படிப்புக் கட்டுரை 46
பூஞ்சோலை பற்றிய வாக்குறுதிக்கு யெகோவா உத்தரவாதம் கொடுக்கிறார்
“பூமியில் யார் ஆசீர்வாதம் கேட்டாலும், சத்தியத்தின் கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பார்.”—ஏசா. 65:16.
பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
இந்தக் கட்டுரையில்... a
1. ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களுக்கு என்ன முக்கியமான விஷயத்தைச் சொன்னார்?
யெகோவாவை “சத்தியத்தின் கடவுள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார். ‘சத்தியம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கான நேரடி அர்த்தம், “ஆமென்.” (ஏசா. 65:16) “ஆமென்” என்றால் “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். பைபிள் யெகோவாவைப் பற்றியோ இயேசுவைப் பற்றியோ பேசும்போது “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அங்கே சொல்லப்பட்டிருக்கும் விஷயம் உண்மை என்பதற்கு அது ஒரு உத்தரவாதம். அப்படியென்றால், யெகோவா எதை சொன்னாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பதைத்தான் ஏசாயா மற்ற இஸ்ரவேலர்களிடம் சொல்கிறார். யெகோவா தன்னுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இது எவ்வளவு உண்மை என்பதை நிரூபித்திருக்கிறார்.
2. எதிர்காலத்தைப் பற்றி யெகோவா தந்திருக்கும் வாக்குறுதிகளை நாம் ஏன் நம்பலாம், என்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் இப்போது பார்க்கப்போகிறோம்?
2 எதிர்காலத்தைப் பற்றி யெகோவா தந்திருக்கும் வாக்குறுதிகள் கண்டிப்பாக நடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏசாயா வாழ்ந்து கிட்டத்தட்ட 800 வருஷங்கள் கழித்து, அப்போஸ்தலன் பவுல் யெகோவா தந்திருக்கும் வாக்குறுதிகளை நம்புவதற்கு ஒரு காரணத்தை சொன்னார். ‘கடவுளால் பொய் சொல்லவே முடியாது’ என்றார். (எபி. 6:18) எப்படி ஒரு ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சேர்ந்து வராதோ அதேபோல், உண்மைக்கு ஊற்றாக இருக்கும் யெகோவாவிடம் பொய் என்ற வார்த்தைக்கே இடமில்லை. அதனால், யெகோவா எதைச் சொன்னாலும் அதை நாம் முழுமையாக நம்பலாம். எதிர்காலத்தைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்களையும் நாம் நம்பலாம். எதிர்காலத்தில் நமக்கு என்ன தரப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? அந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு என்ன உத்தரவாதத்தைத் தந்திருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
யெகோவா என்ன வாக்குறுதியைத் தந்திருக்கிறார்?
3. (அ) நம் எல்லாருக்கும் பிடித்த வாக்குறுதி என்ன? (வெளிப்படுத்துதல் 21:3, 4) (ஆ) இந்த வாக்குறுதியைப் பற்றி நாம் சொல்லும்போது சிலர் என்ன சொல்கிறார்கள்?
3 நம் எல்லாருக்குமே பிடித்த ஒரு வாக்குறுதியைப் பற்றி இப்போது பார்க்கலாம். (வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.) “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதை ஊழியத்தில் நாம் அடிக்கடி காட்டியிருக்கிறோம். இதைப் படித்ததும், “இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நிஜமாகவே நடக்குமா?” என்று சிலர் கேட்பார்கள்.
4. (அ) யெகோவாவுக்கு என்னவெல்லாம் தெரியும்? (ஆ) வாக்குறுதி கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் யெகோவா வேறு என்னவெல்லாம் செய்திருக்கிறார்?
