படிப்புக் கட்டுரை 2
“யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்”
“நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.”—ரோ. 12:2.
பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!
இந்தக் கட்டுரையில்... a
1-2. ஞானஸ்நானம் எடுத்த பிறகு நாம் எதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்? விளக்குங்கள்.
உங்கள் வீட்டை எவ்வளவு அடிக்கடி சுத்தம் பண்ணுவீர்கள்? முதன்முதலில் நீங்கள் குடிபோவதற்கு முன்னால் வீட்டையே துடைத்து பளிச்சென்று வைத்திருப்பீர்கள். ஆனால், அதற்குப் பிறகு நீங்கள் அதைச் சுத்தம் பண்ணாமலேயே விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீக்கிரத்திலேயே வீடு முழுக்க தூசியும் அழுக்கும் படிந்திருக்கும். உங்கள் வீடு எப்போதுமே பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் அதை நீங்கள் அடிக்கடி சுத்தம் பண்ண வேண்டும்.
2 அதேபோல், நாம் யோசிக்கிற விதத்தையும் நம் சுபாவத்தையும் மாற்றிக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, ‘உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்கு’ தேவையான மாற்றங்களை நாம் கண்டிப்பாகச் செய்திருப்போம். (2 கொ. 7:1) ஆனால், இப்போது அப்போஸ்தலன் பவுல் சொல்வதுபோல் நம்மை நாமே ‘புதுப்பித்துக்கொண்டே’ இருப்பது அவசியம். (எபே. 4:23) அதற்காக நாம் ஏன் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்? அப்படி முயற்சி எடுக்காவிட்டால், இந்த உலகத்தின் தூசியும் அழுக்கும் சீக்கிரத்தில் நம்மேல் படிந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால்... யெகோவாவின் பார்வையில் நாம் அழகாக இருக்க வேண்டும் என்றால்... நாம் யோசிக்கிற விதமும் நம்முடைய சுபாவமும் நம்முடைய ஆசைகளும் சரியாக இருக்கின்றனவா என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொண்டே’ இருங்கள்
3. ‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதற்கு என்ன அர்த்தம்? (ரோமர் 12:2)
3 யோசிக்கும் விதத்தை நாம் எப்படி மாற்றிக்கொள்ளலாம்? (ரோமர் 12:2-ஐ வாசியுங்கள்.) ‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தைகளை “மனதைப் புதுப்பிக்க வேண்டும்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஒரு வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் வெறும் அலங்காரப் பொருள்களை மட்டும் வாங்கி வைக்க மாட்டோம், அதை அடியோடு மாற்றுவோம். அதேபோல், நம்முடைய மனதைப் புதுப்பிப்பதற்கு ஒருசில நல்ல விஷயங்களைச் செய்தால் மட்டும் போதாது. அதற்குப் பதிலாக, நாம் உள்ளுக்குள்ளே எப்படி இருக்கிறோம் என்பதை யோசித்து, யெகோவாவுக்குப் பிடித்த விதமாக நடந்துகொள்வதற்குத் தேவையான எல்லா மாற்றங்களையும் செய்ய வேண்டும். அதை ஒரு தடவை மட்டுமல்ல, தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
4. இந்த உலகம் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
4 நாம் பரிபூரணராக ஆகும்போது எப்போதுமே யெகோவாவுக்குப் பிடித்த விதமாக நடந்துகொள்வோம். ஆனால், அதுவரை அப்படி நடந்துகொள்வதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டால்தான் கடவுளுடைய விருப்பம் என்ன என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும் என்று ரோமர் 12:2-ல் பவுல் சொல்லியிருக்கிறார். அதனால், இந்த உலகம் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் நாம் போய்விடாமல் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குறிக்கோள்களும் தீர்மானங்களும் இந்த உலகத்துக்குப் பிடித்த விதமாக இல்லாமல் கடவுளுக்குப் பிடித்த விதமாக இருக்கின்றனவா என்று முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.
5. யெகோவாவின் நாளை மனதில் வைத்திருக்கிறோமா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? (படத்தைப் பாருங்கள்.)
