யெகோவா நம்மை வடிவமைக்கிறார்
“யெகோவாவே, . . . நீங்கள்தான் எங்களுடைய குயவர். நாங்கள் எல்லாரும் உங்கள் கைகளால் உருவானவர்கள்.”—ஏசா. 64:8, NW.
பாடல்கள்: 89, 26
1. யெகோவாவை தலைசிறந்த குயவர் என்று ஏன் சொல்லலாம்?
நவம்பர் 2010-ல் லண்டனில் நடந்த ஒரு ஏலத்தில் பழமையான ஒரு சீன மண் ஜாடி கிட்டத்தட்ட 7 கோடி டாலருக்கு கேட்கப்பட்டது. ஒரு குயவன் சாதாரண களிமண்ணை வைத்து கண்ணை கவரும் அழகான ஜாடியை உருவாக்கியதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது! ஆனால், எந்தவொரு குயவனையும்விட யெகோவாதான் தலைசிறந்த குயவர். முதல் மனிதனான ஆதாமை அவர் ‘பூமியின் மண்ணினாலே (அதாவது, களிமண்ணினாலே) உருவாக்கினார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 2:7) அதுமட்டுமல்ல, தன்னுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டும் விதத்தில் ஆதாமை படைத்தார். அதனால்தான் ஆதாம் ‘கடவுளுடைய மகன்’ என்று அழைக்கப்பட்டார்.—லூக். 3:38.
2, 3. மனந்திரும்பிய இஸ்ரவேலர்களைப் போல் நாம் எப்படி யோசிக்கலாம்?
2 யெகோவாவுக்கு எதிராக ஆதாம் கலகம் செய்ததால் கடவுளுடைய மகனாக இருக்கும் பாக்கியத்தை இழந்தான். ஆனால், அவனுடைய சந்ததியில் வந்த நிறையப் பேர் யெகோவாவை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள். (எபி. 12:1) யெகோவாவுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிந்ததன் மூலம் சாத்தானை நிராகரித்துவிட்டு யெகோவாவை தங்களுடைய தகப்பனாகவும் குயவராகவும் ஏற்றுக்கொண்டார்கள். (யோவா. 8:44) அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததை பார்க்கும்போது, மனந்திரும்பிய இஸ்ரவேலர்கள் சொன்ன இந்த வார்த்தைகள் நம் ஞாபகத்துக்கு வருகிறது: “யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய தகப்பன். நாங்கள் களிமண்; நீங்கள்தான் எங்களுடைய குயவர். நாங்கள் எல்லாரும் உங்கள் கைகளால் உருவானவர்கள்.”—ஏசா. 64:8, NW.
3 இன்று யெகோவாவை வணங்கும் எல்லாரும் மனத்தாழ்மையாக இருக்கவும் அவருக்கு கீழ்ப்படியவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். யெகோவாவை ‘அப்பா’ என்று அழைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு குயவனைப் போல் யெகோவா அவர்களை வடிவமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால், ‘யெகோவாவின் கையில் நான் ஒரு மென்மையான களிமண்ணைப் போல் இருக்கிறேனா? யெகோவாவுக்கு பிடித்த மாதிரி என்னை வடிவமைக்க நான் அனுமதிக்கிறேனா? என்னுடைய சகோதர சகோதரிகளையும் யெகோவா தொடர்ந்து வடிவமைக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைக்கிறேனா?’ என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கு உதவும் மூன்று குறிப்புகளை இப்போது பார்க்கலாம். (1) எதை பார்த்து யெகோவா ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்? (2) அந்த நபரை ஏன் வடிவமைக்கிறார்? (3) எப்படி வடிவமைக்கிறார்?
யெகோவா எதை பார்த்து தேர்ந்தெடுக்கிறார்?
4. எதை பார்த்து யெகோவா ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்? உதாரணம் கொடுங்கள்.
