படிப்புக் கட்டுரை 3
யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார்!
“அவர் துவண்டுபோயிருந்த நம்மை நினைத்துப் பார்த்தார்.” —சங். 136:23.
பாட்டு 38 யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!
இந்தக் கட்டுரையில்... *
1-2. யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் என்ன மாதிரியான சூழ்நிலைகளை அனுபவிக்கிறார்கள், அது அவர்களை எப்படிப் பாதிக்கலாம்?
இந்த மூன்று சூழ்நிலைகளை யோசித்துப்பாருங்கள்: (1) ஓர் இளம் சகோதரரைப் பயங்கரமான ஒரு வியாதி தாக்குகிறது. அது அவருடைய உடல்நிலையைச் சீரழித்துக்கொண்டே போகிறது. (2) கடினமாக உழைக்கிற, 50 வயதைத் தாண்டிய ஒரு சகோதரர் தன் வேலையை இழந்துவிடுகிறார். எவ்வளவு தேடியும் இன்னொரு வேலை அவருக்குக் கிடைத்தபாடில்லை. (3) விசுவாசமுள்ள ஒரு சகோதரி, முன்பு யெகோவாவுக்கு நிறைய சேவை செய்தார். ஆனால், இப்போது அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை.
2 இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், ‘நான் எதுக்குமே பிரயோஜனம் இல்ல’ என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். இவை உங்கள் சந்தோஷத்தைப் பறித்துவிடலாம், சுயமரியாதையைச் சிதைத்துவிடலாம், மற்றவர்களோடு இருக்கும் பந்தத்தைக் கெடுத்துவிடலாம்.
3. சாத்தானும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறவர்களும் மனித உயிரை எப்படி நினைக்கிறார்கள்?
3 மனித உயிரை சாத்தான் எப்போதுமே துச்சமாகத்தான் நினைக்கிறான். எப்படி? கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் ஏவாள் கண்டிப்பாகச் செத்துவிடுவாள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தும், கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல், அவளால் சுதந்திரமாக வாழ முடியும் என்று சொன்னான். சாத்தானைப் போலவே இந்த உலகமும் உயிரைத் துச்சமாக நினைக்கிறது. வணிகம், அரசியல், மதம் ஆகியவற்றைச் சாத்தான் எப்போதுமே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அதனால்தான், தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் மனித உயிரைத் துச்சமாக நினைக்கிறார்கள். மனிதர்களுடைய உணர்வுகளை மதிப்பதே இல்லை.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 ஆனால், யெகோவா அப்படிக் கிடையாது! நம்மைப் பற்றி நாம் நல்ல விதமாக நினைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ‘நான் எதுக்குமே பிரயோஜனம் இல்ல’ என்று நினைத்து துவண்டுபோகும் சமயங்களில் அவர் நம்மைத் தூக்கி நிறுத்துகிறார். (சங். 136:23; ரோ. 12:3) இந்த மூன்று சூழ்நிலைகளில் யெகோவா எப்படி உதவுகிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்: (1) வியாதியால் அவதிப்படும்போது (2) பணக் கஷ்டத்தால் திண்டாடும்போது (3) வயதாகிவிட்டதால் முன்புபோல் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்ற எண்ணம் வாட்டிவதைக்கும்போது. இவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம் என்று பார்க்கலாம்.
யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார்
5. மனிதர்களை யெகோவா உயர்வாக நினைக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
5 மண்ணிலிருந்து யெகோவா நம்மைப் படைத்திருந்தாலும் அவர் நம்மைத் தாழ்வாகப் பார்ப்பதில்லை, உயர்வாகத்தான் பார்க்கிறார். (ஆதி. 2:7) எப்படிச் சொல்கிறோம்? தன்னுடைய குணங்களை வெளிக்காட்டும் விதத்தில்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். இப்படி, பூமியில் இருக்கிற மற்ற படைப்புகளைவிட நம்மை உயர்த்தியிருக்கிறார். (ஆதி. 1:27) பூமியைப் பராமரிக்கிற பொறுப்பையும் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிற வேலையையும் கொடுத்திருக்கிறார்.—சங். 8:4-8.
6. நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் யெகோவா நம்மை உயர்வாகத்தான் பார்க்கிறார் என்பதை வேறு எதுவும் காட்டுகிறது?
