பிரச்சினையைச் சரிசெய்துகொண்டு சமாதானமாக இருப்பீர்களா?
தன்னை வணங்குகிறவர்கள் சமாதானமாக இருக்க வேண்டும் என்றும், அது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய பாகமாக இருக்க வேண்டும் என்றும் யெகோவா விரும்புகிறார். நாம் ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக இருக்கும்போது, கிறிஸ்தவ சபையிலும் சமாதானம் இருக்கும். அப்போது, நிறைய மக்கள் சபைக்கு வர ஆசைப்படுவார்கள்.
உதாரணத்துக்கு, மடகாஸ்கரில் பில்லிசூனியம் செய்கிற ஒருவர் யெகோவாவின் மக்கள் மத்தியில் இருந்த சமாதானத்தைப் பார்த்து, ‘நான் என்னைக்காவது ஒரு மதத்துல சேரணும்னு ஆசைப்பட்டா, இந்த மதத்துலதான் சேருவேன்’ என்று சொன்னார். காலப்போக்கில், பேய்களை வணங்குவதை அவர் நிறுத்தினார். தன் திருமண வாழ்க்கையிலும் மாற்றங்கள் செய்தார், சமாதானத்தின் கடவுளான யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்.
இவரைப் போலவே, ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான பேர் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக ஆகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற சமாதானமும் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனாலும், “பயங்கர பொறாமையும் பகையும்” சபையில் இருக்கும் நட்பை முறித்துவிடும், பிரச்சினைகளையும் உண்டாக்கும் என்று நாம் பைபிளில் வாசிக்கிறோம். (யாக். 3:14-16) ஆனால், இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கவும், சகோதர சகோதரிகள் இன்னும் சமாதானமாக இருக்கவும் பைபிள் நிறைய ஆலோசனைகளைத் தருகிறது. இந்த ஆலோசனைகள் சிலருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
பிரச்சினைகளும் தீர்வுகளும்
“என்கூட வேலை செய்ற சகோதரரோட எனக்கு பிரச்சினை வந்துக்கிட்டே இருந்துச்சு. ஒரு சமயம், நாங்க கோபமா கத்திக்கிட்டு இருந்தப்போ, ரெண்டு பேர் உள்ள வந்துட்டாங்க. நாங்க காரசாரமா வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்ததை அவங்க பார்த்துட்டாங்க.”—க்றிஸ்.
“என்கூட ஊழியம் செஞ்சுக்கிட்டு இருந்த சகோதரி திடீர்னு என்கூட ஊழியத்துக்கு வர்றத நிறுத்திட்டாங்க. அப்புறம், என்கூட பேசுறதையும் சுத்தமா நிறுத்திட்டாங்க. அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கனு எனக்கு தெரியவே இல்ல.”—ஜேனட்.
“ஒரு சமயம் நாங்க மூணு பேரும் கான்ஃபரன்ஸ் கால்ல பேசிக்கிட்டு இருந்தோம். அதுல ஒருத்தர் ‘குட்-பை’ சொன்னார். அவரு ஃபோன வெச்சுட்டார்னு நினைச்சு, ஃபோன்ல இருந்த இன்னொருத்தர்கிட்ட அவரை பத்தி தப்பு தப்பா பேசிட்டேன். ஆனா, அவர் ஃபோன வைக்கல.”—மைக்கேல்.
“எங்க சபையில, ரெண்டு பயனியர் சகோதரிகளுக்குள்ள பிரச்சினை வர ஆரம்பிச்சது. ஒரு சகோதரி இன்னொரு சகோதரிய திட்டுனாங்க. அவங்க அப்படி சண்ட போட்டுக்கிட்டத பார்த்தது மத்தவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.”—கேரி.
மேலோட்டமாகப் பார்த்தால், இவை ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியாது. ஆனால், இந்தச் சம்பவங்கள் அவர்களுடைய மனதில் தீராத வேதனையை உண்டாக்கியிருக்கலாம். சபையின் சமாதானத்தையும் கெடுத்திருக்கலாம். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்தச் சகோதர சகோதரிகள் பைபிளிலுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி, மறுபடியும் சமாதானமானார்கள். பைபிளிலுள்ள எந்த ஆலோசனைகள் அவர்களுக்கு உதவியது?
