறது. கிறிஸ்துவின் சட்டத்துக்கு ஒத்துப்போகும் விதத்தில் சபை இதைக் கையாளுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளத்தான் இப்படிச் செய்யப்படுகிறது.
மோசமான பாவத்தை எப்படிக் கையாளுவது?
10-12. (அ) மோசமான பாவத்தைக் கையாளும்போது மூப்பர்கள் எதை மனதில் வைத்திருக்கிறார்கள், அவர்களுடைய முக்கியக் குறிக்கோள் என்ன? (ஆ) யாக்கோபு 5:14, 15 சொல்கிறபடி, மூப்பர்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள்?
10 மோசமான பாவத்தைக் கையாளும்போது, சபையாரை அன்பாக நடத்த வேண்டும் என்பதை மூப்பர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். அதோடு, கடவுளின் பார்வையில் சரியானதையும் நியாயமானதையும் செய்யும்படி கிறிஸ்துவின் சட்டம் சொல்கிறது என்பதையும் மனதில் வைத்திருக்கிறார்கள். அதனால், மோசமான பாவத்தை ஒருவர் செய்ததாக தகவல் கிடைக்கும்போது, நிறைய விஷயங்களை அவர்கள் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. கடவுளுடைய பெயருக்குக் களங்கம் வராமல் பார்த்துக்கொள்வது மூப்பர்களின் முக்கியக் குறிக்கோள்! (லேவி. 22:31, 32; மத். 6:9) அதோடு, சகோதர சகோதரிகளின் ஆன்மீக நலனிலும் அவர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அதுமட்டுமல்ல, மோசமான பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவியையும் அவர்கள் செய்கிறார்கள்.
11 பாவம் செய்தவர் சபையின் பாகமாக இருந்தால், யெகோவாவோடு மறுபடியும் ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவ முடியுமா என்று மூப்பர்கள் பார்ப்பார்கள். (யாக்கோபு 5:14, 15-ஐ வாசியுங்கள்.) கெட்ட ஆசைகளுக்கு இணங்கி மோசமான பாவத்தில் விழுந்துவிட்ட ஒரு கிறிஸ்தவர், ஆன்மீக விதத்தில் வியாதிப்பட்டிருக்கிறார். யெகோவாவோடு அவருக்கு இருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதுபோன்ற சூழ்நிலைகளில், மூப்பர்கள் ஆன்மீக மருத்துவர்களைப் போல் செயல்படுகிறார்கள். ‘வியாதியாக இருப்பவரை [அதாவது, பாவம் செய்தவரை] குணமாக்க’ அவர்கள் முயற்சி செய்கிறார்கள். பைபிள் அடிப்படையில் அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள், யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை மறுபடியும் வளர்த்துக்கொள்ள பாவம் செய்தவருக்கு உதவும். ஆனால், உண்மையிலேயே அவர் மனம் திருந்தினால்தான் இதெல்லாம் சாத்தியமாகும்.—அப். 3:19; 2 கொ. 2:5-10.
12 மூப்பர்களுக்கு முக்கியமான பொறுப்பு இருப்பது இதிலிருந்து தெரிகிறது. தங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையின் மீது அவர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. (1 பே. 5:1-3) சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், குழந்தை பாலியல் வன்கொடுமை உட்பட வேறு எந்தப் பாவத்தைப் பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைத்தாலும், உடனடியாகச் செயல்படுகிறார்கள். இப்போது, பாராக்கள் 13, 15 மற்றும் 17-ன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளைக் கவனியுங்கள்.
13-14. குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்துக்கு மூப்பர்கள் கீழ்ப்படிகிறார்களா? விளக்குங்கள்.