4 பூஞ்சோலை பற்றிய வாக்குறுதியை அப்போஸ்தலன் யோவானிடம் யெகோவா கொடுத்தபோது, அதை நாம் ஊழியத்தில் பயன்படுத்துவோம் என்பது யெகோவாவுக்குத் தெரியும். “புதிய விஷயங்களை” பற்றிய அந்த வாக்குறுதியை நம்புவது, நிறைய பேருக்குக் கஷ்டமாக இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். (ஏசா. 42:9; 60:2; 2 கொ. 4:3, 4) வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் இருக்கும் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்று நாம் எப்படி நம்பலாம்? மற்றவர்கள் அதை நம்புவதற்கு எப்படி உதவலாம்? யெகோவா வாக்குறுதியை மட்டும் கொடுக்காமல், அதை ஏன் நம்பலாம் என்பதற்கான காரணங்களையும் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
வாக்குறுதி நிறைவேறும் என்பதற்கான உத்தரவாதம்
5. பூஞ்சோலை பூமி பற்றி யெகோவா தந்திருக்கும் வாக்குறுதியை நம்புவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன, அவை எங்கே இருக்கின்றன?
5 அடுத்துவரும் வசனங்களில், அதாவது 5, 6 வசனங்களில், அந்த வாக்குறுதியை நம்புவதற்கான காரணங்களைப் பார்க்க முடியும். அங்கே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர், ‘இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்’ என்று சொன்னார். அதோடு, ‘இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை, இவற்றை எழுது’ என்று சொன்னார். பின்பு என்னிடம், ‘இவை நிறைவேறிவிட்டன! ஆல்பாவும் ஒமேகாவும் நானே, ஆரம்பமும் முடிவும் நானே’ [என்று சொன்னார்].”—வெளி. 21:5, 6அ.
6. கடவுளுடைய வாக்குறுதியின்மேல் இருக்கிற நம் நம்பிக்கையை வெளிப்படுத்துதல் 21:5, 6 எப்படிப் பலப்படுத்துகிறது?
6 வெளிப்படுத்துதல் 21:5, 6-ல் இருக்கும் வார்த்தைகள் நம் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகின்றன? அதைப் பற்றி வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகம் இப்படி சொல்கிறது: “இது, இந்த எதிர்கால ஆசீர்வாதங்களுக்கு, யெகோவாதாமே, உண்மையுள்ள மனிதவர்க்கத்துக்காக ஒரு . . . உரிமை பத்திரத்தைக் கையெழுத்திடுவதுபோல் இருக்கிறது.” b பொதுவாக, ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதை நம்புவதற்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார்கள். அதேபோல், வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் யெகோவா ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, 5, 6 வசனங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதாவது, அந்த வாக்குறுதியை நம்பலாம் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். அந்த உத்தரவாதத்தை இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், வாங்க!
7. யெகோவா கொடுத்த உத்தரவாதத்தின் ஆரம்ப வார்த்தைகள் நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கின்றன?
7 “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்” என்ற வார்த்தைகளோடு அந்த உத்தரவாதம் ஆரம்பிக்கிறது. (வெளி. 21:5அ) அப்படியென்றால், இந்த உத்தரவாதத்தைக் கொடுத்தது சக்திபடைத்த ஒரு தேவதூதரோ, உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ அல்ல, யெகோவாவே கொடுத்திருக்கிறார். எந்தளவுக்கு இதை நம்பலாம் என்பதற்கு இதுவே ஒரு ஆதாரம்! ஏனென்றால், யெகோவாவால் ‘பொய் சொல்ல முடியாது.’ (தீத். 1:3) யெகோவாவே பேசியதாக வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மூன்று தடவைதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது. அதனால், இந்த வார்த்தைகளை நாம் முழுமையாக நம்பலாம்.