“வழியில் சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள்.” (ஆதி. 45:24) தன் சகோதரர்கள் தங்கள் அப்பாவிடம் திரும்பிப் போனபோது, யோசேப்பு கொடுத்த ஆலோசனைதான் இது! ஒருவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் போனாலும், சீக்கிரத்தில் கோபப்பட்டாலும், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கும் கோபம் வரலாம். மனத்தாழ்மையாக இருப்பதும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதும், சில சமயங்களில் தனக்குக் கஷ்டமாக இருந்ததாக க்றிஸ் உணர்ந்தார். தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதால், தான் வாக்குவாதம் செய்த சகோதரரிடம் போய் மன்னிப்பு கேட்டார். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கடினமாக முயற்சி செய்தார். தன்னை மாற்றிக்கொள்ள க்றிஸ் முயற்சி செய்ததைப் பார்த்து அந்தச் சகோதரரும் மாற்றங்கள் செய்தார். இப்போது, அவர்கள் இரண்டு பேரும் சமாதானமாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்.
“கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்.” (நீதி. 15:22) தன் தோழி தன்னோடு பேசுவதை நிறுத்தியபோது, இந்த பைபிள் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று ஜேனட் முடிவு செய்தார். அதனால், அவரிடம் பேசுவதற்காகப் போனார். ‘உங்க மனச கஷ்டப்படுத்துற மாதிரி நான் ஏதாவது செஞ்சுட்டேனா’ என்று கேட்டார். ஆரம்பத்தில், அவர்களுக்குக் கலக்கமாகத்தான் இருந்தது. ஆனால், அவர்களுடைய பிரச்சினையைப் பற்றி அவர்கள் அமைதியாகப் பேசியதால் நிலைமை மாறியது. முன்பு நடந்த ஏதோவொரு விஷயத்தை தான் தவறாகப் புரிந்துகொண்டதாக அந்தச் சகோதரி உணர்ந்தார். அவரைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் ஜேனட் எதுவும் செய்யவில்லை என்பதையும் புரிந்துகொண்டார். அதனால், அவர் ஜேனட்டிடம் மன்னிப்பு கேட்டார். இப்போது இவர்கள் இரண்டு பேரும் சமாதானமாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்.
“அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத். 5:23, 24) தன் மலைப்பிரசங்கத்தில் இயேசு கொடுத்த ஆலோசனைதான் இது! அந்தச் சகோதரரைப் பற்றி தவறாகப் பேசியதை நினைத்து மைக்கேலுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையைச் சரி செய்தே ஆக வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். பிறகு, அவரிடம் போய் தாழ்மையோடு மன்னிப்பு கேட்டார். அதனால் என்ன நடந்தது? “என் சகோதரர் என்னை உண்மையா மன்னிச்சுட்டார்” என்று மைக்கேல் சொல்கிறார். அவர்கள் இரண்டு பேரும் மறுபடியும் நண்பர்களாக ஆனார்கள்.
“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.” (கொலோ. 3:12-14) சண்டை போட்டுக்கொண்ட அந்த இரண்டு பயனியர்களுக்கு ஒரு மூப்பர் அன்போடு உதவினார். மற்றவர்களைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் அவர்கள் நடந்துகொண்டதை அவர்களுக்கு அன்பாகப் புரிய வைத்தார். ஒருவருக்கு ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் சபையின் சமாதானத்தைக் காத்துக்கொள்ள உதவ வேண்டும் என்றும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அவர்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, அதைப் பின்பற்றினார்கள். இப்போது, அவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக ஊழியம் செய்கிறார்கள்.
உங்களைக் கஷ்டப்படுத்தியவரை மன்னிக்கவும், மனத்தாழ்மையாக இருக்கவும், அந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் யோசிக்காமல் இருக்கவும் கொலோசெயர் 3:12-14-ல் இருக்கிற ஆலோசனை உங்களுக்கு உதவும். ஆனால், மன்னிக்க முயற்சி செய்தும் நம்மால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? மத்தேயு 18:15-ல் இருக்கிற பைபிள் நியமம் நமக்கு உதவும். ஒருவர் இன்னொருவருக்கு எதிராக மோசமான பாவம் செய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இயேசு அங்கே சொல்கிறார். இருந்தாலும், அதிலிருக்கிற நியமம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ நமக்குப் பிரச்சினை இருந்தால், அவரிடம் போய் அதைப் பற்றி அன்பாகப் பேசி அதைச் சரி செய்ய வேண்டும்.