6 ஆதாம் பாவம் செய்த பிறகுகூட மனிதர்களை யெகோவா உயர்வாகத்தான் நினைத்தார். நம்முடைய பாவங்களுக்காகத் தன்னுடைய பாச மகனையே மீட்புவிலையாகக் கொடுக்கிற அளவுக்கு அவர் நம்மை உயர்வாக நினைக்கிறார்! (1 யோ. 4:9, 10) ஆதாம் செய்த பாவத்தால் இறந்துபோன ‘நீதிமான்களையும் அநீதிமான்களையும்’ அவர் உயிரோடு கொண்டுவரப்போகிறார். (அப். 24:15) நம்முடைய உடல்நிலை, பொருளாதார நிலை, வயது ஆகியவை எப்படி இருந்தாலும் சரி, யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்று அவருடைய வார்த்தை காட்டுகிறது.—அப். 10:34, 35.
7. யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்பதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன?
7 யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்பதற்கு இன்னும் சில காரணங்களைப் பார்க்கலாம். நல்ல செய்திக்கு நாம் எப்படிப் பிரதிபலித்தோம் என்பதைப் பார்த்து அவர் நம்மைத் தன் பக்கமாக ஈர்த்திருக்கிறார். (யோவா. 6:44) அவரிடம் நாம் நெருங்கிப் போனபோது அவரும் நம்மிடம் நெருங்கி வந்தார். (யாக். 4:8) அதோடு, நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கு அவர் நேரத்தைச் செலவு செய்கிறார்; அதிக முயற்சியும் எடுக்கிறார். நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதும் அவருக்குத் தெரியும், எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னேற்றம் செய்வோம் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், அவர் நமக்குப் புத்திமதி கொடுக்கிறார். அவர் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. (நீதி. 3:11, 12) யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் அருமையான அத்தாட்சிகள், இல்லையா?
8. பிரச்சினைகள் வரும்போது நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க சங்கீதம் 18:27-29 எப்படி உதவும்?
8 தாவீது ராஜாவைப் பற்றிப் பார்க்கலாம். அவர் ஒன்றுக்கும் உதவாதவர் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் யெகோவா அப்படி நினைக்கவில்லை. யெகோவா தன்மீது அன்பு வைத்திருப்பதையும் தனக்குத் துணையாக இருப்பதையும் தாவீது புரிந்துவைத்திருந்தார். அதனால்தான், கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. (2 சா. 16:5-7) நாம் சோர்ந்துபோயிருக்கும்போது அல்லது கஷ்டங்களை அனுபவிக்கும்போது, நம்பிக்கை இழந்துவிடாமல் இருப்பதற்கும் தடைகளைத் தகர்த்தெறிவதற்கும் யெகோவா உதவுவார். (சங்கீதம் 18:27-29-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் துணை இருந்தால், நாம் அவருக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வோம். அந்தச் சந்தோஷத்தை வேறு எந்த விஷயத்தாலும் தட்டிப் பறிக்க முடியாது. (ரோ. 8:31) யெகோவா நம்மை நேசிக்கிறார் என்பதையும் நம்மை மதிக்கிறார் என்பதையும் குறிப்பாக மூன்று சூழ்நிலைகளில் நாம் மறந்துவிடக் கூடாது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
வியாதியால் அவதிப்படும்போது
9. வியாதி நம்மைத் தாக்கும்போது நாம் எப்படி உணரலாம்?
9 வியாதி வரும்போது, நாம் மனதளவில் துவண்டுபோய்விடலாம். ‘என்னால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்ல’ என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம். நம்முடைய வியாதியைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியவரும்போது அல்லது மற்றவர்களின் உதவியில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற நிலைமை வரும்போது நமக்குத் தர்மசங்கடமாக இருக்கலாம். ஒருவேளை, நம்முடைய வியாதியைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்; ஆனாலும், சில விஷயங்களைச் செய்ய முடியாததை நினைத்து நாம் கஷ்டப்படலாம். இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில், யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
10. வியாதியாக இருக்கும்போது எது நமக்கு உதவும் என்று நீதிமொழிகள் 12:25 சொல்கிறது?
