Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனதின் போராட்டத்தை நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?

மனதின் போராட்டத்தை நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?

எதிரி ஒருவன் உங்களைத் தாக்குகிறான்! சாத்தான்தான் அந்த எதிரி! அவன் பயன்படுத்துகிற ஆயுதம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆயுதம் உங்கள் உடலை அல்ல, உங்கள் மனதைத் தாக்குவதற்காகவே விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதம் எது? பிரச்சாரம்தான் அந்த ஆயுதம்!

சாத்தானுடைய பிரச்சாரம் ரொம்ப ஆபத்தானது என்று அப்போஸ்தலன் பவுலுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அதைப் பற்றி எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. உதாரணத்துக்கு, தாங்கள் சத்தியத்தில் உறுதியானவர்கள் என்றும், சாத்தான் தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்றும் கொரிந்துவில் இருந்த சிலர் நினைத்தார்கள். (1 கொ. 10:12) அதனால்தான், “பாம்பின் தந்திரத்தால் ஏவாள் மோசம்போக்கப்பட்டதைப் போல உங்கள் மனமும் ஏதோவொரு விதத்தில் கெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்குக் காட்ட வேண்டிய உண்மைத்தன்மையிலிருந்தும் தூய்மையிலிருந்தும் விலக்கப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்” என்று பவுல் அவர்களிடம் சொன்னார்.—2 கொ. 11:3.

நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பதைப் பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. சாத்தானுடைய பிரச்சாரத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், முதலில் அது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பிரச்சாரம் எந்தளவு ஆபத்தானது?

பிரச்சாரம் என்றால் என்ன? இந்தச் சூழமைவில், மக்களை ஏமாற்றுவதற்காகவோ அல்லது அவர்கள் யோசிக்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவோ பயன்படுத்தப்படும் தவறான தகவலைத்தான் பிரச்சாரம் என்று சொல்கிறோம். அது “முறையற்றது, தீமையானது, நேர்மையற்றது” என்று ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது. (ப்ரொபகன்டா அண்ட் பர்ஸுவேஷன்) பிரச்சாரத்தைப் பற்றி விளக்குவதற்கு, “பொய், புரட்டு, சூழ்ச்சி, மனதைக் கட்டுப்படுத்துவது, ஒரு நபரை அல்லது ஏதோ ஒன்றைக் கட்டுப்படுத்துவது” ஆகிய வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிரச்சாரம் என்பது நயவஞ்சகமானது; பார்க்க முடியாத, முகர முடியாத ஒரு விஷவாயுவைப் போன்றது! நமக்குத் தெரியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக நம் யோசனைகளைக் கெடுக்கும் அளவுக்கு அது ஆபத்தானது. “நாம் உணர்வதைவிட” அது நம் செயல்களை அதிகளவில் பாதிக்கிறது என்று மனித நடத்தையில் வல்லுநரான வான்ஸ் பாக்கார்ட் சொன்னார். மிகவும் ஆபத்தான, நியாயமற்ற விதங்களில் செயல்பட அது மக்களைத் தூண்டியிருப்பதாக இன்னொரு வல்லுநர் சொன்னார். அதோடு இனப் படுகொலை, போர், இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் நடக்கிற துன்புறுத்தல் ஆகியவற்றுக்கும் அது காரணமாக இருந்திருப்பதாக அவர் சொன்னார்.—ஈஸிலி லெட்எ ஹிஸ்ட்ரி ஆஃப் ப்ரொபகன்டா.

தங்கள் பிரச்சாரத்தின் மூலம் மனிதர்களாலேயே நம்மை ஏமாற்ற முடியும் என்றால், சாத்தானைப் பற்றி சொல்லவா வேண்டும்! மனிதன் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே மனிதர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, “உலகம் முழுவதும்” அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதனால், பொய்களைப் பரப்புவதற்கு இந்த உலகத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அவனால் பயன்படுத்த முடியும். (1 யோ. 5:19; யோவா. 8:44) தன்னுடைய பிரச்சாரத்தால், அவன் நிறைய பேருடைய ‘மனக்கண்களை குருடாக்கியிருக்கிறான்.’ இப்போது, ‘உலகம் முழுவதையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.’ (2 கொ. 4:4; வெளி. 12:9) அவனுடைய பிரச்சாரத்தை எதிர்த்து நாம் எப்படிப் போராடலாம்?

