Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 8

பொறாமையைப் பிடுங்கி எறியுங்கள், சமாதானத்தை வளர்த்திடுங்கள்

பொறாமையைப் பிடுங்கி எறியுங்கள், சமாதானத்தை வளர்த்திடுங்கள்

“மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும் ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.”—ரோ. 14:19.

பாட்டு 39 சமாதானம் நம் உடமை

இந்தக் கட்டுரையில்... *

1. யாக்கோபின் குடும்பத்தைப் பொறாமை எப்படிப் பாதித்தது?

பொறாமை என்ற குணம்தான் யாக்கோபுடைய குடும்பத்தின் சமாதானத்தைக் கெடுத்தது, அவருடைய மனதை நொறுக்கியது. எப்படி? தன்னுடைய பிள்ளைகள் எல்லார்மீதும் யாக்கோபு பிரியம் வைத்திருந்தார். ஆனால், யோசேப்பின் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தார். அதனால், யாக்கோபின் மற்ற மகன்கள் யோசேப்பின் மீது பொறாமைப்பட்டார்கள்; வெறுப்பைக் கொட்டினார்கள். இப்படி வெறுக்குமளவுக்கு யோசேப்பு எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தாலும், அவரை அடிமையாக விற்றார்கள். ஒரு கொடிய மிருகம் அவரைக் கொன்றுவிட்டதாக யாக்கோபிடம் பொய் சொன்னார்கள். இதெல்லாம் நடக்கும்போது யோசேப்புக்கு 17 வயது!—ஆதி. 37:3, 4, 27-34.

2. கலாத்தியர் 5:19-21-ன்படி, பொறாமை ஏன் ஆபத்தானது?

2 பொறாமைப்படுவதும் * ‘பாவ இயல்புக்குரிய செயல்களில்’ ஒன்று என்று பைபிள் சொல்கிறது. இந்தக் குணம் இருந்தால், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒருவர் நுழைய முடியாமல் போய்விடலாம். அந்தளவுக்கு இது மோசமான குணம்! (கலாத்தியர் 5:19-21-ஐ வாசியுங்கள்.) பொறாமை என்ற விஷச் செடி பெரும்பாலும் பகை, சண்டை சச்சரவு, கோப வெறி போன்ற கனிகளைத்தான் கொடுக்கும்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 பொறாமை என்ற குணம், உறவுகளைச் சின்னாபின்னமாக்கி, குடும்பத்தின் சமாதானத்தைக் கெடுத்துவிடும் என்பதை யோசேப்பின் சகோதரர்களுடைய உதாரணம் காட்டுகிறது. யோசேப்பின் சகோதரர்கள் செய்தளவுக்கு நாம் எதுவும் செய்ய மாட்டோம் என்றாலும், நம் இதயமும் நயவஞ்சகமானதுதான். (எரே. 17:9) அதனால், பொறாமை என்ற குணத்தோடு சிலசமயங்களில் நாம் போராட வேண்டியிருக்கலாம். என்னென்ன காரணங்களால் பொறாமை என்ற களை நம் இதயத்தில் வேர்விடலாம் என்பதைக் காட்டுகிற சில பைபிள் உதாரணங்களை இப்போது பார்க்கலாம். பிறகு, பொறாமை என்ற களையை எப்படிப் பிடுங்கி எறியலாம் என்றும், சமாதானம் என்ற செடியை எப்படி வளர்க்கலாம் என்றும் பார்க்கலாம்.

என்னென்ன காரணங்களால் பொறாமை வரலாம்?

4. பெலிஸ்தியர்கள் ஈசாக்குமேல் ஏன் பொறாமைப்பட்டார்கள்?