5 இப்போது ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். நாம் ‘யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்க’ வேண்டும் என்று யெகோவா நினைக்கிறார். (2 பே. 3:12) உங்களையே இப்படியெல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த உலகத்துக்கு சீக்கிரம் முடிவு வரப்போகிறது என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேனா? நான் வாழ்கிற விதம் அதைக் காட்டுகிறதா? படிப்பு, வேலை சம்பந்தமாக நான் எடுக்கிற முடிவுகளெல்லாம் யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம் என்பதைக் காட்டுகிறதா? எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையானவற்றை யெகோவா கொடுப்பார் என்று நான் நம்புகிறேனா? இல்லையென்றால், எப்போதுமே காசு பணத்தை நினைத்தே கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறேனா?’ நாம் எல்லா விஷயத்திலும் யெகோவாவுக்குப் பிடித்த விதமாக நடந்துகொள்ள முயற்சி செய்யும்போது யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுவார், இல்லையா?—மத். 6:25-27, 33; பிலி. 4:12, 13.
6. நாம் எதையெல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்?
6 நாம் யோசிக்கிற விதத்தை அடிக்கடி சரிபார்க்க வேண்டும், தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியபோது, “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று சொன்னார். (2 கொ. 13:5) ‘விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கு’ அவ்வப்போது கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போய்விட்டு வந்தால் மட்டும் போதாது. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோம் என்பதை நம்முடைய யோசனைகளும், ஆசைகளும், உள்நோக்கங்களும் காட்ட வேண்டும். அதனால், நாம் யோசிக்கிற விதத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொள்வதற்கு கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும். அவர் யோசிப்பது போல் யோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்குப் பிடித்த விதமாக வாழ எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும்.—1 கொ. 2:14-16.
“புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்”
7. எபேசியர் 4:31, 32 சொல்கிறபடி, வேறு எதையும் நாம் செய்ய வேண்டும், அது அவ்வளவு சுலபம் இல்லை என்று ஏன் சொல்லலாம்?
7 எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள். நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டால் மட்டும் போதாது, ‘புதிய சுபாவத்தையும் அணிந்துகொள்ள வேண்டும்.’ (எபே. 4:24) அதற்கு நாம் நிறைய முயற்சி எடுக்க வேண்டும். முதலில் மனக்கசப்பு, சினம், கடும் கோபம் போன்ற குணங்களையெல்லாம் விடுவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால், சில கெட்ட குணங்கள் நமக்குள்ளே ஊறிப்போயிருக்கலாம். உதாரணத்துக்கு, சிலருக்கு ‘கோபப்படுகிற சுபாவம்’ இருப்பதாகவும் ‘ஆவேசப்படுகிற சுபாவம்’ இருப்பதாகவும் பைபிள் சொல்கிறது. (நீதி. 29:22, அடிக்குறிப்புகள்) இப்படி, நமக்குள்ளே ஊறிப்போயிருக்கிற குணங்களை மாற்றிக்கொள்வதற்கு ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். ஒரு சகோதரருடைய அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.
8-9. பழைய சுபாவத்தை மாற்றிக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்று ஸ்டீவெனின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
8 ஸ்டீவென் என்ற சகோதரருக்குத் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் ஞானஸ்நானம் எடுத்த பிறகும் என்னுடைய கோபத்தைக் குறைக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒருசமயம் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு திருடன் என்னுடைய காரில் இருக்கும் ரேடியோவைத் திருடிக்கொண்டு ஓடினான். அவனை துரத்திப் பிடிக்க போனபோது ரேடியோவைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டான். இந்த விஷயத்தைப் பற்றி மற்ற சகோதர சகோதரிகளிடம் சொன்னபோது, ஒரு மூப்பர் என்னிடம், ‘ஸ்டீவென், ஒருவேளை நீங்கள் அந்தத் திருடனைப் பிடித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டார். இந்தக் கேள்வி என்னை யோசிக்க வைத்தது. என்னுடைய கோபத்தை விட்டுவிட்டு உண்மையிலேயே அன்பாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.” b
9 ஸ்டீவெனின் அனுபவம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு கெட்ட குணத்தை விட்டுவிட்டதாக நாம் நினைத்தாலும் அது எப்போது வேண்டுமானாலும் திடீரென்று எட்டிப் பார்க்கலாம். உங்களுக்கு அப்படி நடந்தால், சோர்ந்துபோய்விடாதீர்கள்! இனி கிறிஸ்தவராக இருப்பதற்கே உங்களுக்குத் தகுதியில்லை என்று நினைக்காதீர்கள். “நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுலும்கூட சொன்னார். (ரோ. 7:21-23) நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள்தான். அதனால், நம்முடைய வீட்டில் தூசியும் அழுக்கும் திரும்பத் திரும்பப் படிகிற மாதிரி இந்தக் கெட்ட குணங்களும் திரும்பத் திரும்ப நம் மனதில் எட்டிப் பார்க்கலாம். அதனால், நம் மனதைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?
