Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 6

பாட்டு 10 யெகோவாவைப் புகழ்வோம்

“யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்”

“யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்”

“யெகோவாவின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்.”சங். 113:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவுடைய பரிசுத்தமான பெயரை எல்லா சமயத்திலும் புகழ்வதற்கு நம்மை எது தூண்டும் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. தன்னைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் பொய்களை நினைக்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

 இதைக் கற்பனை செய்து பாருங்கள்: உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களைப் பற்றி ரொம்ப மோசமான ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் சொல்கிறார். அது பொய் என்று உங்களுக்குத் தெரியும்; ஆனால், அவர் சொல்வதை சிலர் நம்பிவிடுகிறார்கள். அதை மற்றவர்களுக்கும் பரப்பிவிடுகிறார்கள். நிறையப் பேர் அதை நம்புகிறார்கள். இப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த பொய், உங்கள் நல்ல பெயரைக் கெடுக்கிறது என்று நினைக்கும்போது உங்கள் மனசு சுக்குநூறாக உடைந்துவிடும்.—நீதி. 22:1.

2 யெகோவாவுடைய பெயருக்குக் களங்கம் வந்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணம் உதவுகிறது. தேவதூதர்களில் ஒருவன் ஏவாளிடம் அவரைப் பற்றி பொய் சொன்னான். அதை அவளும் நம்பினாள். அந்த பொய்யினால் ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்தார்கள். இதனால் பாவமும் மரணமும் மனிதர்களுக்கு வந்தது. (ஆதி. 3:1-6; ரோ. 5:12) இன்று நம்மை சுற்றியிருக்கும் மரணம், போர், வேதனை போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் ஏதேன் தோட்டத்தில் சாத்தான் பரப்பிய பொய்தான் காரணம். இந்தப் பொய்யையும் அதனால் வந்த விளைவுகளையும் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்! அவருடைய மனசு கண்டிப்பாக வலிக்கும்!! ஆனாலும், யெகோவா வேதனையிலும் வெறுப்பிலும் மூழ்கிவிடவில்லை. சொல்லப்போனால், அவர் ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கிறார்.—1 தீ. 1:11.

3. நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

3 சாத்தான் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்கும் யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும் நமக்குப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி நிரூபிப்பதற்கு, “யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். (சங். 113:1) நாம் யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மக்களுக்கு சொல்வதன் மூலம் அவருடைய பெயரைப் புகழ முடியும். நீங்கள் அப்படி செய்வீர்களா? நம் கடவுளை மனதார புகழ்வதற்கு மூன்று விஷயங்கள் நம்மைத் தூண்டும். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.

யெகோவா சந்தோஷப்படுகிறார்

4. நாம் புகழும்போது யெகோவா ஏன் சந்தோஷப்படுகிறார்? விளக்குங்கள். (படத்தையும் பாருங்கள்.)

4 நாம் யெகோவாவுடைய பெயரைப் புகழும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். (சங். 119:108) அதற்காக, சர்வ வல்லமையுள்ள கடவுள் சாதாரண மனிதர்களைப் போல் பாராட்டுக்காகவும் புகழுக்காகவும் ஏங்குகிறவரா? தன்னம்பிக்கை இல்லாமல் மற்றவர்களுடைய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று துடிக்கிறவரா? கண்டிப்பாக இல்லை. இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: ஒரு சின்ன பிள்ளை அவளுடைய அப்பாவைப் பாசமாக கட்டிப்பிடிக்கிறாள், ‘இந்த உலகத்திலேயே நீங்கள்தான் பெஸ்ட் அப்பா!’ என்று சொல்கிறாள். இதைக் கேட்கும்போது அந்த அப்பாவுடைய முகத்தில் சந்தோஷம் மலரும். அவருடைய மனசு அப்படியே உருகிவிடும். ஏன்? பிள்ளையின் பாராட்டுக்காகவும் புகழுக்காகவும் ஏங்குகிற அப்பாவா அவர்? இல்லை. தன்னுடைய மகள் தன்மீது காட்டுகிற அன்பைப் பார்த்து உச்சிகுளிர்ந்து போகிறார். இப்படி அன்பையும் நன்றியையும் காட்டுவது நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள அவளுக்கு உதவும் என்று அந்த அப்பாவுக்குத் தெரியும். அதேமாதிரிதான், நம் எல்லாருக்கும் ‘பெஸ்ட்’ அப்பாவாக இருக்கிற யெகோவாவும் உணர்கிறார். நாம் அவரைப் புகழும்போது அவருடைய மனசும் உருகுகிறது.