4 மற்றவர்களிடம் வசதிவாய்ப்புகள் வந்துசேரும்போது. ஈசாக்கு வசதியானவராக இருந்தார். அதனால், பெலிஸ்தியர்கள் அவர்மீது பொறாமைப்பட்டார்கள். (ஆதி. 26:12-14) அவருடைய கிணறுகளை மண்ணினால் மூடினார்கள். ஏனென்றால், அந்தக் கிணறுகளிலிருந்த தண்ணீரைத்தான் அவருடைய மந்தையிலிருந்த விலங்குகள் குடித்தன. (ஆதி. 26:15, 16, 27) அந்தப் பெலிஸ்தியர்களைப் போலவே இன்றும் சிலர், தங்களைவிட வசதியானவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். மற்றவர்கள் அனுபவிப்பதை அடைய வேண்டும் என்று நினைப்பதோடு, மற்றவர்கள் அனுபவிப்பதெல்லாம் அவர்களுடைய கையைவிட்டுப் போய்விட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

5. மதத் தலைவர்கள் இயேசுமீது ஏன் பொறாமைப்பட்டார்கள்?

5 மற்றவர்களின் பிரியத்தை ஒருவர் சம்பாதிக்கும்போது. நிறைய பேருடைய பிரியத்தை இயேசு சம்பாதித்தார். அதனால், யூத மதத் தலைவர்கள் அவர்மீது பொறாமைப்பட்டார்கள். (மத். 7:28, 29) கடவுள்தான் இயேசுவை அனுப்பியிருந்தார், அவரைப் பற்றிய உண்மைகளைத்தான் இயேசு சொன்னார். இருந்தாலும், இயேசுவைப் பற்றி அபாண்டமான பொய்களை அவர்கள் பரப்பினார்கள். இப்படி, அவருடைய பெயரைக் கெடுக்கப் பார்த்தார்கள். (மாற். 15:10; யோவா. 11:47, 48; 12:12, 13, 19) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? சபையில் இருக்கிற ஒருவரிடம் முத்தான குணங்கள் இருப்பதால், மற்றவர்களுடைய பிரியத்தை அவர் சம்பாதித்திருக்கலாம். அவரைப் பார்த்து நாம் பொறாமைப்படக் கூடாது. அதற்குப் பதிலாக, அந்தக் குணங்களை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.—1 கொ. 11:1; 3 யோ. 11.

6. பொறாமைப்பட்டதால் தியோத்திரேப்பு என்ன செய்தான்?

6 மற்றவர்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கும்போது. முதல் நூற்றாண்டில், தியோத்திரேப்பு என்ற ஒருவன் இருந்தான். சபையை வழிநடத்தியவர்களைப் பார்த்து அவன் பொறாமைப்பட்டான். சபையில் ‘முதலிடம் பெறத் துடித்தான்.’ அதனால், அப்போஸ்தலன் யோவானைப் பற்றியும் பொறுப்பிலிருந்த மற்ற சகோதரர்களைப் பற்றியும் படுமோசமாகப் பேசிக்கொண்டு திரிந்தான். (3 யோ. 9, 10) தியோத்திரேப்பு அளவுக்கு நாம் மோசமாக நடந்துகொள்ள மாட்டோம் என்பது உண்மைதான். ஆனால், நாம் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு நியமிப்பு இன்னொருவருக்குக் கிடைக்கும்போது, நாம் பொறாமைப்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும், அந்த நியமிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்குத் தகுதி இருப்பதாகவோ, அவரைவிட நாம் அதை நன்றாகச் செய்வோம் என்று நினைக்கும்போதோ நாம் அப்படிப் பொறாமைப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதயம் என்கிற நிலத்தில் நல்ல நல்ல குணங்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்றால், பொறாமை என்ற களையைப் பிடுங்கி எறிய வேண்டும். அன்பு, கரிசனை, தயவு போன்ற குணங்களை பொறாமை என்ற குணம் நெருக்கிப்போட்டுவிடும் (பாரா 7)

7. பொறாமை வந்தால் என்ன ஆகும்?

