Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 24

பாட்டு 98 வேதம்—நம் தேவன் தந்த பரிசு

மரணப் படுக்கையில் ஒரு தீர்க்கதரிசனம்—பாகம் 1

மரணப் படுக்கையில் ஒரு தீர்க்கதரிசனம்—பாகம் 1

“எல்லாரும் கூடிவந்து நில்லுங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.”ஆதி. 49:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

ரூபன், சிமியோன், லேவி மற்றும் யூதாவைப் பற்றி மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வோம்.

1-2. மரணப் படுக்கையில் இருந்த சமயத்தில் யாக்கோபு என்ன செய்தார், ஏன்? (அட்டைப் படத்தையும் பாருங்கள்.)

 கானானில் இருந்து யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்கு வந்து 17 வருஷங்கள் உருண்டோடிவிட்டன. (ஆதி. 47:28) இத்தனை வருஷமும் அவர் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். ஏனென்றால், இறந்துவிட்டதாக அவர் நினைத்த அவருடைய மகன் யோசேப்பு உயிரோடு இருந்தார். யோசேப்போடு சேர்ந்து எல்லாரும் குடும்பமாகத் திரும்பவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஒரு கட்டத்தில், தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை யாக்கோபு புரிந்துகொண்டார். அதனால், சில முக்கியமான விஷயங்களைச் சொல்வதற்கு அவருடைய மகன்களை வரச் சொன்னார்.—ஆதி. 49:28.

2 பொதுவாக, அந்தக் காலத்தில் குடும்பத் தலைவர்கள், தாங்கள் சாவதற்கு முன்பு குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் ஒன்றாகக் கூப்பிட்டு சில அறிவுரைகளைக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. (ஏசா. 38:1) ஒருவேளை, அடுத்த குடும்பத் தலைவர் யார் என்றுகூட அந்தச் சமயத்தில் அவர்கள் சொல்லலாம்.

மரணப் படுக்கையில் இருக்கும் யாக்கோபு தன்னுடைய 12 மகன்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிறார் (பாராக்கள் 1-2)


3. ஆதியாகமம் 49:1, 2 காட்டுவதுபோல், யாக்கோபுடைய வார்த்தைகள் ஏன் ரொம்ப முக்கியமாக இருந்தன?

3 ஆதியாகமம் 49:1, 2-ஐ வாசியுங்கள். மரணப் படுக்கையில் இருக்கிறவர்கள் பொதுவாக தங்கள் மகன்களிடம் பேசுவதுபோல் யாக்கோபு இங்கே பேசவில்லை. யாக்கோபு ஒரு தீர்க்கதரிசி. தன்னுடைய வாரிசுகளுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அவர் சொன்னார். அதனால்தான், அவர் சொன்ன வார்த்தைகள் ‘மரணப் படுக்கையில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்? (“யாக்கோபின் குடும்பம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

4 ரூபன், சிமியோன், லேவி மற்றும் யூதாவிடம் யாக்கோபு என்ன சொன்னார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். மீதி எட்டு மகன்களிடம் அவர் சொன்ன வார்த்தைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். யாக்கோபு தன்னுடைய மகன்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் சொன்னார். அந்த வம்சத்தில் வந்தவர்கள்தான் பிற்காலத்தில் இஸ்ரவேல் தேசமாக ஆனார்கள். அந்தத் தேசத்தின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், யாக்கோபு சொன்ன வார்த்தைகள் துல்லியமாக நிறைவேறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. யாக்கோபு சொன்ன வார்த்தைகளில் இருந்து நமக்கும் பாடம் இருக்கிறது. நம்முடைய அன்பான அப்பா யெகோவாவை எப்படிச் சந்தோஷப்படுத்தலாம் என்பதை நாமும் தெரிந்துகொள்ள முடியும்.

ரூபன்

5. என்ன ஆசீர்வாதம் தனக்குக் கிடைக்கும் என்று ரூபன் ஒருவேளை யோசித்திருக்கலாம்?