4 மக்களை நாம் பார்ப்பது போல் யெகோவா பார்ப்பதில்லை. ஏனென்றால், யெகோவா அவர்களுடைய இருதயத்தைப் பார்க்கிறார். அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்கிறார். (1 சாமுவேல் 16:7ஆ வாசியுங்கள்.) இந்த விஷயத்தை புரிந்துகொள்ள கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்டவர்களை அவர் தேர்ந்தெடுத்தார் என்பதை கவனியுங்கள். மனிதர்களுடைய பார்வையில் மோசமானவர்களாக இருந்தவர்களை யெகோவா தேர்ந்தெடுத்தார். (யோவா. 6:44) அப்படிப்பட்ட ஒருவர்தான் பரிசேயனாக இருந்த சவுல். அவர் முன்பு ‘தெய்வநிந்தனை செய்கிறவராகவும், துன்புறுத்துகிறவராகவும், திமிர்பிடித்தவராகவும்’ இருந்தார். (1 தீ. 1:13) ஆனால் ‘இருதயங்களைச் சோதிக்கிறவரான’ யெகோவா சவுலின் மனதை பார்த்தார். (நீதி. 17:3) அவரை அழகாக வடிவமைக்க முடியும் என்பதை புரிந்துகொண்டார். அதனால், “புறதேசத்தாருக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும்” சாட்சியாக இருப்பதற்கு அவரை ஒரு கருவியாக யெகோவா தேர்ந்தெடுத்தார். (அப். 9:15) இதேபோல் யெகோவா நிறையப் பேரை தேர்ந்தெடுத்தார். முன்பு குடிகாரர்களாக, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களாக, திருடர்களாக இருந்தவர்களை எல்லாம் ‘கண்ணியமான காரியத்திற்கு பயன்படும் பாத்திரங்களாக’ வடிவமைத்தார். (ரோ. 9:21; 1 கொ. 6:9-11) அவர்கள் பைபிளை படித்து யெகோவாமீது இருந்த விசுவாசத்தை பலப்படுத்திக்கொண்டார்கள். அதோடு, யெகோவா தங்களை வடிவமைக்கவும் அனுமதித்தார்கள்.
5, 6. யெகோவா ஒருவரை சரியாக வடிவமைப்பார் என்ற நம்பிக்கை நமக்கு இருப்பதால் (அ) ஊழியத்தில் சந்திக்கும் மக்களை நாம் எப்படி பார்ப்போம்? (ஆ) நம் சகோதர சகோதரிகளை எப்படி பார்ப்போம்?
5 நல்மனமுள்ள ஆட்களைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்து தன்பக்கம் ஈர்க்கிறார் என்று நாம் நம்புகிறோம். அதனால், ஊழியத்தில் பார்க்கும் மக்களையும் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளையும் நாம் நியாயந்தீர்க்க கூடாது. இதற்கு மைக்கேலின் அனுபவத்தை கவனியுங்கள். “யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வந்தாலே ‘படார்’னு கதவை சாத்திடுவேன். அவங்ககிட்ட எப்போவும் சிடுசிடுனுதான் நடந்துக்குவேன். ஆனா ஒருசமயம் நான் ஒரு குடும்பத்தை பார்த்தேன். அவங்க எல்லாரும் அவ்ளோ அன்பா, மரியாதையா நடந்துகிட்டதை பார்த்து அசந்துபோயிட்டேன். கொஞ்ச நாளுக்கு அப்புறம்தான் அவங்க யெகோவாவின் சாட்சினு தெரிஞ்சுது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. மத்தவங்க சொன்னதை வைச்சுத்தான் இத்தனை நாளா நான் சாட்சிகளை பத்தி தப்பா நினைச்சிட்டு இருந்தேன்னு புரிஞ்சுகிட்டேன். நான் யோசிச்சது தப்புணும் புரிஞ்சுகிட்டேன். அப்புறம் என் மனசையே மாத்திகிட்டேன்” என்கிறார் மைக்கேல். அதன்பின் மைக்கேல் பைபிள் படிப்பு படித்தார். சீக்கிரமே ஞானஸ்நானம் எடுத்து இப்போது முழுநேர சேவை செய்கிறார்.