13 குழந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் குற்றம்சாட்டப்பட்டால், அரசாங்க அதிகாரிகளுக்கு அதைப் பற்றித் தெரியப்படுத்துவது சம்பந்தமான சட்டத்துக்கு மூப்பர்கள் கீழ்ப்படிகிறார்களா? இப்படிப்பட்ட சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் வாழ்கிற மூப்பர்கள், அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். (ரோ. 13:1) இதுபோன்ற சட்டங்கள் கடவுளுடைய சட்டங்களுக்கு எதிரானவை கிடையாது. (அப். 5:28, 29) அதனால், பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேள்விப்படும்போது மூப்பர்கள் என்ன செய்கிறார்கள்? அதிகாரிகளுக்கு அதைப் பற்றித் தெரியப்படுத்துவது சம்பந்தமான சட்டத்துக்கு எப்படிக் கீழ்ப்படியலாம் என்று தெரிந்துகொள்ள, உடனடியாக வழிநடத்துதலை நாடுகிறார்கள்.
14 பாதிக்கப்பட்டவரிடமும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடமும்
இதைப் பற்றித் தெரிந்தவரிடமும் மூப்பர்கள் பேசும்போது, இதைப் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட நபர் சபையின் பாகமாக இருக்கிறார் என்றும் இந்தப் பாவத்தைப் பற்றிச் சமுதாயத்தில் இருக்கிற மற்றவர்களுக்குத் தெரியவருகிறது என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், அந்தப் பாவத்தைப் பற்றிப் புகார் கொடுத்த கிறிஸ்தவர், கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்திவிட்டதாக நினைக்க வேண்டுமா? இல்லை! பாவம் செய்தவர்தான் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தியிருக்கிறார்.15-16. (அ) 1 தீமோத்தேயு 5:19-ன்படி, மோசமான பாவத்தை நிரூபிக்க ஏன் இரண்டு சாட்சிகளாவது இருக்க வேண்டும்? (ஆ) சபையில் இருக்கிற ஒருவர், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக மூப்பர்களுக்குத் தகவல் கிடைக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள்?
15 மோசமான பாவத்தை நிரூபிக்க இரண்டு சாட்சிகளாவது இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஏனென்றால், நியாயம் சம்பந்தமாக பைபிள் சொல்கிற உயர்ந்த தராதரங்களில் இதுவும் ஒன்று! பாவம் செய்தவர் தன்னுடைய பாவத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கும் நீதிவிசாரணை குழு அமைப்பதற்கும் இரண்டு சாட்சிகள் தேவை. (உபா. 19:15; மத். 18:16; 1 தீமோத்தேயு 5:19-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், வன்கொடுமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதற்கும் இரண்டு சாட்சிகள் தேவையா? இல்லை! மூப்பர்களோ மற்றவர்களோ இந்தக் குற்றத்தைப் பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதற்கு இரண்டு சாட்சிகள் தேவையில்லை.
16 சபையில் இருக்கிற ஒருவர் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டால், அதிகாரிகளிடம் அதைத் தெரியப்படுத்துவதைப் பற்றிய சட்டத்துக்குக் கீழ்ப்படிய மூப்பர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். பிறகு, உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பைபிளின் அடிப்படையில் விசாரணை செய்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், சாட்சிகள் சொல்லும் தகவல்களை மூப்பர்கள் கருத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளாவது அந்தக் குற்றத்தை உறுதிப்படுத்தினால், நீதிவிசாரணை குழுவை அமைப்பார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) குற்றம்சாட்டுகிறவர், முதலாவது சாட்சி. அந்தக் குற்றம் நடந்ததை உறுதிப்படுத்துகிற அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் இதுபோன்ற குற்றத்தை ஏற்கெனவே செய்திருப்பதைப் பார்த்திருக்கிற இன்னொரு நபர், இரண்டாவது சாட்சி. ஒருவேளை இரண்டாவது சாட்சி இல்லை என்றால், குற்றம்சாட்டுகிற நபர் பொய் சொல்கிறார் என்று அர்த்தமா? இல்லை! இரண்டு சாட்சிகள் இல்லை என்றாலும், மோசமான பாவம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் அந்தப் பாவத்தால் மற்றவர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் மூப்பர்கள் புரிந்துகொள்கிறார்கள். வன்கொடுமைக்கு ஆளான அந்தக் குழந்தைக்கும் அந்தப் பாவத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் மூப்பர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்கள். அதோடு, குற்றம்சாட்டப்பட்டவரால் சபைக்கு எந்த ஆபத்தும் வராதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.—அப். 20:28.
