கண்டித்துத் திருத்துவது—கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி!
“யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.”—எபி. 12:6.
பாடல்கள்: 125, 117
1. கண்டித்துத் திருத்துவதைப் பற்றி பைபிள் பெரும்பாலும் எப்படி விளக்குகிறது?
“கண்டித்துத் திருத்துதல்” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் மனதுக்கு எது ஞாபகம் வருகிறது? நிறைய பேர் நினைப்பது போல், கண்டித்துத் திருத்துவது என்றால் வெறும் தண்டனை மட்டுமே கிடையாது. நம்முடைய நன்மைக்குத்தான் நாம் கண்டித்துத் திருத்தப்படுகிறோம் என்று பைபிள் சொல்கிறது. அதை, அறிவோடும் ஞானத்தோடும் அன்போடும் வாழ்வோடும் சம்பந்தப்படுத்திப் பைபிள் சிலசமயங்களில் பேசுகிறது. (நீதி. 1:2-7; 4:11-13) நம்மேல் அன்பு இருப்பதால்தான் கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்; அதுமட்டுமல்ல, நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (எபி. 12:6) கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவதில், சிலசமயங்களில் தண்டனையும் அடங்கியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தண்டனை ஒருபோதும் கொடூரமாக இருப்பதில்லை; நமக்குக் கெடுதலும் தருவதில்லை. சொல்லப்போனால், கண்டித்துத் திருத்துதல் என்ற வார்த்தையின் மிக முக்கியமான அர்த்தமே கற்றுக்கொடுப்பதுதான்! ஒரு அப்பா அம்மா தங்கள் அன்பான பிள்ளைக்குக் கற்றுக்கொடுப்பதைப் போன்றதுதான் அது!
2, 3. கண்டித்துத் திருத்துவதில், கற்றுக்கொடுப்பதும் தண்டனை தருவதும் அடங்கியிருக்கின்றன என்று எப்படிச் சொல்லலாம்? (ஆரம்பப் படம்)
2 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஜானி, வீட்டுக்குள் பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். “ஜானி, வீட்டுக்குள்ள பந்து விளையாட கூடாதுனு உனக்குத் தெரியுமா, இல்லையா? ஏதாவது உடைஞ்சுடப் போகுது” என்று அவனுடைய அம்மா சொல்கிறார். ஆனால், அம்மா
சொல்வதைக் கேட்காமல், ஜானி விளையாடிக்கொண்டே இருக்கிறான். பந்து வீட்டுக்குள் இருந்த பூந்தொட்டியின் மேல் விழுந்து, அந்தப் பூந்தொட்டி உடைந்துவிடுகிறது. இப்போது ஜானியின் அம்மா அவனைக் கண்டித்துத் திருத்துவதற்கு என்ன செய்வார்? அவன் செய்தது ஏன் தவறு என்று சொல்வார். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டால் அவனுக்குத்தான் நன்மை என்பதை அவனுக்குப் புரியவைப்பார். அதோடு, அவர்கள் சொல்வது நியாயமானது என்றும் அவசியமானது என்றும் அவனுக்குப் புரியவைப்பார். ஜானி இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பந்தை அவனிடமிருந்து வாங்குவதன் மூலம் அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார். ஜானிக்கு அது கஷ்டமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ள அது அவனுக்கு உதவும்.3 கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாருமே, ‘கடவுளுடைய வீட்டாராக’ இருக்கிறோம். (1 தீ. 3:15) எது சரி எது தவறு என்று தீர்மானிப்பதற்கும், தனக்குக் கீழ்ப்படியாதபோது நம்மைக் கண்டித்துத் திருத்துவதற்கும் நம் அப்பா யெகோவாவுக்கு உரிமை இருக்கிறது. அதோடு, நம்முடைய செயல்களால் நாம் சில மோசமான விளைவுகளை அனுபவிக்கலாம். அப்போது, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய அன்பான கண்டிப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். (கலா. 6:7) கடவுள் நம்மை ரொம்ப நேசிக்கிறார், நாம் கஷ்டப்பட வேண்டுமென்று அவர் நினைப்பதில்லை.—1 பே. 5:6, 7.