6 யெகோவாவை நம் குயவராக ஏற்றுக்கொள்ளும்போது நம் சகோதர சகோதரிகளை பார்க்கும் விதமே மாறிவிடும். யெகோவா அவர்களை வடிவமைத்துவிட்டார் என்று நாம் நினைக்க மாட்டோம். அதற்கு பதிலாக அவர்களை இன்னமும் வடிவமைத்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வோம். யெகோவா அவர்களுடைய இருதயத்தை பார்க்கிறார். அவர்களை வடிவமைத்தால் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று அவருக்கு தெரியும். அதனால் அவர்களிடம் இருக்கும் குறைகளை பார்ப்பதற்கு பதிலாக நிறைகளையே அவர் பார்க்கிறார். (சங். 130:3) நம் சகோதர சகோதரிகளை யெகோவா பார்க்கிற விதமாகவே நாமும் பார்க்க வேண்டும். அவர்கள் கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள யெகோவாவோடு சேர்ந்து நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும். (1 தெ. 5:14, 15) சபையில் இருக்கும் மூப்பர்கள் இந்த விஷயத்தில் நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.—எபே. 4:8, 11-13.
யெகோவா ஏன் நம்மை வடிவமைக்கிறார்?
7. யெகோவாவின் கண்டிப்பு உங்களுக்கு ஏன் தேவை என்று நினைக்கிறீர்கள்?
7 ‘என் அப்பா-அம்மா என்னை கண்டிக்கும்போது அதோட அருமை எனக்கு அப்போ தெரியல. ஆனா எனக்குனு ஒரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம்தான் அப்படி கண்டிக்கிறது எவ்ளோ நல்லதுனு புரியுது’ என்று சிலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். நாம் பெரியவர்களாக ஆகும்போதுதான் கண்டிப்பு எவ்வளவு நல்லது என்பது நமக்கு புரிகிறது. ஏனென்றால் அன்பு இருப்பதால்தான் நம்மை கண்டிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். (எபிரெயர் 12:5, 6, 11-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கும் நம்மீது அன்பிருப்பதால்தான் நம்மை கண்டிக்கிறார், அதாவது நம்மை வடிவமைக்கிறார். நாம் ஞானமாக நடந்துகொள்ள வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும், சொந்த அப்பாவைப் போல் அவரை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (நீதி. 23:15) தவறான தீர்மானம் எடுத்து அதனால் நாம் கஷ்டப்படுவதைப் பார்க்க அவர் விரும்புவதில்லை. மனந்திரும்பாத பாவிகளாக நாம் சாக வேண்டும் என்றும் அவர் நினைப்பதில்லை.—எபே. 2:2, 3.
8, 9. இன்று யெகோவா நமக்கு எப்படி சொல்லிக்கொடுக்கிறார், எதிர்காலத்திலும் அவர் எப்படி நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுப்பார்?
8 யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு நம்மிடம் நிறைய கெட்ட குணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் யெகோவா நம்மை வடிவமைத்திருக்கிறார். மாற்றங்கள் செய்ய நமக்கு உதவியிருக்கிறார். அதனால் நாம் அருமையான குணங்களை வளர்த்திருக்கிறோம். (ஏசா. 11:6-8; கொலோ. 3:9, 10) இந்த குணங்களை வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு சூழலை யெகோவா உருவாக்குகிறார். இதைத்தான் நாம் ஆன்மீக பூஞ்சோலை என்று சொல்கிறோம். இந்த சூழலில் நாம் ரொம்ப பாதுகாப்பாக உணர்கிறோம். நம்மை சுற்றியிருக்கிற உலகம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை பார்த்து நாம் பயப்படுவதில்லை. பந்தபாசமே இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள் சகோதர சகோதரிகள் காட்டுகிற உண்மையான அன்பை அனுபவிக்கிறார்கள். (யோவா. 13:35) நாம் இந்த மாதிரியான சூழலில் இருப்பதால்தான் மற்றவர்கள்மீது அன்பு காட்ட நாம் கற்றுக்கொள்கிறோம். இவை எல்லாவற்றையும்விட, யெகோவாவைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்கிறோம். அதோடு, பாசமான அப்பாவாக அவர் காட்டும் அன்பையும் ருசிக்கிறோம்.—யாக். 4:8.