நீதிமொழிகள் 12:25-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட நல்ல வார்த்தைகள் ஏராளமானவற்றை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். நமக்கு எப்படிப்பட்ட வியாதி வந்திருந்தாலும் சரி, யெகோவா நம்மை உயர்வாக நினைக்கிறார் என்பதை அவை ஞாபகப்படுத்துகின்றன. (சங். 31:19; 41:3) அதனால், அவற்றைப் படிக்கும்போது, அதுவும் திரும்பத் திரும்பப் படிக்கும்போது, வியாதியால் ஏற்படுகிற மனப் போராட்டத்தைச் சமாளிக்க யெகோவா உதவுவார்.
10 வியாதியாக இருக்கும்போது ‘நல்ல வார்த்தைகள்’ நமக்குத் தெம்பைத் தரும். (11. ஒரு சகோதரருக்கு யெகோவா எப்படி உதவினார்?
11 எட்வின் * என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். இளம் வயதில் அவருக்கு ஒரு வியாதி வந்தது. அந்த வியாதியால் அவருடைய உடல்நிலை சீரழிந்துகொண்டேபோனது. தான் எதற்குமே பிரயோஜனம் இல்லை என்ற எண்ணம் அவரை வாட்டியெடுத்தது. “இந்த வியாதி என்னை பாடாய்படுத்துச்சு. என்னோட உடல்நிலை மோசமாயிட்டே போறத மத்தவங்க பார்த்தாங்க. அது எனக்கு தர்மசங்கடமா இருந்துச்சு. இதையெல்லாம் சமாளிக்கிறதுக்கு நான் என்னை மனசளவுல தயார்படுத்திக்கவே இல்ல” என்று அவர் சொல்கிறார். “என்னோட நிலைமை மோசமாயிட்டே போனதால, என் வாழ்க்கை என்ன ஆகுமோனு நினைச்சு கவலைப்பட்டேன். நான் அப்படியே இடிஞ்சு போயிட்டேன். யெகோவாகிட்ட உதவிக்காக கெஞ்சினேன்” என்றும் சொல்கிறார். யெகோவா அவருக்கு எப்படி உதவினார்? “கவனத்த ஒருமுகப்படுத்துறது எனக்கு கஷ்டமா இருந்ததால, சங்கீத புத்தகத்திலிருந்து சில வசனங்கள மட்டும் எடுத்து படிச்சேன். யெகோவா தன்னோட ஊழியர்கள எப்படி கவனிச்சிக்கிறாருங்குறத அதிலிருந்து தெரிஞ்சிக்கிட்டேன். அந்த வசனங்கள தினமும் திரும்ப திரும்ப படிச்சேன். அது எனக்கு ஆறுதலா இருந்துச்சு. முன்னவிட இப்போ நான் சந்தோஷமா இருக்கிறத மத்தவங்க பார்த்தாங்க. இது அவங்களுக்கு உற்சாகமாக இருந்துச்சுனு சொன்னாங்க. என்னோட ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்திருக்குறாருங்குறத புரிஞ்சிக்கிட்டேன். என்னை பத்தி நான் என்ன நினைச்சிட்டிருந்தனோ, அத மாத்திக்குறதுக்கு யெகோவா உதவுனாரு. நான் வியாதியா இருந்தாலும் யெகோவா என்னை எப்படி பார்க்குறாருங்குத பைபிள்ல இருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அத பத்தியே யோசிக்க ஆரம்பிச்சேன்” என்று எட்வின் சொல்கிறார்.
12. வியாதியால் கஷ்டப்படும்போது யெகோவாவின் உதவியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
12 நீங்கள் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் எவ்வளவு அவதிப்படுகிறீர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் உங்களுக்குத் துளிகூட சந்தேகம் வேண்டாம்! உங்கள் சூழ்நிலையைச் சரியான விதத்தில் பார்ப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். பிறகு, அவர் உங்களுக்காக பைபிளில் பதிவு செய்திருக்கும் நல்ல வார்த்தைகளைப் படியுங்கள். முக்கியமாக, தன்னுடைய ஊழியர்களை யெகோவா உயர்வாகப் பார்ப்பதைக் காட்டுகிற பதிவுகளைப் படியுங்கள். இப்படிச் செய்யும்போது, தனக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்கள்மீது யெகோவா எவ்வளவு அன்பு காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—பணக் கஷ்டத்தால் திண்டாடும்போது
13. வேலை பறிபோகும்போது ஒரு குடும்பத் தலைவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கலாம்?