4. (அ) மற்றவர்களை நாம் எப்படி கண்டித்துத் திருத்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
4 பைபிளின் அடிப்படையில் கண்டித்துத் திருத்தும்போது, நம்முடைய பிள்ளைகள் அல்லது பைபிள் மாணாக்கர்கள் இயேசுவின் சீஷராக ஆவதற்கு நம்மால் உதவ முடியும். எது சரி என்று பைபிள் மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுக்க நாம் பைபிளைப் பயன்படுத்துகிறோம். அதோடு, இயேசு ‘கட்டளையிட்ட எல்லாவற்றையும்’ அவர்கள் புரிந்துகொள்ளவும், அவற்றை ‘கடைப்பிடிக்கவும்’ நாம் பைபிளைப் பயன்படுத்துகிறோம். (மத். 28:19, 20; 2 தீ. 3:16) பைபிள் மாணாக்கருக்கு இப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அப்போதுதான் மற்றவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு அவர்களால் உதவ முடியும். (தீத்து 2:11-14-ஐ வாசியுங்கள்.) இப்போது, இந்த மூன்று முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்: (1) கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவது அவருடைய அன்புக்கு அத்தாட்சி என்று எப்படிச் சொல்லலாம்? (2) கடவுளால் கண்டித்துத் திருத்தப்பட்டவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (3) மற்றவர்களைக் கண்டித்துத் திருத்தும்போது யெகோவாவைப் போலவும் அவருடைய மகனைப் போலவும் எப்படி நடந்துகொள்ளலாம்?
கடவுள் அன்போடு கண்டித்துத் திருத்துகிறார்
5. யெகோவா நம்மைக் கண்டித்துத் திருத்துவது அவருடைய அன்புக்கு அத்தாட்சி என்று எப்படிச் சொல்லலாம்?
5 யெகோவா நம்மை நேசிப்பதால்தான் நம்மைத் திருத்துகிறார், நமக்குக் கற்றுக்கொடுக்கிறார், பயிற்சி அளிக்கிறார். அவரோடு நெருங்கிய பந்தத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், நாம் என்றென்றும் வாழ வேண்டுமென்றும் யெகோவா விரும்புகிறார். (1 யோ. 4:16) அவர் ஒருபோதும் நம்மை அவமானப்படுத்துவதில்லை அல்லது நாம் லாயக்கில்லாதவர்கள் என்று நம்மை உணரவைப்பதில்லை. (நீதி. 12:18) அதற்குப் பதிலாக, நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பார்க்கிறார், நமக்கு இருக்கிற சுதந்திரத்தை மதிக்கிறார். யெகோவாவுக்கு நம்மீது அன்பு இருப்பதால்தான் பைபிள், பிரசுரங்கள், பெற்றோர் அல்லது மூப்பர்கள் மூலமாக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்! “தவறான பாதையில்” நாம் தெரியாமல் அடியெடுத்து வைக்கும்போது, மூப்பர்கள் நம்மை அன்பாகவும் சாந்தமாகவும் சரி செய்கிறார்கள். அதன் மூலம், யெகோவாவைப் போலவே நம்மை நேசிப்பதைக் காட்டுகிறார்கள்.—கலா. 6:1.
6. கண்டித்துத் திருத்தப்படுவதன் மூலம் ஒருவர் பொறுப்புகளை இழந்தால்கூட, அது கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சிதான் என்று எப்படிச் சொல்லலாம்?
6 சிலசமயங்களில், கண்டித்துத் திருத்துவது என்பது வெறும் அறிவுரையோடு நின்றுவிடுவதில்லை. உதாரணத்துக்கு, ஒருவர் மோசமான பாவத்தைச் செய்யும்போது சபையில் இருக்கும் சில பொறுப்புகளை இழந்துவிடுகிறார். இப்படிக் கண்டித்துத் திருத்தப்படுவதும் கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சியாகத்தான் இருக்கிறது. எப்படி? கண்டித்துத் திருத்தப்படும்போது, அவர் சில விஷயங்களை உணரலாம். அதாவது, பைபிளைப் படித்துத் தியானிக்கவும், ஜெபம் செய்யவும் நிறைய நேரம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணரலாம். இதையெல்லாம் அவர் செய்யும்போது, யெகோவாவோடு அவருக்கு இருக்கும் பந்தம் பலப்படும். (சங். 19:7) காலப்போக்கில், இழந்த பொறுப்புகள் அல்லது நியமிப்புகள் அவருக்கு மீண்டும் கிடைக்கலாம். ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுவதுகூட யெகோவாவின் அன்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது. ஏனென்றால், கெட்ட விஷயங்களிலிருந்து சபையைப் பாதுகாக்க சபைநீக்கம் என்ற ஏற்பாடு உதவுகிறது. (1 கொ. 5:6, 7, 11) கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவது எப்போதுமே சரியானதாக இருக்கிறது. அதனால்தான், தாங்கள் செய்த பாவம் எவ்வளவு மோசமானது என்பதை சபைநீக்கம் செய்யப்பட்டவர்களால் உணர முடிகிறது. அதோடு, அவர்களால் மனம் திருந்தவும் முடிகிறது.—அப். 3:19.