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு எளிமையான வழியைப் பற்றி இயேசு சொன்னார்: ‘சத்தியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.’ (யோவா. 8:31, 32) போர் நடக்கும் சமயத்தில், போர் வீரர்களை ஏமாற்றுவதற்காக எதிரிகள் நிறைய பொய்களைப் பரப்பிக்கொண்டிருப்பார்கள். அதனால், நம்பகமான தகவலை எங்கிருந்து பெற வேண்டும் என்பது ஒரு போர் வீரருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்பகமான தகவலை நாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? யெகோவா நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார். சாத்தானுடைய பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான எல்லாமே அதில் இருக்கின்றன.—2 தீ. 3:16, 17.

இது சாத்தானுக்கும் நன்றாகத் தெரியும். அதனால், நாம் பைபிளை ஆழ்ந்து படிக்காதபடி அவன் இந்த உலகத்தைப் பயன்படுத்துகிறான். அவனுடைய வஞ்சக வலையில் விழுந்து விடாதீர்கள்! (எபே. 6:11, அடிக்குறிப்பு) சத்தியத்தைப் பற்றிய அடிப்படையான புரிந்துகொள்ளுதல் நமக்கு இருந்தால் மட்டும் போதாது. சத்தியத்தின் ஆழங்களை நாம் “நன்றாகப் புரிந்துகொள்ள” வேண்டும். அதற்குக் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். (எபே. 3:18) நோயெம் சாம்ப்ஸ்கீ என்ற ஆசிரியர் இப்படிச் சொன்னார்: “யாரும் சத்தியத்தைக் கொண்டுவந்து உங்க மூளைக்குள்ள வைக்க மாட்டாங்க. நீங்களாதான் அத கண்டுபிடிக்கணும்.” அதனால், ‘தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் நீங்களே அதைக் கண்டுபிடியுங்கள்.’—அப். 17:11.

மனதின் போராட்டத்தை நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால், பிரச்சாரம் எந்தளவு ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

நீங்கள் தெளிவாக யோசிப்பதையோ, சத்தியத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதையோ சாத்தான் விரும்புவதில்லை. ஏனென்றால், மக்கள் “நன்றாக பகுத்தாராய்வதை தடுத்துவிட்டால்” பிரச்சாரம் “மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.” (மீடியா அண்ட் சொஸைட்டி இன் த டுவென்டியெத் சென்ச்சரி) நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும் நன்றாக யோசித்துப் பாருங்கள்; அப்படியே நம்பி விடாதீர்கள். (நீதி. 14:15) ‘யோசிக்கும் திறனையும்’ ‘சிந்திக்கும் திறனையும்’ கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—நீதி. 2:10-15; ரோ. 12:1, 2.

ஒற்றுமையாக இருங்கள்

பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, போர் வீரர்களின் மன உறுதியையும் போராடுவதற்கான அவர்களுடைய ஆர்வத்தையும் போர் வல்லுநர்கள் குறைத்துவிடுகிறார்கள். போர் வீரர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளவோ, தங்கள் படைப்பிரிவை விட்டு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவோ பிரச்சாரம் அவர்களைத் தூண்டிவிடலாம். ஒரு ஜெர்மானிய தளபதியைப் பொறுத்தவரை, முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்ததற்கு பிரச்சாரம்தான் காரணம்! பிரச்சாரத்தால் மக்கள் அந்தளவு பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் வசியம் செய்யப்பட்டவர்கள் போல இருந்ததாகவும் அவர் சொன்னார். கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிற ஒற்றுமையைக் கெடுத்துப்போட, அதே மாதிரியான முறைகளைத்தான் சாத்தான் இன்று பயன்படுத்துகிறான். உதாரணத்துக்கு, சகோதரர்கள் மத்தியில் அவன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறான். அல்லது யெகோவாவின் அமைப்பு நியாயமற்றது என்றோ, அது ஏதோ தவறு செய்துவிட்டது என்றோ நினைக்க வைத்து, அவர்களை அமைப்பைவிட்டே வெளியே போக வைக்க முயற்சி செய்கிறான்.