9 எதிர்காலத்தில் ஆன்மீக பூஞ்சோலையிலிருந்து நமக்கு இன்னும் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகிறது. அதோடு பூஞ்சோலை பூமியிலும் நாம் ரொம்ப சந்தோஷமாக வாழப்போகிறோம். கடவுளே நம்மை ஆட்சி செய்வார். அந்த சமயத்திலும் யெகோவா நம்மை தொடர்ந்து வடிவமைப்பார். நாம் நினைத்தே பார்க்காத அளவுக்கு நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுப்பார். (ஏசா. 11:9) அதோடு, நம் உடலிலும் மனதிலும் இருக்கும் குறைகளையும் நீக்கிவிடுவார். அப்போது யெகோவா கொடுக்கும் ஆலோசனைகள் எவ்வளவு சிறந்தது என்பதை நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்வோம். அதற்கு கீழ்ப்படிவதும் நமக்கு ரொம்ப சுலபமாக இருக்கும். அதனால் இப்போதே யெகோவா நம்மை தொடர்ந்து வடிவமைக்க நாம் அனுமதிக்கலாம். இதன் மூலமாக அவருடைய அன்பை நாம் புரிந்திருக்கிறோம் என்பதை காட்டலாம்.—நீதி. 3:11, 12.
யெகோவா நம்மை எப்படி வடிவமைக்கிறார்?
10. தலைசிறந்த குயவரான யெகோவாவைப் போல் இயேசு எப்படி பொறுமையாகவும் திறமையாகவும் நடந்துகொண்டார்?
10 ஒரு திறமையான குயவர் களிமண்ணைப் பற்றி நன்றாக தெரிந்துவைத்திருப்பார். அதேபோல் யெகோவாவும் நம்மை பற்றி நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார். நம்மிடம் என்ன குறைகளும் பலவீனங்களும் இருக்கிறது, ஒரு விஷயத்தை நம்மால் எந்தளவுக்கு செய்ய முடியும், நாம் எந்தெந்த விஷயங்களில் முன்னேற்றம் செய்திருக்கிறோம் என்றெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அவர் நம் ஒவ்வொருவரையும் வடிவமைக்கிறார். (சங்கீதம் 103:10-14-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மை எப்படி பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ள இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் நடந்துகொண்ட விதத்தை கவனியுங்கள். அப்போஸ்தலர்கள் தங்களில் யார் பெரியவன் என்று அடிக்கடி வாக்குவாதம் செய்தார்கள். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி யோசித்திருப்பீர்கள்? ‘இவங்க ரொம்ப பெருமை பிடிச்சவங்க, இவங்கள மாத்தவே முடியாது’ என்று யோசித்திருப்பீர்களா? ஆனால் இயேசு அப்படி யோசிக்கவில்லை. பொறுமையாகவும் அன்பாகவும் எடுத்து சொன்னால்... அவர்களும் தன்னைப் போலவே மனத்தாழ்மையாக இருந்தால்... அவர்கள் நிச்சயம் மாறுவார்கள் என்று நம்பினார். (மாற். 9:33-37; 10:37, 41-45; லூக். 22:24-27) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர்களுக்கு கடவுளுடைய சக்தி கிடைத்தது. அதன்பின் யார் பெரியவன் என்ற சண்டை அவர்களுக்குள் வரவில்லை. அதற்கு பதிலாக இயேசு கொடுத்த வேலையை முழுமூச்சோடு செய்தார்கள்.—அப். 5:42.
11. தாவீது எப்படி மென்மையான களிமண்ணைப் போல் இருந்தார், நாம் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம்?
