படிப்புக் கட்டுரை 5
“உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்”
“நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபே. 5:15, 16.
பாட்டு 8 யெகோவா நம் தஞ்சம்!
இந்தக் கட்டுரையில்... *
1. யெகோவாவோடு நேரம் செலவு செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
நமக்குப் பிடித்தவர்களோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய நாம் ரொம்ப ஆசைப்படுவோம். கல்யாணம் ஆனவர்கள் தங்கள் துணையோடு சேர்ந்து தனியாக நேரம் செலவு செய்ய ரொம்ப விரும்புவார்கள். இளைஞர்களுக்கு தங்களுடைய நெருங்கிய நண்பர்களோடு சேர்ந்திருப்பது ரொம்ப பிடிக்கும். நாம் எல்லாருமே சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நேரம் செலவு செய்ய ஆசைப்படுவோம். எல்லாவற்றுக்கும் மேல், நம்முடைய கடவுள் யெகோவாவோடு நேரம் செலவு செய்வது நம் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும், பைபிளைப் படிக்க வேண்டும்; அவருடைய விருப்பங்களைப் பற்றியும், அழகான குணங்களைப் பற்றியும் ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். யெகோவாவோடு நேரம் செலவு செய்வதைவிட வேறு எது நமக்கு பெரிதாக இருக்க முடியும்?—சங். 139:17.
2. யெகோவாவோடு நேரம் செலவு செய்வது ஏன் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை?
2 யெகோவாவோடு நேரம் செலவு செய்வது நம் எல்லாருக்குமே பிடித்திருந்தாலும், அதைச் செய்வது எல்லா சமயத்திலும் சுலபமாக இருப்பதில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நாம் பம்பரமாக சுழன்றுகொண்டிருக்கிறோம். வேலை, குடும்பம், மற்ற பொறுப்புகள் என நம் நேரமெல்லாம் அவற்றிலேயே போய்விடுகிறது. அதனால், ஜெபம் செய்ய... படிக்க... ஆழமாக யோசித்துப்பார்க்க... நேரமே இல்லாததுபோல் நமக்குத் தோன்றலாம்.
3. வேறு எதுவும் நம்முடைய நேரத்தைத் திருடிவிடலாம்?
3 சில விஷயங்களைச் செய்வதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், நம் நேரமெல்லாம் அதிலேயே போய்விட்டால், யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை அது திருடிவிடும். பொழுதுபோக்கு விஷயத்திலும் இதுதான் உண்மை. நம் எல்லாருக்குமே பொழுதுபோக்கு தேவை. ஆனால், நேரம் காலம் பார்க்காமல் அதிலேயே மூழ்கிவிட்டால், யெகோவாவோடு நம்மால் நேரம் செலவு செய்ய முடியாமல் போய்விடும். அதனால், பொழுதுபோக்கை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.—நீதி. 25:27; 1 தீ. 4:8.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
4 மூன்று கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் பார்ப்போம். (1) நம் வாழ்க்கையில் எது முக்கியம் என்று நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்? (2) யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள நம்முடைய நேரத்தை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்? (3) அதனால், நமக்கு என்ன நன்மை?
ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்; எது முக்கியம் என்று முடிவு செய்யுங்கள்
5. மிகச் சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எபேசியர் 5:15-17 இளைஞர்களுக்கு எப்படி உதவும்?
5 மிகச் சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். இளைஞர்களே, உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஒருபக்கம், நீங்கள் உயர்கல்வி படித்தால்தான் கைநிறைய சம்பாதித்து கௌரவமாக வாழ முடியும் என்று உங்களுடைய ஆசிரியர்களும் சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களும் சொல்லலாம். ஆனால், நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் நேரமெல்லாம் அதிலேயே போய்விடும். இன்னொரு பக்கம், யெகோவாவின் சேவையை சுறுசுறுப்பாகச் செய்யும்படி உங்களுடைய அப்பா-அம்மாவும், சபையில் இருக்கிற நண்பர்களும் உங்களை உற்சாகப்படுத்தலாம். இப்போது யார் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள்? யெகோவாவை நீங்கள் ரொம்ப நேசிக்கிறீர்கள், இல்லையா? அப்படியென்றால் நல்ல முடிவெடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எபேசியர் 5:15-17-ஐப் படித்துப் பாருங்கள், அதைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். (வாசியுங்கள்.) பின்பு, “‘யெகோவாவோட விருப்பம்’ என்ன? நான் என்ன முடிவு எடுத்தா அவர் சந்தோஷப்படுவாரு? யாரு சொல்றத கேட்டா என்னோட நேரத்த ரொம்ப நல்லா பயன்படுத்த முடியும்?” என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: “நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன.” சாத்தானுடைய உலகம் சீக்கிரத்தில் அழியப்போகிறது. அதனால், யெகோவாவுக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதுதான் ஞானமாக இருக்கும்.
