Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

ஏசாயா 60:1-ல் சொல்லப்பட்டிருக்கும் பெண் யார்? அவள் எந்த அர்த்தத்தில் ‘எழுந்து’ ‘ஒளிவீசுகிறாள்’?

ஏசாயா 60:1 இப்படிச் சொல்கிறது: “பெண்ணே, எழுந்திரு! ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.” இந்த வசனத்தின் சூழமைவை வைத்து பார்க்கும்போது, இங்கே “பெண்” என்று சொல்லியிருப்பது சீயோனை, அதாவது அந்தச் சமயத்தில் யூதாவின் தலைநகரமாக இருந்த எருசலேமைக் குறித்தது. a (ஏசா. 60:14; 62:1, 2) எருசலேம் நகரம் முழு இஸ்ரவேல் தேசத்துக்கும் அடையாளமாக இருந்தது. ஏசாயாவின் வார்த்தைகள் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: (1) எருசலேம் எப்போது, எப்படி ‘எழுந்து’ ஆன்மீக ஒளியை வீசியது? (2) ஏசாயாவின் வார்த்தைகளுக்கு நம்முடைய நாட்களில் நிறைவேற்றம் இருக்கிறதா?

எருசலேம் எப்போது, எப்படி ‘எழுந்து’ ஆன்மீக ஒளியை வீசியது? யூதர்கள் பாபிலோனில் 70 வருஷங்கள் அடிமைகளாக இருந்தபோது, எருசலேம் நகரமும் ஆலயமும் பாழடைந்து கிடந்தது. ஆனால், மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைத் தோற்கடித்த பிறகு, பாபிலோன் சாம்ராஜ்யத்தில் இருந்து இஸ்ரவேலர்கள் மறுபடியும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போவதற்கும், அங்கே உண்மை வணக்கத்தை நிலைநாட்டுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. (எஸ்றா 1:1-4) இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைச் சேர்ந்த சிலர் கி.மு. 537-லிருந்து எருசலேமுக்கு மறுபடியும் வர ஆரம்பித்தார்கள். (ஏசா. 60:4) அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள், பண்டிகைகளைக் கொண்டாடினார்கள், ஆலயத்தையும் திரும்பக் கட்டினார்கள். (எஸ்றா 3:1-4, 7-11; 6:16-22) இப்படி, எருசலேமின் மேல், அதாவது தன்னுடைய மக்களின் மேல், யெகோவாவின் மகிமை மறுபடியும் பிரகாசிக்க ஆரம்பித்தது. அவர்கள், ஆன்மீக இருளில் இருந்த மற்ற தேசத்து மக்களுக்கு ஒளிவிளக்காய் ஆனார்கள்.

ஆனாலும், ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனங்கள் அந்தச் சமயத்தில் முழுமையாக நிறைவேறவில்லை. பெரும்பாலான இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். (நெ. 13:27; மல். 1:6-8; 2:13, 14; மத். 15:7-9) பிறகு மேசியாவையே, அதாவது இயேசு கிறிஸ்துவையே, அவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள். (மத். 27:1, 2) கி.பி. 70-ல் எருசலேமும் ஆலயமும் இரண்டாவது தடவை அழிக்கப்பட்டது.

எருசலேமுக்கு இந்த நிலைமை வரும் என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (தானி. 9:24-27) இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏசாயா 60-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள், அன்றிருந்த எருசலேமில் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கம் இல்லை என்று தெரிகிறது.

ஏசாயாவின் வார்த்தைகளுக்கு நம்முடைய நாட்களில் ஏதாவது நிறைவேற்றம் இருக்கிறதா? ஆமாம் இருக்கிறது! ஆனால் இன்னொரு அடையாள அர்த்தமுள்ள பெண்ணோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. அவள்தான், “மேலான எருசலேம்.” இந்தப் பெண்ணைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “அவள்தான் நமக்குத் தாய்.” (கலா. 4:26) கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகம்தான் இந்த மேலான எருசலேம்! அதில் உண்மையுள்ள தேவதூதர்கள் இருக்கிறார்கள். அவளுடைய பிள்ளைகள்: இயேசுவும் 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும். இந்தக் கிறிஸ்தவர்களுக்கும் பவுல் மாதிரியே பரலோக நம்பிக்கை இருக்கிறது. இவர்கள், “பரிசுத்த ஜனமாக” இருக்கிறார்கள். அதாவது, ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களாக’ இருக்கிறார்கள்.—1 பே. 2:9; கலா. 6:16.

மேலான எருசலேம் எப்படி ‘எழுந்து’ ‘ஒளிவீசியது’? பூமியிலிருந்த தன்னுடைய அபிஷேகம் செய்யப்பட்ட பிள்ளைகள் மூலமாக அப்படி ஒளிவீசியது. இவர்களுக்கு நடந்த விஷயங்கள் ஏசாயா 60-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களோடு எப்படி ஒத்துப்போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