7 பொறாமை என்பது களை போன்றது. அது நம் மனதில் வேர்விட ஆரம்பித்துவிட்டால், பிடுங்கி எறிவது கஷ்டம். அதுமட்டுமல்ல தலைக்கனம், சுயநலம் போன்ற கெட்ட கனிகளைத்தான் அது தரும். அன்பு, கரிசனை, தயவு போன்ற நல்ல குணங்களையும் நெருக்கிப் போட்டுவிடும். பொறாமை என்ற களை நம் மனதில் முளைக்க ஆரம்பிப்பதைப் பார்த்த உடனே, அதை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும். இதை எப்படிச் செய்வது?

மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருங்கள்

கடவுளுடைய சக்தியின் உதவியோடு பொறாமை என்ற களையைப் பிடுங்கி எறியலாம். மனத்தாழ்மை, திருப்தி போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ளலாம் (பாராக்கள் 8-9)

8. பொறாமையை விரட்டியடிக்க எந்தக் குணங்கள் உதவும்?

8 மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருந்தால், பொறாமையை நம்மால் விரட்டியடிக்க முடியும். இந்த அருமையான குணங்கள் நம் மனதில் நிரம்பியிருந்தால், பொறாமை என்ற குணம் தலைதூக்காது. மனத்தாழ்மை இருந்தால், நம்மைப் பற்றி நாம் ரொம்ப உயர்வாக நினைக்க மாட்டோம். மனத்தாழ்மையுள்ள ஒருவர், மற்றவர்களைவிட தனக்குத்தான் எல்லாமே கிடைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். (கலா. 6:3, 4) திருப்தியோடு இருக்கும் ஒருவர், தன்னிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக இருப்பார்; மற்றவர்களோடு தன்னை ஒப்பிட மாட்டார். (1 தீ. 6:7, 8) மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருக்கும் ஒருவர், மற்றவர்களுக்கு நல்லது நடக்கும்போது சந்தோஷப்படுவார்.

9. கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிற விதத்தைப் பற்றி கலாத்தியர் 5:16-ம் பிலிப்பியர் 2:3, 4-ம் என்ன சொல்கின்றன?

9 பொறாமையைப் பிடுங்கி எறியவும், மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருக்கவும் கடவுளுடைய சக்தி நமக்குத் தேவை. (கலாத்தியர் 5:16-யும், பிலிப்பியர் 2:3, 4-யும் வாசியுங்கள்.) நம்முடைய ஆழ்மனதில் இருக்கிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சோதித்துப் பார்க்க இந்தச் சக்தி நமக்கு உதவும். கடவுளுடைய உதவியால், மோசமான எண்ணங்களை பிடுங்கி எறிந்துவிட்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். (சங். 26:2; 51:10) பொறாமையை அண்டவிடாமல் பார்த்துக்கொண்ட மோசே மற்றும் பவுலைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இரண்டு ஆண்கள் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருப்பதாக ஓர் இளம் இஸ்ரவேலன் ஓடிவந்து மோசேயிடமும் யோசுவாவிடமும் சொல்கிறான். அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி யோசுவா மோசேயிடம் சொல்கிறார். ஆனால், மோசே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா தன்னுடைய சக்தியை அவர்களுக்குக் கொடுத்ததை நினைத்து தான் சந்தோஷப்படுவதாகச் சொல்கிறார் (பாரா 10)

10. எந்தச் சூழ்நிலை மோசேக்குச் சோதனையாக இருந்திருக்கலாம்? (அட்டைப் படம்)

