படிப்புக் கட்டுரை 6
யெகோவா அப்பா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்!
“அதனால், நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே!’”—மத். 6:9.
பாட்டு 89 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’
இந்தக் கட்டுரையில்... *
1. பெர்சிய ராஜாவைச் சந்திப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டியிருந்தது?
உங்கள் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் ஓடவிடுங்கள்: சுமார் 2,500 வருஷங்களுக்கு முன்பு பெர்சியாவில் வாழ்கிறீர்கள். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி ராஜாவிடம் பேச ஆசைப்படுகிறீர்கள். அதனால், ராஜாவின் நகரமான சூசானுக்குப் போய்ச் சேருகிறீர்கள். ஆனால், ராஜாவிடம் பேசுவதற்கு முன்பு அனுமதி வாங்க வேண்டுமே! இல்லையென்றால், மரணம்தான்!—எஸ்தர் 4:11.
2. யெகோவாவிடம் நாம் எப்படிப் பேச வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்?
2 ஆனால், யெகோவா அந்த பெர்சிய ராஜாவைப் போல் கிடையாது! எல்லா ராஜாக்களையும்விட மன்னாதி மன்னராகவும் ராஜாதி ராஜாவாகவும் இருந்தபோதும், எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் பேசுவதற்கு அவர் நம்மை அனுமதித்திருக்கிறார். எந்தத் தயக்கமும் இல்லாமல் நாம் அவரிடம் பேச வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இதற்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மகத்தான படைப்பாளர், சர்வவல்லமையுள்ளவர், உன்னதப் பேரரசர் போன்ற பட்டப்பெயர்கள் அவருக்கு இருந்தாலும், அவரைப் பாசமாக “தகப்பனே” என்று கூப்பிடுகிற வாய்ப்பை நமக்குத் தந்திருக்கிறார். (மத். 6:9) இப்படிப்பட்ட நெருக்கமான பந்தத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இதை நினைக்கும்போது நம் மனதுக்கு இதமாக இருக்கிறது, இல்லையா?
3. யெகோவாவை “தகப்பனே” என்று கூப்பிடுவது ஏன் பொருத்தமானது, இந்தக் கட்டுரையில் என்ன பார்க்கப்போகிறோம்?
3 யெகோவாதான் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார். (சங். 36:9) அதனால், அவரை “தகப்பனே” என்று கூப்பிடுவது பொருத்தமானது. அவர் நம்முடைய அப்பாவாக இருப்பதால், அவர் சொல்படி கேட்பது நம்முடைய பொறுப்பு. அப்படிக் கேட்டு நடந்தால் ஆசீர்வாதங்கள் வந்து குவியும். (எபி. 12:9) அந்த ஆசீர்வாதங்களில் ஒன்று, முடிவில்லாத வாழ்வு! பலருக்குப் பூமியில், சிலருக்குப் பரலோகத்தில்! அதோடு, இப்போதே நாம் நன்மைகளை அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையில், யெகோவா இப்போது எப்படி அன்பான அப்பாவாக நடந்துகொள்கிறார் என்றும், எதிர்காலத்தில் அவர் நம்மை கைவிடவே மாட்டார் என்பதில் ஏன் உறுதியாக இருக்கலாம் என்றும் பார்க்கலாம். அதற்கு முன்பு, யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்பதிலும், நமக்கு உதவ ஆசைப்படுகிறார் என்பதிலும் ஏன் உறுதியாக இருக்கலாம் என்று பார்க்கலாம்.
யெகோவா—அன்பான, அக்கறையான அப்பா
4. யெகோவாவை அப்பாவாக நினைப்பது ஏன் சிலருக்குக் கஷ்டமாக இருக்கிறது?
4 யெகோவாவை அப்பாவாக நினைக்க உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அவருக்கு முன்னால் தாங்கள் ஒன்றுமே இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். சர்வவல்லமையுள்ள கடவுள் நம் ஒவ்வொருவர்மேலும் அக்கறை வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இப்படியெல்லாம் நாம் நினைக்கக் கூடாது என்றுதான் நம் அன்பான அப்பா விரும்புகிறார். அவர் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார்; அவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த விஷயத்தைத்தான் அத்தேனே நகர மக்களிடம் பவுல் சொன்னார். பிறகு, ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்பதை விளக்கினார். (அப். 17:24-29) அன்பும் அக்கறையும் வைத்திருக்கிற அப்பா அம்மாவிடம் ஆசையாகப் பேசுகிற ஒரு பிள்ளையைப் போல், தன்னிடம் எல்லாரும் பேச வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.