நம் நன்மைக்காகத்தான் யெகோவா கண்டித்துத் திருத்துகிறார்
7. செப்னா யார்? எந்தக் கெட்ட குணத்தை அவர் வளர்த்துக்கொண்டார்?
7 கண்டித்துத் திருத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள, யெகோவாவால் கண்டித்துத் திருத்தப்பட்ட இரண்டு பேரைப் பற்றி பார்க்கலாம். ஒருவர், எசேக்கியா ராஜாவின் காலத்தில் வாழ்ந்த செப்னா. இன்னொருவர், நம் காலத்தில் வாழும் க்ரஹம் என்ற சகோதரர். செப்னா, அதிகாரம் படைத்த ஒரு பொறுப்பில் இருந்தார். அதாவது, எசேக்கியா ராஜாவின் ‘வீட்டை நிர்வகிக்கும் அதிகாரியாக’ இருந்தார். (ஏசா. 22:15) ஆனால் அவருக்கு அகம்பாவம் வந்துவிட்டது. எல்லாரும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். தனக்கென்று ஒரு ஆடம்பரமான கல்லறையை வெட்டினார். “பகட்டான ரதங்கள்” மேல் உலா வந்தார்.—ஏசா. 22:16-18.
8. செப்னாவை யெகோவா எப்படிக் கண்டித்துத் திருத்தினார்? அதனால் என்ன நடந்தது?
8 தனக்கு மகிமையைத் தேட செப்னா முயற்சி செய்ததால், அவருடைய பொறுப்பை எலியாக்கீமுக்குக் கடவுள் கொடுத்தார். (ஏசா. 22:19-21) அசீரிய ராஜாவான சனகெரிப் எருசலேமைத் தாக்க திட்டம் போட்டபோது இது நடந்தது. பிற்பாடு, யூதர்களை பயமுறுத்தவும் எசேக்கியா ராஜாவை சரணடையச் செய்யவும், அதிகாரிகளின் குழுவையும் பெரிய படையையும் சனகெரிப் அனுப்பினான். (2 ரா. 18:17-25) அந்த அதிகாரிகளைச் சந்திப்பதற்காக, எலியாக்கீமையும் மற்ற இரண்டு பேரையும் எசேக்கியா அனுப்பினார். அந்த இரண்டு பேரில் ஒருவர் செப்னா; அப்போது அவர் செயலாளராக இருந்தார். மனத்தாழ்மையாக இருக்க செப்னா கற்றுக்கொண்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதோடு, அவர் புண்படவில்லை என்பதும் தன்னையே நினைத்து பரிதாபப்படவில்லை என்பதும் தெரிகிறது. குறைவான ஸ்தானத்தை ஏற்க அவர் தயாராக இருந்தார். செப்னாவுடைய விஷயத்திலிருந்து நாம் மூன்று பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
9-11. (அ) செப்னாவுடைய விஷயத்திலிருந்து முக்கியமான என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) செப்னாவை யெகோவா நடத்திய விதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
9 முதலாவதாக, செப்னா தன் பதவியை இழந்தது, “அகம்பாவம் வந்தால் அழிவு வரும்” என்ற உண்மையை ஞாபகப்படுத்துகிறது. (நீதி. 16:18) சபையில் நமக்கு விசேஷ பொறுப்புகள் இருக்கலாம், மற்றவர்கள் நம்மை முக்கியமானவர்களாக நினைக்கலாம். அப்போது நாம் தொடர்ந்து மனத்தாழ்மையாக இருப்போமா? யெகோவாவுடைய தயவால்தான் நமக்கு சில திறமைகள் இருக்கின்றன என்பதையும், அதனால்தான் நம்மால் சில விஷயங்களைச் செய்ய முடிகிறது என்பதையும் மனதில் வைப்போமா? (1 கொ. 4:7) ஒருவரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்கக் கூடாது என்றும், அப்படி நினைக்காமல் இருப்பதன் மூலம் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்ட வேண்டும் என்றும் பவுல் சொன்னார்.—ரோ. 12:3.