6. மரியாள் எதைத் தேர்ந்தெடுத்தாள், அது ஞானமான முடிவு என்று ஏன் சொல்லலாம்?
6 எது முக்கியம் என்று முடிவு செய்யுங்கள். சிலசமயங்களில் இரண்டு விஷயங்களில் எது ரொம்ப முக்கியம் என்று முடிவெடுக்க வேண்டியிருக்கும். அந்த இரண்டுமே சரியானதாக இருக்கலாம். ஆனால், நேரத்தை ரொம்ப நன்றாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் அவற்றில் மிகச் சிறந்ததை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இதை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு மரியாள், மார்த்தாளின் வீட்டுக்கு இயேசு போனபோது நடந்த சம்பவத்தைக் கவனிக்கலாம். அவர் வந்ததைப் பார்த்ததும், மார்த்தாள் பயங்கர சந்தோஷப்பட்டு அவருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தாள். ஆனால், மரியாள் இயேசுவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தை ரொம்ப நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாள். மார்த்தாளும் நல்ல எண்ணத்தோடுதான் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்தாள். ஆனால், மரியாள் “மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்” என்று இயேசு சொன்னார். (லூக். 10:38-42) மரியாள் அந்தச் சமயத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டாள் என்று கொஞ்ச நாட்களில் மறந்திருப்பாள். ஆனால், இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டவற்றை அவள் மறந்திருக்கவே மாட்டாள். இயேசுவோடு நேரம் செலவு செய்வதை மரியாள் பெரிய பாக்கியமாக நினைத்த மாதிரி யெகோவாவோடு நேரம் செலவு செய்வதை நாமும் பெரிய பாக்கியமாக நினைக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவாவோடு நட்பை வளர்க்க நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
7. ஜெபம் செய்வது, படிப்பது, ஆழமாக யோசிப்பது போன்றவை ஏன் ரொம்ப முக்கியம்?
7 யெகோவாவை வணங்குவதற்கு ஜெபம் செய்வது, படிப்பது, ஆழமாக யோசித்துப்பார்ப்பது போன்றவை ரொம்ப முக்கியம். நாம் ஜெபம் செய்யும்போது நம்மை உயிருக்குயிராக நேசிக்கிற நம்முடைய அப்பா யெகோவாவிடம் பேசுகிறோம். (சங். 5:7) பைபிளைப் படிக்கும்போது ஞானமே உருவான நம்முடைய ‘கடவுளைப் பற்றிய அறிவு’ நமக்குக் கிடைக்கிறது. (நீதி. 2:1-5) ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது யெகோவாவின் அருமையான குணங்களையும், நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் செய்யப்போகிற அற்புதமான விஷயங்களையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். நம்முடைய நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்த இதைத் தவிர வேறு நல்ல வழி இருக்க முடியுமா? இவற்றையெல்லாம் நாம் நல்லபடியாக செய்வதற்கு என்ன பண்ண வேண்டும்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
8. வனாந்தரத்தில் இயேசு நேரம் செலவு செய்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 முடிந்தால் அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். இந்த விஷயத்தில் இயேசுவிடமிருந்து நாம் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பூமியில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு 40 நாட்கள் அவர் வனாந்தரத்தில் இருந்தார். (லூக். 4:1, 2) அந்த அமைதியான இடத்தில் அவரால் யெகோவாவிடம் ஜெபம் செய்ய முடிந்தது. யெகோவாவின் விருப்பத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்க முடிந்தது. அதற்குப் பிறகு வரப்போகிற சோதனைகளைச் சமாளிக்க அது உதவியது. அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒருவேளை நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்தால், உங்கள் வீட்டில் அமைதியான ஓர் இடம் உங்களுக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில் வெளியே எங்கேயாவது அமைதியான ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சகோதரி ஜூலி இதைத்தான் செய்தார். அவரும் அவருடைய கணவரும் பிரான்சில் ஒரு சின்ன அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறார்கள். யெகோவாவிடம் ஜெபம் செய்ய அவர்களுடைய வீட்டில் ஒரு அமைதியான இடம் இல்லை. “அதனால நான் தினமும் பூங்காவுக்கு போவேன். அங்க தனியா யெகோவாகிட்ட மனசுவிட்டு பேசுவேன்” என்று அவள் சொல்கிறாள்.
