“எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்”
‘நான் நன்றியோட நடந்துக்குறேனா?’ நாம் எல்லாரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது! ஏனென்றால், நாம் வாழும் இந்தக் காலத்தில், நிறைய பேர் “நன்றிகெட்டவர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:2) யாராவது தங்களுக்கு உதவும்போது, அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல், அதைப் பெற்றுக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் நன்றி சொல்வதற்கு அதில் ஒன்றுமே இல்லை என்பதாகவும் நினைக்கிற ஆட்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படிப்பட்டவர்களோடு பழக ஆசைப்படுவீர்களா? கண்டிப்பாக ஆசைப்பட மாட்டீர்கள்!
“நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்றும் “எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்” என்றும் யெகோவா சொல்கிறார். (கொலோ. 3:15; 1 தெ. 5:18) சொல்லப்போனால், நன்றியுள்ளவர்களாக இருப்பது நமக்குத்தான் நல்லது! எப்படி? இதோ சில காரணங்கள்!
நம்மைப் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ள உதவுகிறது
நன்றி சொல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான முக்கியக் காரணம், நம்மைப் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ள அது உதவுவதுதான்! தாராளமாக நன்றி சொல்லும் பழக்கம் இருந்தால், அது நமக்கும் நாம் யாருக்கு நன்றி சொல்கிறோமோ அவருக்கும் சந்தோஷத்தைத் தரும். எப்படி? இதை யோசித்துப்பாருங்கள். உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள்? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள் என்று அவர்கள் நினைப்பதால்தானே? அவர்களுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அவர்கள் காட்டும் அக்கறையை உணரும்போது உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். ரூத்தின் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவளிடம் போவாஸ் தாராள குணத்தைக் காட்டினார். அது ரூத்தின் மனதுக்கு இதமாக இருந்தது. தன்மீது ஒருவருக்கு அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டபோது, அவள் பூரித்துப்போயிருப்பாள்!—ரூத் 2:10-13.
கடவுளுக்கு நன்றியோடு இருப்பது ரொம்பவே முக்கியம். தன்னோடு இருக்கும் பந்தத்தைக் காத்துக்கொள்ள அவர் நமக்கு எவ்வளவோ பரிசுகளைத் தருகிறார். நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவுகிற பரிசுகளையும் அள்ளித் தருகிறார். இப்படிப்பட்ட பரிசுகளை யெகோவா ஏற்கெனவே கொடுத்திருப்பார், இப்போதும் கொடுத்துக்கொண்டிருப்பார். இதைப் பற்றி அவ்வப்போது யோசித்தும் பார்த்திருப்பீர்கள். (உபா. 8:17, 18; அப். 14:17) கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதைப் பற்றிக் கொஞ்ச நேரம் மட்டுமே யோசிக்காமல், அதிக நேரம் எடுத்து மனதுக்குள் அசைபோட்டுப் பாருங்கள். உங்களுக்கும் நீங்கள் நெஞ்சார நேசிப்பவர்களுக்கும் அவர் பொழிந்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். நம் படைப்பாளரின் தாராள குணத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அவர்மீது அன்பும் மரியாதையும் அதிகமாகும். அவர் உங்கள்மீது பாசம் வைத்திருக்கிறார்... உங்களை உயர்வாக மதிக்கிறார்... என்ற உண்மை உங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.—1 யோ. 4:9.
அவருடைய தாராள குணத்தைப் பற்றியும் அவர் பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் யோசிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள். அவருடைய நல்ல குணத்துக்கு நன்றி சொல்லுங்கள். (சங். 100:4, 5) நன்றி சொல்வது மனிதர்களின் மனதை மகிழ்விக்கும் ஒரு முக்கிய வழி!
மற்றவர்களை நம்மிடம் கவருகிறது
நன்றி சொல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான இன்னொரு காரணம், அது நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்துவதுதான்! மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்ற நியாயமான ஆசை நம் எல்லாருக்கும் இருக்கிறது. நீங்கள் செய்த நல்லதுக்காக ஒருவர் மனதார நன்றி சொல்லும்போது, உங்களுக்கும் அவருக்கும் இடையே நட்பெனும் பாலம் உருவாகிறது. (ரோ. 16:3, 4) நன்றியுள்ளவர்கள், மற்றவர்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள்! மற்றவர்கள் தங்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார்கள் என்பதை யோசிக்கும்போது, தாங்களும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது. மற்றவர்களுக்கு உதவுவது சந்தோஷத்தைத் தருகிறது! “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொல்லியிருக்கிறாரே!—அப். 20:35.
நன்றி காட்டுவதைப் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் துணை இயக்குனராக இருந்த ராபர்ட் இம்மன்ஸ் சொன்ன கருத்தைக் கவனியுங்கள். நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றால், நாம் மற்ற மனிதர்களைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதாக அவர் சொன்னார். ஏனென்றால், சிலசமயங்களில் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம் என்றும், வேறு சமயங்களில் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். நன்றி கலந்த இதயத்தோடு இருக்க வேண்டும் என்றால், இந்த விஷயத்தை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். உயிர் வாழவும் 1 கொ. 12:21) நன்றியோடு இருப்பவர், மற்றவர்கள் தனக்குச் செய்கிற எல்லாவற்றையும் உயர்வாக மதிப்பார். அப்படியென்றால், மற்றவர்களுக்கு நன்றி சொல்வதைப் பழக்கமாக்கியிருக்கிறீர்களா?