ஏமாந்து விடாதீர்கள்! கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, “ஒருவரை ஒருவர் . . . தாராளமாக மன்னியுங்கள்” என்றும், கருத்துவேறுபாடுகளை உடனே சரிசெய்து கொள்ளுங்கள் என்றும் பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (கொலோ. 3:13, 14; மத். 5:23, 24) சபையைவிட்டு தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் அது நம்மை எச்சரிக்கிறது. (நீதி. 18:1) சாத்தானின் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை சோதித்துப் பாருங்கள். ‘கடைசியா என் சகோதரர் என்னை கஷ்டப்படுத்துனப்போ, கடவுள சந்தோஷப்படுத்துற மாதிரி நடந்துகிட்டேனா, சாத்தான சந்தோஷப்படுத்துற மாதிரி நடந்துகிட்டேனா?’ என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.—கலா. 5:16-26; எபே. 2:2, 3.

உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்

தன் தலைவருக்கு உண்மையாக இல்லாத ஒரு போர் வீரரால் நன்றாகப் போர் செய்ய முடியாது. அதனால் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, போர் வீரர்களுடைய மன உறுதியையும் தங்கள் தலைவர்கள்மேல் அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையையும் எதிரிகள் கெடுக்கிறார்கள். தலைவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால், எதிரிகள் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, “நீங்க அவங்கள நம்ப முடியாது!” என்றும், “அவங்களால நீங்க அழியாத மாதிரி பார்த்துக்கோங்க” என்றும் சொல்வார்கள். இன்று சாத்தானும் அவர்களைப் போலவே செய்கிறான். தன் மக்களை வழிநடத்த யெகோவா பயன்படுத்துகிற நபர்கள்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையைக் கெடுக்க அவன் முயற்சி செய்கிறான்.

நீங்கள் எப்படி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்? தொடர்ந்து யெகோவாவின் அமைப்போடு இருக்க தீர்மானமாக இருங்கள். தொடர்ந்து உண்மையாக இருங்கள், கடவுளுடைய மக்களை வழிநடத்தும் நபர்கள் அபூரணர்களாக இருந்தாலும் தொடர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். (1 தெ. 5:12, 13) விசுவாசத் துரோகிகளும் மற்ற ஏமாற்றுக்காரர்களும் கடவுளுடைய அமைப்பைத் தாக்கலாம். (தீத். 1:10) அவர்கள் சொல்வது உண்மை போல தெரிந்தாலும், “உடனே நிதானம் இழந்து பரபரப்பாகிவிடாதீர்கள்.” (2 தெ. 2:2) ‘நீ கற்றுக்கொண்ட விஷயங்களை . . . விடாமல் கடைப்பிடி; அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பதை ஞாபகத்தில் வை’ என்று தீமோத்தேயுவுக்குப் பவுல் கொடுத்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள். (2 தீ. 3:14, 15) நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, சுமார் 100 வருஷங்களாக உண்மையுள்ள அடிமையை யெகோவா பயன்படுத்தியிருக்கிறார். அந்த அடிமையை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன; அந்த ஆதாரங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.—மத். 24:45-47; எபி. 13:7, 17.

பயப்படாதீர்கள்!