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
8. தன் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதை யெகோவா எப்படி வலியுறுத்திச் சொல்கிறார்? (ஏசாயா 46:10)
8 அடுத்ததாக, “இதோ!” என்ற வார்த்தையைப் பற்றிப் பார்க்கலாம். (வெளி. 21:5) “இதோ!” என்பதற்கான கிரேக்க வார்த்தை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடிக்கடி வருகிறது. இந்த வார்த்தை ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? “அதற்குப் பிறகு வரும் வார்த்தைகளின் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான்” என்று ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், “இதோ!” என்ற வார்த்தைக்குப் பிறகு என்ன வார்த்தைகள் இருக்கின்றன? “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று யெகோவா சொல்கிறார். இங்கே எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றித்தான் யெகோவா சொல்கிறார். இருந்தாலும் அவை ஏற்கெனவே நடந்துவருவதுபோல் சொல்கிறார். ஏனென்றால், அவை கண்டிப்பாக நடக்கும் என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருக்கிறார்.—ஏசாயா 46:10-ஐ வாசியுங்கள்.
9. (அ) “எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று யெகோவா சொன்னதில் என்ன இரண்டு விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன? (ஆ) இப்போது இருக்கும் ‘வானத்துக்கும்’ ‘பூமிக்கும்’ என்ன ஆகும்?
9 “எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று யெகோவா சொன்ன வார்த்தைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். யெகோவா செய்யப்போகும் இரண்டு விஷயங்களை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. (1) சில விஷயங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக வேறு சில விஷயங்களை ஏற்படுத்துவார். (2) ஏற்கெனவே இருக்கும் சிலவற்றைப் புதிதாக்கப்போகிறார். எதை அவர் ஒழித்துக்கட்டப்போகிறார்? வெளிப்படுத்துதல் 21:1 இப்படி சொல்கிறது: “முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின.” ‘முந்தின வானம்’ என்பது சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற எல்லா அரசாங்கங்களையும் குறிக்கிறது. (மத். 4:8, 9; 1 யோ. 5:19) ‘முந்தின பூமி’ என்பது எதைக் குறிக்கிறது? பெரும்பாலும் பைபிளில், “பூமி” என்ற வார்த்தை மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி. 11:1; சங். 96:1) அப்படியென்றால், ‘முந்தின பூமி’ என்பது இன்று இருக்கும் மோசமான மக்களைக் குறிக்கிறது. இப்போது இருக்கும் ‘வானத்தையும்’ ‘பூமியையும்’ சரிசெய்து அதையே யெகோவா திரும்பவும் பயன்படுத்தப்போவது கிடையாது. அதற்குப் பதிலாக, அவற்றை ஒழித்துக்கட்டிவிட்டு புதிதாக ஒரு ‘வானத்தையும்’ ‘பூமியையும்’ ஏற்படுத்துவார். அதாவது, ஒரு புதிய அரசாங்கத்தையும், நல்ல மக்கள் மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமுதாயத்தையும் ஏற்படுத்தப்போகிறார்.
10. யெகோவா எதையெல்லாம் புதிதாக்கப்போகிறார்?
10 அடுத்ததாக, யெகோவா புதிதாக்கப்போகும் விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். வெளிப்படுத்துதல் 21:5-ல், “நான் எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குகிறேன்” என்று அவர் சொல்லவில்லை. “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்றுதான் சொல்லியிருக்கிறார். எந்த விதத்தில் யெகோவா எல்லாவற்றையும் புதிதாக்கப்போகிறார்? ஏசாயா சொல்லியிருப்பதுபோல், இந்த பூமியை ஏதேன் தோட்டத்தைப் போல யெகோவா புதிதாக்குவார். மனிதர்களை எப்படிப் புதிதாக்கப்போகிறார்? அவர்களைப் பரிபூரணமாக்கப்போகிறார். கால் ஊனமானவர்கள், கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள் எல்லாரையும் குணப்படுத்துவார். இறந்தவர்களையும் திரும்ப உயிரோடு கொண்டுவரப்போகிறார்.—ஏசா. 25:8; 35:1-7.
“இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை . . . இவை நிறைவேறிவிட்டன!”