10 இரண்டாவதாக, செப்னா தன்னை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கையில் யெகோவா அவரைக் கண்டித்துத் திருத்தியிருக்கலாம். (நீதி. 3:11, 12) விசேஷ நியமிப்புகளை இழந்தவர்கள் இதிலிருந்து நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். கோபப்படுவதற்கு அல்லது புண்படுவதற்குப் பதிலாக யெகோவாவுக்குத் தொடர்ந்து தங்களால் முடிந்த மிகச் சிறந்ததை அவர்கள் செய்யலாம். யெகோவா கண்டித்துத் திருத்துவதை, அவருடைய அன்புக்கு அத்தாட்சியாக நினைப்பது நல்லது. தொடர்ந்து மனத்தாழ்மையாக இருப்பவர்களை சரியான நேரத்தில் நம் அப்பா யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். (1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.) யெகோவா அன்பாக நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது, நாம் தாழ்மையாகவும் மென்மையான களிமண் போலவும் இருந்தால், நல்ல விதத்தில் வடிவமைக்கப்படுவோம்.
11 மூன்றாவதாக, செப்னாவை அவர் நடத்திய விதத்திலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். அதாவது, யெகோவா பாவத்தைத்தான் வெறுக்கிறார், பாவம் செய்தவர்களை அல்ல! ஒவ்வொருவரிடம் இருக்கும் நல்லதை யெகோவா பார்க்கிறார். நீங்கள் பெற்றோரா? அல்லது மூப்பரா? அப்படியென்றால், கண்டித்துத் திருத்தும் விஷயத்தில் யெகோவாவைப் போல் நடந்துகொள்வீர்களா?—யூ. 22, 23.
12-14. (அ) யெகோவா கண்டித்துத் திருத்தும்போது சிலர் எப்படி நடந்துகொள்கிறார்கள்? (ஆ) தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ள ஒரு சகோதரருக்கு பைபிள் எப்படி உதவியது, அதனால் என்ன நன்மை கிடைத்தது?
12 கண்டித்துத் திருத்தப்படும்போது, சிலர் கடவுளையும் சபையையும் விட்டுப்போகுமளவுக்குப் புண்பட்டுவிடுகிறார்கள்; இது வருத்தமான ஒரு விஷயம்! (எபி. 3:12, 13) அப்படிப்பட்டவர்களுக்கு யாருமே உதவ முடியாது என்று அர்த்தமா? இல்லை! க்ரஹம் என்ற சகோதரரைப் பற்றி பார்க்கலாம். அவர் சபைநீக்கம் செய்யப்பட்டு, பிறகு திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனாலும், ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் போவதை நிறுத்திவிட்டார். ஒரு மூப்பர், அவரோடு நட்புடன் பழக முயற்சி செய்தார். காலப்போக்கில், தனக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி அந்த மூப்பரிடம் க்ரஹம் கேட்டுக்கொண்டார்.