பைபிளில் நடைமுறையான ஆலோசனைகள் நிறைய இருக்கின்றன. அவை பெரும்பாலும் கடவுளுடைய சக்தியைச் சார்ந்திருப்பதைப் பற்றித்தான் சொல்கின்றன. அப்படிச் சார்ந்திருக்கும்போது, ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களான அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு’ ஆகியவற்றை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். (கலா. 5:22, 23) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு இயந்திரத்தின் பாகங்களுக்கு எண்ணெய் போட்டால், அது நன்றாக இயங்கும். அதே போல, யெகோவாவிடமிருந்து வரும் இந்தக் குணங்கள் நம்மிடம் இருந்தால், மற்றவர்களோடு நல்ல பந்தத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
வித்தியாசமான சுபாவங்கள் சபைக்குப் பிரயோஜனமாக இருக்கும்
நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுபாவங்களும் குணங்களும் இருக்கின்றன. ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதும், நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படுகிறது. இவை நல்ல நட்பை அனுபவிக்க உதவியாக இருக்கும். அதே சமயத்தில், இவை மனஸ்தாபத்தையும் கருத்து வேறுபாட்டையும் உண்டாக்கலாம். அனுபவமுள்ள ஒரு மூப்பர் இப்படிச் சொன்னார்: “கூச்ச சுபாவம் இருக்கிறவருக்கு எப்பவும் கலகலனு, உற்சாகமா இருக்கிறவரோட ஒத்துப்போறது ரொம்ப கஷ்டமா இருக்கலாம். இது ஒரு சின்ன விஷயமா தெரிஞ்சாலும், இதனால பெரிய பெரிய பிரச்சினைகூட வரலாம்.” வித்தியாசமான சுபாவங்கள் இருப்பவர்களால் நல்ல நட்பை வளர்த்துக்கொள்ளவே முடியாது என்று நினைக்கிறீர்களா? அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் யோவானுடைய உதாரணத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். பேதுரு எப்போதும் தன் மனதில் இருப்பதைப் பட்டென்று சொல்லிவிடுவார். ஆனால், யோவான் அன்பானவர்; எதையும் யோசித்துதான் பேசுவார், செய்வார். பேதுருவுக்கும் யோவானுக்கும் வித்தியாசமான சுபாவங்கள் இருந்தாலும், அவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள். (அப். 8:14; கலா. 2:9) வித்தியாசமான சுபாவங்கள் இருக்கிற கிறிஸ்தவர்களால் இன்றும் ஒன்று சேர்ந்து சேவை செய்ய முடியும்.
உங்கள் சபையில் இருக்கிற ஒரு சகோதரர் உங்களைக் கோபப்படுத்தும் விதத்தில் எதையாவது சொன்னாலோ செய்தாலோ நீங்கள் என்ன செய்யலாம்? கிறிஸ்து உங்களுக்காக இறந்தது போல அவருக்காகவும் யோவா. 13:34, 35; ரோ. 5:6-8) அவரோடு நட்பு வைத்துக்கொள்ள முடியாது என்றோ அவரை தவிர்த்துவிடலாம் என்றோ முடிவு செய்வது சரியல்ல! அதற்குப் பதிலாக, உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட சகோதரர் யெகோவாவோட சட்டத்துக்கு விரோதமா ஏதாவது செய்றாரா? வேணும்னே அவர் என்னை கஷ்டப்படுத்துறாரா? இல்லன்னா, சுபாவத்துல மட்டும்தான் எங்களுக்குள்ள வித்தியாசம் இருக்கா? அவர்கிட்ட இருக்கிற எந்த நல்ல குணத்தை நானும் வளர்த்துக்கலாம்?’