11. யோவானை யெகோவா என்ன செய்ய சொன்னார், ஏன்?
11 யெகோவா கொடுத்திருக்கும் உத்தரவாதத்தில் அடுத்து என்ன வருகிறது? “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை, இவற்றை எழுது” என்று யோவானிடம் அவர் சொன்னார். (வெளி. 21:5) வெறுமனே “இவற்றை எழுது” என்று மட்டும் அவர் சொல்லவில்லை, அதை ஏன் எழுத வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொன்னார். அதாவது, “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை” என்றார். கடவுள் சொன்னதைக் கேட்டு யோவான் இதை எழுதியதற்காக நாம் நன்றியோடு இருக்கலாம். அவர் அப்படி எழுதியதால்தான், பூஞ்சோலை பற்றிய வாக்குறுதியை நம்மால் வாசிக்க முடிகிறது, நமக்கு கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கவும் முடிகிறது.
12. “இவை நிறைவேறிவிட்டன!” என்று யெகோவா ஏன் சொல்கிறார்?
12 அடுத்ததாக கடவுள், “இவை நிறைவேறிவிட்டன!” என்று சொல்கிறார். (வெளி. 21:6) தன்னுடைய வாக்குறுதி ஏற்கெனவே நிறைவேறிவிட்டதுபோல் யெகோவா ஏன் சொல்கிறார்? ஏனென்றால், அது கண்டிப்பாக நிறைவேறியே தீரும்! அதை யாராலும் தடுக்க முடியாது!! யெகோவா கொடுத்திருக்கும் உத்தரவாதத்தில் அடுத்து வருவதை இப்போது பார்க்கலாம். இது நம் நம்பிக்கையை இன்னும் பலமாக்கும்.
“ஆல்பாவும் ஒமேகாவும் நானே”
13. “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்று யெகோவா ஏன் சொன்னார்?
13 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், யெகோவா யோவானிடம் தரிசனங்களில் மூன்று தடவை பேசினார். (வெளி. 1:8; 21:5, 6; 22:13) அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்று சொன்னார். ஆல்பா என்பது கிரேக்க மொழியில் முதலாவது எழுத்து. ஒமேகா என்பது கடைசி எழுத்து. “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்று சொல்வதன் மூலம், ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் கண்டிப்பாக அதை நல்லபடியாக செய்து முடிப்பார் என்பதை யெகோவா காட்டுகிறார்.
14. (அ) யெகோவா எப்போது “ஆல்பா” என்று ஒருவிதத்தில் சொன்னார், எப்போது “ஒமேகா” என்று அவர் சொல்வதுபோல் இருக்கும்? (ஆ) ஆதியாகமம் 2:1-3-ல் என்ன உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
14 யெகோவா ஆதாமையும் ஏவாளையும் படைத்த பிறகு அவர்களிடம், “‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்’ . . . என்று சொல்லி ஆசீர்வதித்தார்.” (ஆதி. 1:28) இப்படி சொல்வதன் மூலம் மனிதர்களுக்கும் பூமிக்கும் அவர் என்ன நோக்கம் வைத்திருந்தார் என்று சொன்னார். இது ஒருவிதத்தில் அவர் “ஆல்பா” என்று சொன்னதுபோல் இருந்தது. சீக்கிரத்தில், ஆதாம் ஏவாளின் சந்ததியில் வரும் கீழ்ப்படிதலுள்ள மக்கள் இந்தப் பூமி முழுவதையும் நிரப்பி, அதைப் பூஞ்சோலையாக மாற்றுவார்கள். அந்தச் சமயத்தில் யெகோவா “ஒமேகா” என்று சொல்வதுபோல் இருக்கும். யெகோவா கொடுத்த இன்னொரு உத்தரவாதத்தைப் பற்றி ஆதியாகமம் 2:1-3-ல் பார்க்கலாம். (வாசியுங்கள்.) வானத்தையும் பூமியையும் அதில் இருக்கும் எல்லாவற்றையும் படைத்த பிறகு அந்த உத்தரவாதத்தை அவர் கொடுத்தார். ஏழாவது நாளை புனித நாள் என்று யெகோவா சொன்னார். அதற்கு என்ன அர்த்தம்? தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா ஏழாவது நாளை ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அப்படியென்றால், அந்த நாளின் முடிவில் அவருடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறிவிடும்.
15. யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதை சாத்தான் தடுத்துவிட்டதுபோல் ஏன் தோன்றியிருக்கலாம்?
15 ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது பாவிகளாக ஆனார்கள், தங்களுடைய பிள்ளைகளுக்குப் பாவத்தையும் மரணத்தையும் கடத்தினார்கள். (ரோ. 5:12) அதனால், யெகோவாவின் நோக்கம் நிறைவேறாதபடி சாத்தான் செய்துவிட்டதுபோல் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவாவால் “ஒமேகா” என்று சொல்லவே முடியாதபடி சாத்தான் செய்துவிட்டதுபோல் இருந்தது. தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவாவுக்கு வேறு வழியே இல்லை என்று சாத்தான் நினைத்திருக்கலாம். வேண்டுமென்றால், தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆதாம் ஏவாளைக் கொன்றுவிட்டு இன்னொரு பரிபூரணமான தம்பதியை அவர் உருவாக்குவார் என்று அவன் நினைத்திருக்கலாம். யெகோவா அப்படி செய்திருந்தாலும், அவர் பொய் சொல்கிறவர் என்று அவன் குற்றம்சாட்டியிருப்பான். ஏனென்றால், ஆதியாகமம் 1:28-ல் பதிவு செய்யப்பட்டிருப்பதுபோல், ஆதாம் ஏவாளின் வம்சத்தில் வருகிறவர்கள்தான் இந்தப் பூமியை நிரப்புவார்கள் என்று யெகோவா சொல்லியிருந்தார்.
16. யெகோவா தோற்றுவிடுவார் என்று சாத்தான் ஏன் நினைத்திருக்கலாம்?
16 கடவுள் வேறென்ன செய்வார் என்று சாத்தான் நினைத்திருக்கலாம்? ஆதாம் ஏவாளின் சந்ததியில் வருகிறவர்களே இந்தப் பூமியை நிரப்புவதற்குக் கடவுள் விட்டாலும், அவர்கள் பரிபூரணமாக ஆகவே முடியாது என்று அவன் நினைத்திருக்கலாம். (பிர. 7:20; ரோ. 3:23) அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் யெகோவா தோற்றுவிட்டார் என்றுதான் சாத்தான் சொல்லியிருப்பான். ஏனென்றால், ஆதாம் ஏவாளின் சந்ததியில் வரும் கீழ்ப்படிதலுள்ள பரிபூரணமான ஜனங்களால் இந்தப் பூமி நிரம்ப வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கமாக இருந்தது.
17. சாத்தானும் ஆதாம் ஏவாளும் செய்த கலகத்தை யெகோவா எப்படி சரிசெய்தார், முடிவில் என்ன நடக்கும்? (படத்தையும் பாருங்கள்.)