13 தங்கள் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஆசைப்படுகிறார்கள். இப்போது, இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: ஒரு சகோதரருடைய வேலை அநியாயமாக பறிபோய்விடுகிறது. எவ்வளவு தேடியும் இன்னொரு வேலை கிடைக்கவில்லை. அதனால், ‘நான் எதுக்குமே பிரயோஜனம் இல்ல’ என்று அவர் நினைக்க ஆரம்பித்துவிடலாம். இந்தச் சூழ்நிலையில், யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி ஆழமாக யோசிப்பது அவருக்கு எப்படி உதவும்?
14. தன்னுடைய வாக்குறுதிகளை யெகோவா ஏன் நிறைவேற்றுகிறார்?
14 தன்னுடைய வாக்குறுதிகளை யெகோவா கண்டிப்பாக நிறைவேற்றுவார். (யோசு. 21:45; 23:14) அவர் அப்படிச் செய்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், அவருடைய நற்பெயருக்குப் பாதிப்பு வரும். தன்னுடைய ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதாக தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கடமை தனக்கு இருப்பதாக அவர் நினைக்கிறார். (சங். 31:1-3) அதுமட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தாராகிய நம்மை அவர் கவனித்துக்கொள்ளவில்லை என்றால், நாம் திக்குத் தெரியாமல் திண்டாடுவோம் என்பது அவருக்குத் தெரியும். தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் அவருக்கு உண்மையாகச் சேவை செய்வதற்கும் தேவையானவற்றைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குறுதி நிறைவேறுவதைத் தடுக்கிற சக்தி எதற்குமே கிடையாது.—மத். 6:30-33; 24:45.
15. (அ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? (ஆ) சங்கீதம் 37:18, 19 நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?
15 தன்னுடைய வாக்குறுதிகளை யெகோவா ஏன் நிறைவேற்றுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டால், பணக் கஷ்டத்தை நம்பிக்கையோடு சமாளிக்க முடியும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுடைய உதாரணத்தைப் பார்க்கலாம். எருசலேமிலிருந்த சபைக்குக் கடுமையான துன்புறுத்தல் வந்தபோது, “அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற எல்லாரும் . . . [எருசலேமை விட்டு] சிதறிப்போனார்கள்.” (அப். 8:1) அப்படிச் சிதறிப்போனவர்கள் பணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! ஒருவேளை, தங்களுடைய வீட்டையும் தொழிலையும் அவர்கள் இழந்திருப்பார்கள். ஆனாலும், யெகோவா அவர்களைக் கைவிடவில்லை. தங்களுடைய சந்தோஷத்தையும் அவர்கள் பறிகொடுக்கவில்லை. (அப். 8:4; எபி. 13:5, 6; யாக். 1:2, 3) அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களைக் கவனித்துக்கொண்டதைப் போலவே யெகோவா நம்மையும் கவனித்துக்கொள்வார்.—சங்கீதம் 37:18, 19-ஐ வாசியுங்கள்.
வயதாவதால் வரும் கஷ்டங்களைச் சமாளிக்கும்போது
16. நம்முடைய சேவையை யெகோவா உயர்வாக நினைக்கிறாரா என்ற சந்தேகம் எப்போது வரலாம்?
16 யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் வயதாக வயதாக நமக்கு வரலாம். வயதான காலத்தில் தாவீது ராஜாவும் இப்படிப்பட்ட எண்ணங்களால் சோர்ந்துபோனார். (சங். 71:9) இதுபோன்ற சமயங்களில், யெகோவா நமக்கு எப்படி உதவுவார்?