5. ஒரு சகோதரியின் அனுபவத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
5 சிலர், தங்களைப் பெற்றெடுத்த அப்பாவிடமிருந்து அன்பையும் அரவணைப்பையும் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். யெகோவாவை அப்பாவாக நினைப்பது இப்படிப்பட்ட நபர்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “வாய்க்கு வந்ததையெல்லாம் என்னோட அப்பா பேசுவாரு. பைபிள படிக்க ஆரம்பிச்சப்போ, கடவுள ஒரு அப்பாவா நினைச்சு அவர நேசிக்கிறது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனா, யெகோவாவ பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம், அவர்கிட்ட நெருங்கிப்போக முடிஞ்சுது” என்று அவர் சொல்கிறார். யெகோவாவை அப்பாவாக நினைப்பது உங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள், அவர் ஓர் அருமையான அப்பா என்பதைச் சீக்கிரத்தில் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
6. மத்தேயு 11:27-ன்படி, தன்னை அன்பான அப்பாவாக நினைப்பதற்கு யெகோவா நமக்கு உதவுகிற ஒரு வழி என்ன?
6 தன்னை அன்பான அப்பாவாக நினைப்பதற்கு யெகோவா நமக்கு நிறைய வழிகளில் உதவியிருக்கிறார். அதில் ஒரு வழி, இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் பைபிளில் பதிவு செய்துவைத்திருப்பது! (மத்தேயு 11:27-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய தந்தையைப் போலவே இயேசு நடந்துகொண்டார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:9) யெகோவா எப்படி ஒரு தகப்பனைப் போல் நடந்துகொள்கிறார் என்பதைப் பற்றி இயேசு அடிக்கடி பேசினார். நான்கு சுவிசேஷ பதிவுகளில் மட்டும் 150-க்கும் அதிகமான தடவை “தகப்பன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவு தடவை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு ஒரு காரணம், யெகோவா ஓர் அன்பான அப்பா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்!—யோவா. 17:25, 26.
7. தன்னுடைய மகனிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 தன்னுடைய மகன் இயேசுவிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்று இப்போது பார்க்கலாம். இயேசு செய்த ஜெபங்களை எல்லா சமயத்திலும் அவர் கேட்டார். வெறுமனே கேட்பதோடு மட்டுமல்ல, அதற்குப் பதிலும் தந்தார். (யோவா. 11:41, 42) இயேசுவுக்கு எவ்வளவோ சோதனைகள் வந்தபோதும், தன்னுடைய தந்தையின் அன்பையும் ஆதரவையும் அவர் எப்போதுமே அனுபவித்தார்.—லூக். 22:42, 43.
8. இயேசுவை யெகோவா எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார்?
8 ‘தகப்பனால்தான் நான் உயிர் வாழ்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 6:57) இப்படி, தனக்கு உயிர் கொடுத்ததும் அதைப் பாதுகாப்பதும் யெகோவாதான் என்பதை அவர் ஒத்துக்கொண்டார். யெகோவாவை அவர் முழுமையாக நம்பியிருந்தார். அவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா தந்தார். மிக முக்கியமாக, கடைசிவரை தனக்கு உண்மையாக இருப்பதற்கு யெகோவா அவருக்கு உதவினார்.—மத். 4:4.
9. தான் இயேசுவுக்கு ஓர் அன்பான அப்பாவாக இருந்ததை யெகோவா எப்படிக் காட்டினார்?