17-18. நீதிவிசாரணை குழுவில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?
17 நீதிவிசாரணை குழு என்ன செய்யும்? வன்கொடுமை செய்தவர், சட்டத்தை மீறியதற்காக அரசாங்க அதிகாரிகளால் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்று மூப்பர்கள் தீர்ப்பு சொல்வதில்லை; “நீதிவிசாரணை” என்ற வார்த்தை அதை அர்த்தப்படுத்துவதும் இல்லை. அரசாங்க சட்டத்தை செயல்படுத்துகிற விஷயத்தில் மூப்பர்கள் தலையிடுவதில்லை. குற்றவியல் சம்பந்தமான விஷயங்களை அரசாங்க அதிகாரிகளின் கையில் அவர்கள் விட்டுவிடுகிறார்கள். (ரோ. 13:2-4; தீத். 3:1) ஒரு நபர் தொடர்ந்து சபையின் அங்கத்தினராக இருக்கலாமா வேண்டாமா என்றுதான் மூப்பர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள்.
18 ஆன்மீக விஷயங்களைத்தான், அதாவது கடவுளோடும் மற்றவர்களோடும் இருக்கிற பந்தத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத்தான், நீதிவிசாரணை குழு கையாளும். பைபிளைப் பயன்படுத்தி, பாவம் செய்தவர் மனம் திருந்தியிருக்கிறாரா இல்லையா என்பதை அந்தக் குழு முடிவு செய்யும். அவர் மனம் திருந்தவில்லை என்றால் சபை நீக்கம் செய்யப்படுவார்; அதைப் பற்றிச் சபையில் ஓர் அறிவிப்பும் செய்யப்படும். (1 கொ. 5:11-13) அவர் மனம் திருந்தியிருந்தால், தொடர்ந்து சபையில் இருக்க அனுமதிக்கப்படுகிறார். இருந்தாலும், பல வருஷங்களுக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் அவருக்கு எந்தவொரு சபை பொறுப்புகளோ நியமிப்புகளோ கிடைக்காமல் போகலாம் என்பதை மூப்பர்கள் அவரிடம் சொல்வார்கள். வன்கொடுமை செய்தவர் மைனர் பிள்ளைகளுக்கு மத்தியில் இருக்கும்போது, பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி பெற்றோர்களிடம் மூப்பர்கள் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கலாம்; பிள்ளைகளின் நலனை மனதில் வைத்து அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். சபையைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளை மூப்பர்கள் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர் யார் என்பதை சொல்ல மாட்டார்கள்.
பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
19-22. பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? (அட்டைப் படம்)
19 ஆபத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? பெற்றோருக்குத்தான்! * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உங்கள் பிள்ளைகள் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு, ‘யெகோவா தந்திருக்கும் சொத்து.’ (சங். 127:3) நீங்கள்தான் இந்தச் சொத்தைப் பாதுகாக்க வேண்டும்! அதற்காக நீங்கள் என்ன செய்யலாம்?
20 முதலாவது, வன்கொடுமையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். எப்படிப்பட்டவர்கள் இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள் என்றும் பிள்ளைகளை ஏமாற்றுவதற்காக எப்படிப்பட்ட தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். ஆபத்தான சூழ்நிலைகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துவைத்திருங்கள். (நீதி. 22:3; 24:3) பெரும்பாலான சமயங்களில், குழந்தைக்கு நன்றாகத் தெரிந்த அல்லது குழந்தையின் நம்பிக்கையைச் சம்பாதித்த ஒருவர்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
21 இரண்டாவதாக, பிள்ளைகளோடு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். (உபா. 6:6, 7) அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேளுங்கள். (யாக். 1:19) வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தை, அதைப் பற்றி வெளியே சொல்வதற்குத் தயங்கும் என்பதை ஞாபகம் வையுங்கள். தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து அந்தக் குழந்தை பயப்படலாம். அல்லது, இதைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது என்று வன்கொடுமை செய்தவரால் மிரட்டப்பட்டிருக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஏதோவொரு மோசமான சம்பவம் நடந்திருப்பதாக நினைத்தால், அன்போடு கேள்விகள் கேட்டு, குழந்தையின் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தை சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள்.