5 ரூபனிடம் யாக்கோபு, “நீ என்னுடைய மூத்த மகன்” என்று சொல்லி பேச ஆரம்பிக்கிறார். (ஆதி. 49:3) மூத்த மகனாக இருந்ததால் அப்பாவின் சொத்தில் இரண்டு பாகம் தனக்குக் கிடைக்கும் என்று ரூபன் ஒருவேளை யோசித்திருக்கலாம். அப்பாவுக்குப் பிறகு, தான்தான் அடுத்த குடும்பத் தலைவராக ஆவார் என்றுகூட அவர் எதிர்பார்த்திருக்கலாம். அவருடைய வம்சத்தில் வருகிற மற்றவர்களுக்கும் அந்தப் பாக்கியம் வழிவழியாக கடத்தப்படலாம் என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.

6. மூத்த மகன் உரிமையை ரூபன் ஏன் இழந்துவிட்டார்? (ஆதியாகமம் 49:3, 4)

6 ரூபன் தன்னுடைய மூத்த மகன் உரிமையை இழந்துவிட்டார். (1 நா. 5:1) ஏனென்றால், கொஞ்ச வருஷத்துக்கு முன்பு ரூபன் தன்னுடைய அப்பாவின் மறுமனைவியான பில்காளோடு உடலுறவு வைத்துக்கொண்டார். யாக்கோபின் அன்பு மனைவியான ராகேலின் வேலைக்காரப் பெண்தான் பில்காள். இந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் ராகேல் உயிரோடு இல்லை. (ஆதி. 35:19, 22) ரூபன், யாக்கோபின் இன்னொரு மனைவியான லேயாளுக்குப் பிறந்தவர். அதனால், தன்னுடைய அம்மா லேயாளுக்குக் கிடைக்க வேண்டிய பாசம் வேலைக்காரப் பெண்ணுக்குக் கிடைத்துவிடுமோ என்று நினைத்து ரூபன் ஒருவேளை அப்படிச் செய்திருக்கலாம். அல்லது, பில்காள்மீது அவருக்குக் காம ஆசை இருந்திருக்கலாம். அதனால், அப்படிச் செய்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவர் அப்படி செய்திருந்தாலும் சரி, அவர் செய்த காரியத்தை யெகோவாவும் வெறுத்தார், யாக்கோபும் வெறுத்தார்.—ஆதியாகமம் 49:3, 4-ஐ வாசியுங்கள்.

7. ரூபனுக்கும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுக்கும் என்ன ஆனது? (“ மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

7 யாக்கோபு ரூபனிடம், “நீ உயர்வடைய மாட்டாய்” என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்தது. ரூபன் வம்சத்தில் வந்த யாருமே ராஜாவாகவோ குருமாராகவோ தீர்க்கதரிசியாகவோ ஆனதாக எந்தப் பதிவும் இல்லை. இருந்தாலும், ரூபனை யாக்கோபு கைவிடவில்லை. அவருடைய வம்சமும் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு கோத்திரமாக ஆனது. (யோசு. 12:6) ரூபன் மற்ற சமயங்களில் நல்ல குணங்களைக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒழுக்கங்கெட்ட விஷயங்களை அவர் திரும்பவும் செய்ததாக எந்தப் பதிவும் இல்லை.—ஆதி. 37:20-22; 42:37.

8. ரூபனுடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 நமக்கு என்ன பாடம்? சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதற்கும், பாலியல் முறைகேட்டைத் தவிர்ப்பதற்கும் நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை, தவறு செய்வதற்கான ஆசை நமக்கு வந்தால், நாம் செய்கிற விஷயம் யெகோவாவையோ நம் குடும்பத்தையோ மற்றவர்களையோ எப்படிப் பாதிக்கும் என்பதை ஒரு நிமிஷம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாம் ‘எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்.’ (கலா. 6:7) ரூபனுடைய வாழ்க்கையில் இருந்து யெகோவா எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதையும் கற்றுக்கொள்கிறோம். தவறு செய்வதால் வருகிற விளைவுகளில் இருந்து யெகோவா நம்மைக் காப்பாற்றுவதில்லை என்றாலும், நல்லது செய்வதற்கு நாம் முயற்சி எடுக்கும்போது அதை அவர் ஆசீர்வதிக்கிறார்.