9 யெகோவா அன்பான அப்பாவாக இருப்பதால், தன்னுடைய ஆதரவு இயேசுவுக்கு இருக்கிறது என்பதை அவருக்குக் காட்டினார். (மத். 26:53; யோவா. 8:16) எல்லா கஷ்டங்களிலிருந்தும் இயேசுவை அவர் பாதுகாக்கவில்லை; ஆனால், அவற்றைச் சகித்துக்கொள்வதற்கு உதவினார். எப்பேர்ப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது தற்காலிகமானதுதான் என்பது இயேசுவுக்குப் புரிந்திருந்தது. (எபி. 12:2) இயேசு பேசுவதைக் கேட்பது, அவருடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வது, அவருக்குப் பயிற்சி கொடுப்பது, அவரை ஆதரிப்பது ஆகியவற்றின் மூலம் அவர்மீது தனக்கு அக்கறை இருக்கிறது என்பதை யெகோவா காட்டினார். (யோவா. 5:20; 8:28) இதே வழிகளில் நம்மையும் அவர் எப்படிக் கவனித்துக்கொள்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.
நம் அன்பான அப்பா யெகோவா நம்மை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்?
10. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை சங்கீதம் 66:19, 20-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
10 நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்கிறார். (சங்கீதம் 66:19, 20-ஐ வாசியுங்கள்.) சில தடவை மட்டும் அல்ல, அடிக்கடி நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (1 தெ. 5:17) நாம் எங்கே இருந்தாலும் சரி, எந்த நேரமாக இருந்தாலும் சரி, யெகோவாவிடம் பயபக்தியோடு பேச முடியும். நாம் பேசுவதைக் கேட்க முடியாதளவுக்கு அவர் பிஸியாக இருப்பவர் கிடையாது. எப்போது பேசினாலும் அவர் கவனமாகக் கேட்கிறார். நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதை உணரும்போது, நாம் அவரிடம் நெருங்கிப்போவோம். “நான் யெகோவாமேல் அன்பு வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர் என் குரலைக் கேட்கிறார்” என்று சங்கீதக்காரர் சொன்னார்.—சங். 116:1.
11. நம் ஜெபங்களைக் கேட்டு யெகோவா என்ன செய்கிறார்?
11 யெகோவா நம்முடைய ஜெபங்களைக் கேட்பது மட்டுமல்ல, பதிலும் தருகிறார். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்” என்ற உறுதியை அப்போஸ்தலன் யோவான் தருகிறார். (1 யோ. 5:14, 15) ஒருவேளை, நாம் எதிர்பார்க்கிற விதத்தில் யெகோவா பதில் தராமல் இருக்கலாம். ஆனால், நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும். அதனால், நம்முடைய ஜெபங்களுக்கு சிலசமயங்களில் “இல்லை” என்றோ, “காத்திரு” என்றோ பதில் வரலாம்.—2 கொ. 12:7-9.
12-13. நம் பரலோகத் தந்தை நம்மை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறார்?
12 நம்முடைய தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்கிறார். அப்பாமார்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா சொல்கிறாரோ, அதை அவரும் செய்கிறார். (1 தீ. 5:8) தன்னுடைய பிள்ளைகளின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நினைத்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் சொல்கிறார். (மத். 6:32, 33; 7:11) நம்முடைய அன்பான அப்பா யெகோவா, நம்முடைய எதிர்காலத் தேவைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.
13 மிக முக்கியமாக, தன்னோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்குத் தேவையானவற்றைச் செய்கிறார். அவர் யார்... அவருடைய விருப்பம் என்ன... எதற்காக நம்மைப் படைத்தார்... எதிர்காலத்தில் என்ன நடக்கும்... ஆகிய விஷயங்களை பைபிளின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். நம்முடைய அப்பா அம்மாவையோ வேறு யாரையோ பயன்படுத்தி, அவரைப் பற்றி சொல்லித் தந்திருக்கிறார். அதோடு, பாசமுள்ள சபை மூப்பர்கள் மற்றும் முதிர்ச்சியான சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி தொடர்ந்து நமக்கு உதவுகிறார். நம்முடைய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். இந்த வழிகள் மூலமும் வேறு சில வழிகள் மூலமும் அப்பா பாசத்தை யெகோவா நம் எல்லார்மீதும் காட்டுகிறார்.—சங். 32:8.
14. யெகோவா ஏன் நமக்குப் பயிற்சி தருகிறார், அதை எப்படிச் செய்கிறார்?