13 “க்ரஹமுக்கு பெருமை இருந்துச்சு. அவரோட விஷயத்தை கையாண்ட எல்லா மூப்பர்களையும் குறை சொன்னாரு. அதனால, அவருக்கு பைபிள் படிப்பு எடுத்தப்போ, பெருமையை பத்தியும் அதனால வர்ற விளைவுகளைப் பத்தியும் சொல்ற வசனங்கள கொஞ்ச நாளைக்கு கலந்துபேசுனோம். பைபிள்ங்குற கண்ணாடியில் அவரோட உண்மையான முகத்த பார்க்க ஆரம்பிச்சப்போ, அது அவருக்கே பிடிக்கல. பெருமைங்குற மரக்கட்டை அவரோட கண்ண குருடாக்குனதையும், குறை சொல்றது அவரோட பிரச்சினங்குறதையும் அவர் ஒத்துக்கிட்டாரு. அப்புறம் சீக்கிரமா மாற்றங்கள செஞ்சாரு. தவறாம கூட்டங்களுக்கு வந்தாரு, ஊக்கமா பைபிள படிச்சாரு, தினமும் ஜெபம் செய்றத பழக்கமா ஆக்கிக்கிட்டாரு. குடும்பத்த ஆன்மீக ரீதியில வழிநடத்துற பொறுப்பையும் ஏத்துக்கிட்டாரு. அவரோட மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சு” என்று அந்த மூப்பர் சொன்னார்.—லூக். 6:41, 42; யாக். 1:23-25.
14 “ஒருநாள் அவரு சொன்ன விஷயம் என் மனச தொட்டுடுச்சு. ‘நான் ரொம்ப வருஷமா சத்தியத்துல இருக்கேன். பயனியர் சேவைகூட செஞ்சிருக்கேன். ஆனா, இப்பதான் யெகோவாவ நேசிக்கிறேன்’னு சொன்னாரு” என்றும் அந்த மூப்பர் சொன்னார். சீக்கிரத்தில், மைக்கைக் கையாளும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது; அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். “கண்டித்து திருத்தப்படுறத ஏத்துக்கிட்டு, மனத்தாழ்மையா இருக்குறப்போ ஆசீர்வாதங்கள் வந்து குவியுங்குறத க்ரஹமோட அனுபவத்துல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்” என்றும் அந்த மூப்பர் சொல்கிறார்.
கண்டித்துத் திருத்தும்போது கடவுளைப் போலவும் கிறிஸ்துவைப் போலவும் நடந்துகொள்ளுங்கள்
15. கண்டித்துத் திருத்துவது மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?
15 நாம் நல்ல போதகர்களாக ஆக வேண்டுமென்றால், முதலில் நல்ல மாணவர்களாக இருக்க வேண்டும். (1 தீ. 4:15, 16) அதேபோல், மற்றவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்கு யெகோவா உங்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் தொடர்ந்து மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்; யெகோவா உங்கள் வாழ்க்கையை வழிநடத்த இடம்கொடுக்க வேண்டும். நீங்கள் மனத்தாழ்மையாக இருப்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்கள் உங்களை மதிப்பார்கள்; உங்களுடைய அறிவுரையையும் சுலபமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைச் செய்ய இயேசுவின் உதாரணம் நமக்கு உதவும்.
16. மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விஷயத்திலும் கண்டித்துத் திருத்தும் விஷயத்திலும், இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
மத். 26:39) தன்னுடைய போதனைகளும் தனக்கிருந்த ஞானமும் தன் அப்பாவிடமிருந்துதான் வந்தது என்று சொன்னார். (யோவா. 5:19, 30) இயேசு மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டியதால், கரிசனையுள்ள போதகராக இருந்தார். நேர்மையுள்ள ஜனங்கள் அவரோடு இருக்க விரும்பினார்கள். (லூக்கா 4:22-ஐ வாசியுங்கள்.) உற்சாகம் இழந்தவர்களையும் பலவீனமானவர்களையும் இயேசுவின் அன்பான வார்த்தைகள் தூக்கி நிறுத்தின. (மத். 12:20) யார் பெரியவர்கள் என்று அப்போஸ்தலர்கள் வாக்குவாதம் செய்தபோது இயேசு எரிச்சலடைந்திருக்கலாம்; ஆனால், அன்போடும் தயவோடும் திருத்தினார்.—மாற். 9:33-37; லூக். 22:24-27.
16 மிகவும் கஷ்டமான சமயங்களில்கூட இயேசு தன் அப்பாவுக்குக் கீழ்ப்படிந்தார். (17. சபையை நன்றாகக் கவனித்துக்கொள்ள எந்தக் குணங்கள் மூப்பர்களுக்கு உதவும்?