9. இயேசு ரொம்ப பிஸியாக இருந்தாலும் யெகோவாவிடம் இருக்கிற பந்தத்தைப் பொக்கிஷமாக நினைத்தார் என்பதை எப்படிக் காட்டினார்?
9 இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய வாழ்க்கை ரொம்ப பிஸியாக இருந்தது. அவர் எங்கே போனாலும் மக்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். தங்களோடு அவர் நேரம் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஒருதடவை, அவர் இருந்த “வீட்டு வாசலில் ஊரே திரண்டு வந்தது.” அவர் அவ்வளவு பிஸியாக இருந்தாலும் யெகோவாவிடம் நெருக்கமான பந்தம் வைத்திருக்க நேரம் ஒதுக்கினார். அதனால்தான், அவரிடம் ஜெபம் செய்வதற்காக விடியற்காலையில் எழுந்து ‘தனிமையான ஓர் இடத்துக்கு’ போனார்.—மாற். 1:32-35.
10-11. மத்தேயு 26:40, 41 சொல்கிறபடி, கெத்செமனே தோட்டத்தில் சீஷர்களுக்கு இயேசு என்ன அறிவுரை கொடுத்தார், ஆனால் என்ன நடந்தது?
10 இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி ராத்திரி, ஜெபம் செய்வதற்கும்... சில விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்ப்பதற்கும்... வழக்கம்போல் தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் கெத்செமனே தோட்டம். (மத். 26:36) ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் அந்தச் சமயத்தில் சீஷர்களுக்குப் புரியவைத்தார்.
11 என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். அவர்கள் கெத்செமனே தோட்டத்துக்கு வந்தபோது ராத்திரி ரொம்ப நேரம் ஆகிவிட்டது. ஒருவேளை நடுராத்திரிகூட தாண்டியிருக்கலாம். அப்போது அப்போஸ்தலர்களிடம், “விழித்திருங்கள்” என்று சொல்லிவிட்டு ஜெபம் செய்ய இயேசு தனியாக ஒரு இடத்துக்குப் போனார். (மத். 26:37-39) அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் தூங்கிவிட்டார்கள். அதை இயேசு பார்த்ததும் மறுபடியும் “விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 26:40, 41-ஐ வாசியுங்கள்) துக்கத்திலும் களைப்பிலும் அவர்கள் சோர்ந்துபோயிருந்ததை இயேசு புரிந்துகொண்டார். அதனால் கரிசனையோடு, “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று சொன்னார். மறுபடியும் அவர் இரண்டு தடவை ஜெபம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, சீஷர்கள் ஜெபம் செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.—மத். 26:42-45.
12. ஜெபம் செய்ய முடியாத அளவுக்கு மன அழுத்தமோ சோர்வோ இருப்பதாக நினைத்தால் நாம் என்ன செய்யலாம்?
12 சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். சிலசமயங்களில் ஜெபம் செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு மன அழுத்தமோ சோர்வோ இருப்பதாக நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். நிறைய பேருக்கு அந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் நீங்கள் என்ன செய்யலாம்? சிலருக்கு ராத்திரி நேரத்தில் ஜெபம் செய்யும் பழக்கம் இருக்கலாம். ஆனால், ரொம்ப களைப்பான பிறகு ஜெபம் செய்வதற்குப் பதிலாக ஓரளவு சுறுசுறுப்பாக இருக்கும்போதே ஜெபம் செய்வதற்கு முயற்சி செய்யலாம். உட்கார்ந்தோ மண்டிபோட்டோ அல்லது வேறு எப்படி ஜெபம் செய்தால் நன்றாகச் செய்ய முடியுமோ அப்படிச் செய்யலாம். ஜெபமே செய்ய முடியாத அளவுக்கு மனம் உடைந்து போயிருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? அதையே யெகோவாவிடம் சொல்லுங்கள். நம்முடைய அப்பா இரக்கம் உள்ளவர், நிச்சயம் உங்களைப் புரிந்துகொள்வார்.—சங். 139:4.
13. யெகோவாவோடு நேரம் செலவு செய்யும்போது எலக்ட்ரானிக் சாதனங்கள் எப்படி நம்முடைய கவனத்தைச் சிதறடிக்கலாம்?