இறந்தார் என்பதையும், நீங்கள் அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார் என்பதையும் நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும். (உதாரணத்துக்கு, நீங்கள் அமைதியானவர் என்றும் அவர் கலகலவென்று பேசுபவர் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியென்றால், நீங்கள் ஏன் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்யக் கூடாது, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? உங்களைவிட அவர் தாராள குணமுள்ளவரா? வயதானவர்களுக்கும், கஷ்டப்படுகிறவர்களுக்கும், வியாதியில் இருப்பவர்களுக்கும் கொடுப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இன்னும் தாராள குணத்தைக் காட்டுவது எப்படி என்று அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? உங்களுக்கும் இன்னொரு சகோதரருக்கும் வித்தியாசமான குணங்கள் இருந்தாலும், அவரிடம் இருக்கும் நல்ல குணங்களை உங்களால் பார்க்க முடியும். ஒருவேளை, நீங்கள் இரண்டு பேரும் சிறந்த நண்பர்களாக ஆக முடியவில்லை என்றாலும், நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்க முடியும். இப்படிச் செய்யும்போது, நீங்கள் இரண்டு பேரும் சமாதானமாக இருப்பீர்கள், சபையும் சமாதானமாக இருக்கும்.
முதல் நூற்றாண்டில் இருந்த எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் வித்தியாசமான சுபாவங்கள் இருந்தன. இருந்தாலும், “எஜமானுடைய சேவையில் ஒரே மனதோடு இருக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். (பிலி. 4:2) நாமும் நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும் என்றும், சபையின் சமாதானத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம், இல்லையா?
பிரச்சினைகளை உடனடியாகச் சரி செய்யுங்கள்
பிரச்சினைகளை உடனடியாகச் சரி செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு அழகான பூந்தோட்டத்தில் களைகள் அதிகமாக வளர ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை உடனடியாகப் பிடுங்கி எறியவில்லை என்றால், அவை தோட்டம்
முழுவதும் பரவிவிடும். அதே போல, மற்றவர்களிடம் இருக்கிற பிரச்சினைகளை உடனடியாகச் சரி செய்யவில்லை என்றால், அது முழு சபையையும் பாதித்துவிடும். நம் சகோதர சகோதரிகளை நாம் நேசித்தால், சபையின் சமாதானத்தைக் காத்துக்கொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முயற்சி செய்வதால் கிடைக்கிற பலன்களைப் பார்த்து நாமே ஆச்சரியப்படுவோம். ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஒரு சகோதரி என்னை சின்ன பிள்ளை மாதிரி நடத்துனாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என் கோபம் அதிகமாயிட்டே போச்சு. அதனால, அவங்ககிட்ட சிடுசிடுனு நடந்துகிட்டேன். ‘அவங்கதான் எனக்கு மரியாதை தர்றது இல்லையே, அப்ப நான் மட்டும் ஏன் அவங்களுக்கு மரியாதை தரணும்’னு நினைச்சேன்.”
தன் மனப்பான்மையைப் பற்றி இந்தச் சகோதரி யோசிக்க ஆரம்பித்தார். “என்னோட குறைகள நான் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் யோசிக்கிற விதத்தை மாத்திக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். யெகோவாகிட்ட நல்லா ஜெபம் செஞ்சேன். அந்த சகோதரிக்கு ஒரு சின்ன பரிசு வாங்கிக்கிட்டு போனேன். நான் செஞ்ச தப்புக்காக மன்னிப்பு கேட்டு ஒரு கடிதமும் எழுதுனேன். நாங்க ரெண்டு பேரும் கட்டி பிடிச்சுக்கிட்டோம். நடந்ததை மறந்துடலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்கு அப்புறம், எங்களுக்குள்ள பிரச்சினை வந்ததே கிடையாது” என்று அவர் சொல்கிறார்.
நம் எல்லாருக்கும் சமாதானம் தேவை. ஆனால், பெருமையாக இருந்தாலோ, நம் பொறுப்புகள் பறிபோய் விடுமே என்று பயந்தாலோ மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியாது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு இவை சகஜமாக இருக்கலாம். ஆனால், தன்னை வணங்குகிறவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சமாதானமும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். அதனால்தான் கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதும்படி யெகோவா பவுலைத் தூண்டினார்: “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்; எப்போதும் மனத்தாழ்மையாகவும் சாந்தமாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.” (எபே. 4:1-3) யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கிற இந்த ‘சமாதானம்’ ரொம்ப உயர்வானது. அதனால், இன்னும் சமாதானமாக இருக்கவும், நமக்குள் இருக்கிற பிரச்சினைகளைச் சரி செய்யவும் நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும்!