சந்தோஷத்தை அனுபவிக்கவும் நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை! உதாரணத்துக்கு, மற்றவர்கள் நமக்கு உணவு கொடுத்திருக்கலாம் அல்லது மருத்துவ உதவி செய்திருக்கலாம். இப்படி ஏதோ ஒரு வழியில் மற்றவர்களை சார்ந்துதான் நாம் வாழ்கிறோம். (வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது
நன்றி சொல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான இன்னொரு காரணம், கெட்டதைப் பார்க்காமல் நல்லதைப் பார்க்க அது உதவுவதுதான்! ஒருவிதத்தில், உங்கள் மனது ஒரு வடிகட்டியைப் போல் செயல்படுகிறது! உங்களைச் சுற்றி நடக்கும் சில விஷயங்களை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளவும், மற்றவற்றை வடிகட்டவும் உங்கள் மனதுக்குத் தெரியும். அதனால், நல்ல விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும், பிரச்சினைகளின் மீது அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருக்கவும் உங்களால் முடியும். எந்தளவுக்கு நன்றியோடு இருக்கிறீர்களோ, அந்தளவு நல்லதைப் பார்ப்பீர்கள். அப்போது, இன்னும் அதிக நன்றியோடு இருப்பீர்கள். நன்றி நிறைந்த நெஞ்சத்தோடு வாழ்க்கையைப் பார்க்கும்போது, அப்போஸ்தலன் பவுல் சொன்னதைப் போல், ‘நம் எஜமானுடைய சேவையில் எப்போதும் [உங்களால்] சந்தோஷமாக இருக்க’ முடியும்.—பிலி. 4:4.
கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதைக் கட்டுக்குள் வைக்க நன்றியுணர்வு உதவும். எப்படியென்றால், நன்றியோடு இருக்கிற ஒருவரால், எப்படிப் பொறாமைப்பட முடியும்? எப்படிச் சோகமாகவும் கோபமாகவும் இருக்க முடியும்? முடியாது, இல்லையா? நன்றியோடு இருப்பவர்கள், பொருளாசை என்ற வலைக்குள் விழ மாட்டார்கள். நிறைய பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியோடு இருப்பார்கள்.—பிலி. 4:12.
ஆசீர்வாதங்களை எண்ணிப் பாருங்கள்
இந்தக் கடைசி நாட்களில் வருகிற பிரச்சினைகளால் நீங்கள் அப்படியே ஆடிப்போய்விட வேண்டும் என்றும், சோகக் கடலில் மூழ்கிவிட வேண்டும் என்றும் சாத்தான் ஆசைப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கெட்ட எண்ணத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்... தொட்டதற்கெல்லாம் குறை சொன்னால்... அவனுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆளாக மட்டும் நீங்கள் ஆகிவிட்டால், உங்கள் ஊழியத்தின் தரம் பாதிக்கப்படும். நன்றியுணர்வும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களும் நகமும் சதையும் போன்றது! உதாரணத்துக்கு, கடவுள் நமக்குத் தந்திருக்கிற அருமையான விஷயங்களை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம்; அவர் கொடுத்திருக்கிற எதிர்கால வாக்குறுதிகளின் மீது விசுவாசம் வைக்கிறோம். (கலா. 5:22, 23) இப்படிச் செய்வதற்கு நன்றியுணர்வு ஒரு காரணம், இல்லையா?
யெகோவாவின் பிள்ளைகளாக, நன்றியோடு இருப்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்களை நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், நன்றி காட்டுவதும் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதும் எப்போதுமே சுலபம் கிடையாது. ஆனால், கவலைப்படாதீர்கள்! நன்றி காட்ட பழகிக்கொள்ள முடியும். எப்படி? ‘வாழ்க்கையில எதுக்கெல்லாம் நன்றி சொல்லலாம்?’ என்ற கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது, நன்றி காட்டுவது உங்கள் இரத்தத்தில் கலந்துவிடும். பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்களைவிட ரொம்ப சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களைப் பலப்படுத்த கடவுளும் மற்றவர்களும் செய்த அருமையான விஷயங்களை எப்போதும் நினைத்துப்பாருங்கள். அப்போது சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. அந்த விஷயங்களை டைரியில் எழுதி வைக்கலாம். அந்தந்த நாளில் அனுபவித்த இரண்டு அல்லது மூன்று விஷயங்களை நீங்கள் ஏன் எண்ணி எழுதி வைக்கக் கூடாது?
நன்றி காட்டுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளும்போது, மூளை செயல்படும் விதம் மாறுவதாகவும், வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பதற்கு அது வழி செய்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நன்றியுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்! அதனால், நீங்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்களை அசை போடுங்கள், வாழ்க்கையில் நடந்த அருமையான அனுபவங்களை மனத்திரையில் ஓடவிடுங்கள், நன்றி காட்டுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்கிற நல்லதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.” “எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.”—1 நா 16:34; 1 தெ. 5:18.