மறைமுகமாக மட்டுமல்ல, நேரடியாகவும் உங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் முயற்சி செய்வான். சில சமயங்களில், உங்களைப் பயமுறுத்துவதற்கு அவன் முயற்சி செய்வான். பயம் என்பது, “பிரச்சாரத்துக்கான வழிகளில் பழமையான ஒரு வழி.” (ஈஸிலி லெட்எ ஹிஸ்ட்ரி ஆஃப் ப்ரொபகன்டா) உதாரணத்துக்கு, தங்கள் எதிரிகளை அடக்கி ஆளுவதற்கு, பிரச்சாரத்தோடு சேர்த்து பயம் என்ற கண்ணியையும் அசீரியர்கள் பயன்படுத்தியதாக பிரிட்டன் பேராசிரியரான ஃபிலிப் எம். டேலர் எழுதினார். நமக்கு இருக்கிற மனித பயம், மரண பயம் மற்றும் துன்புறுத்தப்படுவோமோ என்ற பயம் போன்றவற்றைப் பயன்படுத்தி நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையைச் சாத்தான் தடுக்கப் பார்ப்பான்.—ஏசா. 8:12; எரே. 42:11; எபி. 2:15.

இதுபோன்ற பயத்தைப் பயன்படுத்தி சாத்தான் உங்களுடைய மன உறுதியையும் உத்தமத்தன்மையையும் பலவீனப்படுத்துவதற்கு விட்டுவிடாதீர்கள். “உடலைக் கொல்ல முடிந்தாலும் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 12:4) உங்களை அக்கறையாகப் பார்த்துக்கொள்வதாகவும், ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ தருவதாகவும், சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவி செய்வதாகவும் யெகோவா கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நம்புங்கள்.—2 கொ. 4:7-9; 1 பே. 3:14.

சில சமயங்களில், நீங்கள் சோர்ந்துவிடலாம் அல்லது பயப்படலாம். அப்போது, யோசுவாவிடம் யெகோவா சொன்ன இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்: “தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்.” (யோசு. 1:9) கவலைகள் உங்களைத் தாக்கும்போது, அவற்றையெல்லாம் உடனடியாக யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். அப்போது, “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.” பிறகு, சாத்தானுடைய எல்லா பிரச்சாரங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பலம் உங்களுக்குக் கிடைக்கும்.—பிலி. 4:6, 7, 13.

கடவுளுடைய மக்களைப் பயமுறுத்துவதற்காக அசீரியர்களின் தூதுவனான ரப்சாக்கே செய்த பிரச்சாரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அசீரியாவிடமிருந்து தங்களை யாராலும் பாதுகாக்க முடியாது, ஏன், யெகோவாவால்கூட பாதுகாக்க முடியாது என்று கடவுளுடைய மக்கள் நம்ப வேண்டுமென அவன் நினைத்தான். எருசலேமை அழிக்கச் சொல்லி யெகோவா அசீரியர்களிடம் சொன்னதாகவும் அவன் சொன்னான். ஆனால், யெகோவா என்ன சொன்னார்? “அசீரிய ராஜாவின் ஊழியர்கள் என்னை நிந்தித்துப் பேசியதைக் கேட்டு நீங்கள் பயப்படாதீர்கள்” என்று சொன்னார். (2 ரா. 18:22-25; 19:6) பிறகு, ஒரு தேவதூதரை அனுப்பி ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரியர்களை யெகோவா அழித்தார்.—2 ரா. 19:35.

ஞானமாக இருங்கள் யெகோவா சொல்வதைக் கேளுங்கள்

நீங்கள் ஒரு படம் பார்த்துக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் படத்தில், தான் ஏமாற்றப்படுவது தெரியாமலேயே ஒருவர் இருக்கிறார். அப்போது, ‘அத நம்பாத! அவங்க உன்கிட்ட பொய் சொல்றாங்க!’ என்று கத்த வேண்டுமென நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? தேவதூதர்களும் உங்களிடம், “சாத்தான் சொல்ற பொய்ய நம்பி ஏமாந்துடாதீங்க!” என்று சொல்கிறார்கள்.

சாத்தானுடைய பிரச்சாரத்தைக் கேட்காதீர்கள். (நீதி. 26:24, 25) யெகோவா சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரை நம்புங்கள். (நீதி. 3:5-7) யெகோவா உங்களை நேசிக்கிறார். “என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறார். (நீதி. 27:11) அவர் சொல்வதைச் செய்யும்போது, உங்கள் மனதின் போராட்டத்தை நீங்கள் ஜெயிக்கலாம்.