11 இன்று யெகோவா பைபிள் மூலமாக... அவருடைய சக்தி மூலமாக... சபை மூலமாக... நம்மை வடிவமைக்கிறார். பைபிள் நம்மை வடிவமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதை வாசித்து ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். கற்றுக்கொண்ட விஷயங்களை கடைப்பிடிக்க உதவும்படி யெகோவாவிடம் கேட்க வேண்டும். “என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” என்று தாவீது ராஜா எழுதினார். (சங். 63:6) “எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவைப் புகழ்வேன். என் அடிமனதில் தோன்றும் எண்ணங்கள் இரவில்கூட என்னைத் திருத்துகின்றன” என்றும் எழுதினார். (சங். 16:7, NW) யெகோவா கொடுத்த ஆலோசனையை தாவீது ஆழமாக யோசித்துப் பார்த்தார். அவருடைய மனதில் ஆழமாக பதிந்திருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்தார். சிலசமயம் அது அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை செய்தார். (2 சா. 12:1-13) மனத்தாழ்மை காட்டுவதிலும் கீழ்ப்படிவதிலும் தாவீது நமக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார். அதனால் உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பைபிளை படிக்கும்போது அதை ஆழமா யோசிச்சு பார்க்குறேனா, யெகோவா கொடுக்குற ஆலோசனைய ஏத்துக்கிட்டு என்னோட எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மாத்திக்கிறேனா? இந்த விஷயத்துல நான் இன்னும் ஏதாவது முன்னேற்றம் செய்யணுமா?’—சங். 1:2, 3.
12, 13. கடவுளுடைய சக்தி மற்றும் கிறிஸ்தவ சபை மூலமாக யெகோவா எப்படி நம்மை வடிவமைக்கிறார்?
12 கடவுளுடைய சக்தி நம்மை பலவிதங்களில் வடிவமைக்கிறது. உதாரணத்துக்கு, இயேசுவைப் போல் நடந்துகொள்ள அது நமக்கு உதவுகிறது. அதாவது, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை காட்ட உதவுகிறது. (கலா. 5:22, 23) இந்த குணங்களில் ஒன்றுதான் அன்பு. கடவுள்மீது நமக்கு அன்பிருப்பதால் அவருக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுகிறோம். நமக்கு பிரயோஜனமான கட்டளைகளை அவர் கொடுக்கிறார் என்பதை புரிந்திருக்கிறோம். அதனால் அவர் நம்மை வடிவமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதோடு இந்த உலகத்தில் இருப்பவர்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருக்க கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. (எபே. 2:2) அப்போஸ்தலன் பவுல் இளைஞராக இருந்தபோது பெருமை பிடித்த யூத மதத் தலைவர்களோடு பழகினார். அதனால் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் மாற்றங்களை செய்ய கடவுளுடைய சக்தி அவருக்கு உதவியது. “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று அவர் பின்னர் எழுதினார். (பிலி. 4:13) பவுலைப் போலவே நாமும் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உள்ளப்பூர்வமான ஜெபங்களை யெகோவா நிச்சயம் கேட்பார்.—சங். 10:17.
13 கிறிஸ்தவ சபையையும் மூப்பர்களையும் பயன்படுத்தி யெகோவா நம் ஒவ்வொருவரையும் வடிவமைக்கிறார். உதாரணத்துக்கு, நம்மிடம் ஒரு பலவீனம் இருப்பதை மூப்பர்கள் பார்த்தால் உடனே அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். அந்த சமயத்தில் தங்களுடைய சொந்த கருத்துக்களை சொல்வதில்லை. (கலா. 6:1) அதற்கு பதிலாக நமக்காக ஜெபம் செய்கிறார்கள். நம்முடைய பிரச்சினையை புரிந்துகொள்ள ஞானத்தை தரும்படி யெகோவாவிடம் கேட்கிறார்கள். நமக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை பைபிளிலிருந்தும் நம் புத்தகங்களிலிருந்தும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மூப்பர்கள் உங்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுத்தால், உதாரணத்துக்கு நீங்கள் உடை உடுத்தும் விதத்தை பற்றி ஆலோசனை கொடுத்தால், அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு உங்கள்மீது அன்பு இருப்பதால்தான் மூப்பர்கள் மூலமாக அவர் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். அவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கடைப்பிடிக்கும்போது யெகோவாவுடைய பார்வையில் நீங்கள் மென்மையான களிமண்ணைப் போல் இருப்பீர்கள். உங்களை வடிவமைப்பதும் யெகோவாவுக்கு சுலபமாக இருக்கும். அதனால் நீங்களும் நன்மை அடைவீர்கள்.
14. தன் விருப்பப்படி நம்மை வடிவமைக்க யெகோவாவுக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் ஏன் அப்படி செய்வதில்லை?