கி.பி. இரண்டாவது நூற்றாண்டில், ஏற்கெனவே சொல்லப்பட்ட களைகள், அதாவது விசுவாசதுரோக கிறிஸ்தவம், தலைதூக்க ஆரம்பித்தது. அப்போது உண்மை கிறிஸ்தவர்கள் ஆன்மீக இருளுக்குள் போய்விட்டார்கள். (மத். 13:37-43) இப்படி அவர்கள் மகா பாபிலோனுக்கு, அதாவது பொய் மதத்துக்கு, அடிமைகளாக ஆனார்கள். இந்தச் சூழ்நிலையிலிருந்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் வெளியே வர வேண்டியிருந்தது. அதாவது, ‘எழுந்திருக்க’ வேண்டியிருந்தது. அப்படியென்றால், எவ்வளவு காலம் அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள்? “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற காலப்பகுதி வரைக்கும். (மத். 13:39, 40) அந்தக் காலப்பகுதி 1914-ல் ஆரம்பித்தது. அது ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே, 1919-ல் அவர்கள் விடுதலையானார்கள். பிறகு உடனடியாக அவர்கள் ஆன்மீக ஒளி வீச ஆரம்பித்தார்கள்; பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்கள். b வருஷங்கள் போகப் போக, எல்லா தேசத்தைச் சேர்ந்த மக்களும் இந்த ஒளியின் பக்கமாக வந்தார்கள். கடவுளுடைய இஸ்ரவேலர்களில் மீதம் இருக்கிறவர்களும், அதாவது ஏசாயா 60:3-ல் சொல்லியிருக்கிற ‘ராஜாக்களும்,’ வந்தார்கள்.—வெளி. 5:9, 10.

எதிர்காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்னும் பெரிய அளவில் ஆன்மீக ஒளியை வீசுவார்கள். எப்படி? பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்டு ‘புதிய எருசலேமுடைய’ பாகமாக ஆகும்போது, அதாவது, 1,44,000 பேர் அடங்கிய, ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கிற கிறிஸ்துவுடைய மணமகளாக ஆகும்போது அப்படி ஒளிவீசுவார்கள்.—வெளி. 14:1; 21:1, 2, 24; 22:3-5.

ஏசாயா 60:1 நிறைவேறுவதில் புதிய எருசலேமுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. (ஏசாயா 60:1, 1, 3, 5, 11, 19, 20-ஐ வெளிப்படுத்துதல் 21:2, 9-11, 22-26-ரோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அன்றிருந்த இஸ்ரவேல் தேசத்தில், எருசலேமில் இருந்துதான் ஆட்சி நடந்தது. அதேமாதிரி புதிய உலகத்தில், புதிய எருசலேமும் கிறிஸ்துவும் ஆட்சி செய்வார்கள். அப்படியென்றால், புதிய எருசலேம் “கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி” வருகிறது என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? பூமியிலிருக்கும் மக்கள் பக்கமாக கவனத்தைத் திருப்புவதையும் அவர்கள்மேல் ஒளிவீசுவதையும்தான் இது அர்த்தப்படுத்துகிறது. எல்லா தேசத்தையும் சேர்ந்தக் கடவுள்பக்தி உள்ள மக்கள் “அதன் வெளிச்சத்தில் நடப்பார்கள்.” பாவத்தில் இருந்தும் மரணத்தில் இருந்தும்கூட அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். (வெளி. 21:3, 4, 24) இதற்குப் பிறகுதான், ஏசாயாவும் மற்ற தீர்க்கதரிசிகளும் சொன்னதுபோல் ‘எல்லாமே புதுப்பிக்கப்பட்டிருக்கும்.’ (அப். 3:21) இந்தப் புதுப்பிக்கிற வேலை இயேசு ராஜாவாக ஆனபோது ஆரம்பித்தது, ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் அது முடிவடையும்.

a புதிய உலக மொழிப்பெயர்ப்பில் ஏசாயா 60:1-ல் “சீயோன்” அல்லது “எருசலேம்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக “பெண்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், “எழுந்திரு,” “ஒளிவீசு” என்ற எபிரெய வினைச்சொற்கள் பெண் பாலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேமாதிரிதான் “உன்” என்ற வார்த்தையும் பெண் பாலில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் “பெண்” என்று சொல்லப்பட்டுள்ளதால் இது அடையாள அர்த்தமுள்ள பெண்ணைக் குறிப்பதாக வாசிப்பவரால் புரிந்துகொள்ள முடியும்.

b 1919-ல் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றி எசேக்கியேல் 37:1-14-கிலும் வெளிப்படுத்துதல் 11:7-12-யிலும் சொல்லியிருக்கிறது. ரொம்பக் காலமாக ஆன்மீக அடிமைத்தனத்தில் இருந்த பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் உண்மை வணக்கத்தில் ஈடுபடுவதைப் பற்றி எசேக்கியேலில் சொல்லியிருக்கிறது. ஆனால், வெளிப்படுத்துதலில் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனம், கடவுளுடைய மக்களை முன்நின்று வழிநடத்தின அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் அடங்கிய ஒரு சின்ன தொகுதியைப் பற்றித்தான் சொல்கிறது. இவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டதால் கொஞ்ச காலத்துக்குச் செயல்பட முடியாத நிலையில் இருந்தார்கள். இவர்கள் ஆன்மீக அர்த்தத்தில் உயிரோடு வருவதைப் பற்றித்தான் வெளிப்படுத்துதல் சொல்கிறது. 1919-ல் இவர்கள் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமிக்கப்பட்டார்கள்.—மத். 24:45; தூய வணக்கம்—பூமியெங்கும்! புத்தகத்தில், பக்கம் 118-ஐப் பாருங்கள்.