Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 26

பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்

அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!

அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!

“சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.”யோபு 37:23.

என்ன கற்றுக்கொள்வோம்?

நடக்கப்போகிற எல்லா விஷயங்களும் நமக்குத் தெரியாது. இருந்தாலும், நமக்குத் தெரிந்த விஷயங்களில் கவனம் வைக்கும்போதும், யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்கும்போதும் நம்மால் தொடர்ந்து சகித்திருக்க முடியும்.

1. யெகோவா நமக்கு என்ன திறமையைக் கொடுத்திருக்கிறார், ஏன்?

 யோசிக்கும் திறமையோடு யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். அதோடு, அறிவை எடுத்துக்கொள்ளும் திறமையையும், புரிந்துகொள்ளும் திறமையையும், ஞானமான முடிவுகள் எடுக்கும் திறமையையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நம்மை ஏன் இப்படிப் படைத்திருக்கிறார்? ஏனென்றால், நாம் ‘கடவுளைப் பற்றிய அறிவை கண்டடைய’ வேண்டும் என்றும், யோசிக்கிற திறமையைப் பயன்படுத்தி அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார்.—நீதி. 2:1-5; ரோ. 12:1.

2. (அ) நம்மைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்? (யோபு 37:23, 24) (படத்தையும் பாருங்கள்.) (ஆ) நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

2 புதிது புதிதாகக் கற்றுக்கொள்கிற திறமையோடு யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். அதனால் நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், நமக்குத் தெரியாத விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. (யோபு 37:23, 24-ஐ வாசியுங்கள்.) யோபுவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். யெகோவா அவரிடம் அடுக்கடுக்காக நிறைய கேள்விகளைக் கேட்டார். அப்போதுதான், தனக்குத் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்பதை யோபு புரிந்துகொண்டார். அதோடு, மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் என்பதையும், யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். (யோபு 42:3-6) யோபுவைப் போலவே நாமும், நமக்கு எல்லா விஷயங்களும் தெரியாது என்பதை அடக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நமக்கு நல்லது. ஏனென்றால், அப்போதுதான் நாம் யெகோவாவை முழுமையாக நம்புவோம். நல்ல முடிவுகளை எடுக்க நமக்கு என்ன தகவல்கள் தேவையோ அதை யெகோவா நிச்சயம் சொல்வார் என்றும் நம்புவோம்.—நீதி. 2:6.

நமக்குச் சில விஷயங்கள் தெரியாது என்று ஏற்றுக்கொள்வது நல்லது. யோபு அதைத்தான் செய்தார்! (பாரா 2)


3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில், நமக்குத் தெரியாத சில விஷயங்களைப் பற்றியும், அதனால் வருகிற சவால்களைப் பற்றியும் பார்ப்போம். அதோடு, சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஏன் நல்லது என்பதைப் பற்றியும் பார்ப்போம். ‘எல்லாம் தெரிந்தவராக’ இருக்கிற யெகோவா, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை நமக்குச் சொல்லிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இவை உதவும்.—யோபு 37:16.

முடிவு எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது

4. மத்தேயு 24:36 சொல்கிற மாதிரி நமக்கு என்ன தெரியாது?

4 மத்தேயு 24:36-ஐ வாசியுங்கள். இந்த உலகத்துக்கு எப்போது முடிவு வரும் என்று நமக்குத் தெரியாது. பூமியில் இருந்தபோது இயேசுவுக்கும் “அந்த நாளும் அந்த நேரமும்” தெரியவில்லை. a நேரம் தவறாதவராக இருக்கிற யெகோவா, சில விஷயங்களைத் தன்னுடைய ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கிறார் என்று அப்போஸ்தலர்களிடம் இயேசு ஒருசமயம் சொன்னார். (அப். 1:6, 7) இந்த உலகத்துக்கு எப்போது முடிவைக் கொண்டுவர வேண்டும் என்பதை யெகோவா தீர்மானித்து வைத்திருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த விஷயத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது.

5. இந்த உலகத்துக்கு எப்போது முடிவு வரும் என்று நமக்குத் தெரியாததால் நாம் எப்படி ஆகிவிடலாம்?