17 சாத்தானுடைய எண்ணங்களை யெகோவா தவிடுபொடியாக்கினார். தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா அருமையான ஒரு தீர்வை வைத்திருந்தார். (சங். 92:5) ஆதாம் ஏவாள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தார். இந்த விதத்தில், தான் பொய் சொல்லவில்லை என்பதைக் காட்டினார். அதேசமயத்தில், தான் தோற்றுப்போகவில்லை என்பதையும் காட்டினார். தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா ஒரு ‘சந்ததியை’ ஏற்பாடு செய்தார். ஆதாம் ஏவாளின் வம்சத்தில் வரும் கீழ்ப்படிதலுள்ள ஜனங்களை மீட்பதற்கு இந்த சந்ததி வழிசெய்யும். (ஆதி. 3:15; 22:18) யெகோவா செய்த மீட்புவிலை ஏற்பாட்டை சாத்தான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டான். இப்படியொரு சுயதியாக அன்பை யெகோவா காட்டுவார் என்று அவன் நினைத்திருக்கவே மாட்டான். (மத். 20:28; யோவா. 3:16) ஏனென்றால், இதுபோல் அன்பு காட்டுவது அவனுடைய அகராதியிலேயே இல்லை. சரி, மீட்புவிலை ஏற்பாட்டை வைத்து யெகோவா எதையெல்லாம் சாதிப்பார்? ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் ஆதாம் ஏவாளின் சந்ததியில் வந்த கீழ்ப்படிதலுள்ள ஜனங்கள் பரிபூரணமாக ஆவார்கள். அவர்கள் இந்தப் பூமியை சொந்தமாக்கிக்கொள்வார்கள். யெகோவாவின் விருப்பம் அப்போது நிறைவேறிவிடும். அந்த சமயத்தில் யெகோவா ஒருவிதத்தில் “ஒமேகா” என்று சொல்வார்.
யெகோவா கொடுத்த வாக்குறுதிமேல் உங்கள் நம்பிக்கையை அதிகமாக்குங்கள்
18. என்ன மூன்று உத்தரவாதங்களை யெகோவா கொடுத்திருக்கிறார்? (“ யெகோவாவின் வாக்குறுதியை நம்புவதற்கு மூன்று காரணங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
18 பூஞ்சோலை பூமியைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதி நிறைவேறுமா என்று சந்தேகப்படுகிறவர்களிடம் என்ன சொல்லலாம்? இவ்வளவு நேரம் பார்த்த மூன்று காரணங்களை சொல்லலாம். முதலில், யெகோவாவே இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர், ‘இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்’ என்று சொன்னார்” என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான ஞானமும், சக்தியும், ஆசையும் யெகோவாவுக்கு இருக்கிறது. இரண்டாவதாக, அவர் கொடுத்த வாக்கு ஏற்கெனவே நிறைவேறிவிட்டதுபோல் அவர் சொல்கிறார். ஏனென்றால், அது கண்டிப்பாக நடக்கும் என்று அவருக்குத் தெரியும். “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை . . . இவை நிறைவேறிவிட்டன!” என்று அவர் சொல்லியிருக்கிறார். மூன்றாவதாக, யெகோவா ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அதைக் கண்டிப்பாக நல்லபடியாக செய்து முடிப்பார். இதைத்தான், “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்ற வார்த்தைகள் காட்டுகின்றன. சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும், அவன் கண்டிப்பாகத் தோற்றுப்போவான் என்பதையும் யெகோவா நிரூபிப்பார்.
19. கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுமா என்று யாராவது சந்தேகத்தோடு கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
19 யெகோவா கொடுத்த வாக்குறுதியைப் பற்றி ஒவ்வொரு முறையும் நீங்கள் ஊழியத்தில் பேசும்போது, அதன்மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை பலமாகும். அடுத்த தடவை வெளிப்படுத்துதல் 21:4-ஐ நீங்கள் யாரிடமாவது வாசித்துக் காட்டும்போது, “இது நம்புகிற மாதிரியே இல்லை” என்று அவர்கள் சொன்னால், 5, 6 வசனங்களைக் காட்டுங்கள். யெகோவா வாக்குறுதி கொடுத்தது மட்டுமல்லாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த மாதிரி உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதைக் காட்டுங்கள்.—ஏசா. 65:16.
பாட்டு 145 பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு
a பூஞ்சோலைக்கான வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு யெகோவா உத்தரவாதம் தந்திருக்கிறார். அந்த உத்தரவாதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது, கடவுள் தந்திருக்கும் வாக்குறுதிமேல் நமக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். அந்த உத்தரவாதத்தைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.