ஒரு சின்ன பிள்ளை தன்னுடைய அப்பாமேல் வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும்போது அந்த அப்பா சந்தோஷப்படுகிறார். அதேமாதிரி, யெகோவாவின் பெயரை நாம் புகழும்போது, அவரும் ரொம்ப சந்தோஷப்படுகிறார் (பாரா 4)


5. கடவுளுடைய பெயரைப் புகழ்வதன் மூலம் எதைப் பொய் என்று நிரூபிக்கிறோம்?

5 யெகோவாவைப் புகழும்போது, நம்மைப் பற்றி சாத்தான் சொன்ன ஒரு விஷயத்தைப் பொய் என்று நிரூபிக்கிறோம். கடவுளுடைய பெயரைக் கட்டிக்காக்க எந்த மனிதனும் உழைக்க மாட்டான் என்று அவன் சொல்கிறான். அதுமட்டுமல்ல, பிரச்சினைகள் வந்தாலோ இழப்பு ஏற்பட்டாலோ மனிதர்கள் கடவுளுக்கு சேவை செய்வதை விட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறான். (யோபு 1:9-11; 2:4) ஆனால், சாத்தான் சொல்வதெல்லாம் பொய் என்று யோபு நிரூபித்தார். நீங்களும் நிரூபிப்பீர்களா? நம் அப்பாவுடைய பெயரைக் காப்பாற்றுவதற்கும் அவரை சந்தோஷப்படுத்துவதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (நீதி. 27:11) உண்மையிலேயே இது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்.

6. நாம் எப்படி தாவீது ராஜா மாதிரியும் லேவியர்கள் மாதிரியும் நடந்துகொள்ளலாம்? (நெகேமியா 9:5)

6 யெகோவாமேல் அன்பு இருந்தால் அவருடைய பெயரை நாம் மனதார புகழுவோம். தாவீது ராஜா இப்படி எழுதினார்: “என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும். எனக்குள் இருக்கும் எல்லாமே அவருடைய பரிசுத்த பெயரைப் புகழட்டும்.” (சங். 103:1) யெகோவாவுடைய பெயரைப் புகழும்போது அவரையே புகழுகிறோம் என்று தாவீது புரிந்து வைத்திருந்தார். யெகோவாவுடைய பெயர், அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது; அவருடைய அழகான குணங்களையும் அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களையும் ஞாபகப்படுத்துகிறது. ‘தனக்குள் இருக்கிற எல்லாவற்றையும்’ வைத்து, அதாவது மனதார, யெகோவாவுடைய பெயரைப் புகழ வேண்டும்... அதைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்... என்று தாவீது ஆசைப்பட்டார். இந்த விஷயத்தில் லேவியர்களும் நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார்கள். யெகோவாவுடைய பரிசுத்தமான பெயரைப் புகழ்வதற்கு வார்த்தைகளே போதாது என்று அவர்கள் மனத்தாழ்மையாக சொன்னார்கள். (நெகேமியா 9:5-ஐ வாசியுங்கள்.) இவர்கள் எல்லாரும் மனதார புகழ்ந்ததைக் கேட்டபோது யெகோவாவுடைய மனசு உருகியிருக்கும்.

7. ஊழியம் செய்யும்போதும் ஒவ்வொரு நாள் நடந்துகொள்ளும் விதத்திலும் யெகோவாவுக்கு நாம் எப்படிப் புகழ் சேர்க்கலாம்?