17 பைபிள் நியமங்களின் அடிப்படையில் கண்டித்துத் திருத்தும்போதெல்லாம், மூப்பர்கள் இயேசுவைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், கடவுளும் அவருடைய மகனும் தங்களை வழிநடத்த இடம்கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். “கண்காணிகளாகச் சேவை செய்து, உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள். கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும், அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல் ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள். கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மேல் ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்” என்று பேதுரு எழுதினார். (1 பே. 5:2-4) கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் மூப்பர்கள் சந்தோஷமாகக் கீழ்ப்படியும்போது, அவர்களும் அவர்களுடைய கவனிப்பில் இருப்பவர்களும் நன்மை அடைவார்கள்.—ஏசா. 32:1, 2, 17, 18.
18. (அ) பெற்றோர்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார்? (ஆ) பெற்றோர்களுக்கு அவர் எப்படி உதவுகிறார்?
18 குடும்பத்தில் இருப்பவர்களைக் கண்டித்துத் திருத்துவதைப் பற்றியும் அவர்களுக்குப் பயிற்சி தருவதையும் பற்றியும் பார்க்கலாம். “உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்த்து வாருங்கள்” என்று குடும்பத் தலைவர்களுக்கு யெகோவா சொல்கிறார். (எபே. 6:4) கண்டிப்பும் பயிற்சியும் உண்மையிலேயே அவசியமா? “திருந்துவான் என்ற நம்பிக்கை இருக்கும்போதே உன் மகனைக் கண்டித்துத் திருத்து. அவனுடைய சாவுக்கு நீ காரணமாகிவிடாதே” என்று நீதிமொழிகள் 19:18 சொல்கிறது. பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தும் பொறுப்பைப் பெற்றோர்களுக்கு யெகோவா கொடுக்கிறார். அதை அவர்கள் செய்யவில்லை என்றால், யெகோவாவுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்! (1 சா. 3:12-14) தேவைப்படும்போது ஞானத்தையும் பலத்தையும் பெற்றோர்களுக்கு யெகோவா கொடுக்கிறார். அதற்கு, அவர்கள் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும், பைபிளை நம்பியிருக்க வேண்டும், தங்களை வழிநடத்த கடவுளுடைய சக்திக்கு இடம்கொடுக்க வேண்டும்.—யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.
என்றென்றும் சமாதானமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்
19, 20. (அ) கடவுள் கண்டித்துத் திருத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
19 கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவதை ஏற்றுக்கொள்ளும்போதும், கண்டித்துத் திருத்தும் விஷயத்தில் அவரையும் அவருடைய மகனையும் போல நடந்துகொள்ளும்போதும் ஆசீர்வாதங்கள் மலைபோல் வந்து குவியும்! நம் குடும்பமும், சபையும் சமாதானமாக இருக்கும். அன்புக்கும் மரியாதைக்கும் தாங்கள் தகுதியானவர்கள் என்று ஒவ்வொருவரும் உணருவார்கள். அதோடு, எல்லாருக்கும் பாதுகாப்பு உணர்வு இருக்கும். எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகிற சமாதானத்துக்கும் சந்தோஷத்துக்கும் இது ஒரு சிறிய அத்தாட்சிதான்! (சங். 72:7) யெகோவா நம்மைக் கண்டித்துத் திருத்துவது, எதற்கு நம்மைத் தயார்படுத்துகிறது? நம் அப்பாவான அவரோடு, ஒரே குடும்பமாக என்றென்றும் சமாதானத்தோடு வாழ்வதற்கு நம்மைத் தயார்படுத்துகிறது. (ஏசாயா 11:9-ஐ வாசியுங்கள்.) கடவுள் நம்மேல் வைத்திருக்கும் அன்பைக் காட்டுவதற்கான சிறந்த வழிதான், கண்டித்துத் திருத்துவது! இதை மறக்காமல் இருந்தால், கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் நன்றியோடு இருப்போம்.
20 அடுத்த கட்டுரையில், குடும்பத்திலும் சபையிலும் கண்டித்துத் திருத்துவதைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களைப் பார்ப்போம். நம்மை நாமே எப்படிக் கட்டுப்படுத்துவது என்றும் பார்ப்போம். கண்டித்துத் திருத்துவதால் வரும் தற்காலிக வேதனையைவிட கடும் வேதனையைத் தரும் ஒன்றை நாம் எப்படித் தவிர்க்கலாம் என்றும் பார்ப்போம்.