22 மூன்றாவதாக, பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளின் வயதுக்கேற்ப செக்ஸைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள். தொடக் கூடாத இடத்தில் யாராவது தொட முயற்சி செய்தால், என்ன சொல்ல வேண்டும்... என்ன செய்ய வேண்டும்... என்பதைக் கற்றுக்கொடுங்கள். பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகக் கடவுளுடைய அமைப்பு கொடுத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்துங்கள்.—“ நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள், பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
23. குழந்தை பாலியல் வன்கொடுமையை நாம் எப்படிக் கருதுகிறோம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
23 யெகோவாவின் சாட்சிகளான நாம், குழந்தை பாலியல் வன்கொடுமையை படுமோசமான பாவமாகவும் பயங்கரமான அக்கிரமமாகவும் கருதுகிறோம். நம்முடைய சபைகள் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதால், இப்படிப்பட்ட பாவிகளுடைய செயல்களால் ஏற்படுகிற விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதில்லை. அதேசமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 123 மேய்ப்பர்கள்—‘மனித வடிவில் பரிசுகள்’
^ பாரா. 5 பாலியல் வன்கொடுமையிலிருந்து பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும். சபையை மூப்பர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
^ பாரா. 3 வார்த்தைகளின் விளக்கம்: ஓர் ஆணோ பெண்ணோ, தன்னுடைய பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகக் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதைத்தான் குழந்தை பாலியல் வன்கொடுமை என்று சொல்கிறோம். குழந்தைகளோடு உடலுறவு வைத்துக்கொள்வதையும், வாய்வழி அல்லது ஆசனவழி செக்ஸ் வைத்துக்கொள்வதையும் இது உட்படுத்தலாம். அதோடு, பிறப்புறுப்புகளை, மார்பகங்களை அல்லது புட்டத்தைத் தொட்டு விளையாடுவதையும் உட்படுத்தலாம். அல்லது, இதுபோன்ற வேறு ஏதாவது கீழ்த்தரமான செயல்களையும் உட்படுத்தலாம். இவற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் பெண் பிள்ளைகளாக இருந்தாலும், ஆண் பிள்ளைகள் நிறைய பேரும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைச் செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தாலும், பெண்கள் சிலரும் இப்படிச் செய்கிறார்கள்.
^ பாரா. 5 வார்த்தைகளின் விளக்கம்: இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிற “பாதிக்கப்பட்டவர்” என்ற வார்த்தை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையைக் குறிக்கிறது. அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தவறாக நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தக் குழந்தை ஒரு அப்பாவி என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறோம்.
^ பாரா. 11 ஆன்மீக விதத்தில் பலவீனமாக இருந்ததால்தான் மோசமான பாவத்தில் விழுந்துவிட்டதாக ஒருவர் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. அவருடைய தவறான தீர்மானங்களுக்கும் செயல்களுக்கும் அவர்தான் முழு பொறுப்பு. அவர் யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும்.—ரோ. 14:12.
^ பாரா. 16 குற்றம்சாட்டப்பட்ட நபரை மூப்பர்கள் விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்ட குழந்தை ஒருபோதும் அங்கே இருக்க வேண்டியதில்லை. அந்தக் குழந்தை தங்களிடம் சொன்ன விஷயங்களை பெற்றோரோ நம்பகமான இன்னொருவரோ மூப்பர்களிடம் சொல்லலாம். இப்படிச் செய்யும்போது, அந்தக் குழந்தையின் மனவேதனையை அதிகமாக்காமல் இருக்க முடியும்.
^ பாரா. 19 பெற்றோருக்கென்று சொல்லப்பட்ட விஷயங்கள், குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்கும், அதாவது மைனர் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கும், பொருந்தும்.