7 யெகோவாமேல் இருக்கும் அன்பாலும் நன்றியுணர்வாலும் அவரைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்கிறோம். மக்கள் யெகோவாவிடம் நெருங்கி வரவேண்டும் என்ற ஆசையால்தான் நாம் ஊழியம் செய்கிறோம். நம்மைப் போல் அவர்களும் யெகோவாவை ஒரு பாசமான அப்பாவாக பார்க்க உதவுகிறோம். (யாக். 4:8) அதனால்தான், யெகோவாவுடைய அன்பு, நீதி, ஞானம், வல்லமை போன்ற குணங்களைப் பற்றி மக்களிடம் சந்தோஷமாகப் பேசுகிறோம். அதுமட்டுமல்ல, நாம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்வதன் மூலமும் அவரைப் புகழ்கிறோம், சந்தோஷப்படுத்துகிறோம். (எபே. 5:1) நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்ளும்போது இந்த உலகத்தில் இருந்து தனியாகத் தெரிவோம். நாம் வித்தியாசமாக இருப்பதை மக்களும் பார்ப்பார்கள்; ஏன் அப்படி இருக்கிறோம் என்று யோசிப்பார்கள். (மத். 5:14-16) அவர்களிடம் பேசும்போது நாம் ஏன் அப்படி இருக்கிறோம் என்பதை விளக்க முடியும். இதனால் நல்ல மனதுள்ளவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவார்கள். இப்படியெல்லாம் நம் அப்பாவைப் புகழும்போது அவரை சந்தோஷப்படுத்துகிறோம்.—1 தீ. 2:3, 4.

இயேசு சந்தோஷப்படுகிறார்

8. யெகோவாவுடைய பெயரைப் புகழ்வதில் இயேசு எப்படி சிறந்த முன்மாதிரி வைத்தார்?

8 பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற யாரையும்விட யெகோவாவைப் பற்றி இயேசுவுக்குத்தான் நன்றாகத் தெரியும். (மத். 11:27) இயேசு தன்னுடைய அப்பாவை ரொம்ப நேசிக்கிறார். யெகோவாவுடைய பெயரைப் புகழ்வதில் நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். (யோவா. 14:31) இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி அவர் ஜெபம் செய்தபோது, பூமியில் தான் செய்த முக்கியமான விஷயத்தைப் பற்றி இப்படி சொன்னார்: “உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்.” (யோவா. 17:26) இயேசு அதை எப்படி செய்தார்?

9. யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுவதற்கு இயேசு எந்தக் கதையை சொன்னார்?

9 கடவுளுடைய பெயர் யெகோவா என்று மட்டும் இயேசு எல்லாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால், யூதர்களுக்கு ஏற்கெனவே கடவுளுடைய பெயர் தெரியும். அதனால், யெகோவாவைப் பற்றி இயேசு ‘விளக்கமாகச் சொன்னார்.’ (யோவா. 1:17, 18) உதாரணத்துக்கு, யெகோவா இரக்கமுள்ளவர், கரிசனையுள்ளவர் என்று எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (யாத். 34:5-7) ஆனால், யெகோவா எந்தளவு அந்தக் குணங்களைக் காட்டுகிறார் என்பதைப் புரிய வைக்க ஊதாரி மகனைப் பற்றியும் அவனுடைய அப்பாவைப் பற்றியும் இயேசு ஒரு கதையை சொன்னார். அந்த மகன் “ரொம்ப தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே” அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிடுகிறார். அவனை வரவேற்பதற்காக ஓடிப் போகிறார், கட்டிப்பிடிக்கிறார், மனதார மன்னிக்கிறார். இந்தக் காட்சியை நம்முடைய மனதில் படமாக ஓடவிட்டால், யெகோவா எந்தளவு கரிசனையுள்ளவர் என்பதை நம்மாலும் பார்க்க முடியும். (லூக். 15:11-32) இப்படி, யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை இயேசு மக்களுக்குப் புரிய வைத்தார்.