17. சகோதரி ஜேனட்டின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 ஜேனட் என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். ராஜ்ய மன்றத்தில், கட்டிட பராமரிப்பு பயிற்சி சம்பந்தப்பட்ட ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், அதில் கலந்துகொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. “நானே வயசான ஒரு விதவை. யெகோவா பயன்படுத்துற அளவுக்கு என்கிட்ட ஒரு திறமைகூட இல்ல. என்னால ஒரு பிரயோஜனமும் இல்ல” என்று சொன்னார். அந்தப் பயிற்சி ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜெபம் செய்திருக்கிறார். அடுத்த நாள் ராஜ்ய
மன்றத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தப் பயிற்சியில் உண்மையிலேயே கலந்துகொள்ள வேண்டுமா என்று யோசித்திருக்கிறார். ‘யெகோவாகிட்ட இருந்து கத்துக்கணும்னு ஆசைப்படுறதுதான் நம்மகிட்ட இருக்கிற முக்கியமான திறமை’ என்று அந்தக் கூட்டத்தில் பேச்சு கொடுத்த ஒரு சகோதரர் சொன்னார். அதைப் பற்றி ஜேனட் இப்படிச் சொல்கிறார்: “‘அந்த திறமை என்கிட்ட இருக்கே!’ அப்படினு நான் நினைச்சேன். என்னோட ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தத பார்த்து நான் அழுதுட்டேன். அவருக்கு கொடுக்குறதுக்கு என்கிட்டயும் மதிப்புள்ள ஒண்ணு இருக்குங்குறதையும், எனக்கு கத்துக்கொடுக்குறதுக்கு அவர் விரும்புறாருங்குறதையும் யெகோவா புரியவெச்சாரு. அந்த கூட்டத்துக்கு போனப்போ ரொம்ப படபடப்பா, சோர்வா இருந்துச்சு. என்னை பத்தி நான் தாழ்வா நினைச்சேன். ஆனா, அத முடிச்சிட்டு வெளிய வந்தப்போ நம்பிக்கையோட, புதுத்தெம்போட வந்தேன். யெகோவா என்னையும் உயர்வா நினைக்கிறாருங்குற எண்ணத்தோட திரும்பி வந்தேன்.”18. நமக்கு வயதானாலும் நாம் செய்யும் சேவையை யெகோவா உயர்வாக நினைக்கிறார் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?
18 நமக்கு வயதானாலும் யெகோவா நம்மைத் தொடர்ந்து பயன்படுத்துவார் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். (சங். 92:12-15) நம்மிடம் திறமைகள் இல்லை என்றோ, நாம் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை என்றோ நாம் நினைக்கலாம். ஆனால், தன்னுடைய சேவையில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா பெரிதாக நினைக்கிறார் என்று இயேசு சொன்னார். (லூக். 21:2-4) அதனால், உங்களால் என்ன செய்ய முடியுமோ அவற்றைப் பற்றியே யோசியுங்கள். உதாரணத்துக்கு, யெகோவாவைப் பற்றி உங்களால் பேச முடியும். சகோதரர்களுக்காக ஜெபம் செய்ய முடியும். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும். நீங்கள் எவ்வளவு சாதிக்கிறீர்கள் என்பதை வைத்து அல்ல, அவருக்குக் கீழ்ப்படிய எந்தளவு ஆசைப்படுகிறீர்கள் என்பதை வைத்தே அவர் உங்களைத் தன்னுடைய சக வேலையாளாக நினைக்கிறார்.—1 கொ. 3:5-9.
19. ரோமர் 8:38, 39 என்ன உறுதியைத் தருகிறது?
19 தனக்குச் சேவை செய்கிறவர்களை யெகோவா உயர்வாக நினைக்கிறார் என்பதை இதுவரை பார்த்தோம். இப்படிப்பட்ட கடவுளை வணங்குவதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! தன்னுடைய விருப்பத்தைச் செய்வதற்காகத்தான் யெகோவா நம்மைப் படைத்தார். சொல்லப்போனால், உண்மை வணக்கம்தான் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது! (வெளி. 4:11) எதற்குமே பிரயோஜனம் இல்லாதவர்களாக இந்த உலகம் நம்மைப் பார்க்கலாம்; ஆனால், யெகோவா அப்படிப் பார்ப்பது கிடையாது. (எபி. 11:16, 38) வியாதியாலோ பணக் கஷ்டத்தாலோ வயதாவதாலோ சோர்ந்துபோகும்போது ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நம் பரலோகத் தந்தை காட்டும் அன்பிலிருந்து எதுவுமே நம்மைப் பிரிக்க முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது!—ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்.
^ பாரா. 5 ‘நான் எதுக்குமே பிரயோஜனம் இல்ல’ என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறதா? யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அதோடு, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, உங்கள் சுய மரியாதையை இழந்துவிடாமல் இருக்கவும் உதவும்.
^ பாரா. 11 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
பாட்டு 91 என் தகப்பன், என் தேவன், என் தோழன்!