5 இந்த உலகத்தின் முடிவுக்காக இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அது தெரியாததால், நாம் ஒருவேளை பொறுமை இழந்துவிடலாம் அல்லது சோர்ந்துவிடலாம். அதுவும், அந்த நாளுக்காக ரொம்ப காலமாகக் காத்துக்கொண்டிருந்தால் உண்மையிலேயே அது நமக்குச் சவாலாக இருக்கலாம். குடும்பத்தில் இருக்கிறவர்களோ மற்றவர்களோ நம்மைக் கேலி கிண்டல் செய்தால், சகித்திருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். (2 பே. 3:3, 4) இந்தச் சூழ்நிலையில், நாம் இப்படி யோசிக்க ஆரம்பித்துவிடலாம்: ‘இந்த உலகத்துக்கு முடிவு வருகிற தேதி மட்டும் தெரிந்தால், பொறுமையாக இருப்பதும் கேலி கிண்டலை சகித்துக்கொள்வதும் இன்னும் சுலபமாக இருக்குமே!’

6. எப்போது முடிவு வரும் என்று நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன் நல்லது?

6 இந்த உலகத்துக்கு எப்போது முடிவு வரும் என்று சொல்லாததன் மூலம், யெகோவா நமக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அதாவது, அவர்மேல் அன்பு இருப்பதால்தான் அவருக்குச் சேவை செய்கிறோம் என்பதையும் அவரை நம்புகிறோம் என்பதையும் காட்டுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த உலகத்துக்கு முடிவு வரும்வரை மட்டுமல்ல, என்றென்றும் நாம் அவருக்குச் சேவை செய்யப்போகிறோம். அப்படியிருக்கும்போது, ‘யெகோவாவின் நாள்’ எப்போது வரும் என்பதிலேயே ஏன் குறியாக இருக்க வேண்டும்?! அதனால், முடிவு வரும் தேதியைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, முடிவுக்குப் பிறகு என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை யோசிக்கலாம். அப்படிச் செய்யும்போது, நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போவோம். அவருக்குப் பிடித்த மாதிரி நடக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.—2 பே. 3:11, 12.

7. நமக்கு என்ன தெரியும்?

7 நமக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். 1914-ல் கடைசி நாட்கள் ஆரம்பித்துவிட்டது என்பது நமக்குத் தெரியும். அதை நாம் புரிந்துகொள்ள நிறைய தீர்க்கதரிசனங்களை யெகோவா கொடுத்திருக்கிறார். அந்தச் சமயத்திலிருந்து உலக நிலைமைகள் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் யெகோவா சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, “யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது” என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. (செப். 1:14) நமக்குத் தெரிந்த மற்றொரு விஷயத்தைப் பார்க்கலாம். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தியை,’ நிறைய பேருக்கு நாம் சொல்ல வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். (மத். 24:14) இந்த வேலை இன்றைக்கு எப்படி நடக்கிறது? கிட்டத்தட்ட 240 நாடுகளில் 1000-க்கும் அதிகமான மொழிகளில் நல்ல செய்தியை நாம் சொல்லி வருகிறோம். கடவுள் கொடுத்த வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்வதற்கு “அந்த நாளும் அந்த நேரமும்” நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

யெகோவா எப்படிச் செயல்படுவார் என்று நமக்குத் தெரியாது

8. யெகோவா செயல்படுகிற விதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? விளக்குங்கள். (பிரசங்கி 11:5)

8 “உண்மைக் கடவுள் எப்படிச் செயல்படுகிறார்” என்று எல்லா சமயத்திலும் நமக்குத் தெரியாது. (பிரசங்கி 11:5-ஐ வாசியுங்கள்.) அதாவது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா என்னவெல்லாம் செய்கிறார் அல்லது எதையெல்லாம் அனுமதிக்கிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. நமக்கு உதவ யெகோவா எப்படிச் செயல்படுவார் என்பதையும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. (சங். 37:5) தாயின் வயிற்றில் ஒரு குழந்தை எப்படி வளருகிறது என்பதை விஞ்ஞானிகளால்கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாததுபோல், யெகோவா எப்படிச் செயல்படுகிறார் என்பதை நம்மாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

9. யெகோவா எப்படிச் செயல்படுவார் என்பது தெரியாததால் நாம் எப்படியெல்லாம் உணரலாம்?

9 யெகோவா நமக்காக எப்படிச் செயல்படுவார் என்று தெரியாததால் சில விஷயங்களைச் செய்ய நாம் தயங்கலாம். ஒருவேளை, ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்குத் தியாகங்களைச் செய்ய நாம் தயங்கலாம். உதாரணத்துக்கு, வாழ்க்கையை எளிமையாக ஆக்குவதற்கோ தேவை அதிகம் இருக்கிற ஒரு இடத்துக்கு குடிமாறி போவதற்கோ நாம் தயங்கலாம். சில சமயங்களில், யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்கு உண்மையிலேயே இருக்கிறதா என்றுகூட நாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். ஒருவேளை, ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் போகும்போது... கடினமாக உழைத்தும் ஊழியத்தில் பலன்கள் கிடைக்காமல் போகும்போது... அமைப்பு கொடுத்திருக்கிற ஒரு வேலையைச் செய்வதில் தடைகள் வரும்போது... நமக்கு அப்படிப்பட்ட சந்தேகம் வரலாம்.