10. (அ)யெகோவாவுடைய பெயரை இயேசு பயன்படுத்தினார் என்றும் அதைப் பயன்படுத்த மற்றவர்களிடமும் சொன்னார் என்றும் நமக்கு எப்படித் தெரியும்? (மாற்கு 5:19) (படத்தையும் பாருங்கள்.) (ஆ) இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்?

10 யெகோவாவுடைய பெயரை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு நினைத்தாரா? ஆமாம், கண்டிப்பாக. அன்றிருந்த சில மதத் தலைவர்கள், கடவுளுடைய பெயர் ரொம்ப புனிதமானது, அதை உச்சரிக்கவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இதுபோன்ற சம்பிரதாயங்களுக்கு இயேசு கட்டுப்படவில்லை. தன் அப்பாவுடைய பெயருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தார். கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த ஒருவனை இயேசு குணப்படுத்திய சம்பவத்தை யோசித்துப் பாருங்கள். அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பார்த்து பயந்து அங்கிருந்து அவரைப் போக சொன்னார்கள்; இயேசுவும் அங்கிருந்து போனார். (மாற். 5:16, 17) ஆனால் யெகோவாவுடைய பெயரை அந்தப் பகுதியில் இருந்தவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், குணப்படுத்திய அந்த மனிதனிடம் தான் செய்ததைப் பற்றி அல்ல, யெகோவா  உனக்கு செய்ததைப் பற்றி எல்லாரிடமும் சொல்’ என்றார். (மாற்கு 5:19-ஐ வாசியுங்கள்.) a இன்று நாமும் யெகோவாவுடைய பெயரை இந்த உலகம் முழுதும் சொல்ல வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்! (மத். 24:14; 28:19, 20) நாம் அப்படி செய்யும்போது இயேசு ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

யெகோவா தனக்கு எப்படி உதவி செய்திருக்கிறார் என்பதை எல்லாரிடமும் சொல்ல சொல்லி பேய் பிடித்த மனிதனிடம் இயேசு சொன்னார் (பாரா 10)


11. எதற்காக ஜெபம் செய்யும்படி இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார், அது ஏன் ரொம்ப முக்கியம்? (எசேக்கியேல் 36:23)

11 தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதும், அதற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவதும்தான் யெகோவாவுடைய விருப்பம் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று சீஷர்களுக்குச் சொன்னபோது, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்தார். (மத். 6:9) யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவதுதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப முக்கியமான விஷயம் என்பதை இயேசு புரிந்துவைத்திருந்தார். (எசேக்கியேல் 36:23-ஐ வாசியுங்கள்.) இயேசு அளவுக்கு வேறு யாராலும் யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தியிருக்க முடியாது. ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டபோது, என்ன குற்றம் அவர்மேல் சுமத்தப்பட்டது? கடவுளுடைய பெயரை நிந்தித்த குற்றம்! தன்னுடைய அப்பாவின் பெயரைக் களங்கப்படுத்துவது பயங்கரமான பாவம் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் இப்படி ஒரு குற்றச்சாட்டு தன்மேல் வந்ததை நினைத்து இயேசு துடித்துப்போயிருப்பார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ‘ரொம்ப வேதனையில்’ இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.—லூக். 22:41-44.

12. இயேசு எப்படித் தன்னுடைய அப்பாவின் பெயரை பரிசுத்தப்படுத்தினார்?

12 தன்னுடைய அப்பாவின் பெயரைப் பரிசுத்தப்படுவதற்காக இயேசு அவமானத்தையும் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டார். தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் பொறுத்துக்கொண்டார். அதுவரை எல்லா விஷயத்திலும் அவர் தன் அப்பாவுக்குக் கீழ்ப்படிந்திருந்ததால் அவமானப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவருக்குத் தெரிந்திருந்தது. (எபி. 12:2) அதுமட்டுமல்ல, அந்தக் கஷ்டமான சமயத்தில், சாத்தான்தான் தன்னை நேரடியாகத் தாக்குகிறான் என்றும் அவர் புரிந்துவைத்திருந்தார். (லூக். 22:2-4; 23:33, 34) இயேசுவின் உண்மைத்தன்மையை உடைப்பதுதான் சாத்தானின் குறிக்கோள். ஆனால் அவன் தோற்றுத்தான் போனான். சாத்தான் ஒரு மோசமான பொய்யன் என்றும், யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிறவர்கள் இருக்கிறார்கள் என்றும் இயேசு நிரூபித்தார். அதுவும், கஷ்டமான சோதனைகள் வந்தால்கூட அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பார்கள் என்று காட்டினார்.