10 கடவுளுடைய மக்கள்மீது மோசேக்கு நிறைய அதிகாரம் இருந்தது. ஆனால், தான் மட்டும்தான் அதை அனுபவிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. உதாரணத்துக்கு, ஒருதடவை, மோசேயிடமிருந்து தன்னுடைய சக்தியைக் கொஞ்சம் எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரியோர்களுக்கு யெகோவா கொடுத்தார். அதற்குப் பிறகு, சந்திப்புக் கூடாரத்துக்கு வராத இரண்டு பெரியோர்களுக்கு கடவுளுடைய சக்தி கிடைத்ததையும், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்ததையும் மோசே கேள்விப்பட்டார். அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி யோசுவா சொன்னபோது மோசே என்ன செய்தார்? அவர்களைப் பார்த்து பொறாமைப்படவில்லை, சந்தோஷப்பட்டார்! (எண். 11:24-29) மோசேயிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

மோசேயைப் போலவே மூப்பர்கள் எப்படி மனத்தாழ்மையோடு இருக்கலாம்? (பாராக்கள் 11-12) *

11. மூப்பர்கள் எப்படி மோசேயைப் போல் நடந்துகொள்ளலாம்?

11 நீங்கள் ஒரு மூப்பரா? நீங்கள் ரொம்ப நேசித்த ஒரு பொறுப்பைச் செய்ய மற்றவர்களுக்குப் பயிற்சி தரும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறதா? உதாரணத்துக்கு, ஒவ்வொரு வாரமும் காவற்கோபுர படிப்பு நடத்துவது உங்களுக்குப் பிடித்திருக்கலாம். இப்போது, அந்தப் படிப்பை நடத்துவதற்கு இன்னொரு சகோதரருக்குப் பயிற்சி தரும்படி உங்களிடம் கேட்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? மோசேயைப் போல் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தால், உங்கள் பொறுப்பு கைநழுவிப் போவதாக நினைத்து கவலைப்பட மாட்டீர்கள். சந்தோஷமாக அவருக்குப் பயிற்சி கொடுப்பீர்கள்.

12. நிறைய சகோதர சகோதரிகள் எப்படி மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருக்கிறார்கள்?

12 வயதான சகோதரர்கள் சந்திக்கும் ஒரு சூழ்நிலையை இப்போது பார்க்கலாம். அவர்களில் சிலர், பல வருஷங்களாக மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சேவை செய்துவந்திருக்கிறார்கள். ஆனால், 80 வயதாகும்போது அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்குச் சந்தோஷமாக விட்டுக்கொடுக்கிறார்கள். வட்டாரக் கண்காணிகளுக்கு 70 வயதாகும்போது, அந்தப் பொறுப்பை மனதார விட்டுக்கொடுக்கிறார்கள்; தங்களுக்குக் கொடுக்கப்படும் மற்ற பொறுப்புகளைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். கொஞ்ச வருஷங்களாக, உலகம் முழுவதும் இருக்கிற பெத்தேல் அங்கத்தினர்கள் நிறைய பேர் பயனியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த வேலையை இப்போது மற்றவர்கள் செய்துவருகிறார்கள். அதைப் பார்த்து அந்த உண்மையுள்ள சகோதர சகோதரிகள் பொறாமைப்படுவதில்லை.

13. பன்னிரண்டு அப்போஸ்தலர்களைப் பார்த்து பவுல் பொறாமைப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது என்று ஏன் சொல்லலாம்?

13 மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் வாழ்ந்த இன்னொருவர் அப்போஸ்தலன் பவுல்! பொறாமை என்ற களை தன் இதயத்தில் வளருவதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை. அவர் கடினமாக ஊழியம் செய்தார். ஆனாலும், “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; . . . அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்” என்று மனத்தாழ்மையோடு சொன்னார். (1 கொ. 15:9, 10) இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, அவருடைய 12 அப்போஸ்தலர்கள் அவர் கூடவே இருந்தார்கள். ஆனால், பவுல் அப்போது ஒரு கிறிஸ்தவராக ஆகவில்லை. இயேசு இறந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகுதான் கிறிஸ்தவராக ஆனார். பிற்பாடு, “மற்ற தேசத்து மக்களுக்கு . . . ஓர் அப்போஸ்தலனாக” அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், 12 அப்போஸ்தலர்களில் ஒருவராக ஆகும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கவில்லை. (ரோ. 11:13; அப். 1:21-26) அந்த 12 அப்போஸ்தலர்கள் இயேசுவோடு இருந்ததை நினைத்து பொறாமைப்படாமல், தனக்குக் கிடைத்த பொறுப்பை நினைத்து அவர் திருப்தியோடு இருந்தார்.

14. மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருந்தால் எப்படி நடந்துகொள்வோம்?

14 மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் இருந்தால், பவுலைப் போல் நடந்துகொள்வோம். யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுப்போம். (அப். 21:20-26) சபையை வழிநடத்துவதற்கு யெகோவா மூப்பர்களைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், யெகோவா அவர்களை ‘பரிசுகளாகத்தான்’ பார்க்கிறார். (எபே. 4:8, 11) யெகோவாவால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு மரியாதை கொடுக்கும்போதும், அவர்களுடைய வழிநடத்துதலுக்குக் கட்டுப்படும்போதும், யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். மற்றவர்களோடு சமாதானமாகவும் இருக்க முடியும்.

‘சமாதானமாக இருப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்’

15. நாம் என்ன செய்ய வேண்டும்?

15 பொறாமை என்ற களை இருந்தால், சமாதானம் என்ற செடி வளராது. அதனால், நம் மனதில் இருக்கிற அந்தக் களையைப் பிடுங்கி எறிவதோடு, மற்றவர்களுடைய மனதில் விதைத்துவிடாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால்தான் யெகோவா கொடுத்த இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய முடியும்: “மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும் ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.” (ரோ. 14:19) பொறாமை என்ற களையைப் பிடுங்கி எறிய மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்? சமாதானம் என்ற செடியை நாம் எப்படி வளர்க்கலாம்?

16. நாம் எப்படி மற்றவர்களின் மனதில் பொறாமையை விதைக்காமல் இருக்கலாம்?

16 நம்முடைய எண்ணங்களும் செயல்களும் மற்றவர்களைப் பாதிக்கும். நம்மிடம் இருக்கிற பொருள்களை ‘பகட்டாகக் காட்டும்படி’ இந்த உலகம் நம்மைத் தூண்டுகிறது. (1 யோ. 2:16) ஆனால், அப்படிச் செய்தால் மற்றவர்கள் நம்மேல் பொறாமைப்படுவதற்கு நாம் காரணமாகிவிடுவோம். அதனால், எப்போது பார்த்தாலும் நம்மிடம் இருக்கிற பொருள்களைப் பற்றியோ, என்ன வாங்குவதற்குத் திட்டம் போட்டிருக்கிறோம் என்பதைப் பற்றியோ பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதேபோல், நமக்கு ஏதாவது பொறுப்புகள் கிடைக்கும்போது நாம் அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய பொறுப்புகளைப் பற்றியே சதா பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்களின் மனதில் பொறாமை என்ற களையை விதைத்துவிடுவோம். அதற்குப் பதிலாக, மற்றவர்களிடம் உண்மையான அக்கறையைக் காட்டும்போதும், அவர்கள் செய்கிற நல்லதைப் பாராட்டும்போதும், திருப்தியோடு இருப்பதற்கு அவர்களுக்கு உதவுவோம். சபையில் ஒற்றுமையும் சமாதானமும் பெருகுவதற்கு கைகொடுப்போம்.

17. யோசேப்புடைய சகோதரர்களால் என்ன செய்ய முடிந்தது, அவர்களால் ஏன் அப்படிச் செய்ய முடிந்தது?