10. யெகோவா எப்படிச் செயல்படுவார் என்று தெரியாமல் இருப்பது என்ன குணங்களை இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள உதவுகிறது?

10 யெகோவா எப்படிச் செயல்படுவார் என்று நமக்குத் தெரியாதது ஒரு விதத்தில் நல்லதுதான். மனத்தாழ்மை, அடக்கம் போன்ற முக்கியமான குணங்களை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறது. யெகோவாவின் யோசனைகளும் வழிகளும் நம்முடையதைவிட உயர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. (ஏசா. 55:8, 9) அதோடு, யெகோவாவையே முழுமையாக நம்பியிருக்கவும், வெற்றிக்காக அவரையே சார்ந்திருக்கவும் கற்றுக்கொள்வோம். ஊழியத்திலோ மற்ற நியமிப்பிலோ நல்ல பலன்கள் கிடைத்தால் எப்போதும் அவருக்கே புகழ் சேர்ப்போம். (சங். 127:1; 1 கொ. 3:7) ஒருவேளை, நாம் நினைத்த மாதிரி விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், எல்லாம் யெகோவாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று முழு நம்பிக்கையோடு இருப்போம். (ஏசா. 26:12) நாம் செய்ய வேண்டியதைச் செய்த பிறகு, மிச்சத்தை யெகோவா பார்த்துகொள்வார் என்று தொடர்ந்து நம்பிக்கையோடு இருப்போம். பைபிள் காலங்களில் இருந்தவர்களை யெகோவா அற்புதமாகக் காப்பாற்றியது போல இன்று செய்வதில்லை என்றாலும், நமக்குத் தேவையான வழிநடத்துதலை நிச்சயம் கொடுப்பார் என்று உறுதியோடு இருப்போம்.—அப். 16:6-10.

11. என்னென்ன முக்கியமான விஷயங்கள் நமக்குத் தெரியும்?

11 யெகோவா அன்பானவர், நீதியானவர், ஞானமானவர் என்றெல்லாம் நமக்குத் தெரியும். அவருக்காகவும் சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் செய்வதை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும். அவருக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு எப்போதுமே அவர் பலன் கொடுப்பார் என்பதும் நமக்குத் தெரியும்.—எபி. 11:6.

நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது

12. யாக்கோபு 4:13, 14 சொல்கிற மாதிரி நமக்கு என்ன தெரியாது?

12 யாக்கோபு 4:13, 14-ஐ வாசியுங்கள். ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், நாளைக்கு என்ன நடக்கும் என்பதே நமக்குத் தெரியாது. இந்த உலகத்தில், “எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத சம்பவங்கள்” எல்லாருக்குமே நடக்கின்றன. (பிர. 9:11) அதனால், நம் திட்டங்கள் எல்லாமே நடக்குமா என்று நமக்குத் தெரியாது, அப்படியே நடந்தாலும் அவற்றைப் பார்க்க நாம் உயிரோடு இருப்போமா என்று தெரியாது.

13. நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பது நம்மை எப்படிப் பாதிக்கிறது?

13 நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பது நமக்கு ஒரு சவாலாக இருக்கலாம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? என்ன நடக்குமோ... ஏது நடக்குமோ... என்று யோசித்து யோசித்து இன்று இருக்கிற சந்தோஷத்தை நாம் இழந்துவிடலாம். திடீரென்று நடக்கிற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையைச் சோகமயமாக ஆக்கிவிடலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது நாம் சோர்ந்துவிடலாம்.—நீதி. 13:12.

14. உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது? (படங்களையும் பாருங்கள்.)

14 யெகோவாமேல் இருக்கிற அன்பால் அவருக்குச் சேவை செய்கிறோமே தவிர, சுயநலத்துக்காக அல்ல. இதைத்தான் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளும்போது நாம் நிரூபிக்கிறோம். பைபிள் காட்டுவதுபோல், எல்லா கஷ்டங்களிலிருந்தும் யெகோவா நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயத்தில், நமக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை யெகோவா நம் தலையில் எழுதி வைக்கவும் இல்லை. வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று யெகோவாவுக்குத் தெரியும். ஏனென்றால், உண்மையான சந்தோஷம் அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதில்தான் இருக்கிறது. (எரே. 10:23) அவரையே நம்பி ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும்போது, “யெகோவாவுக்கு விருப்பமானால், நாங்கள் உயிரோடிருப்போம், இதை இதைச் செய்வோம்” என்று சொல்வதுபோல் இருக்கும்.—யாக். 4:15.