சிமியோன், லேவி

9. சிமியோனையும் லேவியையும் யாக்கோபுக்கு ஏன் பிடிக்காமல் போனது? (ஆதியாகமம் 49:5-7)

9 ஆதியாகமம் 49:5-7-ஐ வாசியுங்கள். அடுத்ததாக யாக்கோபு சிமியோனிடமும் லேவியிடமும் பேசுகிறார். ரொம்பவே கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர்களுடைய செயல்களை யாக்கோபு எந்தளவுக்கு வெறுத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. சிமியோனும் லேவியும் அப்படி என்ன செய்தார்கள்? பல வருஷங்களுக்கு முன்பு, யாக்கோபின் மகள் தீனாளை சீகேம் என்பவன் கற்பழித்தான். இதைக் கேள்விப்பட்டு, யாக்கோபின் மகன்கள் ரொம்ப கோபமாக இருந்தார்கள். சீகேம் மற்றும் அவனுடைய ஊர்க்காரர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்துகொண்டால், அவர்களோடு சமாதானமாகப் போவதாக யாக்கோபின் மகன்கள் பொய்யாக வாக்குக் கொடுத்தார்கள்; சூழ்ச்சி செய்தார்கள். அதை நம்பி, அந்த ஊர் ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் வலியில் இருந்தபோது, சிமியோனும் லேவியும்தான் “ஆளுக்கொரு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த நகரத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள்.”—ஆதி. 34:25-29.

10. சிமியோனையும் லேவியையும் பற்றி யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (“ மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

10 சிமியோனும் லேவியும் வெறித்தனமாக நடந்துகொண்டதால், யாக்கோபு அவர்கள்மேல் பயங்கர கோபமாக இருந்தார். இஸ்ரவேல் தேசம் முழுக்க அவர்கள் சிதறிப்போய் வாழ்வார்கள் என்று தீர்க்கதரிசனம் சொன்னார். சுமார் 200 வருஷங்களுக்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போனபோது அது நிறைவேறியது. சிமியோன் கோத்திரத்தார் குடியிருப்பதற்கு, யூதா கோத்திரத்தின் எல்லைகளுக்கு உள்ளே ஆங்காங்கே சில பகுதிகள் கொடுக்கப்பட்டன. (யோசு. 19:1) லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களோ, இஸ்ரவேல் தேசம் முழுக்க, 48 நகரங்களில் சிதறிப்போய் வாழ்ந்தார்கள்.—யோசு. 21:41.

11. சிமியோன் மற்றும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்ன நல்ல விஷயங்களைச் செய்தார்கள்?

11 சிமியோனும் லேவியும் செய்த தவறை அவருடைய வம்சத்தில் வந்தவர்கள் செய்யவில்லை. லேவி கோத்திரத்தைச் சேர்ந்த நிறைய பேர் உண்மை வணக்கத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். சீனாய் மலையில் யெகோவா மோசேக்கு திருச்சட்டத்தைக் கொடுத்தபோது நிறைய இஸ்ரவேலர்கள் ஒரு கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கினார்கள். ஆனால், “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?” என்று மோசே கேட்டபோது, லேவியர்கள் அவர் பக்கம் வந்து நின்றார்கள்; சிலை வழிபாட்டில் ஈடுபட்டவர்களை அழிப்பதில் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். (யாத். 32:26-29) லேவி கோத்திரத்தில் இருந்தவர்களுக்கு யெகோவா ஒரு பெரிய பாக்கியத்தைக் கொடுத்தார். குருமார்களாகச் சேவை செய்வதற்கு அவர்களைப் பிரித்து வைத்தார். (யாத். 40:12-15; எண். 3:11, 12) சிமியோன் கோத்திரத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? கானானியர்களை எதிர்த்து போர் செய்வதற்கு யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் போனபோது இவர்களும் அவர்களோடு சேர்ந்து போர் செய்யப் போனார்கள். இப்படி, யெகோவாவுடைய விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.—நியா. 1:3, 17.