10. நாம் எப்படிக் கெட்ட குணங்களை எதிர்த்துப் போராடலாம்? (1 யோவான் 5:14, 15)
10 ஒரு குணத்தை மாற்றிக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் பண்ணுங்கள். அதுவும், அவர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்பார்... உங்களுக்கு உதவி செய்வார்... என்ற நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்கள். (1 யோவான் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) அவர் அந்தக் குணத்தை உங்களிடமிருந்து அற்புதமாக எடுத்துப் போட்டுவிடுவார் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அதற்கு நீங்கள் அடிபணிந்துவிடாமல் இருப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுப்பார். (1 பே. 5:10) அதேசமயத்தில், நீங்கள் செய்கிற ஜெபத்துக்கு ஏற்ற விதமாக நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய பழைய சுபாவத்தைத் தூண்டிவிடுகிற விஷயங்களைச் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, நீங்கள் விட்டொழிக்க நினைக்கிற குணங்கள் அவ்வளவு பெரிய தப்பு இல்லை என்பதுபோல் காட்டுகிற சினிமாவையும் டிவி நிகழ்ச்சியையும் பார்க்காதீர்கள். அப்படிப்பட்ட கதைகளையும் படிக்காதீர்கள். அதோடு, தவறான ஆசைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டும் இருக்காதீர்கள்.—பிலி. 4:8; கொலோ. 3:2.
11. புதிய சுபாவத்தைப் போட்டுக்கொள்வதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
11 நாம் பழைய சுபாவத்தைக் கழற்றி எறிந்தால் மட்டும் போதாது, புதிய சுபாவத்தைப் போட்டுக்கொள்வதும் முக்கியம். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவின் குணங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களுடைய குறிக்கோளாக வையுங்கள். (எபே. 5:1, 2) உதாரணத்துக்கு, யெகோவா யாரையாவது மன்னித்ததைப் பற்றி நீங்கள் பைபிளில் படிக்கும்போது, ‘நான் மற்றவர்களை மன்னிக்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு யெகோவா எப்படிக் கரிசனை காட்டினார் என்பதைப் பற்றிப் படிக்கும்போது, ‘பணக் கஷ்டத்தில் இருக்கிற சகோதர சகோதரிகள்மேல் நானும் கரிசனையாக இருக்கிறேனா? அதை என்னுடைய செயலில் காட்டுகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். புதிய சுபாவத்தை நாம் போட்டுக்கொள்ளும்போது, நாம் யோசிக்கிற விதத்தையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், இது ஒரே நாளில் நடக்கிற விஷயம் இல்லை. அதனால், உங்களிடம் நீங்களே பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.
12. பைபிளுக்கு ஆளையே மாற்றுகிற சக்தி இருக்கிறது என்பதை ஸ்டீவெனின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
12 முன்பு நாம் பார்த்த ஸ்டீவென், புதிய சுபாவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து இதுவரைக்கும் என்னுடைய கோபம் தலைக்கு ஏறும் அளவுக்கு நிறையச் சூழ்நிலைகள் வந்திருக்கின்றன. என்னைக் கோபப்படுத்துகிறவர்களிடம் இருந்து விலகிப்போவதற்கும், அந்தச் சூழ்நிலைகளை அன்பாக சமாளிப்பதற்கும் நான் கற்றுக்கொண்டேன். நான் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து மற்றவர்களும் என்னுடைய மனைவியும் என்னைப் பாராட்டினார்கள். என்னைப் பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இந்த மாற்றத்தை நானாகவே செய்தேன் என்று சொல்ல மாட்டேன். இதற்குக் காரணம் பைபிள்தான். பைபிளுக்கு ஆளையே மாற்றும் சக்தி இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு ஆதாரம்.”
தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருங்கள்
13. சரியானதைச் செய்ய எது நமக்கு உதவி செய்யும்? (கலாத்தியர் 5:16)
13 கலாத்தியர் 5:16-ஐ வாசியுங்கள். சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் நாம் ஜெயிப்பதற்காக யெகோவா தன்னுடைய சக்தியைத் தாராளமாகக் கொடுக்கிறார். அவருடைய வார்த்தையை நாம் படிக்கும்போது அவருடைய சக்தி நமக்குள் செயல்படுவதற்கு அனுமதிக்கிறோம். கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் அவருடைய சக்தி நமக்குக் கிடைக்கிறது. நம்மைப் போலவே சரியானதைச் செய்யப் போராடுகிற சகோதர சகோதரிகளுடன் அங்கே நம்மால் பழக முடிகிறது. அது நமக்கு உற்சாகம் கொடுக்கிறது. (எபி. 10:24, 25; 13:7) அதோடு, நம்மிடம் இருக்கிற ஒரு கெட்ட விஷயத்தை மாற்றிக்கொள்வதற்காக யெகோவாவிடம் நாம் உருக்கமாக ஜெபம் செய்யும்போது... உதவிக்காக அவரிடம் கெஞ்சிக் கேட்கும்போது... தொடர்ந்து போராடுவதற்கு அவருடைய சக்தியை நமக்குக் கொடுத்து அவர் உதவி செய்வார். இதையெல்லாம் செய்வதால் கெட்ட ஆசைகள் நம்மைவிட்டு ஒரேயடியாக மறைந்து போய்விடும் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அந்த ஆசைகளுக்கு நம்மால் அடிபணியாமல் இருக்க முடியும். கலாத்தியர் 5:16 சொல்கிறபடி, ‘கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள் எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டார்கள்.’
14. சரியானதைச் செய்வதற்கான ஆசையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
14 யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவி செய்கிற விஷயங்களை நாம் செய்ய ஆரம்பித்தால் மட்டும் போதாது, அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சரியானதைச் செய்வதற்கான ஆசையையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால் நமக்குள்ளே ஒரு எதிரி எப்போதும் நம்மோடு மல்லுக்கு நிற்கிறது. அதுதான், கெட்டதைச் செய்வதற்கான ஆசை. ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட சில கெட்ட விஷயங்கள் நம்மைக் காந்தம்போல் இழுக்கலாம். உதாரணத்துக்கு, சூதாட வேண்டும்... ஓவராகக் குடிக்க வேண்டும்... ஆபாசத்தைப் பார்க்க வேண்டும்... என்ற ஆசையெல்லாம் நமக்கு வரலாம். (எபே. 5:3, 4) ஒரு இளம் சகோதரர் சொல்லும்போது, “பொதுவாக ஆண்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு ஈர்ப்பு வரும். அதுதான் எனக்கு இருக்கிற பெரிய போராட்டமே. ஒரு கட்டத்தில் அந்த ஈர்ப்பு போய்விடும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது வரைக்கும் அது என்னைப் படுத்தியெடுக்கிறது” என்று சொல்கிறார். ஒரு கெட்ட ஆசையை உங்களால் அடக்கவே முடியாவிட்டால் நீங்கள் என்ன செய்யலாம்?
15. கெட்ட ஆசைகள் ‘மனிதர்களுக்குப் பொதுவாக வருவதுதான்’ என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் ஆறுதலாக இருக்கிறது? (படத்தைப் பாருங்கள்.)
15 ஒரு கெட்ட ஆசை நம்மை ஆட்டிப்படைக்கும்போது அதை எதிர்த்து நாம் மட்டும் போராடிக்கொண்டு இல்லை என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 10:13அ) பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்துவிலிருந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எழுதினார். அவர்களில் சிலர், அதற்கு முன்பு மணத்துணைக்குத் துரோகம் செய்தவர்களாகவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்களாகவும் குடிகாரர்களாகவும் இருந்தார்கள். (1 கொ. 6:9-11) ஞானஸ்நானம் எடுத்த பிறகு அவர்களுக்கு எந்தக் கெட்ட ஆசையுமே வந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கண்டிப்பாக அவர்களுக்கும் வந்திருக்கும். அவர்கள் எல்லாரும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் பாவ இயல்புள்ள சாதாரண மனிதர்கள். அதனால், அவர்களும் அவ்வப்போது கெட்ட ஆசைகளோடு போராட வேண்டியிருந்திருக்கும். இந்த விஷயம் நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏன்? நாம் எப்படிப்பட்ட கெட்ட ஆசைகளோடு போராடினாலும் சரி, மற்றவர்கள் அதே ஆசையோடு போராடி ஜெயித்திருக்கிறார்கள் என்பதை நினைத்து நம் மனதைத் தேற்றிக்கொள்ளலாம். சொல்லப்போனால், “உலகத்தில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் எல்லாரும் நீங்கள் அனுபவிப்பது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்” என்பதைத் தெரிந்துகொண்டு நீங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்கலாம்.—1 பே. 5:9.