14 யெகோவா நம்மை எப்படி வடிவமைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளும்போது நம் சகோதர சகோதரிகளோடு அன்பாக பழக நமக்கு உதவும். அதோடு ஊழியத்தில் சந்திக்கும் மக்களையும் நம்மோடு பைபிள் படிப்பவர்களையும் யெகோவா பார்ப்பது போல் பார்க்க நமக்கு உதவும். ஒரு குயவர் களிமண்ணை வடிவமைப்பதற்கு முன்பு அதில் இருக்கும் சின்ன சின்ன கற்களையும் குப்பைகளையும் நீக்கிவிடுவார். பெரிய குயவரான யெகோவாவும் அப்படித்தான் செய்கிறார். அவர் வடிவமைக்கும் நபர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களை நீக்க அவர்களுக்கு உதவி செய்கிறார். ஆனால், அப்படி செய்யும்படி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, அவருடைய நீதியான தராதரங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மாற்றங்களை செய்வதை அவர்களுடைய கைகளில் விட்டுவிடுகிறார்.
15, 16. யெகோவா தங்களை வடிவமைக்க விரும்புவதை பைபிள் மாணாக்கர்கள் எப்படி காட்டுகிறார்கள்? உதாரணம் சொல்லுங்கள்.
15 ஆஸ்திரேலியாவில் உள்ள டிசி என்ற சகோதரியுடைய அனுபவத்தை கவனியுங்கள். அவருக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரி இப்படி சொல்கிறார்: “பைபிள் விஷயங்களை டிசி ரொம்ப ஆர்வமா படிச்சாங்க. ஆனா அவங்க அந்தளவுக்கு மாற்றம் எதுவும் செய்யல, கூட்டங்களுக்கும் வரல. அதை பத்தி நான் யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன், அவங்களுக்கு பைபிள் படிப்பை நிறுத்திடலாம்னு முடிவு செஞ்சேன். ஆனா நான் அவங்களை போய் பார்த்தப்போ எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துச்சு. முன்னேற்றம் செய்யாததுக்கான காரணத்தை டிசியே சொன்னாங்க. பைபிளை படிச்சிட்டு இருந்தாலும் அவங்களுக்கு சூதாட்ட பழக்கம் இருந்தது. அதனால இரட்டை வாழ்க்கை வாழ்ற மாதிரி அவங்களுக்கு இருந்தது. ஆனா இப்போ சூதாடுறதை நிறுத்திட்டாங்க.”
16 சீக்கிரத்திலேயே டிசி கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். கிறிஸ்தவ குணங்களை காட்டவும் ஆரம்பித்தார். அதை பார்த்து டிசியுடைய நண்பர்கள் கேலி செய்தாலும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. அதன்பின் டிசி ஞானஸ்நானம் எடுத்தார். அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் ஒழுங்கான பயனியராக சேவை செய்தார். பைபிள் படிப்பவர்கள் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ மாற்றங்களை செய்யும்போது யெகோவா அவர்களிடம் நெருங்கி வருகிறார். அவர்களை அழகாக வடிவமைக்கிறார்.
17. (அ) யெகோவா உங்களை வடிவமைப்பதை பற்றி யோசிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள போகிறோம்?
17 இன்றும் குயவர்கள் கைகளால் அழகான மண் ஜாடிகளை செய்கிறார்கள். அதை ரொம்ப கவனமாக செய்கிறார்கள். அதேபோல், யெகோவாவும் கவனமாகவும் பொறுமையாகவும் நம்மை வடிவமைக்கிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்று உன்னிப்பாக பார்க்கிறார். (சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? யெகோவா உங்களை ரொம்ப அன்பாகவும் கவனமாகவும் வடிவமைப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? யெகோவாவுடைய கையில் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க உங்களுக்கு என்னென்ன குணங்கள் தேவைப்படுகிறது? கடினமான களிமண்ணைப் போல் இல்லாமல் இருக்க நீங்கள் என்ன குணங்களை தவிர்க்க வேண்டும்? யெகோவாவின் உதவியோடு பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை வடிவமைக்கலாம்? இந்த கேள்விகளுக்கு அடுத்த கட்டுரையில் பதில்களை பார்க்கலாம்.