14 யெகோவா நமக்குப் பயிற்சி தருகிறார். இயேசுவைப் போல் நாம் பரிபூரணமானவர்கள் இல்லை. அதனால் நமக்குப் பயிற்சி தரும்போது, தேவையான சமயத்தில் நம் அன்பு அப்பா யெகோவா நம்மைக் கண்டிக்கிறார். “யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 12:6, 7) இதை அவர் நிறைய வழிகளில் செய்கிறார். உதாரணத்துக்கு, பைபிளில் படித்த விஷயங்கள் அல்லது கூட்டங்களில் கேட்ட விஷயங்கள் நம்மைத் திருத்தலாம். ஒருவேளை அந்தத் திருத்தங்கள் மூப்பர்களிடமிருந்தும் கிடைக்கலாம். எந்த வழியில் யெகோவா கண்டித்துத் திருத்தினாலும், நம்மீது இருக்கிற அன்பால்தான் அதைச் செய்கிறார்.—எரே. 30:11.
15. எந்தெந்த வழிகளில் யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்?
15 சோதனைகளின்போது நம்மைத் தாங்கிப்பிடிக்கிறார். பிள்ளை கஷ்டப்படும்போது ஓர் அப்பா எப்படிப் பக்கபலமாக இருப்பாரோ, அதேபோல்தான் சோதனைகள் வரும்போது யெகோவா நமக்குப் பக்கபலமாக இருக்கிறார்! அவரோடு இருக்கிற பந்தத்துக்கு எந்தப் பங்கமும் வராதபடி, அவருடைய சக்தியைக் கொடுத்து உதவுகிறார். (லூக். 11:13) நாம் கவலையிலேயே மூழ்கிவிடாதபடியும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார். எப்படி? அற்புதமான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்! கஷ்டங்களைச் சகிப்பதற்கு அந்த நம்பிக்கை நமக்கு உதவுகிறது. நாம் எப்பேர்ப்பட்ட வேதனைகளை அனுபவித்தாலும் சரி, நம் அன்பு அப்பா யெகோவா அதையெல்லாம் முழுவதுமாக சரிசெய்யப்போகிறார். நம்முடைய வேதனைகள் தற்காலிகமானவை, யெகோவா தருகிற ஆசீர்வாதங்களோ என்றென்றும் நிலைத்திருப்பவை!—2 கொ. 4:16-18.
யெகோவா அப்பா நம்மைக் கைவிடவே மாட்டார்
16. ஆதாம் கீழ்ப்படியாமல் போனபோது என்ன நடந்தது?
16 ஆதாம் கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவாவுடைய சந்தோஷமான குடும்பத்தில் இருக்கிற வாய்ப்பை இழந்தான். அவனுடைய வம்சத்துக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காதபடி செய்துவிட்டான். (ரோ. 5:12; 7:14) ஆனால், அவனுடைய வம்சத்தை யெகோவா கைவிட்டுவிட்டாரா? அவர் என்ன செய்தார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, அவர் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
17. ஆதாம் கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவா உடனடியாக என்ன செய்தார்?
17 ஆதாமை யெகோவா தண்டித்தார். ஆனால், அவனுடைய வம்சத்தில் வரவிருந்தவர்களை அம்போவென விட்டுவிடவில்லை. கீழ்ப்படிகிற மக்களுக்கு மறுபடியும் தன்னுடைய குடும்பத்தில் இடம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை உடனடியாகக் கொடுத்தார். (ஆதி. 3:15; ரோ. 8:20, 21) தன்னுடைய அன்பு மகனான இயேசுவின் மீட்புப் பலி மூலம் இந்த ஏற்பாட்டைச் செய்தார். நமக்காக தன்னுடைய மகனையே கொடுத்ததன் மூலம் நம்மேல் வைத்திருக்கிற அளவில்லாத அன்பை யெகோவா நிரூபித்திருக்கிறார்.—யோவா. 3:16.
18. நாம் யெகோவாவைவிட்டு விலகிப்போயிருந்தாலும், மறுபடியும் நாம் அவருடைய பிள்ளைகளாக ஆக வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? விளக்குங்கள்.