17 பொறாமை என்ற களையை நம்மால் நிச்சயம் பிடுங்கி எறிய முடியும். யோசேப்பின் சகோதரர்களைப் பற்றி மறுபடியும் யோசித்துப்பாருங்கள். நிறைய வருஷங்கள் கழித்து யோசேப்பை மறுபடியும் எகிப்தில் அவர்கள் சந்தித்தார்கள். தான் யார் என்று தன்னுடைய சகோதரர்களிடம் சொல்வதற்கு முன்பு, அவர்கள் மாறிவிட்டார்களா என்று சோதித்துப்பார்ப்பதற்கு யோசேப்பு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில், மற்ற சகோதரர்களைவிட பென்யமீனை விசேஷமாக கவனித்துக்கொண்டார். (ஆதி. 43:33, 34) அப்போது, பென்யமீனைப் பார்த்து அவருடைய சகோதரர்கள் பொறாமைப்படவில்லை. சொல்லப்போனால், பென்யமீனின் மேலும் அவர்களுடைய அப்பா யாக்கோபின் மேலும் அவர்களுக்கு இருந்த அக்கறையைக் காட்டினார்கள். (ஆதி. 44:30-34) பொறாமை என்ற களையை அவர்கள் பிடுங்கி எறிந்திருந்ததால், மறுபடியும் குடும்பத்தில் சமாதானத்தைக் கொண்டுவர முடிந்தது. (ஆதி. 45:4, 15) அதேபோல், நாமும் பொறாமையைப் பிடுங்கி எறிந்தால், குடும்பமும் சபையும் சமாதானமாக இருக்க உதவ முடியும்.

18. சமாதானத்தை வளர்க்க முயற்சி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று யாக்கோபு 3:17, 18 சொல்கிறது?

18 பொறாமையை நாம் பிடுங்கி எறிய வேண்டும் என்றும், சமாதானத்தை வளர்க்க வேண்டும் என்றும் யெகோவா விரும்புகிறார். இதைச் செய்ய நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஏனென்றால், பொறாமை என்ற குணம் நமக்குள் வர வாய்ப்பிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். (யாக். 4:5) அதுமட்டுமல்ல, பொறாமையை ஊட்டி வளர்க்கிற ஓர் உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்! அதனால், நாம் மனத்தாழ்மையோடும் திருப்தியோடும் நன்றியோடும் இருந்தால், சமாதானமான ஒரு சூழல் உருவாகும். நல்ல நல்ல குணங்கள் அங்கே பூத்துக் குலுங்கும்!யாக்கோபு 3:17, 18-ஐ வாசியுங்கள்.

பாட்டு 77 மன்னியுங்கள்

^ பாரா. 5 யெகோவாவின் அமைப்பு சமாதானமான ஓர் அமைப்பு! ஆனால், பொறாமை என்ற களையை நம் மனதுக்குள் வளரவிட்டால், இந்தச் சமாதானம் கெட்டுவிடும். என்னென்ன காரணங்களால் பொறாமை வரலாம்? இந்த மோசமான குணத்தை எப்படிப் பிடுங்கி எறியலாம்? சமாதானத்தை எப்படி வளர்க்கலாம்? இவற்றுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: பைபிளில் விளக்கப்பட்டுள்ளபடி, பொறாமை என்ற குணம் ஒருவருக்கு இருந்தால், மற்றவர்கள் அனுபவிப்பதை அடைய வேண்டும் என்று நினைப்பார். அவர்கள் அனுபவிப்பதெல்லாம் அவர்களுடைய கையைவிட்டுப் போய்விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: மூப்பர் குழுவின் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது, காவற்கோபுர படிப்பை நடத்துவதற்கு ஓர் இளம் சகோதரருக்குப் பயிற்சி தரும்படி, அதுவரை அந்தப் படிப்பை நடத்திக்கொண்டிருந்த வயதான சகோதரரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வயதான சகோதரருக்கு அந்த நியமிப்பு ரொம்பப் பிடித்திருந்தாலும், மூப்பர் குழு எடுத்த முடிவை அவர் ஆதரிக்கிறார். இளம் சகோதரருக்குப் பயிற்சி கொடுக்கிறார், மனதார அவரைப் பாராட்டுகிறார்.