13. நம் ராஜா இயேசுவை நீங்கள் எப்படி சந்தோஷப்படுத்தலாம்?

13 இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் உங்கள் ராஜா இயேசுவை சந்தோஷப்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவுடைய பெயரைப் புகழ்ந்துகொண்டே இருங்கள். அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள உதவுங்கள். இப்படி செய்யும்போது நீங்களும் இயேசு மாதிரியே நடந்துகொள்வீர்கள். (1 பே. 2:21) அவரை மாதிரியே உங்களாலும் யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும், சாத்தான் ஒரு கேவலமான பொய்யன் என்பதை நிரூபிக்க முடியும்!

உயிர்களைக் காப்பாற்ற முடியும்

14-15. யெகோவாவைப் பற்றி மக்களுக்கு சொல்லிக்கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

14 நாம் யெகோவாவுடைய பெயரைப் புகழும்போது மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறோம். எப்படி சொல்லலாம்? ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களை சாத்தான் குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொ. 4:4) அதனால், அவன் பரப்பியிருக்கும் பொய்களை அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, கடவுள் என்று ஒருவர் இல்லை... கடவுள் நம்மிடமிருந்து தூரமாக இருக்கிறார்... அவருக்கு மனிதர்கள்மேல் அக்கறை இல்லை... அவர் கொடூரமானவர்... கெட்டவர்களை என்றென்றும் சித்திரவதை செய்கிறார்... போன்ற பொய்களை அவன் பரப்புகிறான். இதுபோன்ற பொய்கள் யெகோவாவையும் அவருடைய பெயரையும் கெடுக்கின்றன, களங்கப்படுத்துகின்றன. இதனால், கடவுளிடம் நெருங்கி வரவேண்டும் என்ற ஆசையே மக்களுக்கு வருவதில்லை. இப்படி ஆக வேண்டுமென்பதுதான் சாத்தானுடைய விருப்பம். ஆனால், நாம் கடவுளைப் பற்றி சொல்லும்போது அவனுடைய இந்த விருப்பம் தவிடுபொடியாகிறது. நம் அப்பா யெகோவாவைப் பற்றிய உண்மைகளை நாம் சொல்லிக்கொடுக்கிறோம், அவருடைய பரிசுத்தமான பெயரை நாம் புகழ்கிறோம். இதனால் என்ன பலன் கிடைக்கிறது?

15 கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் உண்மைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது, அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. யெகோவாவைப் பற்றியும் அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும் மக்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும்போது, சாத்தானுடைய பொய்களால் கட்டப்பட்டிருக்கும் அவர்களுடைய கண்களை நாம் திறக்கிறோம். இதனால், நம் அன்பான அப்பா எப்படிப்பட்டவர் என்பதை அவர்களால் பார்க்க முடிகிறது. அவருக்கு இருக்கிற அளவில்லாத சக்தியைப் பார்த்து அவர்கள் பிரம்மித்துப் போகிறார்கள். (ஏசா. 40:26) அவருடைய நீதியைப் பார்த்து அவர்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள். (உபா. 32:4) அவருக்கு இருக்கிற ஞானத்தில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். (ஏசா. 55:9; ரோ. 11:33) அவர் அன்பாகவே இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. (1 யோ. 4:8) இப்படி யெகோவாவிடம் அவர்கள் நெருங்கிப் போகும்போது, அவருடைய பிள்ளைகளாக, என்றென்றும் வாழ முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாகிறது. நம் அப்பாவிடம் நெருங்கி போக மக்களுக்கு உதவி செய்யும் பெரிய பாக்கியம் நமக்கு இருக்கிறது. இந்த வேலையை செய்யும்போது, யெகோவா நம்மை “சக வேலையாட்களாக” பார்க்கிறார்.—1 கொ. 3:5, 9.

16. கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டபோது சிலருக்கு எப்படி இருந்திருக்கிறது? உதாரணங்களை சொல்லுங்கள்.

16 ஆரம்பத்தில், கடவுளுடைய பெயர் யெகோவா என்று மட்டுமே நாம் சிலருக்கு சொல்லிக்கொடுத்திருப்போம். ஆனால், அதுவே நல்ல மனசு உள்ளவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆலியா b என்ற இளம் பெண்ணின் உதாரணத்தைப் பாருங்கள். அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கிடையாது. ஏற்கெனவே இருந்த மதத்தில் அவருக்குத் திருப்தி கிடைக்கவில்லை, கடவுளிடமும் நெருக்கமாக உணர முடியவில்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடைய எண்ணம் மாறியது. அவரால் கடவுளைத் தன்னுடைய நண்பராகப் பார்க்க முடிந்தது. நிறைய பைபிள்களில் கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டு, ‘கர்த்தர்’ மாதிரியான பட்டப்பெயர்கள் போடப்பட்டிருப்பது தெரிந்தபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. யெகோவாவின் பெயரைத் தெரிந்துகொண்டது அவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. “என் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு ஒரு பெயர் இருக்கிறது!” என்று அவர் சந்தோஷமாக சொல்கிறார். “எனக்கு இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டதை ஒரு ஆசீர்வாதமாக நினைக்கிறேன்” என்று ஆலியா சொல்கிறார். ஸ்டீவ் என்ற இசைக் கலைஞருடைய அனுபவத்தைப் பாருங்கள். அவர் யூத மதத்தை சேர்ந்தவர். ஆனால் அவருடைய மதத்தில் இருந்தவர்கள், சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருந்ததால் அந்த மதத்தில் அவர் ஈடுபாடு காட்டவில்லை. வாழ்க்கையில் ஒரு சோக சம்பவம் நடந்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இப்படி சொல்கிறார்: “கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்று எனக்கு அவ்வளவு நாளாகத் தெரியாது. முதல் தடவையாக கடவுள் என்று ஒருவர் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்! அவரை நிஜமான ஒரு நபராகப் பார்த்தேன். எனக்கு ஒரு நண்பர் கிடைத்தமாதிரி இருந்தது.”

17. யெகோவாவுடைய பெயரைத் தொடர்ந்து புகழ வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

17 யெகோவாவின் பரிசுத்தமான பெயரை நீங்கள் மக்களுக்கு சொல்கிறீர்களா? அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள உதவி செய்கிறீர்களா? இப்படியெல்லாம் செய்தால் நீங்கள் கடவுளுடைய பெயரைப் புகழ்வீர்கள்; உயிரைக் காப்பாற்றுவீர்கள், உங்கள் ராஜா இயேசு கிறிஸ்துவின் வழியில் நடப்பீர்கள். முக்கியமாக, உங்கள் அன்பான அப்பா யெகோவாவை சந்தோஷப்படுத்துவீர்கள். அதனால் ‘[கடவுளுடைய] பெயரை என்றென்றும் புகழுங்கள்’!—சங். 145:2.

யெகோவாவுடைய பெயரைப் பற்றியும் அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது நாம் அவருடைய பெயரைப் புகழுகிறோம் (பாரா 17)

கடவுளுடைய பெயரைப் புகழ்வது எப்படி . . .

  • யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது?

  • இயேசுவை சந்தோஷப்படுத்துகிறது?

  • உயிர்களைக் காப்பாற்றுகிறது?

பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்

a இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைப் பதிவு செய்யும்போது, யெகோவாவின் பெயரை மாற்கு பயன்படுத்தினார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால்தான், பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் யெகோவாவுடைய பெயர் இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

b பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.