13 படிக்கும்போது உங்களுடைய கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள ஜெபம் செய்வதைத் தவிர இன்னும் சில விஷயங்களையும் செய்ய வேண்டும். பைபிளைப் படிக்க வேண்டும், கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சமயங்களில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? ‘கூட்டங்கள்ல கலந்துக்கறப்பவும் படிக்கிறப்பவும், என்னோட கவனத்த எது சிதறடிக்குது? எனக்கு ஃபோன் காலோ ஈமெயிலோ மெசேஜோ வரும்போது என்னோட கவனம் அதுல போயிடுதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். எலக்ட்ரானிக் சாதனங்களை இன்றைக்குக் கோடிக்கணக்கான பேர் வைத்திருக்கிறார்கள். இந்தச் சாதனங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். “செய்ற வேலையில உங்க கவனம் இருக்காது. வேற எங்கயாவதுதான் இருக்கும்” என்று ஒரு மனநிலை நிபுணர் சொல்கிறார். மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பு ‘மற்றவர்களுக்கு தொந்தரவு தராத விதத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களுடைய செட்டிங்கை மாற்றி வையுங்கள்’ என்று அறிவிப்பு செய்கிறார்கள். அப்படியென்றால், ஜெபம் செய்யும்போதும் படிக்கும்போதும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் இதே அறிவிப்பை நமக்கு நாமே செய்துகொள்ளலாம், இல்லையா?
14. பிலிப்பியர் 4:6, 7 சொல்கிறபடி, கவனம் செலுத்த யெகோவா எப்படி உதவுவார்?
14 கவனம் செலுத்த உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். நீங்கள் பைபிளைப் படிக்கும்போதும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் உங்கள் மனம் அலைபாய்கிறதா? அப்படியென்றால், யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நீங்கள் கஷ்டத்திலோ கவலையிலோ இருக்கிறபோது அதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு பைபிளில் கவனம் செலுத்துவது சிரமம்தான். ஆனாலும், நீங்கள் கவனம் செலுத்துவது முக்கியம். மன சமாதானத்துக்காக ஜெபம் செய்யுங்கள். அது உங்கள் இதயத்தை மட்டுமல்ல, உங்களுடைய ‘யோசிக்கும் திறமையையும், யோசனைகளையும்கூட பாதுகாக்கும்.’—பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள், அடிக்குறிப்பு.
யெகோவாவோடு நேரம் செலவிடுவது பலன்களை அள்ளித்தரும்
15. யெகோவாவோடு நேரம் செலவு செய்யும்போது கிடைக்கிற ஒரு நன்மை என்ன?
15 யெகோவாவிடம் பேசுவதற்கும் அவர் பேசுவதைக் கேட்பதற்கும் அவரைப் பற்றி யோசிப்பதற்கும் நீங்கள் நேரம் செலவு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதில் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 13:20) ஞானமே உருவான யெகோவாவோடு நீங்கள் நேரம் செலவு செய்யும்போது நீங்களும் ஞானமுள்ளவராக ஆவீர்கள். அவரை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்றும் அவர் மனம் கஷ்டப்படாத விதத்தில் எப்படி முடிவுகள் எடுக்கலாம் என்றும் தெரிந்துகொள்வீர்கள்.
16. யெகோவாவோடு நேரம் செலவு செய்வதற்கும் திறமையாகக் கற்றுக்கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
16 இரண்டாவது நன்மை, உங்களால் திறமையாகக் கற்றுக்கொடுக்க முடியும். யாருக்காவது நீங்கள் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தால், யெகோவாவிடம் நெருங்கிவர அவர்களுக்கு உதவுவதுதான் உங்களுடைய முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. நாம் யெகோவாவிடம் எவ்வளவு அடிக்கடி பேசுகிறோமோ அந்தளவுக்கு அவர்மேல் இருக்கிற அன்பு அதிகமாகும். அப்போது நம்மோடு படிப்பவர்களும் யெகோவாமேல் அன்பு காட்ட நம்மால் உதவ முடியும். இயேசுவும் இதைத்தான் செய்தார். யெகோவா எவ்வளவு அன்பானவர் என்பதை நல்ல விதமாக சீஷர்களிடம் சொன்னதால் அவர்களாலும் யெகோவாமேல் அன்பு காட்ட முடிந்தது.—யோவா. 17:25, 26.
17. ஜெபம் செய்வதும் ஆழமாகப் படிப்பதும் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள எப்படி உதவும்?