வழிநடத்துதலுக்காக யெகோவாவைத் தேடுவதும், அவருக்குக் கீழ்ப்படிவதும் நமக்குப் பாதுகாப்பு (பாராக்கள் 14-15) b


15. எதிர்காலத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

15 நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையை யெகோவா கொடுக்கப்போகிறார் என்பது நமக்குத் தெரியும். அது பரலோகத்திலோ பூமியிலோ இருக்கலாம். யெகோவாவால் பொய் சொல்ல முடியாது என்று நமக்குத் தெரியும். கொடுத்த வாக்கை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்றும், அதை யாராலுமே தடுக்க முடியாது என்றும் நமக்குத் தெரியும். (தீத். 1:3) யெகோவாவால் மட்டுமே ‘நடக்கப்போகும் விஷயங்களை . . . ஆரம்பத்திலிருந்தே சொல்ல’ முடியும்; ‘அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்ல’ முடியும். அவர் சொன்னது பைபிள் காலங்களிலும் நடந்திருக்கிறது, எதிர்காலத்திலும் நடக்கும். (ஏசா. 46:10) யெகோவாவின் அன்பு நமக்குக் கிடைப்பதை யாராலும் எவற்றாலும் தடுக்க முடியாது. (ரோ. 8:35-39) நமக்கு வருகிற கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள பலத்தையும் ஞானத்தையும் யெகோவா கொடுப்பார்; நம்மை ஆறுதல்படுத்துவார். அவர் நமக்கு உதவுவார், நம்மை ஆசீர்வதிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!—எரே. 17:7, 8.

நம்மை யெகோவா எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது

16. சங்கீதம் 139:1-6 காட்டுவதுபோல், நம்மைப் பற்றி யெகோவாவுக்கு என்ன தெரியும், இதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

16 சங்கீதம் 139:1-6-ஐ வாசியுங்கள். நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம்மை உருவாக்கியவருக்குத் தெரியும். நம் உடல் அமைப்பு, உணர்ச்சிகள், மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். நாம் என்ன சொல்கிறோம்... என்ன சொல்ல நினைக்கிறோம்... என்ன செய்கிறோம்... ஏன் அப்படிச் செய்கிறோம்... எல்லாமே அவருக்குத் தெரியும். யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பும் அக்கறையும் என்றும் மாறாது. தாவீது ராஜா சொன்ன வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், யெகோவா நம்மைச் சூழ்ந்து நிற்கிறார்; நம்மைக் கவனித்துக்கொள்கிறார்; நமக்கு உதவ எப்போதுமே தயாராக இருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்துக்கே பேரரசராக இருக்கிறவர்... வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ளவர்... நம் ஒவ்வொருவரையும் அணு அணுவாகத் தெரிந்து வைத்திருப்பதை யோசிக்கும்போதே புல்லரிக்கிறது, இல்லையா? இதை “நினைத்தால் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. [இதெல்லாம்] என் புத்திக்கு எட்டாதது!” என்று சொன்ன தாவீது மாதிரியே நாமும் உணருகிறோம், இல்லையா?—சங். 139:6, அடிக்குறிப்பு.

17. யெகோவாவுக்கு நம்மை நன்றாகத் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்வது சிலநேரம் நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

17 சிலருக்கு, யெகோவாவை ஒரு அன்பான அப்பாவாக அல்லது தங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிற ஒருவராகப் பார்ப்பது கஷ்டமாக இருக்கலாம். ஏன்? ஒருவேளை அவர்களுடைய குடும்பமோ, வளர்ந்த விதமோ, கலாச்சாரமோ, முன்பு இருந்த நம்பிக்கையோ அதற்குக் காரணமாக இருக்கலாம். வேறு சிலருக்கு, முன்பு செய்த பாவங்கள் காரணமாக இருக்கலாம். பெரிய பாவத்தைச் செய்திருப்பதால் யெகோவா தங்களைக் கண்டுகொள்ளவே மாட்டார் என்றும் தங்களை விட்டு தூரமாகத்தான் இருப்பார் என்றும் அவர்கள் நினைக்கலாம். தாவீதுக்குக்கூட சிலசமயம் இந்த மாதிரி எண்ணம் வந்திருக்கிறது. (சங். 38:18, 21) சிலர், கடவுளுக்குப் பிடித்த மாதிரி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்காகக் கடினமாக முயற்சி செய்துகொண்டிருக்கலாம். அவர்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘என் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்கிறது. கடவுள் என்னைப் புரிந்துகொள்கிறார் என்றால், அவர் என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம், இல்லையா?’

18. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததைவிட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்பதைப் புரிந்திருப்பது நமக்கு எப்படி உதவும்? (படங்களையும் பாருங்கள்.)

18 நம்மைப் பற்றி நம்மைவிட யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற நல்லது, நமக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது யெகோவாவுக்குத் தெரியும். நம்மிடம் இருக்கிற குறைகள்கூட அவருக்குத் தெரியும்; ஆனாலும், அவர் நாம் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் புரிந்துகொள்கிறார். ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார். (ரோ. 7:15) நம்மால் எப்படிப்பட்டவர்களாக மாற முடியும் என்பதையும் யெகோவா பார்க்கிறார். இதைப் புரிந்துகொள்வது, அவருக்கு உண்மையாகச் சேவை செய்யவும் சந்தோஷமாகச் சேவை செய்யவும் பலத்தைக் கொடுக்கிறது.

எதிர்கால வாக்குறுதிகளின் மேல் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதன் மூலம் இன்று நமக்கு வரும் சவால்களைச் சந்திக்க யெகோவா உதவுகிறார் (பாராக்கள் 18-19) c


19. யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன விஷயம் நன்றாகத் தெரியும்?

19 யெகோவா அன்பாகவே இருக்கிறார் என்று நமக்குத் தெரியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (1 யோ. 4:8) நாம் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் அவர் எப்போதுமே ஆசைப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். அதனால்தான், நாம் வாழ்வதற்குத் தேவையான சட்டதிட்டங்களை அவர் கொடுத்திருக்கிறார் என்றும் நமக்குத் தெரியும். நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுவதும் நமக்குத் தெரியும். அதற்காகத்தான் அவர் மீட்புவிலையைக் கொடுத்திருக்கிறார். நம்மிடம் குறைகள் இருந்தாலும், நம்மால் யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மீட்புவிலை கொடுக்கிறது. (ரோ. 7:24, 25) ‘கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்’ என்பது நமக்குத் தெரியும். (1 யோ. 3:19, 20) நம்மைப் பற்றி எல்லாமே யெகோவாவுக்குத் தெரியும்; அதனால், நம்மால் அவருடைய விருப்பத்தைச் செய்ய முடியும் என்று அவர் நம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்.

20. எதைப் புரிந்துகொண்டால் தேவையில்லாத கவலைகளை நாம் தவிர்ப்போம்?

20 நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை யெகோவா நம்மிடம் சொல்லாமல் இருக்க மாட்டார். இந்த உண்மையை நாம் அடக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டால், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்து தேவையில்லாமல் கவலைப்பட மாட்டோம். அதற்குப் பதிலாக, முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவோம். இப்படி நாம் நடந்துகொள்ளும்போது ‘எல்லாம் தெரிந்தவராக’ இருக்கிற யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுவோம். (யோபு 36:4) இன்று நமக்கு சில விஷயங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால், பூஞ்சோலையில் புதிது புதிதாக நிறைய விஷயங்களை நாம் யெகோவாவிடம் இருந்து கற்றுக்கொண்டே இருப்போம். அதுமட்டுமல்ல, நம்முடைய மகத்தான கடவுளான அவரைப் பற்றியும் நாம் கற்றுக்கொண்டே இருப்போம்.—பிர. 3:11.

பாட்டு 104 கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு

a சாத்தானுடைய உலகத்துக்கு எதிரான போரில், இயேசுதான் முன்னின்று செயல்படப்போகிறார். அதனால், அர்மகெதோன் எப்போது வரும் என்ற தேதியும், அவர் எப்போது ‘ஜெயித்து முடிப்பார்’ என்ற விஷயமும் இப்போது இயேசுவுக்குத் தெரிந்திருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.—வெளி. 6:2; 19:11-16.

b படவிளக்கங்கள்: அவசர நிலை ஏற்பட்டால், உடனடியாக எடுத்துக்கொண்டு போகும் விதத்தில் ஒரு பையை (go-bag) ஒரு அப்பாவும் மகனும் தயார்படுத்துகிறார்கள். தேவையான பொருள்களை அதில் எடுத்துவைக்கிறார்கள்.

c படவிளக்கம்: கஷ்டத்தில் இருக்கும் ஒரு சகோதரர் புதிய உலகத்தில் கிடைக்கப்போகிற சந்தோஷங்களை யோசித்துப் பார்க்கிறார்.