12. சிமியோன் மற்றும் லேவியின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 நமக்கு என்ன பாடம்? கோபத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும். நமக்கோ நமக்குப் பிடித்தவர்களுக்கோ ஏதாவது அநியாயம் நடக்கும்போது நமக்குக் கோபம் வருவது இயல்புதான். (சங். 4:4) ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நம்மைக் காயப்படுத்தியவர்களை நாமும் பதிலுக்குக் காயப்படுத்தினால் யெகோவா அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். (யாக். 1:20) சபைக்கு உள்ளேயோ வெளியேயோ நமக்கு ஏதாவது அநியாயம் நடந்தால், பைபிள் நியமங்களின்படி அதைச் சரிசெய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, கட்டுக்கடங்காத கோபத்தால் விபரீதமாக எதையும் செய்துவிட மாட்டோம். (ரோ. 12:17, 19; 1 பே. 3:9) ஒருவேளை, உங்கள் அப்பா அம்மா யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்தால், நீங்களும் அதையே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் சரியானதைச் செய்ய முடியும். அதற்கு யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். அப்படி நீங்கள் செய்யும்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

யூதா

13. அப்பா தனக்கு என்ன சொல்லப் போகிறாரோ என்று யூதா ஏன் பயந்திருக்கலாம்?

13 அடுத்து யாக்கோபு பேசப்போவது யூதாவிடம். ஒருவேளை யூதா, ‘அண்ணன்களிடம் அப்பா இப்படிச் சொல்லியிருக்கிறாரே, என்னிடம் என்ன சொல்ல போகிறாரோ?’ என்று பயந்திருக்கலாம். ஏனென்றால், அவரும் சில பெரிய தவறுகளைச் செய்திருக்கிறார். தன்னுடைய சகோதரர்கள் சீகேம் நகரத்தைச் சூறையாடியபோது அவரும் அவர்களுடன் இருந்தார். (ஆதி. 34:27) பிறகு, யோசேப்பை அடிமையாக விற்றுவிட்டு அதைத் தன் அப்பாவிடம் மூடிமறைத்ததில் இவருக்கும் பங்கு இருந்தது. (ஆதி. 37:31-33) அதுமட்டுமல்ல, தன்னுடைய மருமகள் தாமாரை, ஒரு விபச்சாரி என்று நினைத்து அவளோடு உடலுறவு வைத்துக்கொண்டார்.—ஆதி. 38:15-18.

14. என்ன நல்ல விஷயங்களை யூதா செய்திருக்கிறார்? (ஆதியாகமம் 49:8, 9)

14 யூதா பயந்ததுபோல் எதுவுமே நடக்கவில்லை. யாக்கோபு கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு யூதாவைப் பாராட்டினார்; அவரை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 49:8, 9-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், யூதா தன்னுடைய வயதான அப்பாமேல் அக்கறை காட்டியிருக்கிறார். தன்னுடைய தம்பி பென்யமீனையும் கரிசனையோடு நடத்தியிருக்கிறார்.—ஆதி. 44:18, 30-34.

15. யூதாவைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

15 யூதா தன்னுடைய சகோதரர்களை முன்நின்று வழிநடத்துவார் என்று யாக்கோபு தீர்க்கதரிசனமாகச் சொன்னார். அவர் சொன்னது கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப் பிறகு நிறைவேற ஆரம்பித்தது. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி, வனாந்தரத்தில் பயணம் செய்தபோது யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் முதலாவதாகப் போனார்கள்; அவர்களைப் பின்தொடர்ந்துதான் மற்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் போனார்கள். (எண். 10:14) சில வருஷங்களுக்குப் பிறகு, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் போர் செய்யப் போனார்கள். (நியா. 1:1, 2) யூதா கோத்திரத்தில் வந்த முதல் ராஜா தாவீது. அவருக்குப் பிறகு, அவருடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார்கள். அவர்கள் எல்லாருமே யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், யூதாவைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனம் இதோடு முடியவில்லை.

16. ஆதியாகமம் 49:10-ல் சொல்லி இருக்கிற தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (“ மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

16 மனிதர்களை என்றென்றும் ஆட்சி செய்யப்போகிற ஒரு ராஜா, யூதா வம்சத்தில் வருவார் என்று யாக்கோபு சொன்னார். (ஆதியாகமம் 49:10-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) அந்த ராஜா இயேசு கிறிஸ்து. அவரை ஷைலோ என்று யாக்கோபு சொன்னார். இயேசுவைப் பற்றி ஒரு தேவதூதர் இப்படிச் சொன்னார்: “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்.” (லூக். 1:32, 33) அதோடு, ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்றும் இயேசுவை பைபிள் விவரிக்கிறது.—வெளி. 5:5.