17 மூன்றாவது நன்மை, உங்களுடைய விசுவாசம் பலமாகும். வழிநடத்துதலுக்காகவும் ஆறுதலுக்காகவும் யெகோவாவிடம் கேட்கும்போது என்ன நடக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு தடவையும் யெகோவா உங்கள் ஜெபத்துக்குப் பதில் தரும்போது உங்களுடைய விசுவாசம் பலமாகிறது. (1 யோ. 5:15) விசுவாசத்தைப் பலப்படுத்த வேறென்ன செய்ய வேண்டும்? யெகோவாவைப் பற்றி ஆழமாகப் படிக்க வேண்டும். “சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 10:17) ஆனால், விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வெறுமனே அறிவை வளர்த்துக்கொண்டால் மட்டும் போதாது, இன்னொன்றும் செய்ய வேண்டும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
18. ஆழமாக யோசித்துப்பார்ப்பது ஏன் முக்கியம்? விளக்குங்கள்.
18 படிக்கிற விஷயங்களை நாம் ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். இது எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள 77-ஆம் சங்கீதத்தை எழுதியவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவரும் மற்ற இஸ்ரவேலர்களும் யெகோவாவின் தயவை இழந்துவிட்டதாக நினைத்து அவர் வேதனையில் மூழ்கிப்போனார். அதனால், அவருக்கு ராத்திரியில் தூக்கம்கூட வரவில்லை. (வசனங்கள் 2-8) அப்போது, அவர் என்ன செய்தார்? “நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன். உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்” என்று யெகோவாவிடம் சொன்னார். (வசனம் 12) முன்பு தன்னுடைய மக்களுக்கு யெகோவா செய்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், “கருணை காட்ட கடவுள் மறந்துவிட்டாரா? அல்லது, கோபத்தில் இரக்கம் காட்டுவதை விட்டுவிட்டாரா?” என்று இப்போது யோசித்தார். (வசனம் 9) அதற்குப் பின்பு, தன்னுடைய மக்களிடம் யெகோவா எவ்வளவு இரக்கத்தோடும் கரிசனையோடும் நடந்துகொண்டார் என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்த்தார். (வசனம் 11) அதனால் என்ன ஆனது? தன்னுடைய மக்களை யெகோவா எப்போதுமே கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமானது. (வசனம் 15) அவரைப் போலவே நீங்களும், யெகோவா தன்னுடைய மக்களுக்கும் உங்களுக்கும் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று ஆழமாக யோசித்துப்பார்த்தால் உங்களுடைய விசுவாசமும் பலமாகும்.
19. யெகோவாவோடு நேரம் செலவு செய்வதால் வேறு என்ன நன்மை கிடைக்கும்?
19 நான்காவது நன்மை, அதிலும் ரொம்ப முக்கியமான நன்மை, யெகோவாமேல் உங்களுக்கு இருக்கிற அன்பு அதிகமாகும். வேறு எந்தக் குணத்தையும்விட அன்பு என்ற குணம்தான் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும்... அவரை சந்தோஷப்படுத்த தியாகங்களைச் செய்யவும்... சோதனைகளைச் சகிக்கவும்... உங்களுக்கு உதவும். (மத். 22:37-39; 1 கொ. 13:4, 7; 1 யோ. 5:3) யெகோவாவோடு இருக்கிற நெருக்கமான நட்பைவிட இந்த உலகத்தில் வேறு எது பெரிதாக இருக்க முடியும்?—சங். 63:1-8.
20. யெகோவாவோடு நேரம் செலவு பண்ண என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
20 யெகோவாவை வணங்குவதற்கு ஜெபம் செய்வது, படிப்பது, ஆழமாக யோசித்துப்பார்ப்பது, என எல்லாமே ரொம்ப முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவரோடு நேரம் செலவு செய்ய இயேசுவைப் போலவே அமைதியான ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள். உங்களுடைய கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் செலுத்த உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். உங்களுடைய நேரத்தை இப்போது நன்றாகப் பயன்படுத்தினால் பூஞ்சோலை பூமியில் என்றென்றைக்கும் வாழும் வாய்ப்பை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.—மாற். 4:24.
பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
^ யெகோவா நம்முடைய உயிர் நண்பர். வேறு எதையும்விட அவரோடு இருக்கிற நட்பைத்தான் நாம் ரொம்ப பெரிதாக நினைக்கிறோம். அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அவரிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் நேரம் தேவை. யெகோவாவின் விஷயத்திலும் இதுதான் உண்மை. ஆனால், இன்றைக்கு நம் வாழ்க்கை பம்பரமாக சுழன்றுகொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் நம்முடைய அன்பான அப்பா யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள நாம் எப்படி நேரத்தை ஒதுக்கலாம்? அப்படிச் செய்வதால் நமக்கு என்ன நன்மை? இதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.