18 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நாம் இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். நம்மை சுமையாக அவர் எப்போதுமே நினைப்பதில்லை. நாம் அவருக்கு ஏமாற்றம் தந்துவிடலாம் அல்லது கொஞ்சக் காலம் அவரைவிட்டு விலகிவிடலாம். ஆனாலும், நாம் திருந்தி வருவதற்காக அவர் ஆசையோடு காத்திருக்கிறார். ஓர் அப்பாவாக, தன்னுடைய பிள்ளைகள்மேல் அவர் வைத்திருக்கிற அன்பின் ஆழத்தைப் புரிந்துகொள்வதற்கு, வழிதவறிப்போன ஒரு மகனுடைய கதையை இயேசு சொன்னார். (லூக். 15:11-32) அந்தக் கதையில் வருகிற அப்பா, என்றாவது ஒருநாள் தன் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை மட்டும் விட்டுவிடவே இல்லை. அவன் திரும்பி வந்தபோது, ஆசையோடு அவனைக் கட்டிப்பிடித்து வரவேற்றார். ஒருவேளை நாம் யெகோவாவை விட்டு விலகிப்போயிருக்கலாம். ஆனால் மனம் திருந்தினால், நம் அன்பு அப்பா யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள ஆசையாகக் காத்திருக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
19. ஆதாமால் ஏற்பட்ட பாதிப்புகளை யெகோவா எப்படிச் சரிசெய்வார்?
19 ஆதாமால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் யெகோவா நிரந்தரமாகச் சரிசெய்யப்போகிறார். ஆதாம் கீழ்ப்படியாமல் போனதற்குப் பிறகு, மனிதர்களிலிருந்து 1,44,000 பேரைத் தத்தெடுக்க யெகோவா முடிவு செய்தார். தன்னுடைய மகன் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் பரலோகத்தில் சேவை செய்வதற்காக இவர்களைத் தத்தெடுக்க முடிவு செய்தார். கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் புதிய உலகத்தில் பரிபூரணமானவர்களாக ஆவதற்கு, இயேசுவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்பவர்களும் உதவுவார்கள். கடைசி சோதனையில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, கடவுள் இவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவார். அப்போது, யெகோவாவின் பரிபூரண பிள்ளைகளால் இந்தப் பூமி நிரம்பியிருக்கும். அதைப் பார்ப்பது யெகோவாவுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! அது ஓர் அற்புதமான காலமாக இருக்கும்!
20. யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்பதை எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
20 யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். யெகோவாவைப் போல் ஓர் அப்பா இருக்கவே முடியாது! நம்முடைய ஜெபங்களை அவர் கேட்கிறார், நம்முடைய பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார், அவரோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறார். நமக்குப் பயிற்சி தருகிறார், நம்மை ஆதரிக்கிறார். அதோடு, எதிர்காலத்தில் அருமையான ஆசீர்வாதங்களைக் கொடுக்கப்போகிறார். யெகோவா அப்பா நம்மை நேசிக்கிறார் என்பதையும் நம்மேல் அக்கறையாக இருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்வது, நம் இதயத்துக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! அப்படியென்றால், அவருடைய பிள்ளைகளான நாம் அவருடைய அன்புக்கு எப்படியெல்லாம் நன்றி காட்டலாம்? பதில் அடுத்த கட்டுரையில்!
பாட்டு 18 தேவனின் பற்றுமாறா அன்பு
^ பாரா. 5 யெகோவாவைப் பற்றி நினைக்கும்போது, அவர் நம்முடைய படைப்பாளர் என்பதும் உன்னதப் பேரரசர் என்பதும்தான் பெரும்பாலும் நம்முடைய ஞாபகத்துக்கு வரும். ஆனால், அவர் நம் அன்பான, அக்கறையான அப்பாவும்கூட! எப்படிச் சொல்லலாம்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, அவர் நம்மைக் கைவிடவே மாட்டார் என்பதில் ஏன் உறுதியாக இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
^ பாரா. 59 படங்களின் விளக்கம்: ஒவ்வொரு படத்திலும் அப்பாவும் பிள்ளையும் இருக்கிறார்கள். மகன் பேசுவதை அப்பா கவனமாகக் கேட்கிறார், மகளுக்குத் தேவையான உணவை அப்பா தருகிறார், மகனுக்கு அப்பா பயிற்சி தருகிறார், மகனை அப்பா ஆறுதல்படுத்துகிறார். இந்த நான்கு படங்களையும் ஒரு கை தாங்கியிருப்பதைப் போல் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நான்கு வழிகளிலும் யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை அந்தக் கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.