17. மற்றவர்களைப் பார்க்கிற விதத்தில் நாம் எப்படி யெகோவாவைப் போல் நடந்துகொள்ளலாம்?

17 நமக்கு என்ன பாடம்? யூதா, சில மோசமான தவறுகளைச் செய்திருந்தாலும் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். யூதாவின் சகோதரர்கள், ‘யெகோவா இவனிடம் என்ன நல்ல குணத்தைப் பார்த்து இவனை ஆசீர்வதித்திருக்கிறார்’ என்று யோசித்திருக்கலாம். அவர்கள் அப்படி யோசித்தார்களா என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும், யூதாவிடம் இருக்கிற நல்லதை யெகோவா பார்த்திருக்கிறார். அதனால்தான் அவரை ஆசீர்வதித்திருக்கிறார். நாம் எப்படி யெகோவாவைப் போல் நடந்துகொள்ளலாம்? ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ விசேஷ நியமிப்பு கிடைக்கும்போது, அவரிடம் இருக்கிற குறைகள் முதலில் நமக்குத் தெரியலாம். ‘இவருக்கா? இந்த நியமிப்பா?!’ என்று நாம் யோசிக்கலாம். ஆனால், யெகோவா அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்த்திருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவா எப்போதுமே தன்னுடைய ஊழியர்களிடம் இருக்கிற நல்லதை மட்டுமே பார்க்கிறார். நாமும் அவரைப் போலவே நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்ய வேண்டும், இல்லையா?

18. நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்?

18 யூதா கோத்திரத்திடமிருந்து கற்றுக்கொள்கிற இன்னொரு பாடம்: பொறுமையாக இருப்பது! யெகோவா அவருடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும், நாம் நினைத்த நேரத்திலோ நாம் நினைத்த விதத்திலோ அவர் அதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இதை யோசித்துப் பாருங்கள்: கடவுளுடைய மக்களை முன்னின்று வழிநடத்துகிற வாய்ப்பு யூதா கோத்திரத்துக்கு, எடுத்த உடனேயே கிடைத்துவிடவில்லை. இருந்தாலும், கடவுளுடைய மக்களை வழிநடத்துவதற்கு யெகோவா யாரையெல்லாம் நியமித்தாரோ அவர்களுக்கெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் முழு ஆதரவு கொடுத்தார்கள். லேவி கோத்திரத்தைச் சேர்ந்த மோசேயாக இருந்தாலும் சரி, எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த யோசுவாவாக இருந்தாலும் சரி, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சவுல் ராஜாவாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாருக்கும் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள். பாடம்? யெகோவா நம்மை வழிநடத்த இன்று யாரைத் தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு நாம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.—எபி. 6:12.

19. மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

19 மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில் இருந்து இதுவரைக்கும் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்? ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: “மனிதன் பார்ப்பதுபோல் [கடவுள்] பார்ப்பதில்லை.” (1 சா. 16:7) யெகோவா ரொம்ப பொறுமையாக இருக்கிறார், தாராளமாக மன்னிக்கிறார். ஒருவர் தவறு செய்யும்போது அதை யெகோவா கண்டும்காணாமல் இருப்பதில்லை. அதே சமயத்தில் அவரை வணங்குகிறவர்கள், எல்லாவற்றையும் நூறு சதவீதம் சரியாக செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது இல்லை. ஒருவர் மோசமான தவறு செய்திருந்தாலும், அவர் உண்மையிலேயே மனம் திருந்தி சரியானதைச் செய்யும்போது யெகோவா அவரை ஆசீர்வதிக்கிறார். அடுத்த கட்டுரையில், யாக்கோபு தன்னுடைய மற்ற எட்டு மகன்களுக்குச் சொன்ன வார்த்தைகளைப் பற்றிப் பார்ப்போம்.

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்