யெகோவா ‘உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’
இந்த வார்த்தைகள் உண்மை என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்? யெகோவா “உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 5:7) இதை நம்புவதற்கு சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.
உங்கள் தேவைகளை கவனித்துக்கொள்கிறார்
உங்கள் நெருங்கிய நண்பரிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? அவர் உங்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும், தாராள குணத்தை காட்ட வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். யெகோவாவிடமும் அந்த குணங்கள் எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர் நம் எல்லாருடைய தேவைகளையும் அன்பாக கவனித்துக்கொள்கிறார், தாராள குணத்தை காட்டுகிறார். உதாரணத்துக்கு, “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத். 5:45) மழை மற்றும் வெயிலினால் நமக்கு என்ன நன்மை? இதன் மூலமாக யெகோவா நமக்கு ‘ஏராளமான உணவை தந்து, நம் இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 14:17) பூமியில் ஏராளமான விளைச்சல் இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொள்கிறார். நல்ல ருசியான சாப்பாடு சாப்பிடும்போது உங்கள் மனதுக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
சாப்பிட ஏராளமான உணவு இருந்தும் இன்று நிறையப் பேர் ஏன் பசி, பட்டினியால் வாடுகிறார்கள்? இன்று நிறைய அரசியல் தலைவர்கள், மக்களுக்கு நல்லது செய்வதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே கிடையாது. அவர்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்வதிலும் பணம் சம்பாதிப்பதிலுமே குறியாக இருக்கிறார்கள். பேராசை பிடித்த இந்த அரசியல் தலைவர்களை நீக்கிவிட்டு யெகோவா தன்னுடைய அரசாங்கத்தை கொண்டுவரப்போகிறார். அதில் அவருடைய மகன் ராஜாவாக ஆட்சி செய்வார். அவருடைய ஆட்சியில் யாரும் பசியால் வாட மாட்டார்கள். ஆனால், இப்போதுகூட யெகோவா அவருடைய சங். 37:25) யெகோவாவுக்கு நம்மீது எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது, இல்லையா?
மக்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். (எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்கிறார்
பொதுவாக, நெருங்கிய நண்பர்கள் ஒன்றுசேர்ந்து நிறைய நேரம் செலவு செய்வார்கள். அவர்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி மணிக்கணக்காக பேசுவார்கள். தன்னுடைய பிரச்சினைகளையும் கவலைகளையும் பற்றி ஒருவர் சொல்லும்போது மற்றொருவர் அதை பொறுமையாக கேட்பார். அதேமாதிரி யெகோவாவும் நாம் சொல்வதை பொறுமையாக கேட்கிறார். அதனால்தான், “ஜெபத்தில் உறுதியாயிருங்கள்,” “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோ. 12:12; 1 தெ. 5:17.
நீங்கள் எவ்வளவு நேரம் ஜெபம் செய்தாலும் யெகோவா கேட்கிறாரா? இதற்கு பைபிளிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இயேசு “இரவு முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார்.” (லூக். 6:12) அவரை பின்பற்றிய நிறைய சீடர்களை பற்றி யெகோவாவிடம் சொல்லியிருப்பார். அவர்களுக்கு இருக்கும் நல்ல குணங்களைப் பற்றியும் அவர்களுடைய பலவீனங்களைப் பற்றியும் சொல்லியிருப்பார். அவர்களில் யாரை அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யெகோவாவிடம் கேட்டார். அதனால், பொழுது விடிவதற்குள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டார். அப்படியென்றால், நீங்கள் செய்யும் ஜெபங்களையும் யெகோவா காதுகொடுத்து கேட்கிறார். அதனால்தான், அவரை ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று பைபிள் சொல்கிறது. (சங். 65:2) மனதுக்கு கஷ்டமாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு நேரம் ஜெபம் செய்தாலும் அவர் பொறுமையாக கேட்பார்.
மன்னிக்க தயாராக இருக்கிறார்
நெருங்கிய நண்பர்களுக்குக்கூட ஒருவரையொருவர் மன்னிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். சிலசமயம் ரொம்ப காலம் நண்பர்களாக இருந்தவர்கள்கூட மன்னிக்க விரும்பாததால் பிரிந்து போயிருக்கிறார்கள். ஆனால் யெகோவா அப்படி இல்லை. எல்லாரையும் அவர் “தாராளமாக மன்னிக்கிறார்.” அதனால், நாம் செய்யும் தவறுகளுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி பைபிள் சொல்கிறது. (ஏசா. 55:6, 7, NW) யெகோவா நம்மை மன்னிக்க எது காரணமாக இருக்கிறது?
நம்மீது அவர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்புதான் அதற்கு காரணம். நம்மீது அவர் அந்தளவு அன்பு வைத்திருப்பதால்தான் அவருடைய மகனையே மீட்புப் பலியாக கொடுத்தார். அதனால், நமக்கு பாவத்திலிருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் விடுதலை கிடைக்கப்போகிறது. யோவா. 3:16) அதுமட்டுமல்ல, இயேசுவின் பலி மூலமாக இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கப்போகிறது. முக்கியமாக இந்த பலியின் மூலமாகத்தான் நாம் செய்யும் தவறுகளை யெகோவா மன்னிக்கிறார். ‘நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னிப்பார். ஏனென்றால், அவர் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர்’ என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 1:9) யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிப்பதால்தான் தொடர்ந்து அவருடைய நண்பராக நம்மால் இருக்க முடிகிறது. இதை யோசிக்கும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
(உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்
நல்ல நண்பர்கள் உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். அதேபோல் யெகோவாவும் நமக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார். “[கர்த்தருக்கு சேவை செய்கிறவன்] விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 37:24) யெகோவா அவருடைய மக்களுக்கு நிறைய வழிகளில் உதவி செய்கிறார். கரீபியன் தீவிலுள்ள செய்ன்ட் க்ராய்க்ஸில் நடந்த ஒரு அனுபவத்தைப் பார்க்கலாம்.
யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு இளம் பெண் ஏன் கொடி வணக்கம் செய்வதில்லை என்று கேட்டு கூடப்படிக்கும் பிள்ளைகள் அவளை நச்சரித்தார்கள். அதனால் அவள் யெகோவாவிடம் உதவிக்காக ஜெபம் செய்தாள். அதை பற்றி அவர்களிடம் விளக்க தீர்மானித்தாள். அவளுக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவள் ஏன் கொடி வணக்கம் செய்வதில்லை என்று விளக்கினாள். என்னுடைய பைபிள் கதை புத்தகத்தில் இருந்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் உதாரணம் அவளுக்கு எப்படி உதவியாக இருந்தது என்று விளக்கினாள். “சிலைகளை வணங்காமல் இருந்ததற்காக யெகோவா அந்த மூன்று பேரையும் பாதுகாத்தார்” என்று அவள் சொன்னாள். பிறகு அந்த புத்தகத்தை படிக்க ஆர்வமாக இருந்த 11 பேருக்கு அவள் அதை கொடுத்தாள். அதை பற்றி இவ்வளவு தைரியமாக விளக்க பலத்தையும் ஞானத்தையும் யெகோவா கொடுத்ததற்காக அவள் ரொம்ப சந்தோஷப்பட்டாள்.
யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறையில்லை என்று எப்போதாவது நீங்கள் யோசித்தால் சங்கீதம் 34:17-19; 55:22; 145:18, 19 போன்ற வசனங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். பல வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்யும் சகோதர சகோதரிகளிடம் யெகோவா அவர்கள்மீது எப்படி அக்கறை காட்டியிருக்கிறார் என்று கேளுங்கள். இதை பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவா உங்கள்மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.