16. எப்படி யோசிப்பது ஆபத்தானது, ஏன்?
16 உங்களுக்குள் இருக்கிற போராட்டத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அது ரொம்ப ஆபத்தானது. ஏனென்றால், அப்படி யோசிக்க ஆரம்பித்துவிட்டால் ‘கெட்ட ஆசையை என்னால் விடவே முடியாது, இனி அவ்வளவுதான்’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். ஆனால், பைபிள் சொல்வதே வேறு. “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்” என்று அது சொல்கிறது. (1 கொ. 10:13ஆ) அதனால், கெட்ட ஆசை நம்மை ஆட்டிப்படைத்தாலும் நம்மால் கண்டிப்பாக அதை எதிர்த்து ஜெயிக்க முடியும். யெகோவாவின் உதவியோடு நிச்சயம் அந்த ஆசைக்கு அடிபணியாமலும் இருக்க முடியும்.
17. கெட்ட ஆசைகள் வராத மாதிரி நம்மால் தடுக்க முடியாது என்றாலும் நம்மால் என்ன செய்ய முடியும்?
17 நாம் ஒரு விஷயத்தை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பாவ இயல்புள்ள மனிதர்களாக இருப்பதால் கெட்ட ஆசைகள் நமக்கு வராத மாதிரி நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அந்த ஆசைகள் வருகிறபோது நம்மால் உடனடியாக அதை ஒதுக்கித்தள்ள முடியும், போத்திபாருடைய மனைவியிடமிருந்து உடனடியாக ஓடிப்போன யோசேப்பைப் போல்! (ஆதி. 39:12) சொல்லப்போனால், கெட்ட ஆசைகளுக்கு நீங்கள் அடிபணிய வேண்டும் என்ற அவசியமே இல்லை.
விடாமுயற்சி தேவை
18-19. யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி எடுக்கும்போது என்ன கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்?
18 நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் யெகோவாவுக்குப் பிடித்த விதமாக யோசிக்கவும் நடந்துகொள்ளவும் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக அடிக்கடி இப்படிப்பட்ட கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேனா? நான் நடந்துகொள்கிற விதம் அதைக் காட்டுகிறதா? புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்வதில் நான் முன்னேற்றம் செய்துகொண்டே இருக்கிறேனா? கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு கடவுளுடைய சக்தி எனக்கு உதவி செய்ய நான் அனுமதிக்கிறேனா?’
19 இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொள்ளும்போது, எந்த விஷயங்களில் நீங்கள் முன்னேற்றம் செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். எல்லாவற்றிலும் பக்காவாக இருக்க வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் முன்னேற வேண்டியிருந்தால் சோர்ந்துபோய்விடாதீர்கள். அதற்குப் பதிலாக, பிலிப்பியர் 3:16-ல் சொல்லப்பட்டபடி, ‘முன்னேற்றப் பாதையில் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடப்பதற்கு’ முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால், யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்வதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
பாட்டு 36 நம் இதயத்தை பாதுகாப்போம்
a இந்த உலக ஜனங்களைப் போல யோசிக்கவும் நடந்துகொள்ளவும் கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குச் சொன்னார். இன்று அது நமக்கு அருமையான ஒரு ஆலோசனை. இந்த உலகம் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இருப்பதற்கு, நாம் யோசிக்கிற விதம் எப்போதெல்லாம் கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b “கோபம்—என் வாழ்க்கையையே நாசமாக்கியது” என்ற ஆன்லைன் கட்டுரையைப் பாருங்கள்.
c பட விளக்கம்: மேல்படிப்பு படிப்பதா, முழுநேர ஊழியம் செய்வதா என்று ஒரு இளம் சகோதரர் யோசிக்கிறார்.